அதற்குள் அந்த ஸ்பெஷலிஸ்ட் வந்து இருக்க ஆதினியும் செல்வமும் ஓடிபோய் அவரை பார்த்தார்கள். அவர் சொன்னதை கேட்டு கொஞ்சம் நம்பிக்கை வந்தது இருவருக்கும்.
“என்ன சொன்னாங்க..?” என்று எல்லோரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்க,
“நூறு சதவீதம் அவங்களோட முயற்சியை குடுக்குறதா சொல்லி இருக்காங்க. பதினோரு மணிக்கு ஆபரேஷன் ஆரம்பிக்குமாம். எப்படியும் மூணு மணி நேரம் ஆகுமாம். கனிகா எப்படி இருக்கா? இடையில கண் முழிச்சாளா?” என்று கேட்டார்கள்.
“கண்ணு முழுச்சி பார்த்தா குழந்தையை கேட்டா அப்புறம் தூங்கிட்டா” என்றனர்.
“அப்போ சரி நீங்க எல்லாம் போய் சாப்பிட்டுட்டு வாங்க, அது வரை நாங்க இங்க இருக்கோம்” என்று பெரியவர்கள் நால்வரையும், அவர்களோடு விதுல், பிரபு, மற்றும் சஞ்சு என மூவரையும் அனுப்பி வைத்து விட்டு இவர்கள் மூவரும் அங்கு நின்றிருந்தார்கள்.
ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. என்ன பேசுவது. எதை பேசுவது உள்ளம் முழுவதும் புண்ணாகி இருந்தது. குழந்தை எப்படியாவது நலமாகி வந்தாலே போதும் என்கிற நிலையில் இருந்தார்கள்.
கனிகாவுக்கு ஆபரேஷன் என்பதால் அவளுக்கு இன்னும் எதுவும் சொல்லப்படவில்லை. தூக்கத்திலே இருந்தாள். கண் முழித்து ஒரு முறை எல்லோரையும் பார்த்தவள் “கு... ழந்தை குழந்தை எப்படி இருக்கு...” கேட்டவள் பதிலுக்காக கூட காத்திருக்காமல் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். ஆழ்நிலை மயக்கம் அவளுக்கு.. அவளுடன் வேதா இருந்துக் கொண்டாள். அவ்வபொழுது வெளியே வந்து குழந்தையை பற்றி கேட்டுக் கொண்டாள்.
“குழந்தையை காப்பாத்திடலாம் தானே...?” வேதனையுடன் கண்கள் கலங்க கேட்ட செல்வத்தை காண பெருவளத்தானுக்கும் ஆதினிக்கும் வேதனையாக இருந்தது. வேதாவுக்கு அதை விட வேதனையாக இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு செல்வத்தின் காதல் மனைவிக்கு கருப்பம் தரிப்பதில் சில சிக்கல்கள் இருந்தது. அதாவது பெண் முட்டையில் ஆணின் விந்து சேர முடியாமல் இருந்தது. அது இரண்டையும் வெளியே எடுத்து டெஸ்ட் டியூப் பேபியாக கன்வெர்ட் பண்ணி கருப்பையில் வைத்தால் க்ளிக் ஆகும் என்று அதற்கு எல்லா வேலைகளும் தயார் செய்தார்கள். அதற்கே கிட்டத்தட்ட ஐந்து லட்சம் வரை செலவு ஆனது.
“ரொம்ப செலவு வைக்கிறனாங்க?” மனைவி கேட்க, அவளின் தலையை தடவி விட்டு,
“நீ ஆசபட்டா மலையை கூட தலையில சுமப்பேன்டி. இது என்ன காசு. என் உண்டம்புல வலு இருக்கிற வரைக்கும் நீ என் கூட பக்க பலமா துணை இருக்குற வரைக்கும் இந்த மனசும் உடம்பும் ஓயாம உழைக்கும். இதை விட அதிகமா சம்பாதிப்பேன்” என்று சொன்னவனை காதலுடன் பார்த்தாள் அவனின் மனைவி.
“எனக்கு நீ குழந்தைடி. உனக்கு நான் குழந்தைடி” என்று செல்வம் சொல்ல,
“இல்லங்க உங்களை மாதிரியே ஒரு பிள்ளையை பெத்து “இந்தாங்க உங்க பிள்ளைன்னு” உங்க கையில குடுக்கணும் அது தான் என் ஆசை” என்றாள்.
