Notifications
Clear all

அத்தியாயம் 39

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 981
Topic starter  

குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு அனைத்தவளின் கண்களில் கண்ணீர் தளும்பியது. “நீ எனக்கு சொந்தமில்லையா கண்ணா..” என்று கண்ணீருடன் தன் பிள்ளையை சொந்தம் கொண்டாடியவளின் முன்பு ஒரு நிழல் தெரிய,

சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள். எதிரே செல்வம் நின்றிருந்தான். கலைந்த தலையோடு கண்கள் சிவந்துப் போய் கண்களில் உயிரே இல்லாமல் இருந்தவனை பார்த்து அடி நெஞ்சில் ஏதோ ஓர் இரக்கம் சுரந்தது.

“பிள்ளையை பார்க்கலாமா?” என்று ஆசையாக கேட்டான். குழந்தைக்கு இப்பொழுது தான் சர்ஜரி நடந்து இருப்பதால் அதிகம் வெளியே குடுப்பதே இல்லை. ஒன்லி பீடிங் க்காக மட்டும் தான். அதுவும் கொஞ்ச நேரம். மற்ற நேரம் குழந்தை அழுதால் அவர்களே பவுடர் பாலை கொடுத்து விடுவார்கள்.

அதனால் செல்வம் பிள்ளையை பார்ப்பது மிக குறைவு. எனவே இவள் பீடிங் பண்ணும் பொழுதாவது பார்க்கலாம் என்று வந்துவிட்டான்,

அவனது ஆசை புரிந்தவள் தன் உடையை சரி செய்துக் கொண்டு குழந்தையை அவனிடம் காட்டினாள். பிள்ளை அப்படியே அவனை போலவே இருந்தான். தொட்டுப் பார்த்தவனுக்கு கண்கள் எல்லாம் கலங்கியது.

அவனை போலவே குட்டியாய் கைகாலை அசைத்துக் கொண்டு இருந்ததை பார்த்து உள்ளம் பூரித்துப் போனான். விட்டால் இப்பொழுதே பிள்ளையை தன் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொண்டு ஓடிவிடுவான் போல. அந்த அழகில் இருந்தான் செல்வன்.

அவனது அதே போன்ற உணர்வில் தான் அவளும் இருக்கிறாள் என்று உணர்ந்தவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது உணர்வுகள் பேசியது சத்தமில்லாமல்.

அப்படியே நாட்கள் கடக்க தாய் சேய் இருவரையும் டிஸ்சார்ஜ் செய்தார்கள். அப்பொழுது தான் அதில் இருந்த சிக்கலே புரிந்தது. செல்வம் குழந்தையை எடுத்துக் கொண்டு போக பார்க்க, வேதா தடுத்து பிள்ளைக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு. இதுல தாய் பால் குடுக்கலன்னா ரொம்ப சிக்கலா போக வாய்ப்பு உள்ளது என்று அறிவுறுத்த வேறு வழியின்றி குழந்தையை கனிகாவிடம் கொடுக்க வேண்டிய நிலை.

அதை செல்வத்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு இப்பொழுதே குழந்தை அவனுடன் இருக்க வேண்டும் என்று வெறி பிடித்தது. ஆனால் சூழ்நிலையில் எட்டி நிற்க வேண்டி இருப்பதை உணர்ந்து பல்லைக் கடித்தான்.

ஆதினியும் பெருவளத்தானும் மருத்துவமனை கட்டணத்தை எல்லாம் கட்டிவிட்டு வர அவர்களிடம் சிக்கலை சொல்ல கனிகாவுக்கு இப்போ பூரண சுகம் தேவை படுது. அதனால எங்க வீட்டுக்கு குழந்தையை தூக்கிட்டு போறோம். தினமும் வந்து பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட அது தான் சரி என்று அனைவருக்கும் புரிந்தது.

சஞ்சுவும் இங்கே கனிகாவுக்கு உதவியாக வந்து விட்டாள். குமுதாவுக்கு உதவியாக இருந்தது அவள் வந்தது. ஆதினி எபபொழுதும் போல தன் வேலைக்கு போய்க்கொண்டு இருந்தாள்.

செல்வம் தினமும் ஆதினியின் வீட்டுக்கு வர போக என்று இருந்தான். அதே போல பெருவளத்தானும் வேலை முடிந்து இங்கே வந்து எட்டிப்பார்த்து விட்டு அதன் பிறகே அவன் வீட்டுக்குப் போவான். சண்டை வந்ததில் இருந்து அவன் இங்கு தங்குவதே இல்லை.

குழந்தையின் மழலை குரல் ஆந்த வீட்டில் ஒரு உயிர்ப்பை கொடுத்து இருக்க எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆறு மாதம் அப்படியே உருண்டுப் போனது.

ஆதினியும் பெருவளத்தானும் அதற்கு பிறகு சந்தித்துக் கொள்வதே இல்லாமல் போனது. இருவரின் வேலை பளுவும் கூடுதல். அதோடு இருவரின் வைராக்கியமும் அவர்களை பார்க்க விடாமல் செய்தது.

இதற்கு இடையில் ஆதினியை பார்த்து உறுதி செய்ய மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதாக சொல்ல வீட்டில் மீண்டும் ஒரு பரபரப்பு ஒட்டிக் கொண்டது.

