அத்தியாயம் 22

 
Admin
(@ramya-devi)
Member Admin

கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த மனிதரை கண்டு வேகமாய் ஓடிப்போனாள் ஏந்திழையாள். ராசசிங்கன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான். அவனிடம் வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை.

மீண்டும் தலையை கையில் வைத்துக் கொண்டு படுத்து விட்டான்.

தன் பேத்தியை கண்களால் அளந்து ஆரத்தழுவிக் கொண்டவருக்கு அவளின் நெற்றி காயம் கண்டு கலங்கிப் போனார். “தங்கம்” என்று தன் மேல் துண்டால் அவளின் காயத்தை துடைத்து விட துடித்துப் போனாள்.

“ஸ்ஸ்ஸ்... வலிக்கிது தாத்தா” என்று அவள் சன்னமாக அலற, ராசசிங்கன் கண்களை அழுந்த மூடிக் கொண்டான். அவனது காயத்துக்கு மருந்துப் போட்டவள் அவளின் காயத்திற்கு மருந்து போடாதது அவனுக்கு நினைவு வந்தது. இதழ்களை பிதுக்கிக் கொண்டான்.

“என்னடா என்ன ஆச்சு... ஏன் இப்படி காயமாகி இருக்கு?” என்று பதறிப் போனார்.

“அது படியில தவறி விழுந்துட்டேன் தாத்தா.. வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னவள்,

“நீங்க ஏன் தாத்தா இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க..? நான் தான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இருப்பனே... உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா என்ன பண்றது” என்று கலங்கிப் போய் கேட்டாள்.

“என் உடம்புக்கு என்ன தங்கம் கல்லு மாதிரி தானே இருக்கேன்” என்றவர்,

“இங்க உட்காரு...” என்று அவளை சோபாவில் அமரவைத்து விட்டு ராசசிங்கனிடம் போய் நின்றார்.

“தம்பி” என்று அவர் ஆரம்பிக்க,

ஆபிஸ் ரூமை பார்த்து கைக்காட்டினான். புரிந்தவராய் அங்கே போக இவன் போகாமல் அப்படியே படுத்து இருந்தான் வேண்டுமென்ற... அவரை நீண்ட நேரம் காக்க வைத்த பிறகே இவன் போனான்.

அவன் தன் தாத்தாவுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல் இருக்கக் கண்டு உள்ளுக்குள் அவ்வளவு கோவம் வந்தது.

‘அவருக்கு இல்லை என்றாலும் அவரின் வயதுக்கு மரியாதை தரவேணாம்... என்ன பிசினெஸ் செஞ்சி என்ன பண்ண... அடிப்படை நாகரீகம் தெரியலையே...’ என்று கருவிக் கொண்டாள்.

உள்ளே போய் என்ன பேசினார்களோ அறை மணி நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தார்கள். வேல்முருகனின் முகம் கவலையில் தோய்ந்து கிடந்தது. அவரின் முகத்தை பார்த்து ஏந்திழையாளுக்கு பாவமாகிப் போக

“என்ன தாத்தா?” என்று இவள் பரிதவித்துப் போனாள்.

“ஒன்னும் இல்லடா” என்று அவளை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டார். ராசசிங்கனை திரும்பி திரும்பி பார்த்தபடி இவள் வெளியே போனாள்.

“அவரு ஓகே சொல்லிட்டாரா தாத்தா” என்று கேட்டாள் நம்ப முடியாமல்.

“ம்ம்ம்... நீ வாம்மா” என்று அவர் அவளை தன் காரில் ஏற்ற,

“நீங்க இருங்க தாத்தா நான் ஓட்டுறேன்” என்றாள். ஏனெனில் அவளை விட அவர் தான் மிகவும் சோர்ந்து போய் இருந்தார். இந்த நிலையில் அவரை கார் ஓட்ட விட அவளுக்கு மனமில்லை.