அவளின் ஆசைக்காகவே முதல் முறை தோல்வியில் முடிந்தாலும் அடுத்த முறை முயற்சி செய்வோம் என்று நம்பிக்கையோடு அவளிடம் சொன்னான். அவளும் முழு நம்பிக்கையோடு இருந்தாள். அதன் படி முதல் வேலையாக செல்வத்தின் ஆரோக்கியமான ஸ்பேமை எடுத்து சேகரித்து வைத்தவர்கள் அவனின் மனைவியான கரு முட்டையின் வளர்ச்சியை செக் பண்ணி அதை எடுத்து வைக்க காத்திருந்தார்கள். அதற்குள் என்ன வசரமோ காலன் அவளை தன்னோடு எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
ஒன்றுமில்லை ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன் என்று அருகில் இருந்த மளிகை கடைக்கு சென்று வர போனாள். அறுந்து விழுந்த மின்சார கம்பியை பார்க்காமல் விளையாடிக் கொண்டு இருந்த மூன்று வயது பிள்ளையை கண்டு மனம் பதைபதைத்துப் போனவள் அந்த குழந்தையை காப்பாற்றி விட்டு நகரும் நேரம் காற்று பலமாக வீச அந்த ஒயர் கம்பி காற்றில் ஆடி இவம் மீது விழுந்து விட நின்றிருந்த படியே கருகிப் போனாள் பெண்ணவள்.
அருகில் இருந்தவர்களால் காப்பாற்ற கூட முடியாமல் போன துயரத்தை என்னவென்று சொல்ல. “இந்தா வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போன காதல் மனைவி கருகிய நிலையில் உயிரற்று கணவனின் கையில் கிடைத்தால் அவன் எந்த நிலைக்கு ஆளாவானோ அதை விட மோசமான நிலையில் இருந்தான் செல்வம்.
எங்கு திரும்பினாலும் அவளின் பிம்பம் தான் அவனுக்கு தெரிந்தது. அவளின் நினைவை விட்டு வெளியே வரவே மூன்று நான்கு வருடங்கள் பிடித்தது அவனுக்கு. இன்று வரையிலும் அவள் நினைவு அவனுக்கு அகலவே இல்லை.
இன்று என்று இல்லை எப்பொழுதுமே அகலாத நினைவு அது. தன் நெஞ்சுக்குள் கோயில் கட்டி தன் மனைவியோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். சித்தம் போக்கு சிவன் போக்கு என்பது போல அவன் அவனது மனையின் நினைவுகளிலே வாழ வெளியுலக தொடர்பையே முற்றிலும் தவிர்த்து விட்டு தனக்குள் ஒடுங்கிக் கொண்டான்.
அவனது அப்பா அம்மா அடுத்த திருமணத்துக்கு கேட்டும் அவனிடம் மௌனம் மட்டுமே பதிலாக கிடைக்க வேறு வழியின்றி அடித்த மகன் பிரபுக்கு சஞ்சுவை கல்யாணம் செய்து வைத்தார்கள்.
எதிலும் பிடிப்பு இல்லாமல், வாழ்வதில் நாட்டமே காட்டாதவனை வாழ வைக்க அவனின் அன்பு தங்கை வேதா எடுத்த முயற்சி தான் இந்த குழந்தை பிறப்பு. ஒரு குழந்தை வந்தாலாவது அவனது போக்கு மாறும் என்று எண்ணி தான் இதை செய்ய துணிந்தாள். இதில் அவள் சறுக்கிய இடம் கனிகா தான்.
சரகேன்ட் மதருக்கு தனிப்பட்ட முறையில் பணம் கொடுக்க வேண்டும், அதோடு ஏகப்பட்ட மருத்துவ செலவும் ஆரம்ப கட்டத்தில் இருந்து இறுதி வரை இருந்தது. இவர்களது குடும்பம் நடுத்தர வர்க்கம். அதனால் இவ்வளவு செலவு செய்து பிள்ளையை பெற இயலாது என்பதால் அந்த வேலையை ஒத்திப் போட்டு இருந்தாள் வேதா.
