“பக்கத்துல எங்கும் பார் இருக்கான்னு பாரு.. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்” என்று பெருமூச்சு விட்டு தன் தம்பியை தேடி போனான்.
மூவரும் அருகில் இருந்த பப்பில் அமர்ந்து இருந்தார்கள். மூவருக்கும் வேதனை தான். தங்கையின் திருமணத்தில் யாரோ போல இருப்பதை அவர்கள் கொஞ்சம் கூட விரும்பவே இல்லை.
ஆனால் பெரியவர்களை மீறி இவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அதுவும் சின்ன தாத்தா மற்றும் அப்பாமார்கள் மிகவும் கோவத்தில் இருக்க அடங்கி போகவேண்டிய சூழல். வேல்முருகன் மட்டுமே ஏந்திழையாளுக்கு ஆதரவாய் இருந்தார்.
“ரொம்ப தண்ணி போட வேண்டாம்டா” என்றான் வருண். யுகேஷ் எதுவும் பேசவில்லை. கார்த்திக் அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
மூவருக்கும் வேதனையோ வேதனை. தங்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கச்சி... ஆனால் அவளை தள்ளி வைக்க வேண்டிய சூழல்..
கண்கள் கலங்கிப் போனான் யுகேஷ்... அவனது நிலையில் தான் கார்த்திக்கும் வருணும் இருந்தார்கள்.
“அந்த ராசசிங்கனை கொன்னுடட்டுமா?” என்று வேதனையின் உச்சத்தில் கேட்டான் யுகேஷ்.
“ஜெயிலுக்கு போகும் பொழுது அப்படியே உன் பொண்டாட்டியையும் பிறக்க போற பிள்ளையையும் சேர்த்து கையோட கூட்டிட்டு போயிடு” என்று கத்தினான் கார்த்திக்.
“ரிலாக்ஸ் டா... இப்போ நம்மளால எதுவும் செய்ய முடியாது... புருஞ்சுக்கோடா” என்று வருண் யுகேஷை கட்டிக் கொண்டான்.
“ப்ச்” என்று அவனை உதறினான்.
“டேய் கொஞ்சம் அமைதியா இரு.. எல்லாத்தையும் பார்த்துக்கலாம்” என்று கார்த்திக் கலங்கிய விழிகளை மறைத்துக் கொண்டு ஆதரவாக இருக்க யுகேஷுக்கு மனமே ஆறவில்லை.
“எப்ப பார்த்துக்குறது.. இன்னைக்கு ஒருநாள் தான் அவ நம்ம தங்கச்சியா இருப்பா. இன்னைக்கே நம்மளால எதுவுமே செய்ய முடியல. நாளையில இருந்து அவனோட பொண்டாட்டியா போனதுக்கு பிறகு அவனோட ஒரு மயிர கூட பிடுங்க முடியாது...” என்று ஆத்திரத்தில் கத்தினான்.
யுகேஷ் சொல்வதும் சரி தான் என்று பட்டது.
எல்லாமே கைமீறிய நிலை என்று புரிந்தவர்களுக்கு உள்ளத்தின் கொதிப்பு மட்டும் அடங்கவில்லை.
ராசசிங்கனின் கெஸ்ட்ஹவுஸ்க்கே அழைத்துக் கொண்டு போக சொன்னார் வேல்முருகன்.
“ஏன்” என்று அவரை திரும்பி பார்த்தான் காரை ஓட்டிக் கொண்டே.
“நாளைக்கு திருமணம் முடிஞ்சி முறைப்படி வீட்டுக்கு போய்க்கலாம் சிங்கன்... அது தான் முறையும் கூட” என்று அவர் பெரியவராய் சொல்ல,
“ஓகே” என்று கேட்டுக் கொண்டான். அதன் படி அருகில் இருந்த அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு அழைத்து எல்லா ஏற்பாடும் செய்ய சொல்லி சொன்னவன் தாத்தாவையும் பேத்தியையும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
அதிகாலையில் எழுந்து மேக்கப் பண்ணா போதும் என்று சொன்னவன் அன்றைக்கு இரவில் இருந்தே அவளுக்கு என்று தனியான ஒரு பிஏவை அப்பாயின்ட்மென்ட் செய்து விட்டான்.
