“என்ன பிச்சைக்காரியா...?” முன்னாடின்னா கூட ஒத்துக்கிட்டு இருந்து இருப்பார். இப்போ அப்படி இல்லையே... லட்சாதிபதி ஆயிற்றே அவர்.
சுருக்கென்று ஏறியது. ஆனால் தேனாண்டாளிடம் அதை காட்டி விட முடியாதே... அவர் போட்ட பிச்சியில் தானே இவர் லட்சாதிபதி ஆகியது. அதனால் தன் எதிர்ப்பை காட்டவில்லை கலா.
“முதல்ல உட்காருங்க மேடம்” என்றார். “உன் உபசரனையை தூக்கி கொண்டு போய் உடைப்பையில போடு... குடும்பமா நடிச்சு ஏமாத்த பார்க்குறீங்களாடி?” என்று கொதிப்பின் உச்சத்தில் கத்தினார்.
“மேடம் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல?” என்றார் கலா. “அப்படியே பசப்பாதீங்கடி. உங்க நோக்கம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். என்ன குட்டி கரணம் போட்டாலும் இனி ஒத்த பைசா கூட தரமாட்டேன்” உறுமினார்.
“உண்மையாவே ஒன்னும் புரியல மேடம்” என்று சிவாவும் சொல்ல, அவளுக்கு முன்னாடி தன் போனை நீட்டினார். காலையில் தேனாண்டாள் அலைபேசிக்கு போலியோ சொத்து மருந்து போடும் படமொன்று வந்து இருந்தது. எந்த எடிட்டும் இல்லாமல்.
“இதெல்லாம் யாரு அனுப்பி விடுறது... வேலை கெட்ட வேலை பார்த்துட்டு. இப்போ இதை பார்த்து நான் என்ன செய்ய போறேனாம்” சலித்துக் கொண்டவர் அதை டெலிட் செய்ய போகும் பொழுது தான் அந்த படத்திலிருந்த இருவரையும் கூர்ந்து பார்த்தார்.
பார்த்தவருக்கு தேகமெங்கும் தீப் பிடித்தது போல அப்படி ஒரு உணர்வு. “எதெல்லாம் நடக்கக் கூடாதுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கானோ அதெல்லாம் என் கண் முன்னாடியே நடந்துக்கிட்டு இருக்கு.. இவனும் கல்யாண பேச்சை எடுத்தாலே பிடி குடுக்க மாட்டிக்கிறான். என்னை சுத்தி என்ன நடக்குத்துன்னு ஒண்ணுமே புரியல.. தொலைஞ்சி போயிட்டான்னு நான் நினைச்சவ இப்போ என் கண் முன்னாடியே வந்து நிக்கிறா...” என்று கொதித்துப் போனவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் வராளி எங்கே இருக்கிறாள் என்கிற தகவலை வாங்கிக்கொண்டு தன் மகள்களோடு கிளம்பி வந்து விட்டார்.
“உன் பிச்சைக்கார புத்தியை காண்பிச்சுட்டல்லடி... என்ன இது என் மகனோட ஒட்டி உரசிக்கிட்டு போஸ் குடுத்து இருக்க? எவ்வளவு தைரியம் இருந்தா நீ இந்த காரியத்தை செய்து இருப்ப... நான் அவ்வளவு தூரம் செஞ்சும் உன் நெஞ்சுல கொஞ்சம் கூட பயம் இல்லன்னா உன்னை எல்லாம் என்ன செய்யலாம்” என்று ஆவேசமாக பேசிய தேனாண்டாள் வராளியின் கூந்தலை பிடித்து அப்படியே சுவரோடு தள்ளி விட்டார் ஆக்ரோஷமாக. வந்தவரிடம் கொஞ்சம் கூட நிதானம் இருக்கவில்லை. “இன்னொரு முறை என் மகனின் கண்ணில் படாத... பட்ட அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள்” எச்சரித்தவர், மீண்டும் அவளை சுவரில் தள்ளி, தலை உடைந்து உதிரம் சொட்ட சொட்ட நின்றவளை ஆக்ரோஷமாக பார்த்து விட்டு,
“சாக மாட்ட... ஆனா ஏன்டா உயிரோட இருக்கிரோம்னு நினைக்கிற அளவுக்கு கொண்டு வந்துடுவேன்” என்று வராளியை எச்சரித்தவர், கலாவையும் உடன் எச்சரித்தார்.
