அத்தியாயம் 33

 
Admin
(@ramya-devi)
Member Admin

என்னவோ எதையோ எண்ணிவளுக்கு ஏமாற்றம் தான் விஞ்சி நின்றது போல ஒரு தோற்றம். தன்னையே நொந்துக் கொண்டவளுக்கு மனம் ஆறவே இல்லை.

இந்த சித்திரவதை எப்பொழுது தீரும் என கதறினாள். ஏன் தான் இவன் கண்ணில் நான் பட்டேனோ என்று மறுகிப் போனாள்.

நேற்று மாலை வரை இருந்த சிங்கன் வேறு. ஆனால் மாலை முதல் இருந்த சிங்கன் வேறாயிற்றே. அவனிடம் தென்பட்ட இரசனை, ஒட்டுதல் மெல்லிய உணர்வு எல்லாமே நூலறுந்த பட்டம் போல காற்றில் பறந்து விட்டதே...! எண்ணி எண்ணி மறுகிப்போனாள்.

அவனுக்கு ஒரே குணம் தான் என்று நிருபித்து விட்டான். தான் தான் அவன் மீது இல்லாததையும் பொல்லாததையும் வளர்த்துக் கொண்டோம் என்று தவித்துப் போனாள். அவன் நாய் வாளை நிமிர்த்த முடியாது என்பதை நிரூபித்து விட்டு போய் விட்டான்.

அறைக்குள்ளே அடைபட்டு இருந்தாள். எதையோ எதிர்பார்த்து சென்றவளுக்கு முற்றிலும் ஏமாற்றமாய் இருக்க அதை அவளால் எளிதாக ஏற்றுகொள்ளவே இயலவில்லை.

“என் புத்தி எங்க போச்சு...” என்று விரக்த்தியில் தன்னை தானே வருத்திக் கொண்டு இருக்க நேரம் போனதே தெரியவில்லை.

கதவு தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். ராசசிங்கன் தான் காலையில் அணிந்து இருந்த கோட் எல்லாம் கலைந்து வீட்டில் இருப்பது போல உடை அணிந்து இருந்தான். வரும் பொழுதே உடையோடு வந்து விட்டான் போல... நேரத்துக்கு ஒன்றை போட்டு சுற்றிக் கொண்டு இருக்கிறான்.

“வாக்கிங் போகணும் வா” என்றான் அழுத்தமாய். அவனது குரலில் நீ வந்தே ஆகவேண்டும் என்கிற தோரணை இருக்க கண்களில் நீர் சூழ்ந்தது. நேற்றைக்கு இருந்த மன நிலை இன்றைக்கு இல்லை என்று உணர்ந்துக் கொண்டே மறுக்க வழியில்லாமல் அவனுடன் சென்றாள்.

முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு காலையில் இருந்து உண்ணாத வயிறு சத்தம் கொடுத்தது என்றாலும் அதை தவிர்த்து விட்டு ராசசிங்கனுடன் நடந்தாள்.

எந்த பேச்சும் இருக்கவில்லை. நேற்றைக்கு அவனாக அவளின் கையை பிடித்தது போல இன்றைக்கும் அவனாகவே அவளது கையை பிடித்துக் கொண்டான். மறுக்கவில்லை அவள். மறுத்தால் தான் அவன் விட்டு விடுவானா?

பக்காவாட்டு மலைத்தொடரை பார்த்துக் கொண்டே வந்தவளை சட்டென்று இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டு பக்கவாட்டில் உருண்டான்.

ஏந்திழையாளுக்கு என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு புரிந்தது எல்லாம் ஆணவனின் இறுக்கமான பிடியில் இருந்தது மட்டுமே.

பதறிப் போனவள், “அச்சோ என்ன இது? நடு சாலைன்னு கூட பார்க்காம இப்படி பண்றீங்க... உங்க போதைக்கு என்னை ஊறுக்காயா மாத்தாம விட மாட்டீங்களா?” என்று அவனது பிடியில் இருந்து விலகப் பார்க்க அவளை தாண்டி மிக வேகமாக ஒரு சரக்கு லாரி போனது. அதன் வேகத்திலே தெரிந்துப் போனது அது கட்டுப்பாட்டை இழந்து வந்தது என்று.

சிங்கன் மட்டும் தன்னை இழுத்திரா விடில் இந்நேரம் அந்த லாரியில் நசுங்கிப் போய் இருப்போம் என்று புரிய தேகம் மொத்தமும் அதிர்ந்துப் போனது. அச்சத்துடன் தங்களை கடந்துப் போன லாரியை பார்த்தாள்.

அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே அருகே இருந்த பள்ளத்தாக்கில் அந்த லாரி குப்புற விழத் தொடங்கியது.

“அச்சோ” என்று அவள் அலற,

“டிரைவர் பக்கத்துல குதிச்சுட்டான்” என்றான் இவன். அதன் பிறகே மூச்சு வந்தது அவளுக்கு..

“விலகுறியா?” என்றான்.

அவன் மீதிருந்து பட்டென்று எழுந்துக் கொண்டவள் பெரும் சத்தத்துடன் விழுந்த லாரியில் கவனத்தை வைத்தாள். மேட்டில் நின்று இருந்த லாரி டிரைவரை பார்த்து ஆசுவாசம் ஆனாள்.