ஏற்கனவே அவளது வீட்டில் அவளுக்கு உதவியாய் இருந்த பெண்ணையே இங்கு வேலைக்கு அமர்த்தி விட கொஞ்சம் இலகுவாய் போனது ஏந்திழையாளுக்கு.
ரொம்ப இல்லை என்றாலும் சில இடங்களில் ராசசிங்கனை மெச்சாமல் இருக்க முடியவில்லை அவளால். தாத்தாவுக்கும் அதே எண்ணம் தான்.
ஏனோ தானோ என்று எதையும் விடாமல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான் அவன். அதிக மெனக்கெடுதலும் எடுத்துக் கொண்டான். ஆனால் வாய் மட்டும் அதே போல தான். வாயை திறந்தாலே எதிராளி அவுட் தான். அந்த மாதிரி கடுசாக தான் பேசினான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அனைவரின் கோவத்தோடும் திருமண நாள் மிக அழகாக விடிந்தது. காலையிலேயே முகூர்த்தம் என்பதால் பரபரவென்று இருந்தது மணமக்களுக்கு...
தேவகிக்கும் மனமே இல்லை. பெண்ணுக்காக அவ்வளவு நகை எடுத்து வைத்து இருந்தும் ஒன்றை கூட போட்டு பார்க்கவில்லையே என்று வருந்தியவர் யுகேஷை மட்டும் அழைத்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்தார்.
சுந்தரம் அவரை தடுக்க ஒரே ஒரு பார்வை தான் பார்த்தார் தேவகி... சட்டென்று தன் மறுப்பை விலக்கிக் கொண்டவர் அவர்களுக்கு போக வழி விட்டு ஒதுங்கி நின்று விட்டார்.
அடுத்த நாள் திருமண விழாவுக்கு தன் மகளுக்கு போட்டு பார்க்க ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நகைகளை பையில் அள்ளி எடுத்து போட்டுக் கொண்டு விரைந்தார். மகள் ராசசிங்கனின் வீட்டில் இருப்பாள் என்று எண்ணி அங்கு வர வாசலிலே மறைக்கப்பட்டார்கள்.
அதில் அதிக வெஞ்சினம் கொண்ட யுகேஷ் கேட்டை உடைக்கப் பார்க்க உப்பரிகையில் கையை கட்டியபடி தன் வீட்டு வாசலுக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தவனை ஏளனத்துடன் பார்த்தான். அவ்வளவு மிதப்பு அவனிடம் இருந்தது.
அதை பார்த்த யுகேஷ்க்கு கட்டுக் கட்டுக் கடங்காத ஆத்திரம் பீரிட்டு வந்தது.
“ஏய்... மரியாதையா கதவை திறடா... என் தங்கச்சியை ஒளிச்சு வச்சுட்டு சவடாலாவா நிக்கிற. வந்தேன்னு வை உன் மண்டையை உடைச்சி இரத்தம் சிந்த விட்டுடுவேன்டா” என்று கர்ஜித்தான்.
அதை கேட்ட சிங்கன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “உன் தங்கச்சி என் பொண்டாட்டிடா... அவளை உன் கண்ணு பார்க்க விடவே மாட்டேன். முடிஞ்சா என்னை மீறி உன் தங்கச்சியை சந்திச்கிக்கோ” என்று சவால் விட்டான்.
“வேணாம் சிங்கன் என்னை மோதிக்காத... நீ ஏற்கனவே செய்து வச்சுட்டு இருக்கிற ஒவ்வொரு வேலைக்கும் உன் மேல கொலைவெறியில இருக்கேன். இப்போ நீ என் தங்கச்சியை பார்க்க விடலன்னா வாழ்நாள் மொத்தத்துக்கும் என்கிட்டே நீ அனுபவிப்ப..” என்றான் கேட்டை காலால் எட்டி உடைத்து.
“அதையும் தான் பார்க்கலாம்..” என்று தோளை குலுக்கியவன்,
“இப்போ இடத்தை காலி பண்ணு. உன் தங்கச்சியை பார்க்க முடியாது. அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாக ராசசிங்கன் சொல்லி விட்டான்.
“டேய் வேணான்டா எனக்கும் நேரம் வரும் அப்போ உன் செயலுக்கு எல்லாம் சேர்த்து வச்சி பலி வாங்காம விட மாட்டேன்” என்று கத்தினான்.