“அவ ஒழுங்கா இல்லன்னா குடுத்த எல்லா சொத்தையும் பிடுங்கிடுவேன் பார்த்துக்க...” என்று விட்டு கிளம்பினார். தேனாண்டாள் வராளியை போட்டு அடிக்கும் நேரம் கலாவும் சிவாவும் தடுக்கக் கூட இல்லை. அப்படியே மரம் மாதிரி நின்று இருந்தார்கள்.
“அமுக்குணி மாதிரி இருந்துக்கிட்டு இவ என்னென்ன வேலை எல்லாம் பார்த்து இருக்கா பாருங்களேன்” என்று சிவா தன் அம்மாவிடம் சொல்ல,
“ஆமான்டி... நமக்கே தெரியாம இவ நிறைய வேலையை பார்த்துக்கிட்டு இருக்கா... இப்படியே விட்டா சுத்தப்பட மாட்டா... இன்னைக்கு அண்ணன் வரட்டும் அவன் கிட்ட சொல்லி இவளை கவனிச்சா தான் ஒழுங்கா அடங்கியிருப்பா.. இல்லன்னா குடுத்த சொத்தை எல்லாம் பிடுங்காம விட மாட்டா போல” என்று கருவிய கலா தன் மகனுக்கு போனை போட்டு சொல்ல உள்ளே போனார்.
சிவா வராளியை எரிச்சலுடன் பார்த்து விட்டு, “மறுபடியும் உடம்பு அரிக்கிதாக்கும். அரிச்சா அவன் மட்டும் தான் இந்த உலகத்துல ஆம்பளையா? வேற யாரும் உனக்கு கிடைக்கலையா?” என்று கேட்க காதை பொத்திக் கொண்டாள் வராளி. சடுதியில் விழிகளில் நீர் நிறைந்துப் போனது.
“ச்சீ” என்று அருவெறுத்துப் போனாள். ஆனால் அவளின் உணர்வுகளை அங்கு யார் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.
அவள் பாட்டுக்க என்று நடிக்க சென்றாள். சின்ன சின்ன வருமானத்தை வைத்து தன்னையும் பிள்ளையையும் கவனித்து வருகிறாள். யாருடைய வம்புக்கும் போகாமலவல் இருக்க, அவனாகவே வாலாண்டியரா என்ட்ரி குடுத்து இப்போ மண்டை உடைந்து நிற்பது என்னவோ வராளி மட்டும் தான்.
கொட்டிய உதிரத்தை துடைத்து போட்டு விட்டு மேலே ரெண்டு ப்லாஸ்திரியை ஒட்டிக் கொண்டவள் வேலைக்கு கிளம்பி விட்டாள்.
அவளின் வயிற்று பாட்டை பார்க்க வேண்டுமே... காய்ச்சல் வந்தாலும் இரண்டு மாத்திரையை போட்டுக்கொண்டு கிளம்பி விடுவாள். என்ன இன்னைக்கு மண்டை உடைந்து இருக்கிறது அவ்வளவு தான் வித்யாசம்.
பெருமூச்சு விட்டாள். ‘நல்ல வேளை என் மகனை அவர்களின் கண்ணில் படாமல் காப்பாத்தி விட்டேன்.. எனக்கு அது போதும் கடவுளே...’ எண்ணிக் கொண்டே பக்கத்து வீட்டு பாட்டியை கூட்டிக்கொண்டு மகனை துண்டில் சுற்றிக்கொண்டு பேருந்திலேறி வேலைக்கு சென்றாள்.
அங்கே பாரதி சாரோ அவளின் புடைத்த முகத்தை பார்த்து எரிச்சல் ஆனார். “ஏம்மா உனக்கே கொஞ்சம் கூட சென்ஸ் வேணாம்... இது ஒரு நகை கடை விளம்பரம்... இதுல எல்லோரும் ரொம்ப அழகா இருக்கணும். இந்த நேரம் பார்த்து முகத்தை வீங்க வச்சுக்கிட்டு வந்து இருக்க... முன்னாடியே சொல்லி இருந்தா உன் இடத்துக்கு வேற ஒரு ஆளை ரெடி செய்து இருப்பேன்ல. இப்படி கடைசி நேரத்துல வந்து உயிரை வாங்குற... இப்படியே வீங்குன மூஞ்சோட விளம்பரத்தை எப்படி எடுக்குறது. அறிவில்ல” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை திட்டி தீர்த்தார்.
