Notifications
Clear all

அத்தியாயம் 57

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனுக்கு இணையாக அவளும் அவனுக்கு பதில் கொடுப்பதை தாமதமாக உணர்ந்தவள், சுதாரித்து விலகப் போனாள்.

ஆனால் அவன் விடாமல் தனக்குள் அவளை சுருட்டிக் கொண்டான்.

இதழ் முத்தங்கள் இருவரின் உயிரையும் தீண்டி இருக்க அவன் அவளை விடும் பொழுது அவளுக்குள் பெருத்த மௌனம் சூழ்ந்துக் கொண்டது.

அவளின் மௌனத்தை உணர்ந்தவன், குனிந்து இருந்த அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் விழிகளை ஆழ்ந்துப் பார்த்தான்.

அவனது கண்களில் இருந்த தீவிரம் அவளை அசைத்துப் போட, பட்டென்று கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

“என்னை நிமிர்ந்து பாருடி” அதட்டினான்.

“ம்ஹும்” என்று அவள் தலையை ஆட்டினாள்.

“இப்ப என்னை பார்க்கலன்னா மறுபடியும் உன் வாயை கடிச்சு வைப்பேன்” என்று சொல்ல, பட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் அதிரல். அவளின் பார்வையை உள்வாங்கியவன்,

“உனக்கு என் கிட்ட இருந்து என்னடி வேணும்?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“ஹாங்” அவன் கேட்ட கேள்வி புரியாமல் திகைத்துப் போய் பார்த்தாள்.

“உனக்கு என் கிட்ட இருந்து என்ன வேணும். நீ எதை கேட்டாலும் நான் தருவேன்” என்றவனை ஆழ்ந்துப் பார்த்தாள் இப்பொழுது இவள்.

அவளின் கண் பார்வையே சொல்லியது அவள் எதை கேட்க போகிறாள் என்று. ஆனால் அதை மனப்பூர்வமாக அவன் கொடுக்க எண்ணினான்.

“எது கேட்டாலும் தருவீங்களா?” தீர்க்கம் சுமந்து இருந்தது அவளின் வார்த்தைகள்.

“நிச்சயமா தருவேன்” என்றான்.

“இப்ப ஓகே சொல்லிட்டு பிறகு..” என்று அவள் தயக்கத்துடன் இழுத்தாள்.

“நீ எது கேட்டாலும் தருவேன்னு சொல்லிட்டேன்..” என்றவனின் குரலில் இருந்த உறுதியை உணர்ந்த அதிரல்,

“எனக்கு என் மகன் வேணும். நான் ஊட்டிக்கு போகணும். என் தங்கச்சிக்கு என்னை விட்டா வேற யாரும் இல்ல. அவளை நான் தான் பார்த்துக்கணும்” என்று ஒரே மூச்சில் அவள் சொல்லி முடித்தாள்.

“சரி நீ கேட்டதுக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு நாள் உன்னோடையும் உன் பிள்ளையோடையும் இருக்கேன். அதுக்கு ஓகே யா..” கேட்டான்.

ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் சரி என்று தலை அசைத்தாள்.

“நாளைக்கு இதே நேரத்துக்கு என்னை விட்டு நீயும் உன் பிள்ளையும் போகலாம்” என்றவன் கேர் டேக்கருக்கு போன் பண்ணி குழந்தையை எடுத்து வர சொன்னவன், இவனும் அதிரலை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு விரைந்தான்.

குழந்தையை வாங்கிக் கொண்டவன் அவருக்கு விடுமுறை கொடுத்து விட்டு கதவை அழுந்த சாற்றி தாழிட்டான்.

--

“பெரியவன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்.. வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. நீங்க என்னன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?” தேவகி கணவனிடம் பொரிந்து போய் கேட்க,

“உன் ஆசை மகன்னு நீ தானே செல்லம் குடுத்து வளர்த்த. நீயே கேளு” என்று பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டார் ஆளவந்தான்.

“எது சொன்னாலும் இதை ஒன்னு சொல்லிடுங்க..” என்றவருக்கு மனம் என்னவோ உள்ளுக்குள் தவியாய் தவித்துக் கொண்டு இருந்தது. வேண்டாதது என்னவோ நடக்க போவது போல ஒரு உணர்வு வந்தது.

அதற்கு ஏற்றார் போல கொரியர் ஆள் ஒருவர் பெரிய பார்சலை கொண்டு வந்து கொடுக்க,

“என்ன இது?” என்று சொல்லிக் கொண்டவர் வேலையாளை விட்டு பிரிக்க சொல்ல,

அந்த பார்சல் முழுவதும் இருந்தது தீத்திரள் தீரனின் மகன் உடைத்த அமெரிக்க பிளவர் வாஸ்.. அதுவும் எண்ணிக்கை ஐம்பதை தாண்டி இருந்தது.

