அத்தியாயம் 23

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அப்பா சொன்னா அது சரியா தான் இருக்கும்” என்று சொன்னவர் தன் தம்பியை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டார். எதையோ தாத்தாவிடம் கேட்பதற்காக வந்த பெண்ணவளுக்கு மூவரும் தன் கற்பை பற்றி பேசுவதை கண்டு அப்படியே சுவரில் சாய்ந்து விட்டாள்.

விழிகளில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது. தன் பிறப்பையே நொந்துப் போனவளாய் தன் அறைக்குள்ளே முடங்கிப் போய் இருந்துக் கொண்டாள் ஏந்திழையாள். அதன் பிறகு அவளிடம் பெரும் அமைதியே நிலவி இருந்தது.

கோயிலுக்கு போனால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று எண்ணியவளுக்கு முன்னாடி ஒரு நாள் நடந்த சம்பவம் நினைவுக்கு வர அப்படியே அமர்ந்து விட்டாள்.

“ப்ச்... எங்காவது போய் தொலைந்தால் நன்றாக இருக்கும்” என்று எண்ணியவள், எங்கே போகலாம் என்று சேர்ச் செய்தாள்.

ஒரு இடமும் அவளுக்கு ஒப்பவே இல்லை. பேசாம ஊட்டியாவது போகலாம் என்று எண்ணியவள் தன் உடமைகளை பேக் செய்துக் கொண்டு கீழே வந்தாள்.

அவள் பெட்டியும் கையுமாக வந்ததை பார்த்தவர்கள் திகைத்தார்கள்.

“என்னம்மா இது?” என்று கேட்க,

“எனக்கு கொஞ்ச நாள் தனியா இருக்கணும் போல இருக்கு... ப்ளீஸ்.. என்னை யாரும் டிஸ்டப் பண்ணாதீங்க.. ஐ வான்ட் சொலிடிட்” என்று சொல்லி விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவளை அப்படியே விட மனமில்லாமல் கார்த்தியும் வருணும் அவளை பின் தொடர்ந்தார்கள். யுகேஷ் கம்பெனி மீட்டிங்கில் இருந்தான். அதனால் அவனுக்கு இந்த விஷயம் தெரியவில்லை,

இருவரும் பின் தொடர்வதை பார்த்தவளுக்கு கண்களில் நீர் நிறைந்துப் போனது.

போனை எடுத்து அவர்களுக்கு அழைத்தவள்...

“ப்ளீஸ் என்னை பாலோ பண்ணாதீங்க... ஐ வான்ட் மை ஸ்பேஸ்.. என்னை எனக்கு மேனேஜ் பண்ணிக்க தெரியும்.. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்” என்று சொன்னவள் உடனே வைத்து விட்டாள். ஒரு பாட்டை போட்டு விட்டவள் காரை மெதுவாகவே ட்ரைவ் செய்தாள்.

 

“தீயணிந்து வருகுவதோ...?

காலவழி மாற்றிடுதோ?

மனக் காயங்களை ஆற்றிடுதோ...

கூட்டில் பாடும் குயிலுரசி

மழைக் காட்டில் ஆடும் மயிலுரசி

ஏட்டில் வாடும் தமிலுரசி

என் பாட்டில் கூட வருகுவதோ?

சேய் விழுந்து அழும் நொடியில்

பாய்ந்து வரும் தாயினைப் போல்

மண் விழுந்து நான் துடிக்க

என்னை ஏந்த வருகுவதோ...? 

வானமதன் காரிருளே

கானமென வருகுவதோ?

நாணறுந்த இன்பமெல்லாம்

நானருந்த வருகுவதோ?   

என்ற வரிகளில் முற்றும் முழுதாய் உடைந்துப் போனாள். கார் ஒரு நிமிடம் அவளது கட்டுப் பாட்டில் இருந்து நழுவியது.

