எபிலாக்...
ஒரு வருடம் கழித்து... ஆதினி காரை ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவளின் அருகில் பெருவளத்தான் அமர்ந்து இருந்தான் மிடுக்கான தோற்றத்தோடு. முன்பு ஒரு முறை அவள் சொல்லி இருந்த தோற்றத்தில் கண்களில் கூலர்ஸ் வேறு ஆதினியின் விரைப்பான புடவை வண்ணத்துக்கு ஏற்றவாறு பெருவளத்தான் அயன் பண்ணி மடிப்பு கலையதா சட்டை வேட்டியில் முறுக்கிய மீசையோடு இருந்தான்.
அவனது கண் பார்வை மொத்தமும் அவனின் அருகில் அமர்ந்து வாகாக வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருந்தவளின் மீதே இருந்தது.
“இன்னைக்கு லோடு கரெக்ட் டைமுக்கு வரணும்... ஒழுங்கா கொண்டு வர சொல்லுங்க. நேத்திக்கு மணல் லோடு அந்த அப்பார்ட்மென்ட் கட்டுற இடத்துக்கு நேரத்துக்கு போய் சேரல... இப்படியே பண்ணினா அப்புறம் உங்க டெண்டரை கேன்சல் பண்ணிடுவேன்” மிரட்டினாள்.
“இல்லடி அந்த ட்ரைவருக்கு கொஞ்சம் காலுல அடி. அதனால தான்.”
“அதுக்காக நீங்களே வண்டியை ஓட்டிட்டு வருவீங்களா...? எத்தனை முறை சொல்லி இருக்கேன். நீங்க இறங்கி வேலை பார்க்காதீங்கன்னு. சொன்னா கேட்கவே மாட்டேன்றீங்க. இன்னொரு முறை சட்டையை கழட்டி போட்டுட்டு வேலையில இறங்குனீங்கன்னு என் காதுக்கு தெரிய வந்தது அப்புறம் அவ்வளவு தான்” என்று முறைத்தாள்.
“என்கிட்டே சம்பளம் வாங்கிட்டு உனக்கு தான்டி அவனுங்க எல்லாம் விசுவாசமா இருக்கானுங்க” என்று கடுகடுத்தான். அதில் அவனுக்கு பெருமை தான்.
ரெஜிஸ்டர் கல்யாணம் ஆன பொழுதும் முறைப்படி ஒரு ரிஷப்ஷன் வைத்து உறவு நட்பு வட்டங்களுக்கு தெரிவித்தார்கள். முதலில் பெருவளத்தான் ஆதினி மட்டும் தான் நின்றார்கள். பிறகு ஆதினி செல்வத்தையும் கனிகாவையும் நிற்க வைத்து அவர்களின் உறவையும் முறையாக தெரிவித்தாள்.
ஆதினி ஏது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அந்த மூன்று குடும்பங்களுக்கும் இருந்தது. செல்வத்துக்கு தன் நிறுவனத்திலே வேலை வாங்கிக் கொடுத்து விட்டாள்.
அவன் டிசைங்கிங் பிரிவில் இருந்தான். எப்பொழுதும் பார்த்து பேசிக் கொள்ளும்படி இருந்தது. எந்த இடமாக இருந்தாலும் செல்வத்துக்கு அவள் மதிப்புக் கொடுத்தே பேசினாள்.
“மாமா அந்த டிசைன் என்ன ஆச்சு..? உங்க ஜூனியர் வேலையை நீங்க பார்க்காதீங்க சொன்னா கேட்க மாட்டீங்களா?” என்று அவன் மீது ஒரு கண் வைத்துக் கொள்வாள்.
ஆதினி மேடத்தின் மாமா என்று அவனுக்கு தனி மரியாதையே கிடைத்தது. அதோடு பெருவளத்தானின் ஷோ ரூம் பக்கத்துலையே கொஞ்சம் இடம் ஒதுக்கி “கனிகா டிசைன்ஸ்” என்ற கடையை திறக்க சொன்னாள். இரண்டும் அருகருகே..
“இதெதுக்குடி” கனிகா சங்கடப்பட,
“எத்தனை நாளுக்கு இன்னொருத்தங்கிட்ட நிக்க முடியும். மாமாவுக்குன்னு தனியா ஒரு இடம் வேணும்டி. அதோட மாமா அங்க பகல்ல வேலைக்கு போகட்டும். நீ காலையிலிருந்து அந்தி பொழுது வரை பார்த்துக்க, இரவு வரை மாமா பார்த்துக்கட்டும்” என்று ஆதினி முடித்து விட,
“ஆனா கடைக்கு வாடகை குடுத்துடணும்” என்றவள் கடைக்கு உண்டான எல்லா செலவையும் அவளே ஏற்றுக் கொண்டாள்.
