ஒட்டு மொத்தமாக தன் மீது அவன் திருப்பி விட்ட குற்றச்சாட்டுகளை கண்டு அயர்ந்துப் போனாள்.
“நான் தான் சின்ன சின்ன விசயத்தை எல்லாம் பெருசா நினைச்சு காம்பிளிகேட் பண்ணிக்கிறேனா..” சிந்தனை ஒரு பக்கம் ஓடியது.
“எல்லாத்தையும் அப்புறமா யோசிச்சுக்கலாம்.. இப்ப சாப்பிடு.. டேப்போல விட்ட வேலையை தொடரனும். எல்லோரும் இன்னைக்கு வீட்டுல தான் போல. சோ வயலுக்கும் போகணும். சீக்கிரம் கிளம்பு” என்று அவளை அவசரப் படுத்தினான்.
“நான் எதுக்கு?” அவள் தயங்க,
“கொஞ்சம் வேலை இருக்கு. உதவி பண்ணு வா” என்றவனிடம்,
“துளசிய சாப்பிட கூப்பிடலையே” சங்கடமாய் கேட்டாள்.
“பாட்டி பார்த்துப்பாங்க. நீ கிளம்பு” என்று சொல்லவும் வேறு வழியில்லாது அவனோடு கிளம்பி சென்றாள் பனிநிலவு. போகும் அவளை அவ்வளவு வன்மத்துடன் பார்த்து இருந்தார்கள் கலாவும் மங்கையும் அவரவர் அறையில் இருந்து. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள் போல.
பெரும் உருக்கத்துடன் மனைவியின் கையை பற்றி முட்டியில் நின்று இருந்தார் பொன்னன். அவரின் விழிகள் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது.
“உன் கிட்ட மன்னிப்பு கேட்க எனக்கு தயக்கம் இல்ல.. ஆனா நீ என்னை மன்னிக்கும் படியான காரியத்தை நான் செய்து இருக்கவில்லை” என்று பொன்னன் பேசபேச, காமாட்சி விக்கித்து நின்றார். அவரின் விழிகள் கணவனையே பார்த்து இருந்தது.
“உண்மையா எனக்கு உன் மேல எந்த கோவமும் இல்லை காமு.. ஆனா தங்கச்சி நம்ம மகள் துளசி வாழ்க்கையை பத்தி நிர்தாட்சண்யமா பேசி வைக்கவும் என்னால தாங்க முடியல. ஏற்கனவே நம்ம முத பொண்ணு வாழ்க்கை எப்படி அமைஞ்சதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். இவ வாய் முகூர்த்தம் ஏதாவது பழிச்சு போச்சுன்னா என்ன பண்றதுன்னு உள்ளுக்குள்ள அவ்வளவு பயம். மங்கையை அடக்க எனக்கு வேற வழி தெரியல.. இதுக்கு மேல அவளை பேச விடவும் கூடாதுன்னு தான் உன்னை அடிக்க வேண்டியதா போயிடுச்சு.. துளசி வாழ்க்கை நல்ல படியா ஆரம்பிக்கணும்னு வேண்டாத தெய்வம் இல்ல காமு” வேதனையுடன்சொன்னவரின் கைகளை பற்றிக் கொண்ட காமட்சி,
“எனக்கு தெரியுங்க. நீங்க இவ்வளவு தூரம் சொல்லனும்னு இல்ல. அந்த இடத்துல துளசி பேர் அடிபடாம இருந்தா அது வேற. ஆனா அவளை இப்படி நிர்தாட்சண்யமா பேசுவான்னு நானும் எதிர் பார்க்கலங்க” காமுவும் கண்கள் கலங்கினார்.
“அழாத காமு.. ஏற்கனவே உன்னை அடிச்சுட்டேன்ற குற்ற குறுகுறுப்புல வெந்துட்டு இருக்கேன். மேற்கொண்டு என்னை அழுது வதைக்காத” என்றார்.
