“என் பேத்தி மகிழ்ச்சிக்கு முன்னாடி எதுவும் பெரிது இல்லை. அவளுக்கு ராசசிங்கனை தான் பிடிச்சி இருக்கு.. எனக்கும்...” என்று தொண்டையை செருமியவர்,
“அதனால உங்க எதிர்ப்பு எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு இந்த கல்யாணத்தை எவ்வளவு சிறப்ப செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பா செய்ய எனக்கு கூட இருந்து உதவி பண்ணுங்க. அப்படி விருப்பம் இல்லாதவங்க முதல்லையே விலகிக்கோங்க. என் பேத்தி திருமணத்தை நான் ஒருத்தனே முன்னாடி நின்று பார்த்துக்குறேன்” என்று ஒரே போடாக போட்டு விட்டு போய் விட்டார். அதனால் வீட்டு ஆட்கள் யாரும் வேல்முருகனின் முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை.
ஆனால் சுந்தரம் மட்டும் அவரிடம் தனியாக போய் ஆதங்கபட்டார்.
“அவன் சரியான பொறுக்கி, அவனுக்கு போய் ஏந்திழையாளை கல்யாணம் கட்டி கொடுக்க உங்களுக்கு எப்படி ப்பா மனசு வந்தது... நானே கண்ணார அவனை பல பெண்களோட சேர்த்து வச்சு பார்த்து இருக்கேன். அப்படி பட்ட தெரு பொறுக்கிய எப்படி நீங்க மாப்பிளையாக்கலாம்? நீங்க என்ன சொன்னாலும் அவனை என்னால மாப்பிள்ளையா ஏத்துக்கவே முடியாது. இதே இது ஏந்திழையாள் உங்க பெண்ணா இருந்து இருந்தா இப்படி தான் நடந்துக்குவீங்களா? இதை நான் உங்கக்கிட்ட கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை ப்பா... யாரோ பெத்த பொண்ணுன்னு தானே நீங்க என் பெண்ணை பலி குடுக்க பார்க்குறீங்க?” என்று மனம் குமைந்துப் போய் வேதனை பட்டார்.
“சுந்தரம்” என்று அதட்டல் போட்டார்.
“நீங்க என்ன கத்தினாலும் அது தான் உண்மை. உங்க குடும்பத்துக்காக என் பொண்ணை பலி குடுக்குறீங்க. உங்களுக்கும் காசுக்காக ஆட்டை வெட்டி கசாப்பு போடுற கசாப்பு கடைக்காரருக்கும் எந்த வித்யாசமும் இல்லை...” என்று கத்தினார்.
“சுந்தரம்...” என்று அதட்டினார்.
“நீ என்ன சொன்னாலும் என்ன சொல்லால் என்னை வேதனை படுத்தினாலும் நடப்பதில் எந்த மாற்றமும் இருக்காதுடா... நான் பக்கா சுயநலவாதியாகவே இருந்துட்டு போறேன்” என்று கம்பீரமாகவே சொன்னவர் தன் மகனை பார்த்து ஏளனமாக சிரித்த வேல்முருகன்,
“என்ன பொண்ணு மேல ரொம்ப தான் அக்கறை. இவ்வளவு நாள் எங்க போச்சு அந்த அக்கறை?” என்று கிண்டல் பண்ணார்.
“அப்பா” என்று அவர் கர்ஜிக்க,
“ஷட்டப்” என்று அவரை விட அதிகமாக சத்தம் போட்ட வேல்முருகன்,
“ஒரு நாள் வெளில தங்க நேர்ந்த சொந்த பெண்ணையே கற்போட இருக்காளா இல்லையான்னு உரசிப் பார்க்க நினைத்தவன் தானே நீ... நீ என்னடா பெரிய யோக்கியமா பேசுற... என் பேத்தியை பார்த்துக்க எனக்கு தெரியும்... அதோட என் பேத்தி நிம்மதி தான் எனக்கு முக்கியம். உன்னை மாதிரி பாசமும் வைத்துட்டு சந்தர்ப்பம் வரும் கிடைக்கும் பொழுது உரசி பார்க்க எனக்கு தெரியாது. என் பேத்தி எப்படி இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவளை சந்தேகப் பட மாட்டேன். எப்பொழுதும் அவளோட நல்லதுக்கு தான் முன் நிற்பேன். அது உனக்கு தெரியணும்னு எந்த அவசியமும் இல்லை. என் பேத்தி ஏந்திழையாளுக்கு மட்டும் தெரிஞ்சா போதும் போடா...” என்று சுந்தரத்தை சொற்களால் கொன்றார்.
“அப்பா அது அப்போ... ஆனா அதுக்கு பிறகு நான் அதை பத்தி யோசிக்கலாம் இல்ல” என்று குரல் உள்ளேப் போனது சுந்தரத்துக்கு.
