Notifications
Clear all

அத்தியாயம் 42.2

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

“உன்கூட ஒரே ஒரு நாள் மனசார வாழணும் குட்டி. அது போதும் எனக்கு. என் பிறப்புகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் ஒரு முடிவுக்கு வந்திடும். ஆனா உன் நிழலை கூட என்னால தொட முடியாம இருக்கேன். என் பிறப்பு என்ன பிறப்போ போடி” என்றவனுக்கு தன்னவளின் பெயர் அருகில் வேறு ஒருவனின் பெயர் இருக்க கண்டு நெஞ்சு அப்படியே கருகிப் போனது.

கிட்டத்தட்ட ஒன்னு ஒண்ணரை வருடங்களாக ஆதினியின் வந்த காதல் ஆழமாய் அவனுள் வேரூன்றி இருக்க அவ்வளவு எளிதாக அதை கலைத்து போட முடியவில்லை.

இதென்ன பசிலா கலைத்து விட்டு மீண்டும் சரியாக எடுத்து வைக்க. வாழ்க்கை ஒரு முறை கைநழுவி போனால் போனது தான்.

அன்றைக்கு ஆதினியை முத்தமிட்டது கண் முன் வந்து அவனது வேதனையை இன்னும் கூட்டியது. அன்றைக்கு தன் கையில் குலைந்த அவளது தேகம் அவனை இன்னும் வாழ்க்கையை வெறுக்க வைத்தது.

அவளுடன் வாழ பேராசை கொழுந்து விட்டு எரிய வைத்தது. வாழ்வுக்கும் தாழ்வுக்குமான இடைவெளியை அவளது காதல் காட்டிக் கொண்டு இருக்க பைத்தியம் பிடிக்காத ஒன்று தான் குறை.

வாழனும் அவளோட வாழனும் என்று பேராசை எழுந்து அவனை தகிக்க செய்ய அதை தாங்க முடியாமல் தலையை பிடித்துக் கொண்டான்.

“எனக்கும் ஒரு வாழ்வு வேணும்டி. அது உன்கூட மட்டும் தான். உன் கூட மட்டும் தான் நான் வாழணும்... அதுக்கு நீ வேணும் குட்டி. என்கிட்ட வந்திடுடி..” என்று அவன் புலம்பி தவிக்க,

“ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு

ஒரு அடி கூட தாங்காதே

ஓர் இரவில் ஒரு இடி

வீட்டில் இறங்கியதே...!

ஒரே நொடியில்

வீடும் கருகியதே அந்நாளில்

ஒரே ஒரு ஓடை

மேல ஓர் ஓடம் மிதந்திருக்க

ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே...!

ஒரே ஒரு கூட்டினுள்ளே

ஒரு கூட்டம் ஒளிந்திருக்க

ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே

மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ

என் ஆசை ஒன்றே ஒன்று தான்.

ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே

போதும்..

சத்தமாய் நான் அழுதிட தான் இங்கு யுத்தமாக மாறுதோ...

மொத்தமாய் நான் முடிந்திட தான்

இன்று என்னை மீறி என்னன்னவோ ஆகுதோ

பாவமாய் நான் புதைந்திட தான்

ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ..

கோவமாய் நான் கிடந்திட

தான் பல புதிர்களும் என்னை தேடுதோ..

ஒரு பனி மூட்டம் புயல் நடுவில் திணறுதே

வாடியதெல்லாம் இனி மீண்டும் என்று மலருமோ

தேடியதெல்லாம் இனி எப்போது கிடைக்குமோ

என்னாசை ஒன்றே ஒன்று தான்

ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே...!

மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ

வேண்டியதெல்லாம் இனி எப்பொழுது நடக்குமோ

என் ஆசை ஒன்றே

என் கனவு ஒன்றே

என் கனவும் ஒன்றே ஒன்று தான்.

ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே போதும்.” என்று பாடல் சத்தம் கேட்டது. கீழே வேலை செய்பவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பார்கள் போலும்.  தன் ஆசையெல்லாம் ஆதினியுடன் ஒரே ஒரு நாள் வாழ்ந்தால் போதும் என்று வெறி அந்த நொடியில் கிளர்ந்து எழுந்தது.

ஆனால் சூழ்நிலை அவனுக்கு எதிராக இருக்கிறதே எங்கிருந்து அவளுடன் வாழ்வது. நெஞ்சை கசக்கிய வலியை குறைக்க முடியாமல் மூச்சு முட்டிக் கொண்டு வந்தது.

சுழன்று அடிக்கும் இந்த விதியில் இருந்து நழுவ முடியாமல் தவித்துப் போனான். தோணி துவங்கி இப்பொழுது தான் அவளுக்கு ஒரு நல்லது நடக்குது அதை போய் ஏன் கெடுக்க வேண்டும் என்று திருமணத்துக்கு போகாமல் கடையிலே இருக்க முடிவெடுத்துக் கொண்டான். பக்குவப்பட்ட மனம் இப்படி தானே முடிவெடுக்கும்.

விதுலையும் அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான்.

“இல்ல மாமா நான் இருக்கேன்”

“அங்க கல்யாண வேலையை வச்சுக்கிட்டு இங்க என்ன எனக்கு காத்து வீசிட்டு இருக்க. ஒழுங்கா கிளம்பி வீட்டுக்கு போய் வேலையை பாரு. என்னை நான் பார்த்துக்குவேன்” என்று அவனை அனுப்பி வைத்து விட்டான்.