“எதுவும் டிமேண்ட் பண்ணினாங்களா தாத்தா?” என்று கேட்டாள். திரும்பி அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவர்,

“உனக்காக எவ்வளவு டிமேண்ட் பண்ணினாலும் இந்த தாத்தா குடுத்துடுவேன்டா. பேரம் எல்லாம் பேச மாட்டேன்” என்றார்.

“தாத்தா” என்று அவள் நெகிழ,

‘ஆனா அவன் டிமேண்ட் பண்றதே வேறடா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் வெளியே போலியாக புன்னகையை பூசிக் கொண்டார்.

அவரது தோளில் சிறிது நேரம் ஆறுதல் கொண்டவள் அதன் பிறகு காரை வேகமாக மருத்துவமனைக்கு விட்டாள். அங்கே இரண்டு உயிர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவளை பற்றிய கவலை ஒரு பக்கம் எல்லோருக்கும் இருக்குமே.. அதனாலே தான் இந்த வேகம்..

அந்தி சாயும் நேரத்தில் வேகமாய் ஓடி வந்த தங்களின் மகளை எல்லோரும் வேகமாய் போய் கட்டிக் கொண்டு கண்ணீர் விட தந்தைமார்களுக்கு கண்கள் கலங்கினாலும் நேற்றைக்கு போன தங்களின் பெண் தங்கள் பெண்ணாக தான் வந்து இருக்காளா என்ற ஐயம் உள்ளுக்குள் இருக்க அவர்களால் அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள தயக்கமாய் இருந்தது.

ஏனெனில் ஏந்திழையாள் ஒரு நாள் தங்கி இருந்த இடம் அப்படி. அவள் ஒன்னும் ராமன் இல்லத்தில் இருக்கவில்லையே. துச்சாதனின் இல்லத்தில் அல்லவா இருந்து விட்டு வந்து இருக்கிறாள்.

அதை வெளிப்படையாக சொல்லாமல் தங்களுக்குள் வைத்துக் கொண்டார்கள்.

எல்லோரின் பாச மழையிலும் நனைந்தவள் வேகமாய் மருத்துவரிடம் அனுமதி கேட்டுவிட்டு உள்ளே இருந்த இருவரையும் பார்க்க ஓடினாள்.

அவளின் தலை அந்த பக்கம் போன பிறகு தன் அண்ணனை பார்வையாலே கேட்டார் சுந்தரம். பெரியவர் பொறு என்று கண்ணை காட்டினார். அதே போல அவர்களின் மாமன்களும் கண்களாலே சுந்தரத்திடம் பேச,

“அவசரப்பட வேண்டாம்” என்று பெரியவர் கண்ணன் கண்ணை காட்டினார். அதனாலே ஐவரும் எதுவும் பேசவில்லை. 

உள்ளே நுழைந்து இருவரையும் தொட போனவளை தடுத்து நிறுத்தினார்கள் மருத்துவர்கள்.

“ப்ளீஸ் டாக்டர் நான் பார்க்கணும்” என்றாள்.

“பாருங்க ஆனா அவங்களை ரொம்ப டிஸ்டப் பண்ண வேண்டாம்... இன்பெக்ஷன் ஆகிடும்” என்றார்கள்.

“சரி” என்று தலையை ஆட்டியவள் அவர்களின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

“என்னால தானே உங்களுக்கு இப்படி எல்லாம் ஆயிடுச்சுல்ல.. நான் அப்பவே கிளம்பி போய் இருந்து இருக்கணும்.. என் மேல தான் தப்பு. ரொம்ப லெத்தாஜிக்கா இருந்துட்டேன்” என்று கண்ணீர் சிந்தினாள். என்னவோ நெஞ்செல்லாம் பாரமாக இருப்பது போல இருந்தது. எவ்வளவு கண்ணீர் விட்டாலும் தீருவேனா என்று இருந்தது.

அப்படியே மயங்கி சரிந்து விட்டாள். அவளால் ஒரே நாளில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான அழுத்தத்தை தாங்க முடியவில்லை. அதோடு பசியும் சேர மயங்கி சரிந்து விட்டாள்.

