அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாலும் திரும்ப கிடைக்காத பொழுதல்லவா? மனம் ஏங்கியது கடந்துப் போன நாட்களை எல்லாம் திருப்பி கொண்டு வந்து வாழ. ஆனால் அதெல்லாம் நடக்காது அல்லவா...
நடந்த எதற்கும் அவன் காரணம் இல்லைதான். ஆனால் இந்த வலி மொத்தமும் அவள் மட்டும் அனுபவித்து இருக்கிறாளே.. வேதனை அவனை மொத்தமாக விழுங்கியது. ஆனால் அதையெல்லாம் சொன்னாலும் இப்பொழுது புரிந்துக் கொள்ளும் நிலையில் அவள் இல்லையே...
அதனால் மௌனமாக இருந்தான். அவனது மார்பில் இருந்த பிள்ளை ஆ.. ஊ... என்று ஓசை எழுப்ப சங்கீதமாய் இருந்தது அவனுக்கு. ஒரு கையால் மகனை பிடித்துக் கொண்டவன் மறுகையால் எட்டி மனைவியின் காயத்தை வருடி விட்டான்.
“வலிக்கிறதா?” என்றான். அவனின் கரிசனையில் நெஞ்சு என்னவோ செய்தது. காலையில் வீட்டுக்கு வந்து அவனின் அம்மா ஆடிவிட்டு போன ருத்திர தாண்டவத்தை காட்டிக்கொள்ளாமல் இல்லை என்று தலையை ஆட்டினாள். அவளோடு சேர்ந்து அவளின் சிமிக்கியும் அசைந்தாடியது.
“தூங்குறியா?” என்று கேட்டான். அவள் திகைத்தாள்.
“வா...” என்று சொல்லி இடது கையை தலையணையாய் நீட்டினான். முணுக்கென்று கண்ணீர் திரண்டது அவளுக்கு. ஒன்றும் சொல்லாமல் முந்தானையை மணலில் விரித்து விட்டு அவனோடு ஒட்டி படுத்துக் கொண்டாள். ஆனால் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அதில் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டாலும் தன்னை விட்டு நீங்காமல் தன்னை உரசியபடி படுத்து இருந்தவளின் நெருக்கத்தில் கொஞ்சமே கொஞ்சம் நிறைந்துப் போனான்.
குழந்தையும் மனைவியும் அவனின் தனிமையை பெருமளவு போக்கினார்கள். அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக முகத்தில் துணியை மறுபடியும் எடுத்து போட்டுக் கொண்டான். சிறிது நேரம் அந்த பக்கம் திரும்பி படுத்து இருந்தவள் மனம் கேட்காமல் அவன் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள். பெருமூச்சு வந்தது.
“என்ன ஆச்சு?” என்று கேட்டாள். சொகுசாக அவனது கையில் தலையை வைத்துக் கொண்டு இருந்தாள். இப்பொழுது என்று இல்லை எப்பொழுதுமே அவளின் நலனில் கவனம் வைப்பவன் ஆயிற்றே.
“ஒன்னும் இல்லடி” என்றவன், “உன் நெத்தியில இப்படி இவ்வளவு பெரிய காயம். ஷூட்டிங் இல்லையா? நேத்திக்கு இருக்குன்னு சொன்னியே இங்க என்ன பண்ற?” கேட்டான்.
“மனசு சரியில்ல.. சாமியை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” “ம்ம்ம்” என்றான் வேறு எதுவும் பேசவில்லை. “சாப்பிடுறீங்களா?” கேட்டாள்.
“கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றான். பின் சிறிது நேரம் கழித்து அவள் எழுந்துக் கொண்டு குழந்தையை வாங்கிக்கொண்டவள் அவனுக்கு தான் எடுத்து வந்திருந்த உணவை கொடுத்தாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து அமர்ந்து கையை கழுவி விட்டு அவள் நீட்டிய டிபன் பாக்சை வாங்கிக் கொண்டான். பாட்டிக்கும் சேர்த்தே எடுத்து வைத்து இருந்தாள். அதனால் உணவு அதிகமாகவே இருந்தது.
“உங்க அளவுக்கு எனக்கு சமைக்க தெரியாது. அவசரத்துக்கு செஞ்சது” என்றாள். “ம்ம்ம் ஓகே தான்” என்றவன் அவள் சமைத்த உணவை விரும்பி உண்டான். அவளுக்கும் ஊட்டி விட்டான். அவள் அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“இதென்ன புதுசா எப்பொழுதும் உனக்கு ஊட்டி விடுவது தானேடி” என்றான் சர்வ சாதாரணமாய். “மறக்கலையா?” கேட்டாள்.
“நீ மறந்துட்டியா?” என்று கேட்டான். பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் அவனிடம் உணவை வாங்கிக் கொண்டாள். அவன் தாலியை பற்றி சொன்னதோடு அல்லாமல் உன் பெயருக்கு என்ன பொருள்னு பாரு என்று சொன்னானே அன்றிரவே அவளின் பெயருக்கான பொருளை அலைபேசியில் தேடி பார்த்தாள்.
வராளி என்றால் நிலவு என்று பொருளாம்... இதுக்கும் இந்த தாலிக்கும் என்ன சம்மந்தம் என்று யோசித்தவள் தன் தாலியை வெளியே எடுத்துப் பார்த்தாள்.
மாசறு பொன்னில் வட்டத்தில் முழு நிலவின் வடிவத்தை பொரித்து இருந்தது. அதன் அருகில் அதை ஒட்டி உரசியபடி இன்னொரு வட்டத்தில் முழு கதிரவனின் வடிவத்தை கதிர்கள் வெளிப்படுமாறு பொரிக்கப்பட்டு இருந்தது.
