“ம்ம்ம் இன்னும் இடுப்புல தூக்கி வச்சு அவளை செல்லம் கொஞ்சுங்க... இவ இது மட்டும் இல்ல இன்னும் என்னல்லாமோ செய்வா.. அந்த தெனாவட்டு அவளுக்கு இருக்கும் பொழுது நாம என்ன சொன்னாலும் அவ காதுல ஏறாது...” என்று அவளின் தாய் தேவகி ஆதங்கப்பட்டார்.
“தேவகி” “ம்மா” என அவர்களை சுற்றி இருந்த எல்லோரும் அலற, விரக்தியில் தன் தாயை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசவில்லை.
தன் தோளை ஆதரவாக தொட்ட உடன் பிறப்புகளையும், பாட்டி, அம்மா, அத்தைமார்கள் அத்தனை பேரின் கையையும் எடுத்து விட்டுட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். வழியில் வேல்முருகன் வேதனையுடன் நின்று இருந்தார்.
அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு அவரையும் கடந்து உள்ளே போய் விட்டாள்.
அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டு அதன் மீது சாய்ந்து நின்ற ஏந்திழையாளுக்கு மனம் கொதியாய் கொதித்தது. தன்னை பற்றி பெற்ற தாயே இப்படி சொல்லியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையில் இடி விழாத குறை...
ஏந்திழையாளுக்கு மனம் கொதியாய் கொதித்தது. எல்லோரும் என்ன பேச்சு பேசுகிறார்கள்... பெற்ற தாயே இப்படி சொல்லியதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையில் இடி விழாத குறை தான் அவளுக்கு...
என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லையா...? அப்போ இவங்க இத்தனை வருடம் என்னை பொத்தி பொத்தி வளர்த்த வளர்ப்பு எல்லாமே பொய்யா? நான் அப்படி பட்ட பெண் தான்னு முடிவே பண்ணிட்டாங்களா? யாரோ ஒரு முடிவை எடுத்து அதை நான் தான் எடுத்தேன்னு என் மேல முழு பழியையும் போட்டு என் நடத்தியே கேள்வி குறியாக்கி வைத்த உறவுகளை எண்ணி நொந்துப் போனாள் ஏந்திழையாள்.
இது எல்லாவற்றிற்கும் முழுக்க முழுக்க காரண கர்த்தா ராசசிங்கன். ஆனால் கெட்ட பெயர் முழுக்க எனக்கு... என்று விரக்தி முகிழ்க்க உள்ளுக்குள் மறுகிப்போனாள்.
அவளை மீறி அனைத்தும் நடந்துக் கொண்டு இருக்க இவளின் பேச்சு முற்றிலும் குறைந்துப் போனது. அடுத்த நாளே அனைவரும் சென்னை கிளம்பினார்கள். ராசசிங்கனை அதற்கு அடுத்து பார்க்கவே முடியவில்லை. அதை பற்றி ஏந்திழையாள் கவலை பாடவும் இல்லை.
கூட பிறந்தவர்கள் யாரும் அவளிடம் பேசுவது இல்லை. அன்னைமார்களும் பேசுவதே இல்லை. ஆனால் அவளுக்கு நேரா நேரத்துக்கு என்ன வேணுமோ அது அத்தனையும் தங்கு தடையின்றி வந்துக் கொண்டு இருந்தது.
உணவு என்பதே அவள் உண்டு பலநாட்கள் ஆனது. கொடுத்து விடும் உணவுகள் அப்படியே குப்பைக்கு போய் விடும். வெறும் தட்டு மட்டுமே திரும்பி வரவும் இவள் உண்டுவிட்டால் என்று எல்லோருமே எண்ணினார்கள். ஆனால் ஒரு வாய் கூட உண்ணவில்லை. அதே போல அறையை விட்டு வெளியே வரவும் இல்லை.
ஷெண்பாவின் அண்ணன் கல்யாணத்துக்கு அனைவரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். ஏந்திழையாளை யாரும் அழைக்கவே இல்லை. அது நாள்வரை அவளை எதற்கும் இவர்கள் ஒதுக்கியதே இல்லை. இழை இழை என்று எல்லோருமே அவளை தலையில் தூக்கி வைக்காத குறையாக பார்த்துக் கொண்டார்கள்.
இப்பொழுது அந்த வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாளா என்று கூட தெரியாத வண்ணம் அனைவரும் நடந்துக் கொள்ள முற்றும் முழுதும் தனிமையில் வாடினாள்.
கண்களில் நிற்காத கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது. ஒருத்தர் கூட அவளை நம்பாததை எண்ணி விழிகள் சிவந்துப் போனது. விரக்தி அளவுக்கு அதிகமாக முகிழ்த்தது.
“உன்கிட்ட நாங்க இதை எதிர்பார்க்கல... அப்படி கல்யாணம் இவ்வளவு சீக்கிரமா வேணும்னு சொல்லி இருந்தா நாங்க வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து இருப்போமே..” என்று பெரியவர்கள் சொல்லால் அவளை குத்தி கிழித்தார்கள். அதுவும் அத்தைமார்கள் அதிகமாக பேசி வைக்க முற்றும் முழுதும் உடைந்துப் போனாள்.
“அப்படியா நான் ஆம்பளைங்களுக்கு அலையிறேன்” என்று கேட்டு தன்னை தானே இன்னும் உருக்குழைத்துக் கொண்டாள். வேல்முருகண்டும் அவளுக்கு ஆதரவாக இருந்தார்.
