“ஏய் என்னடி சொல்ற..?” நிலநடுக்கம் வந்தவன் போல அதிர்ந்துப் போனான் உதயாதிபன். “ஆமா சொல்றாங்க உப்புக்கு சொரக்காய் இல்லன்னு” என்று கடுப்படித்தாள்.
அவளின் முகவாயை இறுக்கமாக பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், “இப்போ சொல்லு அன்னைக்கு என்ன நடந்தது?” என்று கோவமாக கேட்டான். அவனது கோவத்தில் எதை உணர்ந்தாளோ அன்றைக்கு நடந்த சம்பவத்தை ஒன்று விடாமல் சொன்னாள்.
அதை புள்ளி விடாமல் கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு மனம் மொத்தமும் தகித்துப் போனது. விழிகள் இரண்டும் அப்பட்டமாய் சிவந்துப் போனது. அவனது முகம் நொடியில் சிவந்துப் போனதை கலவரத்துடன் பார்த்தவள்,
“என்னங்க ஆச்சு? ஏனிப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒன்னும் இல்ல தானே?” என்று அவள் பரிதவித்துப் போக, “அப்போ நீயா போகலையா?” என்று அவளை பார்த்து அழுத்தமாக கேட்டான்.
“ம்ஹும்... நீங்க தானே அந்த அறையை விட்டு வெளில வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போனீங்க... அப்புறம் எப்படி நான் வெளில போவேன். நீங்க சொன்னதுக்காக நான் அறையை விட்டுக்கூட வெளில எங்கும் போகல... ஆனா மத்தவங்க உங்க அறைக்குள்ள நுழைஞ்சி என்னை வெளியே இழுத்துட்டு போனாங்க” என்றாள். அவள் அன்றைக்கு பட்ட அவமானம் இன்னும் கண் முன் இருந்தது. விழிகள் கலங்கியது. அவளின் முகத்தில் அது அப்படியே பிரதிபலித்தது.
சட்டென்று அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் உதயாதிபன். “சாரிடி” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. ஆனால் அதை காட்டும் இடம் இவள் அல்லவே. அதனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் இயல்பாக இருப்பது போல இருந்தான். ஆனால் அவனது கோவம் அவனின் உடல் மொழியிலே புரிந்துக் கொண்டவள்,
“உங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாதா?” என்று கேட்டாள். “ம்ஹும்..” என்றான் பெரும் வேதனையுடன். “வீட்டுல சிசிடிவி இருந்ததே” என்றாள் யோசனையாக. அவளை விட்டு விலகியவன்,
பெருமூச்சு விட்டு தன்னை நிலை படுத்திக் கொண்டவன் “அது தான் நான் செய்த தவறு” என்றான். “என்ன சொல்றீங்க?” அதிர்ந்தாள். “உன் கூட ப்ரீயா இருக்கணும்னு எல்லா வேலையாட்களையும் அனுப்பியது மாதிரி நம்ம இன்டிமேட்டா இருக்கிறது வேற யார் கண்ணுக்கும் படக்கூடாதுன்னு தான் தான் கேமராவை ஆப் பண்ணி வைத்தேன்” என்றான்.
அதில் அவள் என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. தன்னொடு இருக்கும் நேரத்தை ப்ரைவசி என்று எண்ணி அவன் செய்த செயல் அவளுக்குள் ஜில்லென்று இறங்கியது. “கடற்கரை வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறேன்னு கை காட்டுனாங்களா?” அவளே ஒரு ஊகத்தில் கேட்டாள். அவன் தலையை ஆட்டினான்.
“நம்பாம ரெஜிஸ்டர் ஆன பேப்பர்சை செக் பண்ணேன். அமௌன்ட் ட்ரான்ஸ்பர் ஆகும் நேமையும் செக் பண்ணேன். எல்லாமே உன் பெயரில் தான் இருக்கு” என்றான் தலையை அழுந்தக் கோதி. “ஆனா பணம் நான் ...” என்று அவள் சொல்ல வரும் முன்பே,
“சாரிடி” என்றான். “ப்ச்” என்று அவனது வாயை பொத்தியவள், “ரெண்டு பேருமே ஏமாந்து இருக்கோம்... ஏமாற்றப்பட்டு இருக்கோம்” என்றாள். அவன் தலையை ஆட்டினான் ஆமாம் என்பது போல..
“சரி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்குறது... வெயில் ஏறிக்கிட்டே இருக்கு. இதுக்கு மேல இந்த உப்பு காத்துல இருந்தா பையனுக்கு உடம்பு முடியாம போயிடும். வீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள்.
