Notifications
Clear all

அத்தியாயம் 43

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்ன நடக்குது இங்க?” எரிச்சலுடன் அடக்கப்பட்ட கோவத்துடனும் அனைவரையும் பார்த்துக் கேட்டாள். அவளை தவிர மூன்று வீட்டு ஆட்களும் புன்னகையில் மிதந்து இருந்தார்கள்.

“முதல்ல மாலை மாற்றுடி. அப்புறம் பேசிக்கலாம்” என்ற தாயை இன்னும் முறைத்துப் பார்த்தாள்.  

“இங்க என்னம்மா பிரச்சனை.. எதுவா இருந்தாலும் வெளிய போய் தீர்த்துக்கோங்க. இன்னும் நிறைய பேர் லைன்ல நிக்கிறது தெரியலையா” என்று ரெஜிஸ்டர் கேட்க, அவருக்கு ஒரு முறைப்பைக் கொடுத்த பெருவளத்தானை பார்த்து சற்று அடங்கினார் அவர்.

ஆதினியின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் மாலை சூட்டினான் பெருவளத்தான். பல குழப்பத்துடன் வேறு வழியின்றி பல்லைக் கடித்துக் கொண்டே அவனது கழுத்தில் மாலையை சூட்டினாள் ஆதினி.

“இதை என் மருமக கழுத்துல கட்டுடா தம்பி” என்று முழு மகிழ்ச்சியுடன் ஆதினி அன்று கொடுத்த அந்த சின்ன நகை மூட்டையை பிரித்து அதில் இருந்த தாலியை எடுத்து கொடுத்தார் விசாகன்.

அதை ஆசையுடன் பார்த்தவன் அதில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்து விட்டு அதன் பிறகே அவளது கழுத்தில் அந்த தாலியை அணிவித்தான். அதன் பிறகு தான் எல்லோரும் சேர்ந்து பெருவளத்தானிடம் உண்மையை சொன்னது தெரிந்தது.

எல்லோரையும் முறைத்துப் பார்த்தாள்.

“அங்க என்ன பார்வை வேண்டி கிடக்கு என்னை பாருடி” என்று பெருவளத்தான் முறைக்க அவனை நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள். இருவரும் முறைத்துக் கொள்வதை பார்த்து ஆபிசரே குழம்பி போனார்.

‘இப்படி முறைச்சுக்கிட்டு இருக்கிறதுக்கு எடுக்கு கல்யாணம் பண்ணனும்.. இதுல இந்த வளர்ந்தவன் என்னைய வேறு முறைக்கிறான்’ என்று முணகிக்கொண்டார். அவருக்கு என்ன தெரியும் இவர்களின் காதலை பற்றி...   

அவளின் முகத்தை பற்றி யார் இருக்கிறார்கள் யார் பார்க்கிறார்கள் என்றெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல் அழுத்தமாக மிக அழுத்தமாக அவளின் இதழ்களில் வன் முத்தத்தைக் கொடுத்தான். அதில் சுற்றி இருந்த அனைவரும் வாயை பிளக்க,

“இது நம்ம அடக்க ஒடுக்கமான பெருவளத்தான் தானா...?” என்று மாய்ந்துப் போனார்கள்.

ஆதினி கூட அவனிடம் இருந்து இப்படி ஒரு தாக்குதல் வரும் என்று எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு கண்களே கலங்கி விட்டது அவனது இந்த அதிரடியில். அதுவும் இத்தனை பேர் மத்தியிலும். மூச்சு அடைக்காத ஒன்று தான் குறை.

அந்த நொடியில் இருவரும் செத்து போய் மீண்டும் பிறந்ததாக தோன்றியது.

“என் பசங்களுக்கு எங்க கண்ணே பட்டு போயிடும்” என்று இருவரும் முத்தம் கொள்ளும் பொழுது இவர் சுற்றிப் போட என்னவோ எல்லோரின் கண்களும் கலங்கிப் போய் இருந்தது ஆனந்த மிகுதியில்.

“கட்டலா(கஷ்ட்டமா) இருக்கா” என்று செல்வம் கனிகாவிடம் குனிந்து கேட்க,

“இப்போ தான் நிறைவா இருக்குங்க...” என்றவளுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது. அவளை தன்னோடு அனைத்துக் கொண்டவன்,

“அப்படியே வா இதுல ஒரு கையெழுத்து போடு” என்று ஒரு நோட்டை நீட்ட,

“இதெதுக்குங்க?”