பெருவளத்தான் வீட்டில் இருந்து விசாகனும் வாணியும் வந்து இருக்க, சஞ்சுவின் வீட்டில் இருந்து அனைவருமே வந்து இருந்தார்கள். இப்பொழுது முன்பை விட அனைவரும் நெருங்கிப் பழகி இருக்க அவர்களது வீட்டு திருமணம் போலவே செயல் பட்டார்கள் செல்வனும் பிரபுவும்.

அடிதடி நடந்தது எல்லாம் ஏதோ ஒரு பிறவியில் நடந்தது போல இருந்தது அனைவருக்கும். குழந்தையின் பிறப்பில் அனைத்து மனதாபங்களும் தீந்துப் போய் இருந்தது.

கண்ணாடி முன்னாடி அமர்ந்து இருந்த ஆதினிக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. ஆனால் கனிகாவின் தற்கொலை முயற்சி கண் முன்பு வர இதழ்களில் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டவள் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்.

எந்த அலங்காரமும் இல்லை. எப்பொழுதும் போடும் லிப்க்லாஸ் கூட போடவில்லை. அலுவலகம் போவது போல கிளம்பி இருந்தாள் நாகரீகம் கருதி.

“பெரிய மாப்பிள்ளை கிட்ட சொல்லி கொஞ்சம் ஸ்வீட் மட்டும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அல்வாவும் காரமும் நான் வீட்டுலையே செஞ்சுட்டேன்” என்றான் குமுதா.

“சரி நான் சொல்லிடுறேன். வேற எதுவும் வேணுமா...?” வைகுந்தம் பரபரப்பாக கேட்டார்.

“போதும்னு நினைக்கிறேன். அப்படி எதுவும் வேணும்னா... விதுலை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லிக்கலாம். நீங்க அந்த இருக்கையை ஒழுங்கா போடுங்க” என்ற நேரமே,

“அதை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க இருங்க” என்ற பிரபுவும் செல்வமும் கூடத்தை ஒழுங்கு பண்ணி போட, அவர்களோடு விதுலும் சேர்ந்துக் கொண்டான். சஞ்சு அடுப்படியில் அம்மாவோடு உதவி செய்து விட்டு குழந்தைக்கு வேண்டியவற்றையும் கனிகாவையும் பார்த்துக் கொண்டவள் ஆதினியிடம் பேச முயன்றாள்.

அவளும் ஒவ்வொரு நாளும் முயன்றுக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் ஆதினியின் அருகில் சென்றாலே சஞ்சுவால் பேச முடியாமல் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டே இருந்தது.

வீசிய கல்லும் சொன்ன சொல்லும் திருப்பி எடுக்க முடியாதே... இரு வீட்டு பெரியவர்களும் தாம்பூல தட்டை சரி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அங்கு எல்லோருமே இருந்தார்கள் ஒருவனை தவிர.. அந்த ஒருவனை தான் ஆதினியின் உள்ளம் தேடியது. ஆனால் அதை மறைத்துக் கொண்டவள் எல்லாவற்றையும் தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டு சீரணம் செய்ய முயன்றாள். வேதா அவளுக்கு கண்களுக்கு மையாவது பூசென் என்று பூசிவிட மறுக்க முடியாமல் அவளிடம் முகத்தை காட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

“ஆதினி அவங்க எல்லோரும் வந்துட்டாங்க வா” என்று அழைக்க வந்து சஞ்சு அவளின் கூந்தலில் இன்னும் கொஞ்சம் பூவை வைத்து,

“என்னை மன்னிச்சுடுடி” என்று சொன்னவளின் விழிகள் ஈரத்தில் நனைந்து இருந்தது. கோவத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி வைக்க அவளது உள்ளம் குப்பை தொட்டி இல்லையே... “மறந்துட்டேன்” என்று சிரித்தாள். அவளின் அந்த பெருந்தன்மையில் இன்னும் கொஞ்சம் குறுகிப் போனாள் சஞ்சு.

மாமனார் ஸ்வீட் வாங்கிக்கொண்டு வர சொல்ல எப்பொழுதும் போல மூன்று பேக் ஸ்வீட்டை வாங்கி வாங்கினான். தன்னை மீறி தன் வாய் செயல்பட்டு விட்டது புரிய விரக்தியாக புன்னகைத்துக் கொண்டவன் பணத்தை கொடுத்து விட்டு வாங்கிக்கொண்டு வந்தான்.  சரியாக இவன் வீட்டுக்குள் நுழையும் பொழுது மெசேஜ் வர எடுத்துப் பார்த்தான்.

ஆறு மாதங்களுக்கு பிறகு ஆதினியிடம் இருந்து ஒரு மெசேஜ்.

“வராதீங்க” என்று இருந்தது. விரும்பியவளிடம் இருந்து வராதீங்க என்ற சொல் ஆணவனை கிழித்துப் போட்டது.

வரமால் போனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகிவிடுமே என்று எண்ணியவன் பெருமூச்சு விட்டு “வர வேண்டிய கட்டாயம்” என்று பதில் போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அந்த நேரம் சரியாக ஆதினி அனைவருக்கும் காபியை கொடுத்துக் கொண்டு இருந்தாள். இவன் வீட்டுக்குள் நுழையவும் இருவரது பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீண்டது.

அந்த ஒற்றை நொடி இருவருக்கும் மரண வேதனையை கொடுத்தது. கைசேராத காதல் பல இந்த உலகில் இருக்கிறது தானே... அதில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

 

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top