Notifications
Clear all

அத்தியாயம் 41

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 981
Topic starter  

“ம்மா அப்படி எல்லாம் எதுவும் ஆகாது. முதல்ல அங்க போய் பார்ப்போம். அதுக்கு பிறகு என்ன ஏதுன்னு முடிவு பண்ணிக்கலாம்” என்றவள் கார் சாவியை எடுத்த பெருவளத்தனிடம் இருந்து பிடுங்கிக்கொண்டாள்.

“இல்ல நீங்க ஓட்ட வேண்டாம்.. உங்க கைகள் எல்லாம் ஆடுது” என்று அவள் வாங்கிக்கொள்ள பெருவளத்தானுக்கு எதுவும் புரியவில்லை. உணர்வுகள் எல்லாம் மறுத்துப் போன நிலையில் இருந்தான் அவன்.

அவனது உள்ளக் கொதிப்பை கண்டு வேதனையானது இவளுக்கு.

“ஏன் க்கா இப்படி பண்ணின... உன் புருசனை பத்தி யோசிக்கவே மாட்டியா எப்பொழுதும். பாவம் க்கா அந்த மனுசன்” என்று தன்னுள் சொல்லிக் கொண்டவள் வேகமாக காரை கிளப்பினாள்.

விதுல் வீட்டில் இல்லாததால் இவர்கள் நால்வர் மட்டும் சஞ்சுவை கல்யாணம் செய்துக் கொடுத்த வீட்டுக்கு போனார்கள்.

உள்ளே நுழையும் பொழுதே ஆதினிக்கு என்னவோ போல இருந்தது. வேண்டாதது எதுவும் நிகழ்ந்து விடுமோ என்று அச்சம் கொண்டவள் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மூவருடன் சேர்ந்து உள்ளே போனாள்.

அங்கே கூடத்தில் அவர்கள் ஒட்டு மொத்த ஆட்களும் கூடி இருந்தார்கள். அதோடு கனிகாவும் தன் கை பிள்ளையோடு நின்றிருந்தாள். அவளின் அருகே அவளதும் மற்றும் பிள்ளையின் துணிகள் அடங்கிய பைகள் இருந்ததை பார்த்து பெருவளத்தானுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. தலையில் இடி உணர்ந்த உணர்வு, “ஏன் இப்படி பண்ணின? என் கிட்ட என்ன குறை?” என்று அவளை உலுக்கி எடுத்து, காட்டு கத்து கத்தி கேட்க வேகம் எழுந்தது.

ஆனால் நிதானமாக அவள் பக்கத்து நியாயத்தை கேட்க எண்ணினான். ஆனால் அவனது மனம் விரக்தியில் விண்டுப் போனது.

கண்களில் அடிபட்ட உணர்வுடன் தன் மனைவியை பார்த்தான். அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. இவனை என்று இல்லை யாரையும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. பெட்டிகளை எடுத்துக் கொண்டு இவர்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறாள் என்றால் அதை கூட புரிந்துக் கொள்ளாத அளவுக்கு அங்கு யாரும் அறியாமையில் இல்லையே.

மிகத்தெளிவாக புரிந்தது அனைவருக்கும். தங்கள் வீட்டின் மானத்தை இப்படி வாங்கி விட்டாளே என்று பெற்றவர்கள் குமுறினார்கள்.

“இதுக்கு என்ன சொல்றீங்க சம்மந்தி?” என்று செல்வத்தின் அப்பாவே ஆரம்பிக்க,

“எண்ணத்தை சொல்ல சம்மந்தி” என்று அவர் தலையில் அடித்துக் கொண்டு அழ, குமுதா வாயை பொத்திக் கொண்டு கதற, ஆதினிக்கு கட்டுக் கடங்காத கோவம் தான் வந்தது.

பின்ன பத்தாவது படிக்கிற பிள்ளை மாதிரி வீட்டை விட்டு ஓடி வந்து இருக்காளே... கண்ணிறைந்த கணவன், நன்றாக பார்த்துக் கொள்ள மாமனார், மாமியார் இருக்கையில் யாராவது இப்படி கொழுப்பெடுத்து இன்னொருவனை தேடி வந்திருக்கிரவளை என்ன செய்யலாம் என்று கடுப்புடன் பார்த்தாள்.

“ஏன்டி கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா..? வீட்டை விட்டு கிளம்புனவ நேரா புருசன் வீட்டுக்கு போகாம இங்க வந்து ஏன்டி நிக்கிற...?” என்று ஆதினி ஆத்திரத்துடன் கேட்க,

கனிகா எந்த பதிலும் சொல்லவில்லை. அப்படியே சிலை போல நிற்க இன்னும் ஆத்திரம் வந்தது.

“ஏய் உன்கிட்ட தான் கேட்கிறேன். கொஞ்சமாச்சும் மனசாட்சியுடன் நடந்துக்குறியாடி. பாருடி அந்த மனுசனை... எப்படி கூனி குறுகி போய் நிக்கிறாருன்னு. கல்யாணம் ஆகிறவரை ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட கெளரவம் எதுவும் இல்லை. ஒரு முறை கல்யாணம் ஆகிட்டா அவனும் இந்த சமூகத்துல மதிக்க கூடிய ஒரு ஆள். அவனது கெளரவம் எல்லாம் அவனோட பொண்ட்டாடி நடத்தையை சார்ந்தே இருக்கும். இப்படி அந்த ஆளோட ஒட்டு மொத்த கௌரவத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டு வந்து நிக்கிறியே உன்னை எல்லாம் என்ன செய்யலாம்”

“நீயெல்லாம் மனுசியே இல்லடி. வளைகாப்பில் தான் அவரோட குடும்பத்தை விட்டுக் குடுத்துட்ட... சரி போகுதுன்னு பார்த்தா, இப்போ இப்படி செய்து இருக்க. ஏன் க்கா இப்படி பண்ற...? அவங்க குடும்பம் பாவம் இல்லையா..?” என்று கடைசி வரிகளை கெஞ்சலுடன் கேட்டவளை கண்கள் சிவக்க பார்த்த கனிகா,

“எனக்கு என் குழந்தை வேண்டும். அதுக்கு இந்த முடிவு எடுத்தா தான் சரியா இருக்கும்னு தோணுனது. அது தான் வந்துட்டேன். நான் எப்பவும் சுயநலவாதி தான். இப்பொழுதும் அதே மாதிரி சுயநலமா தான் இருக்கிறேன்.” என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் ஆதினி.

