பிள்ளைக்கு வெறும் வயிற்றில் உணவு கொடுக்காமல் ஒரு டம்ளர் ஜூஸை முதலில் குடுத்து குடிக்க வைத்த பின் சற்று நேரம் கழித்தே தான் கொண்டு வந்த உணவை நன்றாக மசித்து ஊட்டி விட்டு, வாயை எல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்த வேரல் தலையணையை ஒன்று பின்னால் போட்டு சாய்ந்து அமரவைத்துவிட்டு, நிமிர்ந்து கங்குவனை பார்த்தாள்.
“நீங்க சாப்பிடலையா?”
“உன் அக்கறையை என்கிட்டே காட்ட வேண்டாம்” என்று முகத்தில் அறைவது போல சொன்னான்.
“எனக்கு இது தேவை தான்” அவனை முறைத்தவள் அடுத்து வந்த பொழுதுகள் எல்லாம் பிள்ளையுடன் மட்டுமே கழித்துக் கொண்டாள்.
அவனுக்கு கதை சொல்லி அவனுடன் விளையாண்டு என நேரம் கழித்தவள், அவனின் இன்ஜெக்ஷன் செய்து இருந்த கையை பார்த்தாள். சின்ன பிள்ளைக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு இருந்தது. ஐவி இன்னும் ரிமூவ் பண்ணாமல் இருக்கக் கண்டு
“இதை எப்ப ரிமூவ் பண்ணுவாங்களாம்” அங்கு வந்த நர்சிடம் கேட்டாள்.
“பேபி இப்ப சாப்பிட்டதால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. சப்போஸ் சாப்பிடலன்னா சலைன் ஏத்தனும். அதுக்காக தான்..”
“இன்னும் இன்ஜெக்ஷன் போடணுமா?”
“நாட் நேசசரி”
“டேப்லேட்ஸ் உண்டா”
“டாக்டர் தான் சொல்லணும் மேம்” என்று நர்ஸ் பையனை செக் பண்ணி விட்டு கிளம்பி விட்டார்.
கங்குவன் அமைதியாக உட்கார்ந்து இருந்தான். அதுவே அவன் செய்த மிகப்பெரிய வேலை.
பிள்ளைக்கு கண்கள் சொருக, “ஆன்டி கதை ஏணும்”
“சொல்லலாமே..” என்றவள் அவனை நன்றாக படுக்க வைத்து போர்வையை நெஞ்சு வரை போர்த்தி விட்டவள், அவனின் தலையை வருடியபடியே கதையை சொன்னாள்.
“ஆன்டி நான் தூங்குனதுக்கு பிறகு நீங்க என்னை விட்டு போக மாட்டீங்க தானே” பிஞ்சு மொழியில் பிள்ளை கேட்க, கனத்த மனதுடன்,
“இல்ல ப்பா நீ தூங்கு.. நான் போக மாட்டேன்” என்று பொய் சொல்லியவள், அவன் தூங்கும் வரை கதை சொன்னாள். பிள்ளையும் சிறிது நேரத்திலே தூங்கி விட்டான்.
பெருமூச்சு விட்டவள் சின்ன தலையசைப்புடன் கிளம்பி விட்டாள். கங்குவனும் சின்ன தலையசைப்பு கொடுத்தான் அவளுக்கு.
ஸ்கூல் முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருந்தது. அது இங்கிருந்து போகவே சரியாக இருக்கும். எனவே நேராக வீட்டுக்கு வந்து விட்டாள் வேரல்.
வந்தவளுக்கு அலுப்பாக இருக்க, நேராக ஷவர் எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்.
ஆச்சியிடம் அவள் நடந்த எல்லாவற்றையும் சொல்ல, பதறிப்போனார் அவர்.
“என்னடா கண்ணா சொல்ற.. மூணு வயசு பிள்ளை பட்டினி இருக்கான்னா அவனுக்கு இவ்வளவு பிடிவாதம் எங்க இருந்து வந்தது” ஆச்சரியமாக கேட்டார்.
“எனக்கும் அது தான் ஆச்சி ஒன்னும் புரியல.. மே பி அவனுக்கு அந்த சாப்பாடு கூட பிடிக்காம இருக்கலாம். என்னாலையே அந்த காரமான சாப்பாட்டை வாயில வைக்க முடியல.. அந்த சின்ன பிள்ளையால எப்படி சாப்பிட முடியும்..” என்று சோகமாக சொன்னாள்.
“என்னடா கண்ணா ஏன் இவ்வளவு டல்லா இருக்க?”
“ப்ச் என்னவோ ஆச்சி.. அந்த பிள்ளை மனசை விட்டு போக மாட்டிக்கிறான். என்னவோ யாருமே இல்லாத பிள்ளை மாதிரி தனியா கிடக்குறது என் நெஞ்சை அறுக்குது” என்றாள்.
சொல்லும் பொழுதே லேசாக அவளின் கண்கள் கலங்கியது.
“ப்ச் கண்ணா.. என்ன இது..” என்று தன் தோளில் அவளை சாய்த்துக் கொண்டார்.
“இல்ல பாட்டி தாயில்லா பிள்ளை மாதிரி அவன் படுத்து இருந்த விதம் என் நெஞ்சுக்குள்ள அப்படியே நிக்கிது” என்றாள்.
“ப்ச் இப்படி உன் மனசை போட்டு அலட்டிக்கிட்டா எப்படிடா.. அது தான் உன்னால முடிஞ்ச வரை பிள்ளைக் கூட இருந்துட்டல்ல.. இனி அவன் கண்டிப்பா தேறி வருவான்” என்று பேத்தியை ஆறுதல் கூறியவர் அவளுக்கு சாப்பாடு குடுக்க,
“வேணாம் ஆச்சி..” மறுத்து விட்டு அவரின் மடியிலே தலை வைத்து படுத்து விட்டாள்.
