அத்தியாயம் 9

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆனாலும் கண்களாலே அவளிடம் எல்லாம் ஓகேயா என்று கேட்டு அறிந்துக் கொண்டார்கள். அவளும் கண்ணை சிமிட்டி ஓகே என்பதாக சொன்னாள். ஆனாலும் கார்த்திக்கும் யுகேஷுக்கும் மனதே இல்லை. அது அவர்களின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

“ஐ ஆம் ஓகேண்ணா...” என்று புன்னகை முகமாக அவள் சொல்ல தலையை மட்டும் ஆட்டிக் கொண்டார்களே தவிர சமாதனம் ஆகவில்லை. அது நன்றாகவே புரிந்தது அவளுக்கு. ஆனாலும் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து அமைதியாகிப் போனார்கள்.

துணி எடுக்கும் எண்ணமே ஒருவருக்கும் வரவில்லை. அப்படியே கிளம்பலாம் என்று எண்ணினாலும் யுகேஷ் மனைவி ஷெண்பாவுக்காக பார்க்க வேண்டி அமைதியாக அவ்விடத்தை விட்டு யாரும் போகவில்லை.

தாய்மார்கள் தங்களின் கைக்குள்ளே ஏந்திழையாளை வைத்துக் கொண்டார்கள். அத்தைகளுக்கும் அதே உணர்வு தான்.

“பாடு பாவி பய... எங்க பெண்ணை என்னவோ பண்ண பார்க்கிறான். கட்டையில போவ... இவனுக்கு எல்லாம் அக்கா தங்கச்சின்னு கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்ல போல” என்று பெரிய அத்தையும் சின்ன அத்தையும் ராசசிங்கனை கரித்துக் கொட்டினார்கள்.

தாய்மார்கள் அமைதியுடன் பெண்ணவளை சுற்றி நின்றுக் கொண்டு அவளை வருடி விட்டு தொட்டுக் கொண்டு என இருக்க வருண் தான் அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.

“அத்தை உங்க பாசம் எனக்கு புரியுது... ஆனா இப்போ அவ நல்லா தான் இருக்கா... சோ நீங்க போய் துணி எடுக்கிற வழியை பாருங்க. நாங்க அவளை பார்த்துக்குறோம். ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா அவ ஓகே ஆகிடுவா” என்று வலுக்கட்டாயமாக அவளை அங்கிருந்து கூட்டிக் கொண்டு ஐஸ்க்ரீம் பார்லருக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டான்.

“ஆமாம்மா நாங்க அவளை கேர் பண்ணிக்கிறோம். நீங்க ஷெண்பா வீட்டு ஆட்களை பாருங்க. அவங்க ஏதாவது நினைச்சுக்க போறாங்க” என்ற யுகேஷ் கார்த்தியை மட்டும் கூட்டிக்கொண்டு மற்றவர்களை தாய்மார்களோடு போக சொல்லி சொல்லிவிட்டு வருண் இருந்த இடத்துக்கு வந்து விட்டான்.

சரி அவளை இயல்பாக்கும் பொருட்டு தானே என்று இவர்களும் தங்களின் வேலையை பார்க்க போய் விட்டார்கள். கூடவே அவர்களின் பிள்ளைகளும் சேர்ந்து அவர்களின் கவனத்தை முயன்று திசை திருப்பி விட்டார்கள். அதனால் வெகு விரைவாகவே அவர்கள் துணிக்கடையில் ஒன்றி போய் விட்டார்கள்.

இங்கே ஐஸ்க்ரீம் பார்லரில் தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஏந்திழையாள். அவளை அப்படி பார்க்கவே முடியவில்லை மூவராலும்.

“பாப்பா” என்று கார்த்திக் அழைத்த மறுநொடி அவனது தோளில் விழுந்து கதறி விட்டாள்.

மூவரின் நெஞ்சும் திக்கென்று ஆனது. எதுவும் இல்லை வெறுமென மிராட்டுவான் என்று எதிர் பார்த்து இருந்தார்கள். ஏனெனில் ஏந்திழையாள் சற்று நேரத்துக்கு முன்பு சிரித்தாலே... ஆனால் இப்பொழுது இப்படி கதறுகிறாள் எனில் மூவருக்கும் உயிரே இல்லை.

“பாப்பா என்னடா என்ன ஆச்சு...? ஏன் இப்படி அழற? அவன் எதுவும் சொன்னானா.. எதையும் மறைக்காம சொல்லுடா. நீ சொல்றதை வச்சு தான் நாங்க ஏதாவது செய்ய முடியும்” என்று யுகேஷ் அவளின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான். கார்த்தியிடம் இருந்து சட்டென்று பிரிந்து யுகேஷ் தோளில் சாய்ந்துக் கொண்டாளே தவிர வாயை திறக்கவில்லை.

வெறும் கதறல் மட்டும் தான் அவளிடம் வெளிப்பட்டது.

“ச்சு இழை அழாதடா... சுத்தி இருக்கிற எல்லோரும் உன்னை தான் பார்க்கிறாங்க” என்று அவளின் கண்ணீரை அவன் துடைத்து விட அவனது தோளில் சாயப் போனாள். ஆனால் இடையில் இருந்த மேசை தடுக்க இன்னும் அழுதாள்.

