Notifications
Clear all

அத்தியாயம் 32

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆதிக்கும் ரஞ்சனிக்கும் திருமணம் செய்யலாம் என்று பேச்சு வார்த்தை நடந்தது நடந்த படியே இருந்ததே தவிர... அதை மேற்கொண்டு வளர்த்து விடவே இல்லை. பேசிய வார்த்தை பேசியபடியே இருந்தது. இன்னும் ஊடகக்காரர்களுக்கு விஷயம் தெரியாது.

அதை பற்றி முன்பு கேட்டதற்கு இந்த டீல் சைன் ஆகட்டும் பிறகு பேசிக்கலாம் என்றார்கள் ஆதியின் வீட்டில். அதன் பின் ஆதி மயூவை அழைத்துக்கொண்டு இரண்டு நாள் என்று சொல்லி நான்கு நாட்கள் நாட்டை விட்டு தள்ளி இருந்தான். அதனால் சீதா ஆதி ரெஸ்ட் எடுக்க போய் இருக்கிறான். பிறகு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டார். அப்பொழுதும் பேச முடியவில்லை அவரால்.

ஆதி வந்த விஷயம் கேள்வி பட்டவுடன் இரவு வேலை என்று கூட பாராமல் அவனை பார்க்க வந்துவிட்டார் அசோகன்.

வந்துவிட்டார் தான். ஆனால் அவரால் பேசமுடியவில்லை. ஏனெனில் பத்திரிகை அடித்து வந்துவிட்டது... ஆனால் அவர்களுக்கு என்று இன்னும் சீதா பத்திரிக்கையை பிரித்து தரவில்லை. அதோடு வேறு யாருக்கும் வைத்தது போலவும் தெரியவில்லை.

அதிலே லேசாய் ஆட்டம் கண்டு போனார் அசோகன். அதை கேட்டுவிட்டு போகலாம் என்று வந்தவர், சீதாவின் நறுக்கென்ற பேச்சில் அவரால் அடுத்தது பேசமுடியாமல் போனது.

வெகுவான தயக்கம் அவருக்கு. அமைச்சர் என்றாலும், ஆதியின் குடும்ப வசதிக்கு முன் அவர் தூசுக்கு கூட பெறமாட்டார். அது தெரிந்து இருந்ததால் வால் எதுவும் ஆட்டாமல் பம்மினார் அசோகன்.

அதும் ஆதியின் முன்பும் கேசவனின் முன்பும் வெளி இடங்களில் உட்கார கூட மாட்டார். இப்பொழுது கூட அவர் அமரவில்லை. சீதா தான் அண்ணாந்து பார்க்க கழுத்து வலிக்குது என்று அமரவைத்தார். அதும் பொதுவான கூடத்தில்.

குடும்பத்திற்கு என்று தனி தளம் இருக்கிறது.. எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்றால் அங்கு தான் ஒன்று கூடுவார்கள். அங்கு அமரவைக்க படாமல் வெளிஆட்கள் அமரவைக்கும் இடத்தில் அமரவைக்க அசோகனுக்கு கோவமும் ஆத்திரமும் எழுந்தது.

இந்த வீட்டுக்கு என் மக மருமகளா வரட்டும். அதுக்கு பிறகு இவங்களுக்கு... என்று கருவிய அசோகனை ஏளனமாக பார்த்த சீதா... அது இந்த ஜென்மத்துல நடக்காது ஏன்னா எப்பவும் இங்க நான் தான் ராணி... என்று கம்பீரமாக தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார்.

அவரது தோரனையை கண்ட ஆதியின் இதழ்களில் மர்ம சிரிப்பு ஒன்று எழுந்தது.

‘புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைக்குதுடி...’ என்று மயூவின் காதோரம் சொன்னான் ஆதி. அதில் அவனை பார்த்து முறைத்தவள்,

“பேசாம இருங்க கொஞ்ச நேரம்.” அவனது கையில் லேசாய் அடி போட்டு எச்சரித்தவள் தன் அத்தையின் புறம் திரும்பி அமர்ந்துக்கொண்டாள்.

சீதா “வேறு என்ன விசயம்” என்று நேரடியாக கேட்க...

“இல்ல மேம்... கல்யாண விசயமா...” என்று அவர் இழுக்க

“ப்ச்... நான் அதை மறந்தே போய்ட்டேன்.. ஆதிக்கு மூணு மாசம் நேரம் சரியில்லன்னு சொல்லி இருக்காங்க... சோ மூணு மாசம் கழிச்சு அதை பத்தி பேசலாமே...” என்றவர் எழுந்துக்கொள்ள, வேறு வழியின்றி அசோகனும் எழுந்துக்கொண்டு விடை பெற்றார் தன் மகளுடன்.

மயூவுக்கு அப்பாடா என்று இருந்தது. மூணு மாசம் வரையிலும் ஆதியை பிரிய வேண்டியது இல்லையே என்ற ஆசுவாசம் வந்தது. அவளது நிம்மதியை கண்ணுற்ற ஆதிக்கு பத்திக்கொண்டு வந்தது.