அந்த அறையில் இருந்த செவிலியர் ஓடி வந்து பிடித்துக் கொண்டார். இல்லை என்றால் கீழே விழுந்து மீண்டும் அடிபட்டு இருக்கும்.

மயங்கினவளுக்கு முதலுதவி செய்து முன்பு அடிபட்டு இருந்த காயங்களுக்கு சிகிச்சை கொடுத்து வெளியே வந்த மருத்துவர்கள்,

“அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. ஹெல்த்தி புட் குடுங்க. அதுக்கு முன்னாடி ஜூஸ் குடுங்க.. பசி மயக்கம் தான்” என்று அவர் சொல்லி விட்டு செல்ல எல்லோருக்கும் அடி நெஞ்சை பிசைந்தது.

அவர்கள் வீட்டில் பசி என்றாலே என்னவென்று தெரியாது.. நேரத்துக்கு பத்து பதினைந்து டிஷ் தயாராகும்.. அப்படியாப்பட்ட வீட்டில் பிறந்த பெண் ஒரு நாள் முழுவதும் உண்ணவில்லை என்றால் யார் தான் துடித்துப் போக மாட்டார்கள்.

அனைவருக்கும் கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது. தாய் குலங்களுக்கு வெடித்துக் கொண்டு விம்மல் வரப் பார்க்க முந்தானையை வாயில் பொத்திக் கொண்டு சத்தமில்லாமல் கதறினார்கள்.

அதன் பிறகு ஒரு வாரம் ஓடிப்போனது... மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடு வந்து விட்டார்கள். ஆனாலும் முன்பு இருந்த அந்த கலகலப்பு குறைந்து தான் போனது.

ஏந்திழையாள் தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஏன் எதுக்கு இப்படியெல்லாம் நடந்துக் கொண்டு இருக்கிறது என்று அவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். ஆனால் அதற்குரிய விடை தான் தெரிந்த பாடில்லை.

இதற்கு இடையில் வேல்முருகன் தன் இரு மகன்களையும் போட்டு அடி வெளுத்து விட்டார்.

“அப்பா அண்ணா கேக்குறதுல என்ன தப்பு இருக்கு” என்று சுந்தரம் கேட்க,

“வாயை மூடுடா முதல்ல...” என்று ஒரு அதட்டல் போட்டவர், அப்படியே தளர்ந்துப்போனார்.

“இல்லப்பா ஒரு க்ளாரிபிகேஷனுக்கு தான்..” என்று அவரின் பெரிய மகன் கண்ணன் ஆரம்பிக்க, இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் வேல்முருகன்.

“அவ சுத்தமா தான் இருக்கா. அது எனக்கு நல்லாவே தெரியும்... ஏற்கனவே நொந்து போய் இருக்கிறவளை நீங்க மேலும் ஏதாவது கேட்டு நோகடிச்சிடாதீங்கப்பா சாமிங்களா என் பேத்தி செத்தே போயிடுவா” என்று கண்கலங்கினார்.

“இல்லப்பா” என்று சுந்தரம் ஆரம்பிக்க, வேகமாய் கண்ணன் அவரது கையை பிடித்துக் கொண்டு எதுவும் பேசாதே என்றார்.

“அண்ணா” என்று அவர் பரிதவிக்க,

“அப்பா சொன்னா அது சரியா தான் இருக்கும்” என்று சொன்னவர் தன் தம்பியை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டார். எதையோ தாத்தாவிடம் கேட்பதற்காக வந்த பெண்ணவளுக்கு மூவரும் தன் கற்பை பற்றி பேசுவதை கண்டு அப்படியே சுவரில் சாய்ந்து விட்டாள்.

விழிகளில் வெள்ளமென கண்ணீர் பொங்கியது. தன் பிறப்பையே நொந்துப் போனவளாய் தன் அறைக்குள்ளே முடங்கிப் போய் இருந்துக் கொண்டாள் ஏந்திழையாள். அதன் பிறகு அவளிடம் பெரும் அமைதியே நிலவி இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:43 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top