ஆனால் அவனுக்கு அவர்களை அனுப்பவே மனம் வரவில்லை. மண்ணை உதறிவிட்டு எழுந்தவள் அவன் மடியில் இருந்த பிள்ளையை தூக்கி தோளில் போட்டு துண்டால் மூடியவள் பேகை எடுக்க உதயாதிபன் அசையவே இல்லை.
“நீங்க கிளம்பலையா?”
“ப்ச் போய் மட்டும் என்ன பண்ண போறேன்” என்று சலித்துக் கொண்டான். “இப்படி பேசுனா என்ன பண்றது? ஒழுங்கா கிளம்பி வீட்டுக்கு போங்க. கண்ணுல தூக்கம் தெரியுது”
“ப்ச் படுத்தாலும் தூக்கம் வராது” என்றவனை விட்டுட்டு கிளம்ப மனம் வரவில்லை வராளிக்கு. “அப்போ என்ன செய்யிறது?” என்று அவனின் அருகில் அமர்ந்தாள்.
“அமைச்சரா இருக்குறதுனால மக்கள் நடமாடும் பொது வெளியில இடத்துல போக முடியாது” என்றான். “சரி கார்ல இருக்கலாமா?” என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தான். அதில் அவனுக்கான ஆறுதல் இருந்தது.
“டிரைவரை போக சொல்றேன்” என்றவன் போனை எடுத்து டிரைவருக்கு பேசியவன் அவளை கைக்கொடுத்து எழுப்பினான். குழந்தையை அவள் தூக்கிக்கொள்ள அவளது பைகளை அவன் எடுத்துக் கொண்டான் கொஞ்சமும் கூச்சம் பாராது.
“சார் நீங்க தொழில்துறை அமைச்சர்... நீங்க போய் லேடிஸ் ஹேன்ட் பேகெல்லாம் தூக்கக் கூடாது” நக்கலாக சொன்னாள். “போடி.. ரொம்ப தான் வாய் பேசுற... உனக்கு முதல்ல புருசன். அதுக்கு பிறகு தான் ஊருக்கு நாட்டுக்கு அமைச்சர்” என்றான்.
அவனது அன்பை பூரணமாக உணர்ந்தவள், “ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்” என்றாள் கலங்கிப்போய். உதயாதிபன் அவளை பார்த்தான்.
“இல்ல கல்யாணம் ஆன முதல் நாளே எனக்காக சமைச்சி குடுத்தீங்க... இதே இது பிள்ளை வயித்துல இருக்கும் பொழுது என்னை எப்படி பார்த்துக்கிட்டு இருந்து இருப்பீங்க... உண்மையா உங்களை அந்த நேரத்துல ரொம்ப மிஸ் பண்ணேன்.. நீங்க கூட இருந்தா அது வேற பீல் தான்” என்றாள் ஆத்மார்த்தமாக.
உதயாதிபன் அவளை தன் தோளோடு இறுக்கி அணைத்தான். அதில் அவன் சொல்லாத வலி புரிய, அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் “சாரிடி” என்றான்.
“ப்ச்... இன்னொரு முறை சாரி கேட்டு என்னை பீல் பண்ண வைக்காதீங்க ங்க” என்றவளின் அன்பில் கரைந்துப் போனவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. அவனது புன்னகையை கண்டு மனம் நிறைந்துப்போனாள்.
அவனது முழுமயான காதலை அவள் இன்னும் அறியவில்லை. அறியாமலே அவனது காதலின் மீது அவளுக்குள் பெரும் அன்பு பெருகியது.
காரை அவனே ஓட்டி சென்றான். அன் அபிஷியல் ஒர்க் என்றால் அவனது அமைச்சர் போர்ட் இல்லாத வண்டியில் தான் பயணிப்பான். இன்றைக்கும் அப்படி தான் வந்திருந்தான். அது மிக சுலபமாக இருந்தது யாருடைய பார்வைக்கும் அவன் விருந்தகவில்லை.
அவனுக்கு வெகு அருகில் அவனின் மனைவியும் குழந்தையும். குழந்தை தூங்கி விட்டான். மனைவியின் கையை கோர்த்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம்... அவன் வாழ்வில் இது போல எல்லாம் நடக்கும் என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நடந்தது... நடந்துக் கொண்டு இருந்தது.
முதல் நாள் அவளை சாலையில் பார்க்கும் பொழுதே அவன் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது. தன்னை அவளுக்கு நினைவு இருக்குமா இல்லையா என்ற நிலையில் தான் அவன் இருந்தான்.
ஏனெனில் இவன் தானே அவளை காதலித்தான். இவனுக்கு அவள் உயிர். ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே.. அதனாலே அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கட்டிய தாலி அவளது கழுத்தில் பார்த்த உடனே அவனது மனம் எவ்வளவு குதியாட்டம் போட்டது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியும்.