ஆனால் கனிகா குழந்தையின்மை சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்குள் உள்ளே வரவும் அதுவும் அவளின் ஏனோதானோ என்கிற குணமும், குழந்தையை பெற்றுக்கொள்ள தனக்கு எலிஜிபில் இருக்கிறதா இல்லையா என்று டேஸ்ட்டுக்கு வந்ததாக அவள் சொல்லவும் முதல் ஆரம்ப கட்ட செலவுகளை இவளிடம் வைத்தே முடித்து விட்டு அதன் பிறகு குழந்தையை சரகன்ட் மதருக்கு மாற்றி விட்டு விடலாம் என்று தான் கணித்து இருந்தாள்.
ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பு செல்வத்தின் ஸ்பெர்ம் கனிகாவின் கரு முட்டையோடு ஒன்று கூடி குழந்தை உருவான உடன் கனிகா அதை வெளியே எடுக்க மறுக்கவே வேறு வழியின்றி அவளின் கருவிலே குழந்தை இருக்கட்டும் என்று விட்டு விட்டாள். இப்பொழுது சரகன்ட் மதருக்கு கொடுக்க வேண்டிய பணமும் மிச்சம் என்று எண்ணியவள் பிரசவ செலவை தானே ஏற்றுக்கொள்ள எண்ணி இருந்தாள் வேதா.
எங்காவது கடன் வாங்கி தானே செய்துக் கொள்ளலாம் என்று தான் எண்ணி இருந்தாள் ஆனால் அதற்குள் குழந்தைக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று எண்ணி இருக்கவில்லை.
கண்ணும் கருத்துமாக தன் அண்ணனின் குழந்தையை கருவில் இருக்கும் பொழுதே பார்த்துக் கொண்டவள் ஆயிற்றே. இப்பொழுது பணம் இல்லாமல் அந்த பிஞ்சு குழந்தை இழக்க நேரிடுமோ என்று கதறி துடித்தாள். ஆனால் அவளை அந்த அளவுக்கு துடிக்க விடாமல் பெருவளத்தானும் ஆதினியும் தக்க சமயத்தில் தேவைக்கு அதிகமாக பணத்தை கட்டி குழந்தையின் உயிருக்கு உயிர் சேர்த்தார்கள். அதை எல்லாம் எண்ணி பார்த்த செல்வத்துக்கு ஒரு பிடிப்பு வேண்டி இருக்கவே தன் தங்கையை விடுத்து பெருவளத்தானிடம் கேட்டான். என்னவோ அவனிடம் அவனுக்கு வேண்டிய சொல் இருப்பதாக எண்ணினான் பொலும்.
“கண்டிப்பா காப்பாத்திடலாம். கவலை படாத செல்வம். குழந்தைக்கு ஒன்னும் இல்லை. இதெல்லாம் இப்போ பிறக்கிற பிள்ளைகளுக்கு ரொம்ப இயல்பு தான். வேதா நீ சொல்லும்மா” என்று அவளை கை காண்பிக்க அவளும் கொஞ்சம் சொன்னாள்.
செல்வம் பெருவளத்தானை கட்டிக் கொண்டான். அவனுக்கு அந்த அணைப்பு தேவையாக இருக்க சிறு புன்னகையுடன் அவனை பெருவளத்தானும் கட்டிக் கொண்டான்.
“என்னவோ பயமா இருக்கு. ஏற்கனவே ஒருத்தியாய தூக்கி குடுத்ததே என்னால இப்ப வரை தாங்க முடியல. இதுல மறுபடியும் இன்னொரு இழப்புன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது” என்றவனை இறுக கட்டிக் கொண்டான்.
கிட்டத்தட்ட பெருவளத்தானுக்கும் இதே நிலை தானே. அதனால் அவனது உணர்வுகள் நன்று புரிந்தது.
“கவலை படாதடா. உன்னை விட்டு போன உறவு உன்கிட்ட கண்டிப்பா வந்து சேரும்” என்று இருவரும் தயக்கத்தை விட்டு பேசிக்கொள்ள ஆதினிக்கும் வேதாவுக்கும் கொஞ்சம் நெஞ்சம் நெகிழ்ந்தது.