“அப்போ நீங்களும் இப்படி மண்டில நின்னு என்கிட்ட மன்னிப்பு கேட்காதீங்க..” என்றார் காமு. அவரின் பேச்சை கேட்டு மண்டியில் இருந்து எழப் பார்க்க அவரால் முடியவில்லை.
அவருக்கு கையை குடுத்து உதவி செய்த காமாட்சி,
“இந்த வயசான காலத்துல இதெல்லாம் தேவையா? என்ன இளமை திரும்புதாக்கும்.. இப்ப வயசு பையன் மாதிரி மண்டி போட்டு நிக்கிறீங்க” சிரித்தார்.
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சா?” செல்லமாக முறைத்தவர், எழுந்து காமுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டு,
“நீ இப்படி சொல்ற. ஆனா உன் மகன் அப்படி இல்ல தெரியுமா? உன் கிட்ட நான் மன்னிப்பு கேட்டே ஆகனும்னு நிக்கிறான்” என்றார்.
“கதிரவன் எப்பொழுதுமே அப்படி தானேங்க.. அவனை இன்னைக்கு நேற்றைக்கா பார்க்கிறோம்.. இருபத்தி மூணு வருசமா பார்க்கிறோம். யாருக்காகவும் அவன் தன் குணங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டான்..”
“இதையும் சேர்த்து சொல்லு.. தான் பிடிக்கிற முயலுக்கு மூனே காலுன்னு நிர்ப்பான்”
“என் புள்ளையை எதாவது சொல்லலன்னா உங்களுக்கு தூக்கமே வராதே.. போங்க போய் தேங்கா கணக்கை பாருங்க. இல்லன்னா அவன் வந்து கத்துவான்..” என்றவர் கணவனுக்கு உணவு பரிமாறி சாப்பிட வைத்த பிறகே அவரை வயலுக்கு செல்ல விட்டார் காமட்சி.
--
தாயும் தந்தையும் சமாதனம் ஆகி, தந்தை வயலுக்கு சென்று விட்டார் என்று தெரிந்துக் கொண்ட கதிரவன் டெப்போவிலே இருந்துக் கொண்டான்.
தன் அருகில் வெறுமென அமர்ந்து இருந்த பனியை ஒரு பார்வை பார்ப்பது, எதிரில் அமர்ந்து இருந்த ஆருயிர் நண்பனான கதிரவனை ஒரு பார்வை பார்ப்பதுமாக இருந்தான் மாதவன்.
அவனது பார்வையில் எரிச்சல் ஆன கதிரவன்,
“இப்ப என்ன டேஷுக்கு ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருக்க?” கடுப்புடன் கேட்டான்.
“இல்ல மச்சான் ...” என்று அவன் இழுக்க,
“பல்லை உடைக்க போறேன். சொல்ல வந்ததை சொல்லி தொலடா” சீறினான் கதிரவன்.
“கோவிச்சுக்காத மச்சான்.. உண்மையாவே நீ சொன்னதை எல்லாம் என்னால நம்பவே முடியல.. கனவா நிஜமான்னு யோசனையா இருக்கேன்” என்றவனை முறைத்துப் பார்த்தான்.
அவனது பார்வையில் பம்மியவன்,
“நீ சொல்றதை நம்பறேன் மச்சான்.. நீ சொல்றதை நம்பாம இருப்பனா.. ஆனா நம்ம ரேவதி அக்காவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணான்னு நம்ப முடியல.. அதை தான் சொன்னேன் மச்சான். நீ டென்ஷன் ஆகாத மச்சான்” வார்த்தைக்கு வார்த்தை மச்சான் போட்டவனை முறைத்தான்.
“முறைக்காத மச்சான்..” ஈஈ என்று சிரித்தான். கதிரவன் வாயையே திறக்கவில்லை.
“எம்மா பனி” என்று அவள் பக்கம் திரும்பிக் கொண்டான் மாதவன். இன்னும் ஏதாவது வாயை திறந்தால் கன்னத்தின் மேலே போட்டு விடுவான் என்று சமயோசித்தமாக பனி பக்கம் திரும்பிக் கொண்டான்.
“நைட் மீட்டிங்.. ஏற்பாடு பண்ணுடா” என்றான்.