“நானும் உன் மாமா தான்” என்று பிரபு முறைத்துக் கொண்டே சொல்ல,
“எலக்ட்ரிகல் பொருள்களை எல்லாம் வச்சு கடையை ஆரம்பிங்க மாமா” என்று பேங்கில் அவனது பெயரில் லோன் போட்டுக் கொடுத்தவள், இவளும் பெருவளத்தானும் சேர்ந்து பாதி இன்வேஸ்மென்ட் போட்டார்கள். அது அப்படியே விதுலின் பெயரில் மாற்றிக் கொள்ள நெகிழ்ந்துப் போனான் விதுல். அதே போல ஆதினியின் பெற்றவர்கள் இருவரும். அக்காங்களுக்கே பார்த்து பார்த்து செய்தவள், தன் தங்க தம்பியை விட்டு விடுவாளா என்ன?
தங்களின் இடத்தில் இன்னும் கொஞ்சம் ஒதுக்கி அவனும் சற்று பெரிதாக கடையை கட்டிக் கொடுக்க, பெருவளத்தானுக்கு இன்னும் வருமானம் கூடியது. அதோடு சுற்றி இருந்த இன்னும் கொஞ்சம் வெற்று இடங்களை வாங்கிப் போட்டான்.
“இதெதுக்கு மாமா இப்போ?”
“இல்லடி ஸ்ட்ரைக் நேரம் பொருள் தட்டுப்பாடு ஆகுது. அதுக்கு பெட்டர் நாம கொஞ்சம் முன்னாடியே பொருளை சேர்த்து வச்கிக்கிட்டோம்னா செயின் சப்லை பண்ணலாம் இல்லையா...?” என்று கேட்டான்.
“ஓகே” என்று ஒத்துக் கொண்டாள். அவனிடம் தன் சேமிப்பை கொடுக்க,
“நீ வச்கிக்கோடி. என்கிட்டே இருக்கு” என்றான்.
“என்கிட்டே சும்மா தானே இருக்கு. வேற எதுலயாவது இவேஸ்மென்ட் பண்ணனும்னா பண்ணுங்க” என்று விட்டாள்.
பிரபு காலையில் வேலைக்கு போய் விட, பகல் பொழுது சஞ்சுவும் விதுலும் கடையை பார்த்துக் கொள்வது போல ஏற்பாடு ஆனது. இடையில் கனிகாவுக்கு உதவி தேவைபட்டால் இவர்களில் யாராவது போய் உதவி செய்துக் கொண்டார்கள்.
கனிகா அவனை விட்டு போனதில் இருந்து பெருவளத்தானிடம் வேலை செய்தவர்களில்சிலர் ஒரு மாதிரி நடந்துக் கொண்டார்கள். மட்டரகமாக அவனை பற்றி அவனுக்கு பின்னாடி பேசுவது முன்னாடி பேசுவது என்று இருக்க அவனோ அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவே இல்லை.
ஆதினிக்கும் அவனுக்கும் கல்யாணமான பிறகும் ஒருவன் அடங்காமல் இன்னும் பேசிக்கொண்டே இருந்தான். ஒரு நாள் பெருவளத்தானுக்கு உணவு எடுத்துக் கொண்டு வரும்பொழுது அவன் அப்படியே மட்ட ரகமாக பேச ஓங்கி அவனது கன்னத்தில் விட்டாள் ஒரு அறை.
“இன்னொருமுறை உன்னை இந்த கடையில உன்னை பார்த்தேன். தொலைச்சு கட்டிடுவேன். ஒழுங்கா ஓடிடு. அடுத்தவங்க வாழ்க்கையில எட்டி பார்க்கிறதை விட்டுட்டு உன் வாழ்க்கை எப்படி இருக்குன்னு பாருடா பரதேசி. வந்துட்டான் பெருசா ஏங்க வாழ்க்கையை விமர்சனம் பண்ண.. எங்க வாழ்க்கை என்ன பொது வாழ்க்கையா... இஸ்ட்டத்துக்கு ஆளாளுக்கு கருத்து சொல்ல. தொலைச்சு கட்டிடுவேன்” என்று அவள் மிரட்ட அதன் பிறகு யாரும் மூச்சுக்கூட விடவில்லை.
ஆதினி என்றால் அனைவருக்கும் பயம் தான். மரியாதை தான்.
“மாமா இதெல்லாம் என்னன்னு பார்க்க மாட்டீங்களா?” கடுப்புடன் கேட்டாள்.
“அவனோட பிள்ளைங்களை நினைச்சு அவனை விட்டேன். ஆனா மேடம் தான் க்ளோஸ் பண்ணிட்டீங்களே” என்று சிரித்தான்.
“அச்சோ அப்போ பிள்ளைங்க..” என்று இவள் கவலை கொள்ள, “வேற யார்க்கிட்டயாவது ரெக்கமென்ட் பண்ணிக்கிறேன்” என்றான் காதலுடன்.
“மாமான்னா மாமா தன்” என்று கொஞ்சியவள், அவனுக்கு ஆசையாக பரிமாற, அவளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவளுக்கு ஊட்டியபடியே அவனும் சாப்பிட்டான். அவர்களின் காதலுக்கு இன்னும் வலு சேர்க்க அடுத்த நாற்பது நாளிலே அவளுக்கு தலை சுத்தல், வாந்தி, மயக்கம் என எல்லாம் வந்தது.
