அத்தியாயம் 1

 
Admin
(@ramya-devi)
Member Admin

அந்த இடம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில் ஜாம்பவான்கள் அரசியல் பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் உயர்தர ஹைபை சொசைட்டி.. அந்த பகுதியில் இருந்த கோயிலில் பக்தி பாடல்கள் மிக மென்மையாக ஒலித்துக் கொண்டு இருந்தது யாருக்கும் தொந்தரவு இல்லாமல். பொழுது புலர இன்னும் அதிக நேரம் இருந்தது.

மார்கழி மாத பனியில் மிக மெல்லிய வெளிச்சத்தில் மக்கள் நடமாட்டமே இல்லாத கோயில் தெருவில் தேவதையாய் ஒரு பெண் நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

சிவப்பு வண்ண சேலை... முந்தானையை ஒற்றையாய் விட்டு அதன் நுனியை வலது கையில் பிடித்துக் கொண்டு இடது கையில் கோயிலுக்கு கொண்டுப் போக பொருட்கள் இருந்தன.

தலைமுடியை விரித்து விட்டு இரண்டு சரம் பூவை சூடி, காதில் சின்ன சிமிக்கியோடு, கையில் உயர்தர கண்ணாடி வளையல்களோடு மெல்லிய தங்க வளையல்கள் சேர்த்து அணிந்து இருந்தாள்.

கண்களுக்கு மையிட்டு உதட்டில் யார் கண்ணையும் உறுத்தாத அளவுக்கு லிப்ஸ்டிக் போட்டு அழகாய் மேக்கப் போட்டு அந்த அதிகாலைப் பொழுதில் நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.

தெருவில் எந்த நடமாட்டமும் இல்லை. அவ்விடம் புல் செக்கியூரிட்டி என்பதால் எந்த பயமும் இல்லை. அதோடு கண்ணுக்கே தெரியாமல் அவளது அப்பா அவளின் பாதுகாப்புக்காக புல் ப்ரோடேச்ஷன் கொடுத்து இருந்தார்.

அதனாலே அவளுக்கு எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக கோயிலுக்கு நடந்து சென்றாள். இவள் வந்த பிறகு தான் கோயில் பூசை ஆரம்பிக்கும்.

வீட்டில் எல்லோரும் சொல்லி விட்டார்கள். ஆனால் இவள் கேட்கவே இல்லை.

“இந்த கொட்டுற பனியில எதுக்கு கோயிலுக்கு போற... விடிஞ்சி போனா தான் என்னடா? பனி உனக்கு ஒத்துக்கலன்னா என்ன பண்றது... உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களுக்கு தான் வேதனை” என்று அலுத்துக் கொண்டாலும் மகளின் ஆசைக்காக சம்மதித்தார்கள்.

பெரிய குடும்பம் அவளோடது... பெரியப்பா, அப்பா, இரண்டு அத்தைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். தாத்தா பாட்டி, அவர்களோட தம்பி குடும்பம் என மிகப்பெரிய கூட்டுக் குடும்பம் கொண்டவள் தான் இந்த ஏந்திழையாள்.

பாசம் என்றால் அப்படி ஒரு பாசம். ஒருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் குடும்பத்துக்குள். பிள்ளைகள் மட்டும் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று என இருப்பார்கள். அதனால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது.

இளமை ததும்பும் குடும்பம். எடுத்து எரிந்து பேச தெரியாத மனிதர்கள்.

ஏந்திழையாள் குளித்து கிளம்பி வெளியே வர, நடு கூடத்தில் அவளது பெரிய அத்தை மகன் வருண் வெளிநாட்டில் இருக்கும் அவனின் ஆளோடு பேசிக் கொண்டு இருந்தான்.

“இப்போ பாரு உனக்கு அரியவகையான ஒரு ஜந்துவை காண்பிக்கிறேன்” என்று சொல்லி இவள் புறம் கேமராவை திருப்பி காண்பித்தான்.

“ஹாய் எலிசா” இவள் கையை ஆட்ட,

“ஹேய் இழை... யூ லுக் வெரி கார்ஜியஸ் பேபி.. நானும் அங்க வரும் பொழுது உன்னை மாதிரியே க்யூட்டா சேரி கட்டி விடணும் ஓகேயா?” என்று டீல் போட்டுக் கொண்டாள் அவள்.

“யா சுயர்...” என்று இவள் சொல்ல,

“பேபி அதுக்கு ஸ்ட்ரெக்ச்சர் வேணும்டா.. நீ பர்கர் சீஸ்னு சாப்பிட்டு சாப்பிட்டு உன் ஹிப்பை பாரு எப்படி வீங்கி போய் இருக்குன்னு... பெட்டர் நீ சில்லுன்னு ஜீன்ஸ் போடு.. மாமாவுக்கும் அது தான் ஈசி” என்று அவன் சொல்ல எலிசா வேப்பில்லை இல்லாமலே அவனிடம் சாமியாடி விட்டாள்.