“மச்சான்” என்று அவன் கண்கள் மின்ன அழைக்க,
அவன் பனியை கண் கட்டினான். சட்டென்று கண்களின் ஜோலிப்பை குறைத்துக் கொண்டவன், “சரி மச்சான்” என்று அடங்கினான்.
“மீட்டிங்னு சொன்னா போதும்.. உடனே கண்ணு ரெண்டும் பல்ப் போட்ட மாதிரி இவனுக்கு எரியும்” வாய்க்குள் சொல்லி சிரித்துக் கொண்டவன்,
“இன்னைக்கு நைட் சின்ராசை கையில புடிக்க முடியாதே..” என்று எண்ணியும் கொண்டான்.
அன்றிரவு வயல் தோட்டத்தில் கட்டி இருந்த ஒரு அடுக்கு வீட்டின் மொட்டை மாடியில் கதிரவன், மாதவன் மற்றும் சேகரன் மூவரும் கூடி இருந்தார்கள்.
“மாமா” என்று வழிந்து வைத்தான் மாதவன்.
“அடி பின்னிடுவேன்டா.. மாமா ஓமான்னுகிட்டு வந்தன்னா” வந்தவுடனே கடுகாய் பொரிந்தார் சேகரன்.
“என்ன மாமா எதுக்கு இவ்வளவு கோவம்?” என்றவனின் பார்வை மொத்தமும் கதிரவனிடம் தான் இருந்தது.
“இவன் என்ன ஏழரையை கூட்டி வச்சு இருக்கானோ தெரியலையே.. இவரு ஆரம்பிக்கும் முன்னவே கட்டையை போடுறாரே.. என்னவா இருக்கும்?” மனதுக்குள் எண்ணிக் கொண்டவன்,
“பின்ன கோவப்படாம எப்படிடா இருக்க சொல்ற? இவன் என்ன வேலை எல்லாம் பார்த்து வச்சு இருக்கான் தெரியுமா?” என்று சற்று காரமாகவே கேட்டார் சேகரன்.
“எனக்கு தெரிஞ்சு பயபுள்ள அப்படி எல்லாம் எதுவும் செய்து இருக்க மாட்டானே மாமா. என் நண்பன் ரொம்பவும் அப்பாவியாச்சே..” வாயை விட்டான் மாதவன்.
இவர்கள் இருவரும் தான் பேசிக் கொண்டு இருந்தார்களே தவிர சம்மந்தப் பட்டவனோ வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல அமர்ந்து இருந்தான்.
“யாரு இவனா அப்பாவி.. இவன் நம்ம எல்லோரையும் பாவியாக்கி விட்டுடுவான்” என்று முறைத்தார் தன் மச்சானை.
“ஒரு வேளை அதுவா இருக்குமோ இல்ல இல்ல இதுவா இருக்குமோ” மனதுக்குள்ளே ஒற்றையா ரெட்டையா போட்டுக் கொண்டு இருந்தான் மாதவன்.
“நீ என்னடா திருட்டு முழி முழிக்கிற..? என்னத்தை என் கிட்ட இருந்து மறைக்கிற?” சேகரன் கேட்க,
“ஏதே நான் மறைக்கிறனா? என்ன மாமா என்னை பத்தி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க.. நானெல்லாம் திறந்த புத்தகம் மாதிரி மாமா.. எனக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்ல.. நான் ஒரு பச்ச மண்ணு யூ நோ..” என்றவனின் கழுத்தில் கையை போட்டு தன் அருகில் இழுத்து அவனின் கழுத்தை இறுக்கி நெருக்க,
“ஐயோ கொலை கொலை.. ஒரு பச்ச மண்ணை, ஒரு மா பிஞ்சை இப்படி கொலை பண்றீங்களே மாமா..” கதறினான் மாதவன்.
அவர்களின் லூட்டியை சின்ன இதழ் சிரிப்புடன் பார்த்துக் கொண்ட கதிரவன் இப்பொழுதும் அமைதியாகவே இருந்தான்.