“என்னவோ இன்னைக்கு தான் முதல் நாள் ஷூட்டிங் வர்ற மாதிரி வந்து இருக்க... நகை கடை விளம்பரத்துக்கு முகப்பொலிவு எவ்வளவு முக்கியம்னு தெரியாதா? இது தான் முதல் முறை ஷூட்டிங் வர்றியா? சும்மா கடுப்பை கிளப்பிக்கிட்டு இருக்குற” என்று இன்னும் அவர் சத்தம் போட கூனி குறுகிப் போனாள் வராளி.
“உன்னால இன்னைக்கு ஒரு நாள் ஷூட்டிங் கேன்சல். அத்தனை பேருக்கிட்டையும் அப்பாயின்மென்ட் வாங்கி வச்சது வேஸ்ட்.. உன்னை எல்லாம் சொல்லக் கூடாது. உனக்கு வேலை வாங்கி குடுக்குறேன் பத்தியா என்னை தான் சொல்லணும். எவ்வளவு பெரிய பாலிவுட் நடிகை கால்ஷீட் வாங்கி இருக்கேன் தெரியுமா? அவங்களோட அறை மணி நேர கால்ஷீட்டுக்கு கோடி கணக்குல சம்பளம் குடுக்கணும். இதுல ஒரு நாள் முழுக்க வேஸ்ட்டுன்னா கோடி கோடியா நட்டம். உனக்கு என்ன அதை பத்தி கவலை.. உனக்கு சம்பளம் வந்தா போதும். யாரு குடி முழுகிப் போனா உனக்கு என்ன அப்படி தானே?” என்று அவர் மேலும் மேலும் பேச உடைந்து சிதறினாள் வராளி.
“சார் அப்படி எல்லாம் எதுவும் இல்ல... நா.. நான்..” என்று அவளை பேசவே விடாமல் மேலும் மேலும் திட்டியவர்,
“இன்னொரு முறை என் கண் முன்னாடி வந்துடாதா.. பிறகு நான் மனுசனாவே இருக்க மாட்டேன். ஒழுங்கா வீட்டுல போய் பொங்கி தின்னு. அதுக்கு தான் லாயக்கு. பெருசா நடிக்க வந்துட வேண்டியது..” என்று மேலும் திட்டியவர், அவளுக்கு பதிலாக நடிக்க வேறு ஆளை தேடினார்.
“ட்ரெஸ் முதற்கொண்டு ரெடியா வந்துடுச்சு.. ஒரு மாசமா மெனக்கெட்டு இவ சைஸ்க்கு ரெடி பண்ணது. எல்லாம் போச்சு... இப்போ இந்த சைஸ்க்கு ஆளை தேடி பிடிக்கணும்” என்று புலம்பிக் கொண்டே தன் அசிட்டன்டிடம் கடித்து குதறாத குறையாக ஒரு ஆளை தேடி பிடிக்க சொன்னார் ஒரு மணி நேரத்தில்.
இனி இதற்கு மேல் இங்கு நிற்க முடியாது என்று கிளம்பினாள். “என் கண்ணு உடனே வந்துட்ட?”
“நெத்தியில அடி பட்டு இருக்கு பாட்டி. அது அப்படியே திரையில வரும் இல்லையா? அதனால வேணான்னு சொல்லிட்டாங்க” என்றவளுக்கு கண்கள் கலங்கியது. அவளால் வாயையே திறக்க முடியவில்லை. வாய் அசைக்கும் ஒவ்வொரு நேரமும் வலி விண் விண்ணென்று தெரித்தது.
அவள் காயத்தில் ப்லாஸ்த்திரியை மீறி உதிரம் கசிந்தது. “பாப்பா இரத்தம் வருது” என்று பதட்டப் பட்டார்.
அதை முந்தானையால் துடைத்துக் கொண்டே, “நா.. ன் பார்த்து... க்குறேன் பாட்டி... நீ...ங்க... வீட்டுக்கு கிளம்புங்க..” என்று வலியை மீறி அவரை சமாதனம் செய்து ஒரு ஆட்டோ பிடித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தவள் கடற்கரை ஓரம் இருந்த அட்ட லட்சுமி கோயிலுக்கு போகலாம் என்று எண்ணி பேருந்தில் ஏறி அமர்ந்தாள்.
😞





