Notifications
Clear all

அத்தியாயம் 34

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 979
Topic starter  

யாராலையும் நடந்துப் போன நிகழ்வுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. ஆனால் அதிலே இருந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்ன..?

“சரி நான் மன்னிப்பு கேட்கல... ஆனா நீங்க முதல்ல சாப்பிடனும். சாப்பிடுங்க மாமா. அத்தைக்கு நீங்களே குடுங்க.” என்று விட்டு அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

பணிப்பெண் இருப்பதால் வீடு சுத்தமாகவே இருந்தது. அதனால் அங்கு செய்ய எந்த வேலையும் இல்லை. அவர்களோடு நீண்ட நேரம் அமர்ந்து இருந்தாள். “பக்கத்துல எங்காவது கோயிலுக்கு போயிட்டு வரலாமா..?” என்று கேட்டாள்.

ம்ம் என்று இருவரும் சொல்ல தன்னுடைய காரில் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள். சாமியை பார்த்து மனமுருக வேண்டிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தூண் மண்டபத்தில் சற்று தள்ளி அமர்ந்துக் கொண்டார்கள்.

வெளியே வரவும் இரண்டு பெரியவர்களுக்கும் மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் நேற்றிலிருந்து போனில் அழைத்து நேரில் வந்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் இரு பெரியவர்களையும் ஒரு வழியாக்கி இருந்ததற்கு இந்த அமைதி இருவரையும் கொஞ்சம் ஆசுவாசமாக்கியது.

அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தார்கள். எதுவும் பேசவில்லை. பேச தோன்றா கணத்த அமைதி. சூனியம் வைத்தது போல தங்களின் மகன் வாழ்க்கை பாலாய் போனதில் மனம் வெதும்பி போனார்கள்.

அவர்களின் மனதில் ஒரே ஒரு வேண்டுதல் தான் “அவனின் மனைவியை அவனிடமே திருப்பிக் கொடுத்து விடு இறைவா..” என்பது மட்டும் தான். ஆதினியை பார்த்தார்கள் இருவரும். காட்டன் சேலையில் மிக பாந்தமாக நீண்ட சடையை முன்னாள் எடுத்து போட்டு இருந்தாள்.

நெற்றியில் திருநீறு குங்குமக் கீற்று அழகாக இருந்தது. எந்த ஒப்பனையும் இல்லை. காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய அதே தோரணை தான். கோயிலுக்கு செல்வதால் முகத்தை மட்டும் கழுவி பொட்டு வைத்திருந்தாள். திருநீறு குங்குமம் கூட இங்கு கோயிலில் கொடுத்தது தான்.

ஏனோ ஆதினியை பார்க்க பார்க்க இன்னும் நெஞ்சு கனத்துப் போனது. ஆதினிக்காக பார்த்த வரன் நேரடியாக அவளின் பெற்றவர்களையே கலந்து பேசி முடிவெடுக்க போவதாக சொல்லி இருந்தார்கள்.

அதனால் கூடிய விரைவில் ஆதினிக்கு திருமணம். அதன் பிறகு இப்படி அவளுடன் நேரம் செலவிட முடியாதே என்று இப்பொழுதே நெஞ்சு கனத்துப் போனது இருவருக்கும்.

ஆதினியும் கனிகா வாழ்க்கைக்கு உறுத்தலாக தான் இருக்க கூடாது என்பதற்காக அந்த வரனுக்கு ஒத்துக் கொண்டு விட்டாள். இனி இவளது வருகையும் குறைந்து போகலாம் என்று எண்ணியவர்களுக்கு மீண்டும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

வாழ்க்கை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அது மேடு பல்லம் நிறைந்தது என்பதை நொடிக்கு நொடி உணர்த்திக் கொண்டே இருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்துக் கொண்டார்கள்.

ஏதேதோ எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றி வந்து கூடு சேர,

ஆதினி “போலாமா?” என்று இருவரையும் பார்த்துக் கேட்டாள். அவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்க ஆசை தான். ஆனால் அவள் மறுபடியும் அவளது வீட்டுக்கு போக வேண்டுமே. ஏற்கனவே இருட்டி விட்டது. இங்கிருந்து அங்கு போக எப்படியும் நள்ளிரவு ஆகிவிடும். எனவே இருவரும் எழுந்துக் கொண்டார்கள் அவளுக்கு இசைவாய்.