இதுல என்ன இருக்கு என்று எண்ணியவள் அதை ஒதுக்கி தள்ளி விட்டு படுத்துக் கொண்டவள் பின் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். குப்பென்று வியர்த்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
கைகள் நடுங்க மீண்டும் அந்த தாலியை எடுத்து பார்த்தாள் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில். நிலவை உரசியபடி இருந்த கதிரவனை கண்டாள். தன் கணவனின் பெயரை எண்ணிப் பார்த்தாள்.
உதயாதிபன்... உதயாதிபன்னா பொருள் தேடித் பார்த்தாள். கதிரவன் என்று வந்தது. “அப்போ... அப்போ...” என்று எண்ணியவளுக்கு உடல் மொத்தமும் சிலிர்த்துப் போனது... கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது.
மூச்சடைப்பது போல தோன்றியது. இதழ்களை குவித்து தன்னை ஆசுவாசப் படுத்த பார்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. ஒற்றை துளி கேட்ட அன்பு அவளுக்கு கொட்டிக் கொடுத்தது போல இருந்தது. தன் கழுத்தில் இருந்த தாலியே கணவனின் அன்பை சொல்லியது..
சாதாரணமாக எல்லோரும் தாலி கட்டுவது போல தாலி கட்டி இருக்கலாம். ஆனால் நான் என்ன ஸ்பெஷல்... ஒருவேளை நான் அவருக்கு ஸ்பெஷலா இருக்கிறதுனால தானே இப்படி மெனெக்கெட்டு இதை எல்லாம் செய்து இருக்கார்... இல்லன்னா இப்படில்லாம் செய்யனும்னு என்ன அவசியம் வந்தது...
‘ஆனா ஏன் அன்னைக்கு தாலி கட்டும் பொழுது அவங்க அம்மா கிட்ட பத்து நாள் கூத்துன்னு சொல்லணும்.. அதோட பிரிஞ்சி வந்த இந்த ஒன்னரை வருடத்தில் ஒரு நாள் கூட தேடி வரவே இல்லை’ என்று அவளுள் நிறைய கேள்விகள் எழுந்தது.
அவன் அன்றைக்கே ஒரு விசயம் சொல்லி இருந்தான். ஒருமுறை நீ என்னை விட்டு போனா பிறகு சேருறது ரொம்ப கடினம் என்று. ஆனால் இவளுக்கு தான் அது நினைவில் இல்லாமல் போனது. இப்பொழுது வரை அவளுக்கு அது நினைவில் இருக்கவும் இல்லை. அதனால் தன்னவனை அவள் புரிந்துக் கொள்ள முடியாமலே போனது.
ஒண்ணரை வருடங்களுக்கு முன்பு இருவருக்குள்ளும் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தாள். அன்று புரியாத பலவும் இன்றைக்கு புரிந்தது.
அதனாலே அவனிடம் இன்றைக்கு வெட்டிக்கொண்டு போகாமல் அமைதியாக இருந்தாள். அவனின் அருகாமையை நேசித்தாள். ஆனால் மனம் விட்டு சொல்லவில்லை. அவனை தவிர்த்து விட்டு அவளால் போகவும் முடியவில்லை. அதுவும் அவன் யாருமில்லாமல் தனித்து கிடந்ததை பார்த்துவிட்டு அவளால் எப்படி போக இயலும்.
பெற்ற அன்னை கூட அவளை பார்த்துக் கொண்டது இல்லையே.. அந்த மூன்று நாட்களும் அவளது வாழ்வில் சொர்கம் தானே... அவளுக்கு ஊட்டி விட்டு கீழே தரையில் கூட நடக்க விடாமல் யாரையும் ஒரு சொல் சொல்ல விடாமல் பார்த்துக் கொண்டானே..
அவன் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தான். நான் அமைச்சர். எனக்கு கீழ தான் எல்லாமே. என்று ஒரு நாள் ஒரு பொழுது கூட காட்டிக் கொள்ளவில்லையே. ஏன் அன்றைக்கு கல்லூரியில் கூட யாரும் கவனிக்காத பொழுது இவன் தானே அவளது புடவையில் தீ பிடித்ததை கவனித்து வெறும் கையாலே அணைத்தான்.
வேறு யாரிடமோ சொல்லி விட்டு ஒதுங்கி இருக்கலாம். ஆனால் அவன் அப்படி எதுவும் செய்யலையே... கையில் காயம் படும் என்று தெரிந்தும் நெருப்பை அனைத்தனே. அன்று கூட தான் அமைச்சர் என்ற பந்தா எதுவும் காட்டவில்லையே..
கடந்துப் போன சம்பவங்களில் எல்லாம் கணவனின் அன்பை உணர்ந்துக் கொண்டவளுக்கு தன்னை தேடி வரவில்லை என்ற கோவம் அடி மனதில் இருந்தது. பத்து நாள் உறவு என்றால் ஏன் ஒரு சின்ன தாலிக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்க வேண்டும்... தேவையில்லையே.
அதை உணர்ந்துக் கொண்டவள் அவன் ஊட்டும் உணவை வாங்கிக் கொண்டாள் எந்த பிகுவும் பண்ணாமல். தானும் உண்டு அவளுக்கும் ஊட்டி விட்டவன் கையை கழுவினான்.
“வாட் நெக்ஸ்ட்?” என்று இருவரின் மனதும் கேட்டது. இப்படியே இங்கேயே இருந்து விடலாம் ஒருவரின் அருகாமையில் இன்னொருவர் என்று இரு உள்ளமும் தவித்தது. ஆனால் மற்றவரின் கருத்து என்னவென்று தெரியாதே அதனால் அமைதியாக இருந்தார்கள்.