“அதை அப்போ பார்த்துக்கலாம்.. இப்போ வாயை பொத்திட்டு கிளம்புடா” எகத்தாளமாக சொன்னவன் உள்ளேப்போக பார்க்க,
“தம்பி” என்று பரிதவிப்புடன் அவனை அழைத்தார் தேவகி..
ராசசிங்கன் அழுத்தமாய் அவரை பார்த்து நின்றான்.
“என் பொண்ணை பார்க்கணும் தம்பி... இதை எல்லாம் அவக்கிட்ட குடுக்கணும்” என்று ஏக்கத்துடன் சொன்னவரை ஏளனமாக பார்த்தவன்,
“அதுல அப்படி என்ன இருக்கு” என்று கேட்டான்.
“கல்யாணத்துக்கு தேவையான நகை எல்லாம் இருக்குப்பா” என்று பெரிய பையை காட்டினார்.
“ம்ஹும்... உங்க பொண்ணு மேல ரொம்ப தான் அக்கறை..” நக்கல் செய்தவன்,
“அது சரி உங்க பொண்ணுக்கு கல்யாணம்னு இப்ப தான் தெரிஞ்சுதா? ரொம்ப சீக்கிரமா அவளுக்கு தேவையான எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்துட்டீங்க போல” மேலும் நக்கல் பண்ணினான். அதில் தேவகிக்கு சுருக்கென்று குத்தியது மனதில்.
அவன் சொல்வதிலும் தவறு ஒன்று இல்லையே.. இன்னைக்கு தான் திருமணம் என்று தெரியுமா... இல்லையே ஒரு வாரமாக வீட்டில் இதே பேச்சு தானே போய் கொண்டு இருந்தது... அப்பொழுது எல்லாம் விட்டுட்டு இப்போ இந்த இரவில் வந்து இதை எல்லாம் கொடுக்கிறேன் என்று நின்றால் யாரு தான் ஏற்றுக் கொள்வார்கள் என்று உள்ளுக்குள் மறுகிப் போனார்.
தாய் மருகுவதை பார்த்த மகனுக்கு இரத்த நாளங்கள் எல்லாம் முறுக்கிக் கொண்டு வந்தது.
“ம்மா அவன் கிட்ட போய் ஏன் மா கெஞ்சிட்டு இருக்க... அவனுக்கு நல்ல பாடத்தை நான் கத்து குடுக்குறேன். நீ எதுக்கும் கவலை படாத..” என்று ஆற்றாமையில் பல்லைக் கடித்தான்.
“அது தான் உங்க மகனார் சொல்லிட்டாரே... பிறகு என்ன கிளம்புங்க... என் வாசல்ல நின்னு யாரும் பிச்சை எடுக்க வேணாம்.. அதுக்கு பதிலா கோயில்ல நின்னு எடுங்க... காசாவது கிடைக்கும்” என்று அவர்களை அசிங்கப்படுத்தினான் ராசசிங்கன்.
அதில் கொதித்து எழுந்தவன், “டேய்” என்று அவனை அடிக்க பாய்ந்தான். ஆனால் வாசலிலே மறிக்கப் பட எங்கிருந்து அவனை அடிப்பது.
“ரொம்ப பொங்காதடா... அப்புறம் பீப்பி வந்து சீக்கிரம் மேல போயிட போற...” என்று அதற்கும் நக்கல் செய்தவன்,
“ப்பா இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியல... வாட்ச்மென் அவங்களை போக சொல்லு... அப்படியும் போக மாட்டேன்னு சொன்னா அடிச்சு விரட்டி விடு... அவங்க இன்னும் ஒரு நிமிடம் இருந்தாலும் உன் வேலைக்கு இன்னொருத்தனை எடுக்க வேண்டி இருக்கும்” என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டான்.
ராசசிங்கனின் இந்த அலட்ச்சியத்திலும் ஏளனத்திலும் வாசலில் நின்று இருத இருவருக்கும் பெரும் அவமானம் சூழ்ந்தது. அதை விட ஏந்திழையாளை காண முடியாமல் போனதில் மிகவும் வேதனை பட்டுப் போனார்கள்.