“ஏய்... ஏம்மா” என்று எல்லோரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டு ஆதினியை அடக்கப் பார்க்க,

“இன்னும் நிறைய அடி அடிப்பேன்டி. அந்த ஆளு” என்று செல்வத்தை காட்டி,

“இன்னும் அவரோட மனைவியை மறக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காருடி. நீ போனா இன்னும் நீங்க ரெண்டு பேரும் வேதனை படுற மாதிரி ஆகிடும்டி. வாழ்க்கை அவ்வளவு சுலபமா வாய்க்காது கனிகா. உனக்கு ஏற்கனவே நல்ல வாழ்க்கை இருக்கு. அதை கெடுத்துக்காத. உனக்கு குழந்தை வேணும்னா எத்தனையோ அனாதை விடுதி இருக்கு. அதுல போய் குழந்தையை தத்து எடுத்துக்கலாம். ப்ளீஸ் கனிகா உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்காத” என்று கெஞ்சிய ஆதினியை ஏறெடுத்துப் பார்த்தவள்,

“எனக்கு என் குழந்தை வேணும் ஆதினி”

“அப்போ உன் புருசன்?” என்று நறுக்கென்று கேட்ட ஆதினியின் கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

“பேசுடி... அப்போ உன் புருசனோட நிலைமை. உன்னை இந்த நாலு வருசமா மனசுல வச்சு குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரே. அவருக்கு என்ன பதிலை சொல்லப் போற. உன்னை மருமகளா பார்க்காம மகளா பார்த்த உன் மாமியார் மாமனாருக்கு என்ன பதில் சொல்லுவ..” என்று ஆதினி சரமழையாய் கேள்வி கேட்க, விரக்தியுடன் பெருவளத்தானை பார்த்த கனிகா,

“என்னை மன்னிச்சுடுங்க ங்க. எனக்கு என் குழந்தை வேண்டும். எப்படியும் நீங்களும் நானும் சேர்ந்து வாழ்ந்தா கண்டிப்பா நமக்கு குழந்தை பிறக்கப் போவது இல்லை. ஒருவேளை சாத்தியம் இருந்தாலும் அதுக்கு என் உடம்பு ஒத்துழைக்காது. நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணி நல்லா வாழுங்க” என்று சொல்லிவிட்டு செல்வத்தை ஒரு பார்வை பார்க்க அவன் பெருமூச்சு விட்டு,

“சீக்கிரம் டைவர்ஸ் க்கு அப்லை பண்ணுங்க பெருவளத்தான். என் குழந்தைக்கு அம்மா வேண்டும். அதனால தான் இப்படி. இதுல அதிகம் காயப்பட்டது நீங்க தான். வெறும் சாரி சொன்னா எதுவும் ஆகப்போறது இல்லன்னு நல்லாவே தெரியும். ஆனாலும் எங்களுக்கு இதை தவிர வேற வழியில்லை. ஏங்க ரெண்டு பேரையும் மன்னிச்சுடுங்க பெருவளத்தான்” என்று அவன் கைக்கூப்ப அவனது கையை பிடித்து இறக்கி விட்டவனுக்கு நெஞ்சமெல்லாம் புண்ணாகிப் போனது.

‘இந்த ஒரு வருடத்தில் தான் எவ்வளவு மாற்றங்கள்’ என்று எண்ணி பெருமூச்சு விட்டவன்,

“நல்லா இருங்க செல்வம்” என்று சொன்னவன் கனிகாவின் அருகில் வந்து நின்றன். அவனை முழு மனதுடன் ஏறெடுத்துப் பார்த்தாள்.

அவளிடம் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லை. அவனை அப்படியே ஏறெடுத்துப் பார்த்தவளிடம் சின்ன புன்னகையுடன் “இனிமேலாவது நீ மகிழ்ச்சியா இருந்தா போதும் கனிகா” என்று மனமாற வாழ்த்த சட்டென்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

‘நான் உங்கக்கிட்ட இருந்த பொழுது அதை விட மகிழ்ச்சியா இருந்தேன்’ என்று சொல்ல நா துடித்தது கனிகாவுக்கு. அதை மறைத்துக் கொண்டு அவனது தோளில் சாய்ந்திருந்தாள். 

கனிகா இப்படி தோள் சாயவும் திகைத்து செல்வத்தை பார்த்தான் பெருவளத்தான். அவனோ கையை கட்டிக்கொண்டு இவர்கள் இருவரையும் எந்த சஞ்சலமும் இல்லாமல் பார்த்தான்.

பின் சுதாரித்து அவனை விட்டு விலகிக்கொண்டு செல்வத்தின் பக்கம் போய் நின்றுக்கொண்டாள் கனிகா. “ரெண்டு பேரும் நீண்ட காலம் நல்லா இருக்கணும்” என்றவன் வெளியே போய் விட்டான். அதற்கு மேல் அவனால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை. ஏதோ துரத்துவது போல வெளியே வந்தவனுக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top