பெருவளத்தானை கையில் பிடிக்க முடியவில்லை. ஆதினியை கொண்டாடி கொஞ்சி தீர்த்தான். சரியாக திருமணம் ஆகி எட்டு மாதத்தின் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது இருவருக்கும். அச்சு அசலாக பெருவளத்தானை அப்படியே உரித்துக் கொண்டு பிறந்தது.
வளைகாப்பை விமர்சையாக விசாகன் ஏற்பாடு செய்ய கனிகாவின் முகம் வாடிப் போனது. அன்றைக்கு அவளின் வளைகாப்பின் பொழுது நடந்துக் கொண்டதை அவள் நினைக்க, செல்வம் அவனை தேற்றினான்.
“பெருவளத்தானும் ஆதினியும் ஒண்ணா சேரனும்னு அப்பவே முடிவு பண்ணி தானே அப்படி நடந்துக்கிட்ட. நீ சொல்லலன்னாலும் எனக்கும் தெரியும்” என்றான்.
கனிகா அவனை வியந்துப் போய் பார்த்தாள். “எப்படிங்க?”
“எந்த ஒரு பொண்ணும் தன் கணவனை எங்கும் விட்டு தர மாட்டா.. அது அவள் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி. ஆனா நீ அன்னைக்கு பெருவளத்தானை சீர் செய்யக் கூடாது என்று சொன்னவுடன் எல்லோரும் உன் மீது கோவமாக இருந்தார்கள். ஆனா அதுக்கு பிறகு தான் யோசித்து பார்த்தேன் உன் நடவடிக்கையை. என்னை சீர் செய்ய சொன்னாலும் உன் கண்கள் கலங்கி இருந்தது. அதோட எல்லோர் கிட்டயும் உன்னை தவறா காட்டிக்கிட்டு அன்னைக்கு நின்னது எனக்கு புரிஞ்சது” என்றவளை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான்.
“உன் தியாகம் அவங்களுக்கும் தெரியும். அதனால தான் கடைசி வரை ரெண்டு பேரும் காதலித்தும் உனக்காக தள்ளி இருந்தாங்க. நீங்க மூணு பேருமே ஒரு விதத்துல உயர்ந்து தான் இருக்கீங்க” என்றவனை காதலுடன் பார்த்தாள் கனிகா.
“நான் லவ் யூ செல்வா” என்றாள்.
“நானும் தான்டி லவ் யூ” என்று சொல்லி அவளின் இதழ்களில் முத்தம் கொடுத்தான் மென்மையாக.
ஊர் உலகம் கேலி செய்து சிரித்ததுக்கு எல்லாம் பதிலடியாக தன் மருமகளுக்கு வளைகாப்பு செய்து அசத்தினார் விசாகன்.
பிறந்து மூன்று இரண்டு மாதம் மட்டும் தான் ஆதினியிடம் குழந்தை இருந்தது.
“குழந்தையை நாங்க பார்த்துக்குறோம். நீ உன் கேரியரை பாருடா” என்று விசாகனும் வாணியும் சொல்லி விட வாங்கிப்போட்ட ஒரு இடத்தில் வீட்டை கட்டி அங்கு குடியேறி விட்டார்கள். இப்பொழுது எல்லோரும் ஒரே ஊரில் தான். ட்ராவல் மிச்சம் என்று பெருவளத்தான் ஆதினியிடம் கண்ணடித்தான்.
“மூணு மாசம் வரை எனக்கு லீவ் விட்டு இருக்கீங்க சார். மர்ந்துடாதீங்க” என்றாள் நக்கலாக.
“போடி அவனவன் ஒரு மாதத்துலையே எல்லாம் பண்றானுங்க. அதெல்லாம் எனக்கு தெரியாது இன்னைக்கு மொட்டை மாடிக்கு வர்ற” என்றவன் அவளின் இதழ்களில் வன்மையாக முத்தம் கொடுத்து விட்டு கடையில் இறங்கிக்கொண்டான்.
ஆதினி அவளது வேலைக்கு போனாள். இன்று வெள்ளிக்கிழமை அதனால் எல்லோரும் ஆதினியின் வீட்டில் ஒன்று கூடினார்கள் எப்பொழுதும் போல...
வேதா திருமணம் ஆகி அமெரிக்கவில் செட்டில் ஆகிவிட்டாள். அதனால் அவளிடம் கான்காளில் பேசிக்கொள்வார்கள் அக்கா தங்கை மூவரும். விதுலுக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து வரன் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்.
“இன்னைக்கு எல்லா மாப்பிள்ளையும் வர்ற நாளு. இப்போ போய் அசந்து தூங்கிட்டு இருக்கீங்க. போங்க போய் மார்கெட் போயிட்டு வரும் பொழுது பூவு ஏழு முலம் வாங்கிட்டு வாங்க. அப்படியே மீன் காரனை வீட்டுக்கு வர சொல்லுங்க. நைட்டே மீன் குழம்பு வச்சுட்டா நாளைக்கு சாப்பிட நல்லா இருக்கும்” என்று தன் கணவனை வெளியே அனுப்பினார் பரபரப்புடன்.