இவளின் தற்போதைய நிலை மண்ணில் விழுந்த குழந்தை போல தானே... அனைத்து ஆறுதல் கொடுக்க யாருமே இல்லையே... பெற்றவர்களே அவள் மீது களங்கம் இருக்கிறது போல அல்லவா எண்ணுகிறார்கள்.. பெற்றவரே இப்படி எனில் மற்றவர்களை பற்றி என்ன சொல்வது...

எல்லோரின் மனதிலும் தான் எத்தனை சந்தேகங்களுக்கு உட்பட்டு இருப்போம் என்று எண்ணிப் பார்க்கவே அவளால் இயலவில்லை. உடைப்பெடுதுக் கொண்டு கண்ணீர் தளும்பியது... நான் சுத்தமா தான் இருக்கிறேன் என்று எல்லோரின் முன்பும் கத்தி கதற வேண்டும் போல அப்படி ஒரு வெறி எழுந்தது.

ஆனால் அப்படி வெளிப்படையாக உடைத்து போட்டு விட்டால் எல்லோரின் மனத்திலும் இன்னும் வேதனை கூடும் என்பதால் மௌனமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். சிறிது நாள் தனிமை எல்லாவற்றையும் மாற்றும் என்று எண்ணி பயணத்தை மேற்கொண்டாள். வீட்டை விட்டு பிரிவது என்பது அவளால் அவ்வளவு எளிதாக செய்து விட முடியவில்லை தான். ஆனால் அவள் கொண்ட ரணங்கள் அதிகமாயிற்றே...

கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே காரை ஓட்டினாள். ஊட்டி வந்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அவளின் அலை பேசிக்கு ஆயிரம் போன் கால் வந்தது அவளது வீட்டில் இருந்து. பாசப்பிணைப்பை பார்த்து கண்கள் கலங்கியவள் எல்லோரிடமும் பண்பாக பேசி தன் மன குமுறலை காண்பித்துக் கொள்ளாமல் இயல்பாக பேசி வைத்து விட்டாள்.

அதற்கு நேர்மாறாக அவளின் உள்ளம் எரிமலையாக குமுறிக்கொண்டு இருந்தது. அதை யாரிடமாவது கொட்டி தீர்த்து விட்டால் தேவலாம் போல இருந்தது. ஆனால் அவள் யாரிடம் கொட்டுவாள். கொட்டி விடும் அளவுக்கு நெருக்கமான உள்ளம் அவளுக்கு வாய்க்கவில்லையே..

எல்லாமே நெருக்கமான உறவுகள் தான். ஆனால் தன் சம்மந்தப்பட்ட உணர்வுகளை கொட்டி விட இயலாதே... வாய் இதழ்களை மூடிக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

இவள் ஊட்டி போவதற்கு முன்பே வேல்முருகன் அங்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்டார் தன் பேத்திக்காக. யுகேஷ் விசயம் கேள்வி பட்டு எல்லோரிடமும் கொதித்தான்.

“நீங்க எப்படி அவளை தனியா விடலாம்... அவ இப்போ என்ன நிலையில இருக்குறான்னு தெரிஞ்சும் ஏன் விட்டீங்க. உங்களை எல்லாம் நம்பி தானே நான் ஆபிஸ் போனேன். இப்படி எல்லாம் நடக்குற மாதிரி இருந்து இருந்தா நான் ஆபிசே போய் இருக்க மாட்டேன்” என்று கத்தினான்.

அவனை தாத்தா தான் சமாதனம் செய்து வைத்தார்.

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏற்றுக்கொள்ளவே முடியாது தாத்தா... அவ பாவம்... தனியா அவ எப்படி இருப்பா” என்று அவன் தவிக்க,

“சில விசயங்களை எல்லாம் உடைச்சி சொல்ல முடியாது யுகேஷ்.. புரிஞ்சுக்க... அவளோட பாதுகாப்புக்கு நான் கேரண்டி” என்று இந்த பக்கம் தன் பேரனுக்கு உறுதி கொடுத்துக் கொண்டு இருக்க அந்த பக்கம் அவரின் பேத்தியை தேடி நேராக அவளின் முன்பு வந்து நின்றான் ராசசிங்கன்.