அதை பார்த்த தேவகிக்கு நெஞ்சு விக்கியது. அந்த பெண்ணால் இத்தனை வாங்கி இருக்க முடியாது. சோ இதுக்கு பின்னாடி இருப்பது தன் மகன் தான் என்று உணர்ந்துக் கொண்டவருக்கு அவரின் மகன் கைநழுவி போன உணர்வு.

ஆளவந்தானிடம் அவர் காட்ட, அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை.

வெற்றி அப்பொழுது தான் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர, அவனிடம் காட்டி புகார் சொல்ல,

“நீங்க தானே கேட்டீங்க.. அதே பிளவர் வாஸ் வேணும்னு.. அது தான்.. இப்போ உங்களுக்கு திருப்தி தானே” என்று கேட்ட சின்ன மகனை திடுக்கிட்டுப் பார்த்தவர்,

“நீ என்ன சொல்ல வர்ற வெற்றி. அப்போ தப்பு பண்ணது நான் தானா?” கேட்க,

“அது உங்களுக்கு இன்னும் கூடவா புரியல.. ஒரு சின்ன பிள்ளை தெரியாம விளையாட்டு நோக்குள தள்ளி விட்டதுக்கு இந்த அளவுக்கு பேசி இருக்க வேணாம். அதும் நீங்க பேசுன பிள்ளை..” என்று ஏதோ சொல்ல வந்தவன், அதை அப்படியே நிறுத்தி விட்டு,

“ஆனா பேசிட்டீங்க.. அதனோட பின் விளைவுகளை நீங்க அனுபவித்து தான் ஆகணும்ம்மா” என்றவன் தன் அறைக்கு போக,

“அதுக்கு என்ன அர்த்தம் வெற்றி” சென்ற மகனை துளைத்து எடுத்தார்.

“அதை நீங்க அண்ணன் கிட்ட தான் கேட்கணும் ம்மா” என்றவன் போய் விட்டான்.

“என்னங்க?” என்று கணவனை அழைக்க,

“நான் கிளம்புறேன் வாக்கிங் போக டைம் ஆகிடுச்சு” என்று வெளியே போய் விட்டார்.

“இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்” என்றவர் பெரிய மகனுக்கு பிள்ளை ஆசை தான் இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது என்று எண்ணியவர், சில காலமாக மணப் பெண்ணின் தேடுதலில் இருந்தவர், இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அன்றைக்கே ஒரு பெண்ணை பார்த்தது பேசி முடித்து விட்டார்.

அவர்களின் தகுதிக்கும் வசதிக்கும் ஏற்றார் போல பார்த்தவர், நாளைக்கு காலையில் பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லி விட்டார். அதன் பிறகே அவருக்கு நிம்மதியாக இருந்தது.

இதற்கு இடையில் தேவாவின் தம்பி தன் குடும்பத்தை கூட்டிக் கொண்டு வந்து நின்றான் தீரனின் தங்கை தாராவை பெண் கேட்க..

இதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அதிரலின் வீட்டுக்குள் நுழைந்த தீரன், கதவை அழுந்த தாழிட்டு விட்டு கூடத்தில் போய் அமர்ந்தான். அவனின் கையில் தவழ்ந்த மகனை தன் தோளில் போட்டு விளையாட விட்டவன், அதிரலை நிமிர்ந்துப் பார்த்தான்.

அதிரல் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். வீட்டுக்கு கட்டும் ஒரு புடவையை எடுத்து கட்டிக் கொண்டு வெளியே வர,

தீரனும் அலுவலக உடையை கலைந்து விட்டு, வெறும் ஷாட்சில் இருந்தான். அதே போல மகனையும் ஆக்கி இருந்தான்.

எப்போ பாரு இவருக்கு இதே வேலை.. முணகியவள் சென்ரலைசுடு ஏசியின் அளவை கம்மி பண்ணி விட்டு கிட்சனுக்கு சென்றாள்.

“எதுவும் செய்ய வேணாம்.. ஹோட்டல்ல சொல்லிட்டேன் நீ இங்க இருந்து போற வரைக்கும் சாப்பாடு குடுத்துடுவாங்க” என்றான்.

“டீ போடப் போறேன்” என்றாள்.

“சேர்த்து போடு” என்றான் இவன்.

டீ போட்டு இரண்டு கப்பில் எடுத்துக் கொண்டு வந்தவள்,

“நான் யாருன்னு தெரியுமாடா உனக்கு..” கேட்டவனை கண்டு சிரித்த குட்டி அதிதீராவோ,

“தெய்யா” என்றான்.

அதிரலை ஒரு கணம் நிமிர்ந்துப் பார்த்த தீரன்,

“நான் யாருன்னு உனக்கு தெரியாமலே போகட்டும்..” சொன்னவன் கீழே படுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டான் பிள்ளையை. அவனது சொல்லில் அதிரலுக்கு மனம் பிசைந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : November 19, 2026 10:20 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top