கார்த்தியை நகர்த்தி விட்டுட்டு வருண் அங்கு போய் அமர்ந்துக் கொண்டு அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

ஏந்திழையாளுக்கு ஒரு ஹேபிட்... ஏதாவது சோகமோ கண்ணீரோ நேருகையில் அருகில் யார் இருந்தாலும் எல்லோரின் தோளிலும் சாய்ந்து அழவேண்டும். அது சின்ன பிள்ளையில் இருந்து அப்படி ஒரு பழக்கம்.

அப்படி யார் மேலாயாவது சாய முடியவில்லை என்றால் அவளின் அழுகை இன்னும் அதிகமாகும். அதை உணர்ந்தே வருண் வேகமாய் அவளிடம் வந்தான்.

அந்த நிலையிலும் தன் தங்கை செய்வதை கண்டு கார்த்தியின் இதழ்களில் சின்ன புன்னகை பூத்தது. சின்ன பிள்ளையாவே இருக்கிறா... என்று எண்ணினான்.

ஆனா இந்த சின்ன பிள்ளையை கசக்கி எரிய நினைக்கும் ராசசிம்மனின் மீது கட்டுக் கடங்காமல் கோவம் எழுந்தது.

“உன் ஆட்டம் இங்க பலிக்காது சிம்மன். இது நாங்க பார்த்து பார்த்து கட்டிய பாசக் கோட்டை. அதுல உண்ண மாதிரி சல்லி பயலுக எல்லாம் வந்து விளையாட முடியாது. நீ பிசினெஸ்ல வேணா பெரிய புலியா இருக்கலாம். ஆனா இங்க உன் பப்பு வேகாது. இது ஏங்க சாம்ராஜ்யம்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் கார்த்திக். அதை யுகேஷ் தன் கண்களால் பிரதிபலித்தான்.

யுகேஷிடம் அவ்வளவு ஆக்ரோஷம் தென்பட்டது. ஆனால் கார்த்திக் தான் அவனை அடக்கி வைத்தான்.

“இது கோவப்படும் நேரம் இல்லைடா... முதல்ல இழையை பார்ப்போம். பிறகு அவனுக்கு ஒரு முடிவை எழுதுவோம். அது வரை நீ பொறுமையோட தான் இருக்கணும்..” என்று யுகேஷை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

“சொல்லு இழை நீ இப்படியே அழுதுட்டு இருந்தா நாங்க என்ன தான் பண்றது... அம்மாக்களை சமாளிக்கணும். அப்பாக்களுக்கு இந்நேரம் இந்த நியூஸ் போய் சேர்ந்து இருக்கும். லிப்ட் சிசிடிவி வேற ஒடைஞ்சி இருக்கு..? உள்ள என்ன தான் நடந்தது” என்று வருண் பக்குவமாக கேட்க அவளின் விசும்பல் சற்றே மட்டுப் பட்டதோடு வாய் திறந்தாள்.

மேம்போக்காக சொல்லி விட்டு,

“நீங்க பண்ணின எல்லா வேலையும் அவனுக்கு தெரிஞ்சு இருக்குண்ணா. அதுக்கான பதிலடி தானாம் இது” என்றாள்.

“வாட்” என்று மூவரும் ஒரு சேர அதிர்ந்தார்கள்.

“இது தெரிய வாய்ப்பே இல்லையேடா” வருண் யுகேஷிடம் கேட்டான்.

“ஆமாம் யுகேஷ்... பிறகு எப்படி நாம தான் செய்தோம்னு அவன் சொல்றான்” என்று கார்த்திக் யோசனையாக, ஏந்திழையாள் தான் சொன்னாள். யுகேஷ்க்கும் அது தான் யோசனையாக இருந்தது.

“எல்லா போன் காலும் நியர் பை நம்ம கம்பெனி பக்கம் இருந்து தான் வந்து இருந்ததாம்” என்றாள்.

“ஷிட்” என்று தலையில் அடித்துக் கொண்டான் யுகேஷ்.

“மிஸ் பண்ணிட்டோம் கார்த்திக்”

“ஆமான்டா” என்றான் வருண்.

கார்த்திக் மௌனமாக இருந்தான்.

“என்னடா எதுவும் சொல்ல மாட்டிக்கிற?”

“இல்ல ஒரு மாதமா அவனை நாம படுத்தி வச்சதுக்கு ரொம்ப சிம்பிளா விட்டுட்டு போயிட்டானேன்னு யோசிக்கிறேன்டா” என்றான் அவன்.

“அண்ணா” என்றாள் தயக்கமாக.

“சொல்லு என்ன வெடிகுண்டை போட்டு இருக்கான் அந்த பரதேசி” என்று வெடித்தான் யுகேஷ்.

“ண்ணா” என்று அவள் மிரள,

“ப்ச் உன்மேல கோவம் இல்ல பாப்பா. எல்லாம் அந்த திமிரு புடிச்சவன் மேல தான்” என்று பல்லைக் கடித்தான் யுகேஷ்.

வருணோ “வாயை திறந்து சொல்லு இழை... அவன் என்ன சொல்லி உன்னை மிரட்டி வச்சு இருக்கிறான்” என்று கேட்க, பெரும் தயக்கத்துக்கு பிறகு,

“இன்னைக்கு அந்தி நேரம் அவனது கெஸ்ட் ஹவுஸ்க்கு வர சொல்லி சொல்லி இருக்கிறான் ண்ணா” என்று முகம் அழுகையில் சுறுங்க, பெரும் அவமானத்துடன் சொன்ன தங்கையை இழுத்து அணைத்துக் கொண்டான் யுகேஷ்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 18, 2026 10:38 am
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top