அவளுக்கு தலையை கோதி குடுத்து தூங்க வைத்தவர் வீட்டில் எல்லோரிடமும் இதை பகிர்ந்துக் கொண்டார்.
“நம்ம பிள்ளைக்கு ரொம்ப இளகுன மனசு... அவளால எதையும் அவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியல.. தன்னை தானே வருத்திக்கிறா” அரை குறையாக உணவு உண்டுவிட்டு தூங்க சென்றார்கள்.
அவர்களின் செல்ல பிள்ளை சாப்பிடாமல் இருக்க இவர்களுக்கு எங்கிருந்து உணவு இறங்குமாம்.
இடையில் கண் விழித்த வேரல் கங்குவனுக்கு போன் போட்டு விசாரிக்கலாம் என்று எண்ணி போனை எடுத்தாள்.
பின் அவன் பேசிய பேச்சு நினைவில் எழ, தானாக வழிக்க செல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்து போனை வைத்து விட்டு அடுத்த நாள் எப்பொழுதும் போல காலையில் கிளம்பி ஸ்கூலுக்கு சென்றாள்.
அங்கே தம் சிம்பிள் வைத்து அட்டனன்ஸ் செய்துக் கொண்டவள் பச்சை பெருமாளை பார்த்து பிள்ளையை பற்றி கேட்க உள்ளே நுழைந்தாள் அவர் அறைக்கு.
அவரோ இவள் வந்த உடனே எல்லாவற்றையும் சொல்ல, பதறிப் போனது அவளுக்கு.
“என்ன சார் சொல்றீங்க.. நைட்டே எனக்கு கால் பண்ணி இருக்கலாமே.. ஏன் சார் கால் பண்ணாம விட்டீங்க” என்று அவரை கடிந்துக் கொண்டவள் அவசர அவசரமாக கிளம்பி ஹாஸ்பிட்டல் ஓடினாள்.
அங்கே பிள்ளையின் நிலை முன்பை விட மோசமாக இருந்தது. கங்குவனோ நேற்றைக்கு எந்த கோலத்தில் பார்த்தாலோ அதே நிலையில் இருக்க இவளின் நெஞ்சுக்குள் அவன் அழியா ஓவியமாய் படிந்துப் போனான்.
விழிகள் இரண்டும் சிவந்து கிடக்க, சட்டை பட்டன் இரண்டு அவிழ்ந்து போய், ஸ்லீவ் பாதி சுருட்டி விட்டு, தலை முடி கலைந்து ஒரு நாள் முளைத்த தாடியோடு நின்றவனின் விறைப்பு மட்டும் குறையவில்லை. ஆனால் அவனது முகத்தில் ஏகத்துக்கும் இயலாமை படிந்து கிடந்தது.
“என்ன ஆச்சு சார்.. பிள்ளை எப்படி இருக்கான்.. எனக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி இருக்க வேண்டியது தானே. நான் வந்து இருப்பனே” என்று அவனிடம் சொன்னவள், வேகமாய் கதவை திறந்துக் கொண்டு அவனிடம் ஓடினாள்.
“என்னடா கண்ணா இப்படி பண்ணிட்ட...” அவனின் நிலையை கண்டு முற்றிலும் உடைந்துப் போய் விட்டாள் வேரல்..
“ஆன்டி...” மிகவும் பலகீனமாக அவளை அழைத்தவனின் கண்களில் அதுவரை இல்லாத மின்னல் கீற்று கண்களில் தெரிய, நிலை குலைந்துப் போனாள்.
ஒரே நாளில் அவனுக்கு அவ்வளவு முக்கியமானவளாக மாறிவிட்டேனா? என்னிடம் எதை பார்த்து இந்த அன்பும் நேசமும் கொண்டான். அவளுக்கு விழிகளில் கண்ணீர் முத்து சிதறியது.
பின்ன தனக்காக அந்த பிள்ளை கையில் இருந்த ஐவியை கிழித்து போட்டு சுவடு தெரிகிறதே.. அங்கும் இங்குமாய் இரத்த கசிந்த கோடுகள் விகாரமாய் சிறுவனின் கையில் தென்பட்டது. அது மட்டுமா? அந்த அறை முழுவதையும் அல்லாவா தலைகீழாக்கி வைத்து இருக்கிறான் இவளை கேட்டு.
ஒவ்வொரு கணமும் வேரல் வருவாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி ஏங்கி அது பெரும் கோவமாக மாறி இதோ மொத்தத்தையும் புரட்டி போட்டு வைத்து இருக்கிறான்.
அவனை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,
“ஏன்டா கண்ணா இப்படி பண்ணுன.. சாப்பிடவே இல்லையாம்..” என்றவளுக்கு கண்கல கலங்கியது. கங்குவன் கையை கட்டி இருவரையும் அசையாது பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் மகனை அவனால் அடக்கவே முடியவில்லை. இரவு முழுவதும் அவனுடன் போராடி மிகவும் களைத்துப் போனவனுக்கு இயலாமையில் நெஞ்சு விம்மி புடைத்துக் கொண்டு இருந்தது.
“ஏன் ஏன்டா அபப்டி என்ன பண்ணிட்டேன் நான்.. ஏன் என்கிட்டே ஓட்ட மாட்டிக்கிற?” கங்குவனின் உள்ளம் எரிமலையாய் குமுறிக் கொண்டு இருந்தது.