“உனக்கும் எனக்கும் இன்னைக்கு ரெஜிஸ்டர் கல்யாணம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்துட்டேன். அதான் வா” என்று அவளை தன் கை வளைவில் வைத்துக் கொண்டே கையெழுத்துப் போட சொல்ல,

“டிவேர்ஸ்” என்று அவள் முழித்தாள்.

“உன் தலை... நீயும் பெருவளத்தானும் செய்துக்கிட்டதுக்கு பெயர் கல்யாணமா...?” என்று முறைக்க வாயை மூடிக் கொண்டாள் கனிகா...

சஞ்சு பிரபு செல்வம் கனிகா நால்வரும் ஆதினி பெருவளத்தானுக்கு சாட்சி கையெழுத்துப் போட, அதே போல கனிகா செல்வத்துக்கு ஆதினி பெருவளத்தான் சஞ்சு பிரபு நால்வரும் கையெழுத்துப் போட்டார்கள்.

குடும்பமே மொத்த மகிழ்ச்சியில் திளைத்தது. அப்படியே மத்திய உணவை வெளியே முடித்துக் கொண்டு ஆதினியின் வீட்டுக்கு அனைவரும் வந்தார்கள்.

ஆதினியோ யாரையும் சட்டை செய்யாமல் கழுத்தில் இருந்த மாலையை அவிழ்த்து வைத்து விட்டு,

“சைட்டுக்கு போகணும்” என்று சொல்லிக்கொண்டு வெளியே போய் விட்டாள்.

அவளின் இந்த வேலை எல்லோருக்கும் ஒரு மாதிரி இருக்க,

“அவளால நம்ம யாரையும் பேஸ் பண்ண முடியல... அது தான் மேடம் இப்படி ஓடுறாங்க.. நீங்க எல்லோரும் இருங்க. நான் அவளை கூட்டிட்டு வரேன்” என்ற பெருவளத்தான் அவளின் பின்னாடி சென்றான்.

எங்குப் போவது என்று தெரியவில்லை. கல்யாணம் என்பதால் ஒரு வாரம் விடுமுறை சொல்லி இருந்தாள். அதனால் இப்பொழுது அலுவலகத்துக்கும் போக முடியாது... அதனால் மெதுவாகவே காரை ஓட்டிக் கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் மெசேஜ் வர எடுத்துப் பார்த்தாள்.

“காரை நிறுத்துடி” என்று வந்து இருக்க சைட் மிரரில் வெளியே பார்த்தாள். அவளின் பின்னாடி டுவீலரில் பெருவளத்தான் வந்துக் கொண்டு இருந்தான்.

“நீ சொன்னா நான் கேட்கணுமா? போடா” என்று வீம்பு பண்ணியவள் வேகமாய் காரை ஓட்ட ஆரம்பித்தாள். அந்த நேரம் அவனிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்.

“இப்போ நீ காரை நிருத்தலன்னா நேரா ஒரு லாரி வருது. அதுல கொண்டு போய் வண்டியை விட்டுடுவேன். அப்புறம் நீ அம்மான்னாலும் முடியாது.. அப்பான்னாலும் முடியாது பார்த்துக்க” என்று இருக்க அதை கேட்டவளுக்கு தேகம் எங்கும் மிளகாயை அரைத்து பூசியது போல ஆனது. சட்டென்று காரை நிறுத்தி விட்டு கோவத்துடன் இறங்கி கைகளை கட்டிக் கொண்டு காரில் கதவில் சாய்ந்தும் சாயாமலும் நின்றிருந்தாள்.

“ம்ம்ம் நீ வந்து வண்டியை எடுத்துக்கோடா. இன்னொரு சாவி என்னோட கபோர்டல் இருக்கு” என்று பேசிக் கொண்டே வந்த பெருவளத்தான் அவளை தள்ளி நிறுத்தி விட்டு ட்ரைவர் சீட்டில் போய் அமர்ந்தான்.

அவள் வரமால் அப்படியே சிலை போல நிற்க,

“இப்போ வரியா இல்ல தூக்கி உள்ள போடட்டுமா?” கடித்து குதறாத குறையாக கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“இங்க கோவமா இருக்க வேண்டியது நான். நீங்க இல்லை” என்றாள் வெடுக்கென்று.