பின்னே கைகளிலே வந்து விழுந்து கிடப்பவனை எத்தி விட்டு, யாருக்கோ தூக்கி கொடுத்த பின்பு... வேதனை பட்டு, பிரிய மனமில்லாமல் இருப்பவளிடம், கொஞ்ச நாள் வைத்திருக்கும் படி வாங்கி கொண்டவரே மறுபடியும் வந்து கொடுத்து விட்டு சென்ற கதையாக இருக்கிறது. இவளது கதை. என்று எண்ணி பல்லைக்கடித்தான்.

ரஞ்சனி எதிலும் பட்டுக்கொள்ளவில்லை. அவள் பாட்டுக்கு அவள் இருந்தாள். யாருக்கு வந்த விருந்தோ என்பது போல...

ஆனால் மிக மெலிதான சலனம் மட்டும் அவளது கண்களில் வந்து போனது. அதை கவனித்த மயூவுக்கு உள்ளம் வேதனை கொண்டது.

இருவரும் விடை பெற்று சென்ற பின் சீதா இருவரையும் முறைத்தார். அவரது பார்வையில் தலை குனிந்துக்கொண்டாள் மயூ. ஆதி தெனாவட்டாக நிமிர்ந்து நின்றவன், ஆட்சேபனையாக பார்த்த சீதாவை கண்களிலே

“மயூவை குற்றம் சொல்லாதீங்க” என்பது போல கண்டன பார்வை பார்த்தான்.

அதில் நொடித்துக்கொண்டவர்,

“பார்க்கிறேன் இதெல்லாம் இன்னும் எத்தனை நாளுக்குன்னு...” கிளம்பிவிட்டார் தூங்க.

ரேணுவும் ரோகிணியும் ஆறுதலாய் மயூவின் கரத்தை பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு செல்ல... மனுவும் முகிலும் பார்வையாலே அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்கள்.

வேதனை சூழ்ந்த மனதுடன் தனித்து நின்றவளின் கரத்தை இறுக பற்றி உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் தன்னுடன் அழைத்து சென்றான் ஆதி தேவன்.

அதில் மனம் சற்றே ஆறுதலடைய அவனது தோள் சாய்ந்தாள்...

“காலையில சீக்கிரம் போகணும்... கிளம்பி தயாரா இரு...” என்று அவளது தளத்தில் கொண்டுவந்து விட்டுட்டு செல்ல அவனது கரத்தை விலகாமல் பற்றிக்கொண்டவளை கண்டு பாவமாய் இருந்தது.

“என்னடி...” என்றான் சற்றே கடுமையாக..

“அது... இன்னைக்கு என்னோட தூங்குறீங்களா...?” அலைபுரும் விழிகளுடன் கேட்டவளை தனித்து விட மனமில்லாமல் அவளுடன் அவளது அறைக்கு வந்து அவளை தூங்க வைத்தவன் அவளை அணைத்த படி அவனும் தூங்கினான்.

--

காலையில் அவன் சொன்னது நினைவுக்கு வர வேகமாய் எழுந்தாள். ஆதி அவளுக்கு முன்பே எழுந்து அவளுடைய ஜிம்மில் ஒர்கவுட் பண்ணிக்கொண்டு இருந்தான். அங்கிருந்து சத்தம் வர எழுந்து அங்கே சென்றாள்.

அங்கே ஆண்மையின் செருக்கோடு, கம்பீரமாக வலிமை பெற்ற உடலை மேலும் வலிமையுற செய்துக்கொண்டு இருந்தான் ஆதி தேவன்...

அவனை பின்னிலிருந்து நிலை கதவில் சாய்ந்து நின்றுக்கொண்டு ரசித்து பார்த்தாள். வியர்வை வழிய வழிய, கடுமை வாய்ந்த இயந்திரத்தை அசைத்து அசைத்து தனது உடலுக்கு உறுதி சேர்த்தான். கண்கள் இரண்டும் எதிர் புறம் கண்ணாடியில் தெரிந்த தன்னவளின் தோற்றத்தையே பார்த்த படி இருந்தது.

காலையில் மொட்டவிழ்ந்து சற்றே விருந்த தாமரை மலர் போல இருந்தவளை காண காண ஆதியின் காதல் உள்ளம் அவளை காதலாட தூண்டியது.

களைந்த கேசங்களை ஒதுக்கி விட்டு அவளது பிறை போன்ற நெற்றியில் தன் இதழ்களை புதைக்கும் எண்ணம் மிக, தன் தலையை உலுக்கிக்கொண்டான்.

‘காலையிலயே வந்து மயக்குறா...” கடுப்படித்தவன் இன்னும் அதி வேகமாக இயக்க... அதையும் ரசித்து பார்த்தவள், பின் அவளும் இன்னொரு இயந்திரத்தில் அமர்ந்து வொர்கவுட் பண்ண இப்பொழுது பித்தம் கொள்வது இவனது முறையாயிற்று..

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:45 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top