“ச்சீ வாயை மூடுடா.. பெத்த பொண்ணையே சந்தேகப்பட்ட உன்ன மாதிரி ஆளுங்க இன்னும் நம்ம வீட்டுல இருக்காங்கன்னு தான் என் பேத்தியை அவனுக்கே கட்டிக் கொடுக்க முடிவு எடுத்து இருக்கேன். வீட்டுலையே இப்படி பிறவிகள் இருக்கும் பொழுது சமூகத்தை பத்தி சொல்லவே வேண்டாம்... என் பேத்தியை பேசியே சாகடிச்சிடுவாங்க நீங்க எல்லாம்”
“உங்களை மாதிரி சந்தேகப் புத்தி உள்ளவங்க எல்லோரும் என் பேத்தியை தங்கம் தானான்னு உரசிப் பார்த்து அவளின் தரத்தை நிரூபிக்கணும்னு அவசியம் அவளுக்கு இல்லை. அவ எங்க இருந்தாலும் என் பேத்தியா தான் இருப்பா... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அதனால தான் அந்த ராசசிங்கனுக்கே என் பேத்தியை கட்டிக் குடுக்க சம்மதம் சொன்னேன்” என்று சொற்களாலே அவரை சாடி விட்டு போய் விட்டார். அதன் பிறகு சுந்தரம் கண்ணன் என யாரும் வேல் முருகனிடம் வாயையே திறக்கவில்லை. வாயை திறந்தால் வண்ண வண்ணமாக வாங்கி கட்டிக் கொள்ள வேண்டி வரும் என்று அறிந்துக் கொண்டவர்கள் மௌனமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஏந்திழையாளின் உடன் பிறப்புகளுக்கு தான் மனதே இல்லை. “போயும் போயும் அந்த பொறுக்கிக்கா ஏந்திழையாளை கொடுப்பது. ஏன் ஊர் உலகத்துல வேற ஆம்பளையே இல்லையா இவனை விட்டா? இவனுக்கு கட்டி குடுக்குறதுக்கு அவ கல்யாணம் பண்ணாமலே வீட்டோட இருக்கலாம்” என்று முணுமுணுத்துக் கொண்டார்கள். ஆனாலும் வேல்முருகனை தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
அப்பவும் யுகேஷ், கார்த்திக், மற்றும் வருண் மூவரும் தனிப்பட்ட முறையில் தாத்தாவிடம் பேசிப் பார்த்தார்கள். அவர் எதையும் காது குடுத்து கேட்கவே இல்லை.
“அப்போ நாங்க யாரும் இந்த கல்யாணத்துல கலந்துக்க மாட்டோம்” என்று அவர்கள் போர்க்கொடி தூக்க,
“அவசியம் இல்லை. நீங்க வந்து தான் இந்த கல்யாணம் நடக்கணும்னு இல்லை. என் பேத்திக்கு நான் ஒருத்தன் மட்டுமே போதும். அவ கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்துவேன்” என்று அதற்குள் அவர் பதில் வைத்து இருக்க இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.
வேறு வழியில்லாத நிலையில் இந்த திருமணத்துக்கு அனைவரும் ஒப்புதல் கொடுக்க வேண்டி இருந்தது. அதை எல்லாம் எண்ணிப் பார்த்த வேல்முருகன் தன் பேத்தியை கண்களில் அடக்கிய வேதனையுடன் பார்த்தார்.
‘உனக்கு நான் ரொம்ப பெரிய துரோகம் செய்யிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும் ம்மா. ஆனா எனக்கு இதை தவிர வேற வழியே இல்லை. முடிஞ்சா என்னை மன்னிச்சுடு. உனக்கு இதை விட வேற ஒரு நல்லதையும் என்னால செய்து விட முடியாது...’ என்று மனதோடு தன் பேத்தி ஏந்திழையாளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவர் தளர்ந்துப் போனார் மிகவும்.
என்னவோ வயது மூப்பு இப்பொழுது தான் அதிகம் தெரிவது போல இருந்தது அவருக்கு.
மிரண்டு முழித்துக் கொண்டு இருந்த பேத்தியை பார்த்தவருக்கு நெஞ்சு கனத்துப் போனது. கடவுளே நான் என்ன செய்வேன் இப்படி ஒரு பாவத்தை செய்கிறேனே என்று மறுகிப்போனார்.
தன்னை சூழ்ந்துக் கொண்டவர்களின் அன்பில் திக்கு முக்காடி போனாலும் அவர்களின் சரமாரியான கேள்வியில் திகைத்துப் போனாள்.
“ஏன் கண்ணு உனக்கு வேற ஆளே கிடைக்கலையா? போயும் போயும் இந்த இவனை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனுமா? இவன கட்டி குடுங்க இல்லன்னா வீட்டுக்கே வரமாட்டேன்னு சொன்னியாம்... இவனுக்காக தான் நீ நம்மை வீட்டை விட்டு வந்தியா?” என்று பாட்டி ஆதங்கப்பட,
“வாட்?” என்று திகைத்துப் போனாள்.
‘இது என்ன புது கட்டுக்கதை. இவனுக்காக நான் வீட்டை விட்டு வந்தேனா? என்னடா நடக்குது இங்க... நான் எப்போ அப்படி எல்லாம் சொன்னேன்..’ என்று அதிர்ந்துப் போனாள். அவளின் அதிர்வை கவனிக்கதவர்கள்,
“அவன் சரியான பொறுக்கி பாயலாம் தங்கம். உன்னை நல்லா வச்சுக்க மாட்டான்... ஏன் உன் புத்தி இப்படி போச்சு” என்று சின்ன பாட்டி ஆதங்கப் பட,
“ம்ம்ம் இன்னும் இடுப்புல தூக்கி வச்சு அவளை செல்லம் கொஞ்சுங்க... இவ இது மட்டும் இல்ல இன்னும் என்னல்லாமோ செய்வா.. அந்த தெனாவட்டு அவளுக்கு இருக்கும் பொழுது நாம என்ன சொன்னாலும் அவ காதுல ஏறாது...” என்று அவளின் தாய் தேவகி ஆதங்கப்பட்டார்.