“கொரங்கே... என்னை பார்த்தா எப்படிடா இருக்கு... பரதேசி. நீ ரொம்ப ஒழுங்கா என்னை சொல்றான். நீயும் தான் வகை தொகை இல்லாம திங்கிற.. நான் ஏதாவது சொன்னனா. இன்னொரு முறை என் உடம்பை பார்த்து ஏதாவது சொன்ன உன் கண்ணுல கொல்லிக்கட்டையை வச்சுடுவேன் டா எரும” என்று காலையிலையே இருவரும் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

அதை பார்த்து சிரித்துக் கொண்டே இவள் கிளம்பி விட்டாள்.

நிதான நடையில் வந்துக் கொண்டு இருந்தவள் எலிசாவின் பேச்சால் சிரிப்பு வந்தது. இருவருமே எலியும் பூனையும் தான். ஒரு நேரம் கூட அமைதியாக இருக்க மாட்டார்கள். கேட்டால் நாங்க காதலிக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

என்ன காதலோ என்று எண்ணி சிரித்துக் கொண்டு இருந்தவள் எதன் மீதோ மோத பக்கென்று ஆனது. கையில் இருந்த பொருள்கள் எல்லாம் கீழே சிதறி இருந்தது. நிலை தடுமாறி அவள் விழப் பார்க்க அனிச்சை செயலாய் எதிர் புறம் இருந்த தூணை சுற்றி வளைத்து இருந்தாள்.

அதை எல்லாம் கவனிக்காமல் இதென்ன நடு ரோட்டுல யாராவது தூணை வைப்பாங்களா என்று எண்ணிக் கொண்டே நிமிர்ந்துப் பார்த்தாள்.

மோதிக் கொண்ட இடம் தூண் இல்லை. ஆறடி உயரத்தில் காட்டுத்தனமாக வளர்ந்த ஒரு ஆசாமி மீது என்று தெரியவர,

“சாரிங்க” என்று அவள் பரிதவித்து ஆரம்பிக்கும் பொழுதே,

“ஹேய் இடியட்... அறிவில்ல... மேனர்ஸ் இல்ல... வாட்ட சாட்டமான ஆம்பளையை பார்த்த உடனே இடிக்க வந்துடுவியா? நீ எல்லாம் நைட்டுல தானே தெருதெருவா போவ.. இப்ப என்ன மார்கழி மாதத்து டாக் மாதிரி விடியற்காலையில சுத்திவர்ற” என்று தேள் கொடுக்காக அவன் பேச பேச்சு வராமல் விக்கித்து நின்றாள் ஏந்திழையாள்.

கண்கள் எல்லாம் கலங்கி விட்டது... எப்படிப்பட்ட சொல்... இதுநாள் வரை ஒரு சுடு சொல் கூட அவள் காதில் வாங்கியதே இல்லை. அப்படி பட்டவளை இப்படி ஒரு சொல் சொல்ல இவனுக்கு எப்படி மனம் வந்தது என்று அவள் மனம் மருக,

“ஏய்...” என்று அவன் மீண்டும் கர்ஜனையாக ஆரம்பிக்க, இவள் அரண்டுப் போனாள்.

அவளின் விழிகளில் இருந்த மிரட்ச்சியை பார்த்து,

“இந்த கண்ணை உருட்டி மிரண்ட மாதிரி நடிக்கிற  வேலையெல்லாம் இங்க வேணாம். உன்னோட சீப் மென்டாலிட்டி எல்லாம் எனக்கு தெரியும் முதல்ல என்னை விடு” என்றான் அவன்.

“நான் எங்க அவனை பிடுச்சி வச்சு இருக்கேன்” என்று அதிர்ந்தவள் தன் கைகளை பார்க்க,

கீழே விழுந்திடுவோம் என்று பயந்து போய் அவனது முதுகோடு கைப் பற்றி இருந்தாள். பட்டென்று அவனை விட்டு விட, அப்பொழுது தான் தான் அறிமுகம் இல்லாத ஆண் மகனிடம் நெருங்கி நின்று இருக்கிறோம் என்று உணர்ந்தாள்.

அவன் ஜாகிங் போய்க்கொண்டு இருப்பான் போல... வெள்ளை நிற டீசெர்ட்... ப்ளாக் கலர் ட்ரக் பேன்ட்.. இறுக்கிப் பிடித்து இருந்த அவனது உடை அவனின் திடகாத்திரமான உடம்பை அப்படியே காட்டியது. வியர்வையில் அவன் நனைந்து இருந்ததால் அவனின் ஆண் வாடை அப்படியே முகத்தில் மோதியது.

Loading spinner

Quote
Topic starter Posted : March 14, 2026 11:17 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top