ஆனால் ஏந்திழையாள் அதையும் தவிர்க்க நினைத்தாள்.
“வேணாம் தாத்தா... உங்க அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை” என்று சொல்லி அவரையும் தவிர்த்து விட்டாள். இப்படியே இரண்டு நாள் கடந்துப் போன நிலையில் ராசசிங்கன் அதிரடியாய் அந்த வீட்டுக்குள் நுழைந்தான். எல்லோரும் திருமணத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.
அவனை அந்த நேரம் எதிர் பார்க்காதவர்கள் திகைத்துப் போனார்கள். வந்தவனை யாரும் வரவேற்கவே இல்லை. அவன் அதை சட்டை செய்யவும் இல்லை. யாரையும் எதிர்நோக்காமல் நேராக ஏந்திழையாள் அறைக்குள் நுழைந்தான்.
சோக சிற்பமாக குறுங்கண் அருகே நின்று இருந்தவளை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்தவன், தன் வருகையை அறிவிக்க தொண்டையை செருமினான். அதில் திரும்பி பார்த்தாள் இழை.
“ஏன் உண்ணாம இருக்குற?” என்று எடுத்த எடுப்பிலே கேட்டான்.
“என்ன அக்கறை?” என்று இவள் பதிலுக்கு கேட்டாள். அதில் பல்லைக் கடித்தவன்,
“இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு கல்யாணம் நினைவு இருக்கா இல்லையா?”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” புரியாது கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“ராவு பகலா என்னை தாங்கணும் இல்லையா... அதுக்கு உன் உடம்பை கொஞ்சம் தேத்தி வை. அந்த நேரம் பார்த்து உடம்புக்கு முடியல அது இதுன்னு ஏதாவது சொன்னா அப்புறம் நீ என்னை மனுசனா பார்க்க முடியாது” என்றான் அதட்டலாக.
“இதுக்கு தான் இவ்வளவு அக்கறையா?” என்று முணுமுணுத்தவள் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் சொன்னது அவனது காதில் நன்றாக விழுந்தது.
“பின்ன வேற எதுக்கு உன் மேல அக்கறை வரணும்” என்று நக்கலாக சொன்னவன்,
“ஒழுங்கா உன் விரதத்தை முடிச்சுடு. இல்லன்னா கல்யாணம் ஆகி ஆக வேண்டிய சடங்கை இப்பவே நடத்திக்குவேன்” தோரணையாக மிரட்டி விட்டு போய் விட்டான்.
போகும் பொழுதும் அவன் யாரையும் கண்டுக்கொள்ளவில்லை. என்னோட உறவு அவளோட மட்டும் என்கிற ரீதியிலே அவன் நடத்தை மொத்தமும் இருந்தது.
இரண்டு நாள்களில் கல்யாணம். ஆனால் ஒரு பரப்பும் இல்லை. எல்லோரும் யாருக்கு வந்த விருந்தோ என்று இருந்தார்கள். யாருக்குமே இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெளிவாக காட்டினார்கள்.
அதை உணர்ந்தும் இழையாள் எதுவும் சொல்லவில்லை.
“திருமணத்தை நிறுத்த முடியாது.. இது தான் விதி என்று ஆகிவிட்டது. ஆனா அதுக்காக என் திருமணத்தை யாருமே கொண்டாட மாட்டீங்களா? அப்போ நான் இந்த வீட்டுல யாரு...? யாருமே இல்லையா எனக்கு என்று” என்று மனதுக்குள் பெரும் வேதனையை சுமந்தாள்.
முதல் நாள் வரவேற்பு இரண்டாம் நாள் காலையில் கல்யாணம் என்று இருக்க யாருமே புதிய உடை எடுக்கவில்லை. மீடியா முழுக்க செய்தி பரவி இருந்தது. அதற்கு தோதாக பெட்டி காண எல்லோரும் அலையாக அலைந்தார்கள்.
ஆனால் ஆண்கள் பலமாக இருந்து மீடியாவை ஓரம் கட்டினார்கள் என்றாலும் அவர்களை ரொம்பவும் தடுக்க முடியாது என்று கருதி வேல்முருகனிடம் சென்றார்கள்.
அவர் ராசசிங்கனுக்கு போன் போட்டார்.
“உங்க பேத்தியை கிளம்பி இருக்க சொல்லுங்க.. சின்னதா ஒரு பேட்டி குடுத்துட்டா பிறகு அமைதியாகிடுவாங்க” என்றான்.
“ம்ம்” என்று அவரும் சம்மதித்து விட்டு தன் பேத்தியிடம் போய் விசயத்தை சொல்ல,
“என்னை விட்டுடுங்க தாத்தா.. ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் எதுவும் வேணாம். நீங்களே ஏதாவது ஒரு காரணம் சொல்லி மீடியாவை மேனேஜ் பண்ணிக்கோங்க” என்றாள்.
“அப்படி விட முடியாதுடா.. உன் பேட்டியை அவங்க எதிர் பார்க்கிறாங்க”
“என்னால மேனேஜ் பண்ண முடியாது தாத்தா” என்றாள் கண்கள் கலங்க.
“ராசசிங்கன் வரேன்னு சொல்லி இருக்காருடா... அவரோட சேர்ந்து பேட்டி குடு. அவர் எல்லாவற்றையும் பார்துக்குவாரு” என்று சொல்லி அவளை தேற்றி எடுத்தார்.





