“குழந்தையா?” என்று தேனாண்டாளோடு உடன் வந்த அவரின் இரு மகள்களும் கண்ணை விரித்தார்கள். “என்னம்மா நாம எதிர்பார்க்காத டிவிஸ்ட்ஒன்னு இங்க இருக்கு... சத்தமே இல்லாம உன் மகன் உன் சொத்துக்கு வாரிசு உருவாக்கி வச்கிருக்கா போலயே?” சீதா ஆத்திரமாக தாயிடம் சொன்னாள்.
“அதானே... என்ன தைரியம் இருந்தா இந்த வேலை செய்து இருப்பாள்.. முதல்ல இவளை உயிரோடவே விட்டு இருந்து இருக்கக் கூடாதும்மா... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல.. முதல்ல இந்த பீடியையும் அது பெத்து போட்ட அந்த பீடியையும் தீ வச்சு கொளுத்துங்க” என்றாள் ஆத்திரம் மிகுதியில்.
பின்ன உதயாதிபனுக்கு திருமணம் செய்ய விடாமல் அவனுக்கு இறுதி வரை குடும்பமே இல்லாமல் பார்த்துக் கொண்டு அவனது சொத்தையும் இரு பங்காக போட்டுக்கலாம் என்று தீட்டி வைத்திருந்த திட்டத்தை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி விட்டாளே வராளி.
பின்ன அவர்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்குமா?
“ஏய்... என்னடி இது... சத்தமே இல்லாம பெத்து போட்டு இருக்க...” என்று சத்தம் போட்ட ஆண்டாளை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் பிள்ளையை நெஞ்சோடு அணைத்து,
“என்னடா கண்ணா பயந்துட்டியா...? அம்மா இருக்கேன்ல அப்புறம் எதுக்கு பயப்படணும்..? அம்மா உன்னை நல்லா பார்த்துக்குவேன்டா” என்று பிள்ளையோடு பேசி சமாதானம் செய்தவளை பார்க்க பார்க்க உள்ளும் புறமும் எரிந்தது மூவருக்கும்.
பிள்ளையின் சாடையை வைத்தே அது யாருடைய பிள்ளையென்று தெளிவாக தெரிந்துப் போக மூவருக்கும் இரத்த பசையே இல்லாமல் போனது முகத்தில்.
“இது இது.. இந்த குழந்தை...” என்று அவர் அதிர, வராளி யாரையும் கண்டு கொள்ளாமல்,
“சரி வா.. அம்மா சாப்பாடு எடுத்து ஆர வச்சு இருக்கேன். சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” என்று குழந்தையோடு எழுந்து அடுப்படிக்கு சென்று தட்டில் உணவு போட்டுக் கொண்டு வெளியே வந்தவளின் தட்டை காலால் எட்டி உதைத்து விட்டு அவளை பிடித்து அப்படியே முன்னால் இருந்த சுவரில் தள்ளிவிட்டார்.
இப்பொழுது தான் நெற்றியில் இருந்த புண் சற்று ஆறியது. அதிலே மீண்டும் காயம் பட வலி உயிர் போனது.
தேனாண்டாளின் இந்த செயலை எதிர் பார்க்காத வராளி “அய்யோ பிள்ளை” என்று சுவரில் பிள்ளை படாதவாறு தன் தலையை குனிந்து மீண்டும் நெற்றியில் காயம் வாங்கிக் கொண்டவள் இரு கையால் பிள்ளையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் நெஞ்சோடு.
சுவரில் முட்டியதால் நெற்றி பிளந்து உதிரம் சொட்டியது வராளிக்கு. அவளின் உதிரத்தை பார்த்தும் மனம் இறங்காத ஆண்டாளு அவளை இன்னும் வேதனை படுத்தும் வகையில் மீண்டும் அவளை பற்றி அருகில் இருந்த உணவு மேசையில் இடிக்கப் போக அங்க அவரை தடுக்க ஒருவருமில்லை.
வராளி சுதாரிக்கும் முன்பே அவளை மீண்டும் மீண்டும் தள்ளி முட்ட வைத்தவர், “என்ன தைரியம் இருந்தா என் வீட்டு வாரிசை சுமந்து இருப்ப... சுமந்ததோட இல்லாம சத்தமே இல்லாம பெத்து எடுத்து வளர்த்துட்டு இருக்க...? உன்னை எல்லாம் அன்னைக்கே உயிரோட கொளுத்தி இருந்தா இப்போ இப்படி வந்து நிர்ப்பியா? என் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறதுக்குன்னே வந்தியாடி..” என்று அவர் அவளின் கூந்தலை பிடித்து உலுக்கி கேட்க வலியில் உயிர் போனது வராளிக்கு.
“ம்மா” என்று அவள் வலியில் துடிக்க, அவளின் வலியை எல்லாம் சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை அங்கிருந்த யாரும்.
“மகன் இருப்பது உதயாதிபனுக்கு தெரியுமா? இல்ல தெரியாதா?” என்று கடும் சிந்தனையில் உழன்றார்.
அதை வராளியிடமே கேட்டார். அவள் வாயையே திறக்கவில்லை. “சொல்லுடி ஊமச்சி... எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என் புள்ளையோட வாரிசை சத்தமே இல்லாம பெத்து இருப்ப.. சொத்துக்காக தானே இந்த பிள்ளையை பெத்துக்கிட்ட, சொல்லு இந்த உலகத்தை விட்டு கருமத்தை அனுப்ப உனக்கு எவ்வளவு பணம் வேணும்?” என்று வியாபாரத்தை ஆரம்பித்தார்.