“ஏன் சொல்ல மாட்ட... எனக்கு தெரியாம என் கையில தாலி வாங்கி கட்டிக்கிட்டு நீ பேசுற பாரு. அது தான்டி இன்னும் கோவம் வருது” என்று எகிறினான். அதில் சற்றே அடங்கியவள்,

“நான் வீட்டுக்கு போறேன்”

“வா நானே கொண்டு போய் இறக்கி விடுறேன்”

“ஒன்னும் வேணாம் நான் நடந்தே போறேன்” என்றவளின் கையை பிடித்து இழுத்து காரின் உள்ளே தள்ளியவன், “அவ்வளவு தான்டி உனக்கு மரியாதை” கர்ஜித்தவன் காரை செண்டர் லாக் போட்டுவிட்டு அதி வேகமாக காரை கிளப்பினான். எங்கு போகிறான் என்பதை பார்த்தவளுக்கு அடிவயிற்றில் பயம் பிடித்துக் கொண்டது.    

அவனது வீட்டுக்கு தான் காரை செலுத்தினான் பெருவளத்தான். “எல்லாரும் அங்க இருக்காங்க” என்று அவள் திணறிக் கொண்டே சொல்ல,

“நீ தான் யாரையும் பார்க்காம வெளியே வந்துட்டியே அப்புறம் என்ன அக்கறை” என்று சொல்ல வாயை மூடிக் கொண்டாள். இருந்தாலும் அவள் அடங்கிப் போகும் ஆள் இல்லையே...!

“இங்க பாருங்க இந்த ரவுடி மாதிரி பிகேவ் பண்ற வேலையெல்லாம் இங்க வேணாம்” என்று முறைத்துக் கொண்டு சொன்னவளை திரும்பி பார்த்தான். அவனது பார்வையில் சர்வமும் ஒடுங்க அமைதியகி விட்டாள்.

பெருவளத்தானின் கையால் மீண்டும் தாலி... அது ஒன்றே இப்போதைக்கு போதுமானதாக இருக்க அப்படியே தூங்க ஆரம்பித்து விட்டாள். பெருவளத்தானுக்கு தாலி தோஷம் இருந்ததால் வாழை மரத்தில் தாலி காட்டிய பிறகு கனிகாவின் கழுத்தில் தாலி கட்டலாம் என்று முகூர்த்த நேரத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஆனால் கனிகா அதற்கு கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ளவில்லை. “எனக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா என்ன பண்றது...” என்று கல்யாண மேடையில் சிறு பிள்ளையாய் அவள் பயந்துக் கொண்டு அடம் பிடிக்க வேறு வழியின்றி சஞ்சுவை வாழை மரத்துக்கு பதிலாக அமரச் சொல்லி தாலி கட்டிய பிறகு கலட்டிக்கொள்ளலாம் என்று குமுதா சொல்ல, சஞ்சுவோ என்னால எல்லாம் முடியாது என்று பின் வாங்கினாள்.

வேறு வழியின்றி ஆதினியிடம் கேட்க காதலன் தான் கிடைக்கவில்லை அட்லீஸ்ட் அவன் கையால் தாலியாவது கிடைக்கட்டுமே என்று வாங்கிக்கொண்டாள்.

இவர்கள் வழக்கத்தில் முகத்தை மறைத்து தான் தாலி கட்ட வேண்டும். அதாவது ஒரு பட்டு துண்டை இருவருக்கும் நடுவே வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் என்று பிடித்துக் கொண்டார்கள் மற்றவர்கள்.

எனவே வாழைக் கன்றை அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்த ஆதினியின் கழுத்தில் தாலியை கட்டினான் பெருவளத்தான்.

அவனுக்கு இங்கு நடந்த எதுவும் தெரியாது. அவனை பொறுத்தவரை மரத்துக்கு கட்டினான் என்று தான் இன்று வரையிலும் எண்ணிக் கொண்டு இருந்தான். ஆனால் அவனுக்கு தெரியாமல் திரை மறைவில் இத்தனை வேலைகளும் நடந்து இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : February 10, 2026 10:15 am
(@sowmya)
Active Member

En manasula Ulla baramey kuranjuruchey 👏

Loading spinner

ReplyQuote
Posted : February 12, 2026 10:40 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top