ஏனோ இன்றைக்கு வாக்கிங் போக மனமில்லாமல் போக,

“ப்ளீஸ் எனக்கு வாக்கிங் வர மூட் இல்ல.. நான் வீட்டுக்கு போறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு போய் விட்டாள். போகும் அவளை ஆழ்ந்துப் பார்த்தவன் இரவு கவிழ்ந்த பிறகே அவளுடைய வீட்டுக்கு வந்தான் சிங்கன்.

இரவு நேரம் எப்பொழுதும் போல அவள் மீது கழிய நேற்று போல அவளை அவனால் மனமுவந்து சுமக்க முடியவில்லை.

ஆனாலும் மறுப்பு சொல்லாமல் அப்படியே இருந்தாள். அவனுக்கு அதுவே போதும் போல தோன்றியதோ என்னவோ அவளை அதிகம் சீண்டாமல் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான்.

அவனது முகத்தை சுமந்து இருந்த அவளின் மார்பு அழுகையில் விம்மியது. என்ன அடக்கியும் அது மட்டுபடுவேணா என்று இருக்க அவளின் அசைவில் தூக்கம் கலைந்து நிமிர்ந்து அவளின் முகத்தை பார்த்தான். இவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். விழியோரம் கண்ணீர் வழிந்தது.

ஒரு கணம் அவளை கூர்ந்துப் பார்த்தவன் பட்டென்று அவளின் மீது இருந்து எழுந்துக் கொண்டவன் கதிருக்கு போனை போட்டு கொக்கினை எடுத்து வர சொன்னான்.

அதை கேட்ட பெண்ணவளுக்கு பக்கென்று ஆக அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள். அவனோ அழுத்தமாய் அவளின் அருகில் படுத்து கண்களை மூடிக் கொண்டான். அவளை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

அடித்து பிடித்துக் கொண்டு அந்த கடும் குளிரிலும் கதிர் வந்தான். வந்து கதவை தட்ட ராசசிங்கனை திரும்பி பார்த்தாள். அவனிடம் அசைவு இல்லாததால் பெருமூச்சு விட்டு இவளே எழுந்து போய் கதவை திறந்தாள்.

கதிர் சற்றே வியர்த்து போய் வந்து இருந்தான்.

“மேடம் இதை சார் கிட்ட குடுத்துடுங்க” என்றான்.

“அவரை கெடுக்கிறதே நீ தான்டா” என்று முறைத்தாள்.

“பரவாயில்லை மேடம்” என்று தணிந்து சொன்னவன் நில்லாமல் போய் விட கதவை சாத்தி விட்டு உள்ளே வந்தாள்.

அவனுக்கு அருகில் அதை வைத்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். ஏனோ கண்கள் கலங்கியது... ‘ச்சை இதென்ன எல்லாத்துக்கும் கலங்கிக்கிட்டு இருக்கு. அவ்வளவு பலவீனமா போயிட்டானா என்ன’ என்று நொந்துக் கொண்டவள் கண்களை அழுந்த மூடிக்கொண்டு அவனுக்கு முதுகு காட்டிப் படுத்து விட்டாள்.

ராசசிங்கன் தன் அருகில் கிடந்த பொட்டலத்தை எடுத்து மூக்குக்கு அருகில் வைத்து அதை ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பிக்க பட்டென்று அவனது கையில் உள்ளதை தட்டி விட்டாள்.

அவன் கண்கள் சிவக்க “ஏய்..” என்று கர்ஜிக்க,

“நான் அழ மாட்டேன்” என்று சொல்லி அவனுக்கு அருகில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டாள். தான் செய்துக் கொண்டு இருக்கும் காரியத்தின் வீரியத்தை நன்கு உணர்ந்துக் கொண்டவள் வருவது வரட்டும். ஆனால் என்னுடன் இருக்கும் வரை இதெல்லாம் வேண்டாம் என்று எண்ணினாள் போல...

கண்கள் இடுங்க அவளை பார்த்தான்.

“உண்மையா தான் சொல்றேன்... நான் அழ மாட்டேன்” என்று மீண்டும் சொன்னாள்.

“பிறகு உன் விருப்பம்” என்றவன் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான். எப்பொழுதும் போல அவளிடம் எல்லை மீறாமல் அவளின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

இந்த முறை அவளுக்கு அழுகையே வரவில்லை. அது என்ன காரணமோ... யார் அறிவாரோ...

விடிய விடிய அவள் மீது கவிழ்ந்து இருந்தவன் எழுந்து வெளியே போக பார்க்க,

“மூணு நாளும் உங்களோட தான் இருக்கேன். ஆனா ஒரு நாள் கூட என் கழுத்துக்கு கீழ பார்க்கல... இவ்வளவு தனிமை இருந்தும் அதை பயன் படுத்திக்கவும் இல்லை. ஆனா இதே இது ஊர்ல அத்தனை பேரின் மத்தியிலும் என்னை என்னென்னவோ பேசுனீங்க. செய்தீங்க... இதுல நீங்க யாரு சிங்கன்?” என்று அவனிடம் துணிந்து அவள் கேள்வி கேட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 10, 2026 11:24 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top