ஊட்டி என்றாலும் ஏந்திழையாள் இருந்த இடம் ஊட்டிக்கும் அவள் இருந்த இடத்துக்கும் பல மைல்கல் தொலைவு இருந்தது. இன்னும் அந்த பகுதி அடர் வனமாக தான் இருந்தது. பொது சாலையை கடந்து தனியார் சாலையில் பயணிக்க வேண்டும். பைசாசன் எல்லாம் அசால்ட்டாக கடந்து போகும் இடம். பல வனவிலங்குகள் அனாயசமாக உலாவும் இடம். பனிமூட்டம் அதிகமாக இருக்கும். உள்ளடங்கிய பகுதி அது.

ஆனால் கவலை கொள்ள தேவையில்லாத முழு பாதுகாப்பு இருந்தது அவளது வீடு. எல்லாமே கல் சுவர் தான். கீழ் தளம் ஒரு சாலையில் இருந்தால் மொட்டை மாடி பகுதி அடுத்த சாலையை தொட்டுக் கொண்டு இருக்கும். அப்படி ஒரு அமைப்பு அந்த வீடு. வீட்டு வேலைக்கு என பணியாட்கள் எப்பொழுதும் இருந்தார்கள்.

ஏந்திழையாளின் வீட்டில் இருந்து யாரவது ஒருவர் வந்து போக இருக்கவும் நிரந்தரமாக பணியாட்களை அமர்த்திவிட்டார்கள்.

காருக்குள் இருக்கும் பொழுதே குளிர் ஊசியாய் அவளின் தேகத்தை துளைத்து எடுத்தது. சால்வையை எடுத்து பொத்திக் கொண்டவள் வெளியே நகர்ந்த காட்சிகளை எல்லாம் இரசித்துக் கொண்டே வந்தாள். இயற்கைக்கு மனதை மாற்றும் சக்தி இருக்கிறது அல்லவா?

ஏந்திழையாள் கொண்ட காயங்கள் எல்லாம் இயற்கை சிறிது நேரம் ஒத்தி வைக்க முடிவெடுத்தது போல.. தனக்குள் அவளை இழுத்துக் கொண்டது. பெயர் தெரியாத பல விருட்சங்கள் அடர்ந்து காட்சி அளித்தது.

வண்ணமலர்கள் பல பூத்து குலுங்க அதன்வாசம் அவளை மிகவும் ஈர்த்தது. திறந்து வைத்து இருந்த ஒற்றை குறுங்கண் வழியாக இயற்கை அன்னை அவளை அரவணைத்துக் கொண்டாள். மிகவும் குளிராக இருக்க சாலை ஓர ஒரு தேநீர் கடையில் நிறுத்தி இறங்கி சூடாக தேநீர் வாங்கி பருகினாள். இன்னும் அரைமணி நேரம் தான் பயணம்... வீடு வந்து விடும். பனிப்புகையாக இருந்த பள்ளத்தாக்கை எட்டிப் பார்த்தாள்.

இந்த ஊர் பயணம் என்னை ஒவ்வொரு முறையும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறது... என்று சிலாகித்துக் கொண்டாள்.

ஒரு புறம் வானுயர்ந்த மலைகள். இன்னொரு புறம் ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. இயற்கை எவ்வளவுக்கு எவ்வளவு அழகாகவும் மகிழ்வாகவும் இருக்கிறதோ அதை விட அதிக பயத்தையும் மர்மத்தையும் தனக்குள் புதைத்து வைத்து இருக்கிறது... என்று எண்ணிக் கொண்டாள்.

சற்று தொலைவில் ஓடிக் கொண்டு இருந்த சிற்றருவியை பார்த்தவளுக்கு அதன் குளிர்ச்சியை இங்கே உணர முடிந்தது. “ம்ம் ஒரு நாள் அங்க போய் குளிக்கணும்” என்று முடிவெடுத்துக் கொண்டவள் பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறி அமர்ந்து கிளப்பினாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:44 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top