“அத அவக்கிட்ட கேட்டு, அவளா சொல்லப் போறா... என்கிட்டே கேளுங்க அமைச்சரம்மா. நாம டீல் பேசலாம்” என்று கலாவதி தேனாண்டளிடம் வியாபாரத்தை ஆரம்பிக்க கேட்டுக் கொண்டு இருந்த வராளிக்கு மூச்சே நின்றுப் போனது. அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் அந்த நொடியில் அறுந்துப் போனது.
“என் பிள்ளையோட தலைக்கு பேரம் பேசுறாங்களே... இவங்க ரெண்டு பேரும் அம்மாக்கள் தானா? இல்ல... பச்சிளம் குழந்தைன்னு அவனை கொன்னு போட துடிக்கிற இவங்க எல்லாம் அம்மாக்கள் இல்லை உதிரத்தை சொட்டு விடாமல் பருகும் ராட்ச்சர்கள், அரக்கர்கள்” என்று மனம் வெந்துப் போனவள் யாருடைய கண் பார்வையிலும் படாமல் தன் பிள்ளையோடு எழுந்து வெளியே சென்றாள்.
இங்கே ஒரு நிமிடம் இருந்தாலும் தன் பிள்ளைக்கு ஆபத்து என்று உணர்ந்துக் கொண்டவள் பிள்ளையை மார்பில் போட்டுக் கொண்டு பின் வாசல் வழியாக பூனை நடை போட்டு வீட்டை தாண்டியவள் அதன்பிறகு புயல் வேகம் எடுத்தாள். ஆனால் கண்ணை மறைக்கும் உதிரத்தை துடைத்து எரிந்தவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது.
இவர்கள் எல்லோரும் பேரம் பேசுவதிலே குறியாக இருக்க வராளி போனதை யாரும் அறியவில்லை. “விட்டா மொத்த சொத்தையே கேட்ப போலையே?” என்று லட்சுமி கடுகடுக்க,
“உங்க அம்மா வீட்டுக்கு உருத்தான ஒத்த வாரிசு... அப்போ தொகையும் அதிகமா தானே இருக்கும்” சிவா சொன்னாள்.
“ஏன் அப்போ எங்க வாரிசு எல்லாம்?” என்று கேட்டாள் சீதா.
“ஆயிரம் தான் மக வீட்டு வாரிசு இருந்தாலும் மகன் வீட்டு வாரிசுக்கு ஈடாகாது... தெரிஞ்சுக்க” என்று பதிலடி குடுத்த கலா, “உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம் ஒரு அம்பது கோடி குடுங்க. நானே அவனுக்கு முடிவு கட்டுறேன்” என்றார்.
“ஐம்பது கோடி எல்லாம் கட்டாது... நான் வேற ஆளை வச்சு இதை முடிச்சுக்குறேன்” என்றார் தேனாண்டாள்.
“நீங்க முடிப்பீங்க. ஆனா நான் விடமாட்டேன்..” என்ற கலாவோ,
“போலீஸ் ஸ்டேஷன் போய் என் பேரன் உயிருக்கு ஆபத்து இருக்கு. அவன் வேற யாரும் இல்லை. தொழில்துறை அமைச்சரோட மகன் தான். அதனால நீங்க தான் காவல் இருக்கணும்னு.. போய் கம்பளைன்ட் பண்ணிடுவேன். அப்போ உங்களால அவனை நெருங்க கூட முடியாது” என்றார் தந்திரமாய்.
“ஏய்... என்கிட்டையே உன் வேலை தனத்தை காமிக்கிறியா? நான் யாருன்னு தெரியுமா? என்ன பார்த்தா இந்த ஊரே பயப்படும். அப்பட்டிப் பட்டவளை எதிர்த்து நிக்கிறியா?” என்று அவரை அச்சுறுத்திப் பார்த்தார் தேனாண்டாள். ஆனா கலாவோ கொஞ்சமும் அசையவில்லை.
“உங்க மானம் போகக்கூடாதுன்னா நீங்க இந்த முறை இந்த விலை குடுத்தே ஆகணும்.. இல்லன்னா நீங்க இதுவரை மறைத்து வைத்திருந்த விசயம் தெருவுக்கு வந்து அம்பலமாகிடும்” என்றார்.
“என்ன சொல்ற?” விழிகளை உருட்டி அவரை கோவமாய் பார்த்தார். “இதோ நீங்களே பாருங்க” என்று தன் போனை அவருக்கு காண்பித்தார் கலா.
அதில் வராளியின் கழுத்தில் உதயாதிபன் தாலி கட்டுவது போல படம் இருக்க கண்டார். “இந்த போட்டோவோட இருவரும் குழந்தையோட இருக்கிற மாதிரி போட்டோவை கிரியேட் பண்ணி போட ரொம்ப நேரம் ஆகாது அமைச்சரம்மா... இப்பல்லாம் எவ்வளவோ டெக்னிக் வந்திடுச்சு” என்றார் அசால்ட்டாக
தேனாண்டளுக்கு குப்பென்று வியர்த்தது. ‘என்னது இது முடிஞ்சி போச்சுன்னு தூக்கி ஏறக்கட்டுன விசயம் எல்லாம் ஒவ்வொன்னா மூட்டையை பிச்சுக்கிட்டு விழுற மாதிரி வந்து விழுது... என்ன தான் நடந்துக்கிட்டு இருக்கு இங்க... என் முன்னாடி நிக்க கூட தகுதி இல்லாதவல்லாம் எனக்கு நேரா நெஞ்சை நிமிர்த்தி என்கிட்டையே பேரம் பேசிட்டு இருக்கா’ என்று ஆத்திரத்தில் கண்கள் சிவந்துப் போனார்.