வேதனையோ வேதனை... தாய் மடி வேண்டும் அழ என்று அவனது உள்ளம் துடித்துப் போனது. ஆதினியின் கல்யாண பத்திரிக்கை அவனை ரொம்பவும் படுத்த வேகமாய் அதை தூக்கி எறிந்தான்.

மீண்டும் காற்றில் அவனிடமே வந்து சேர கோவம் கோவம்.. அவ்வளவு கோவம் அவனுக்கு. தன் கோவத்தையும் ஆத்திரத்தையும் யாரிடமும் காட்ட வழியில்லாமல் தன் கைக்கு அகப்பட்ட பத்திரிக்கையை சுக்கு நூறாய் கிழித்துப் போட்டான்.

அப்பொழுதும் அவனது மனம் ஆறவில்லை. இப்பொழுதே இந்த நிமிடமே ஆதினி தன் கைகளுக்குள் வேண்டும் என்று தோன்றியது. அவளை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று தன் உயிருக்குள் பொத்தி வைத்துக் கொள்ள அவனது நெஞ்சம் துடியாய் துடித்துப் போனது.

ஆனால் காலம் அவனது கையில் இல்லையே... விடிந்தால் அவளுக்கு கல்யாணம். மனைவி தன்னை விட்டு போன போது கூட இந்த அளவு அவன் வேதனையோ கண்ணீரோ விடவில்லை.

“நீ எங்க இருந்தாலும் நல்லா இரு” என்று சொல்லி வாழ்த்திவிட்டு வந்தவனால் ஆதினியை அப்படி விட முடியவில்லை. நேராக மாப்பிள்ளையிடம் சென்று என் ஆதினியை என்கிட்டே குடுத்திடு என்று கேட்டு விடலாமா என்று கூட யோசித்தான்.

ஆனால் ஆதினிக்கு துரோகம் செய்தது போல ஆகிவிடுமே என்று எண்ணி அதை கை விட்டவன் இரவு முழுவதும் ஒரு பொட்டு கூட தூங்க முடியாமல் வெறும் தரையில் புரண்டுக்கொண்டு இருந்தான்.

கல்யாண நாள் அழகாய் விடிந்தது. ஆதினி எப்பொழுதும் போல அலுவலகம் கிளம்புவது போல கிளம்பி வந்தாள். கல்யாண பெண்ணுக்கு உரிய நாணமோ எதுவுமே இல்லை.

பெற்றவர்களும் தம்பியும் கிளம்பி இருந்தார்கள். அவர்களுக்கு உள் மனதில் ஒரு ஆசை இருந்தது. ஆனால் ஆதினியின் பிடிவாதத்தால் வாயை இறுக மூடிக் கொண்டார்கள்.

அவளே காரை ஓட்டிக்கொண்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தாள். அவளுக்கு முன்னதாக மாப்பிள்ளை வீட்டினர் வந்து இருந்தார்கள்.

பரஸ்பரமான அலுவலக புன்னகையோடு ஆதினி நிறுத்திக் கொண்டாள். இன்னும் வேறு யாரும் வரவில்லை. அவள் அதை பற்றி கவலை கொள்ளவும் இல்லை. ஆனால் குமுதா தான் தன் இரு மகள்களுக்கும் போனை போட்டுக்கொண்டே இருந்தார்.

“வந்திடுவோம்ம்ம்மா” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்களே தவிர வருகிற பாட்டை காணமே என்று புலம்பினார் தன் கணவனிடம்.

சரியாக ஆதினி மற்றும் மாப்பிள்ளையின் பெயரை சொல்லி உள்ளே அழைக்க நிதான நடையோடு ஆதினி உள்ளே நுழைந்தாள்.

அவளின் மனம் கொஞ்சம் படபடப்பாக இருந்தது. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் ரெஜிஸ்டரில் குனிந்து கையெழுத்துப் போட்டுவிட்டு அருகில் இருந்தவனிடம் பேனாவை கொடுத்தாள் கையெழுத்துப் போட, அவனும் வாங்கி கையெழுத்துப் போட்டான் மன நிறைவுடன்.

எல்லோரும் ஜோராக கை தட்ட ‘அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சுது...’ என்று கண்களை மூடி ஒரு நிமிடம் தன் காதலனின் முகத்தை ஓட்டிப் பார்த்தாள். கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வந்தது. அதை அடக்கி விட்டு ரேஜிஸ்டரை ஒரு முறை பார்த்தாள்.

பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது. தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்தாள். அங்கே ஆதினியின் பெயருக்கு கீழ பெருவளத்தான் என்ற பெயர் இருந்தது. திகைத்துப் போய் தான் பேனா கொடுத்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

பெருவளத்தான் தான் நின்றிருந்தான். கலங்கி சிவந்துப் போன விழிகளோடு, தலை கலைந்து, சட்டை கசங்கி ஒரு வாரம் மழிக்காத தாடி அடர்ந்த முகத்தோடு கண்கள் நிறைய காதலோடு ஆசையோடு நின்றிருந்தான். அவனை பார்த்த உடனே இவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

‘இதெப்படி சாத்தியம்?’ என்று சுற்றி முற்றிப் பார்க்க அவளின் இரு அக்காக்களும் அவர்களின் கணவன்மார்களும் மூன்று வீட்டு பெரியவர்களும் சுற்றி நின்று இருந்தார்கள். மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டு ஆட்களும் எங்கு சென்றார்கள் என்று கூட தெரியவில்லை.

 

Loading spinner

This topic was modified 2 days ago by Admin

   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top