அவர்கள் இருவரையும் வீட்டில் இறக்கி விட்டு அவர்களோடு இரவு உணவை உண்டுவிட்டு தன் கையாலே இருவருக்கும் அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரையை எடுத்துக் கொடுத்து விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினாள்.

அது வரை அவளின் பின்னோடு வால் பிடித்துக் கொண்டு வந்த பெருவளத்தானுக்கு மனதெல்லாம் நிறைந்துப் போனது.

மீண்டும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அவளின் பாதுகாப்புக்காக பின்னாடி சென்றான். ஆதினியின் கார் வேகமாக சீறிப்பாய, பெருவளத்தானின் வண்டியும் வேகமாக பின் தொடர்ந்தது.

சடுதியில் அவளது கார் நிறுவிட ஏதோ பிரச்சனை என்று இறங்கியவன் கார் கண்ணாடியை தட்டி,

“என்ன ஆச்சு..?” என்று கேட்டான்.

சீட்டில் அமர்ந்து இருந்தவள் கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள் எதுவும் பேசாமல். அப்பொழுது தான் அவனின் மடத்தனம் புரிய சட்டென்று நெற்றியில் தட்டிக் கொண்டான்.

அவனது கரம் அவனையும் அறியாமல் காரின் மேல் கூரையில் தாளம் போட்டது. அவளிடம் இருந்து மல்லிகை மனமும் குங்கும வாசனையும் வர பெருவளத்தனுள் என்னவோ ஆனது. அதை காட்டிக் கொள்ளாமல்,

“அது தான் கண்டு பிடிச்சுட்டியே வா ஒரு டீ சாப்பிட்டுட்டு போகலாம்” என்று இலகுவாக அழைத்தவனை இன்னும் முறைத்துப் பார்த்தவள் வண்டியை கிளப்ப பார்க்க, வேகமாய் வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டவன்,

“விதுலையும் வர சொல்றேன்” என்று சொல்ல,

“எப்போ தான் இப்படி வாட்ச்மேன் வேலை பார்க்கிறதை நிறுத்துவீங்க...” நேரடியாகவே அவனிடம் கேட்டு விட்டாள்.

அதற்கு திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் “செத்த பிறகு வேணா விடுறேன். அதுவரை விட முடியாது” என்று சொல்லிவிட்டு போக அவனை இன்னும் முறைத்தாள்.

எதற்கெடுத்தாலும் விதுலை நடுவில் நிறுத்தி அதற்கு பின் இவள் மறைந்துக் கொள்வது ஏனோ மனதை போட்டு படுத்தியது அவனுக்கு. “ஏன்டி என்கிட்டே நேரா பேசமாட்டியா?” என்று அவளை இறுக கட்டிக் கொண்டு கேட்க தோன்றியது. ஆனால் அதை அவ்வளவு எளிதாக செய்து விட முடியாதே...! அதனால் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு எதிர் புறம் இருந்த டீ கடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

சிறிது நேரத்தில் விதுலும் வந்துவிட மூவரும் ஒன்றாக டீ குடித்து விட்டு அதன் பிறகு மூவரும் அவரவர் இடம் சென்றார்கள்.

வீட்டுக்கு வந்த ஆதினியிடம் குமுதா எதையும் மறைக்கவில்லை. செல்வம் குடும்பம் வந்து போனதாக சொல்ல நேராக கனிகாவிடம் போய் நின்றாள்.

“நீ எதை மனதுல வச்சுக்கிட்டு இதையெல்லாம் செய்துட்டு இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இங்க பாரு உன் புருசனுக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்ல. இனி இருக்கப்போறதும் கிடையாது. சீக்கிரமே எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. மாப்பிள்ளை உன் மாமனார் பார்த்த வைத்த பையன் தான். அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். சிம்பிளா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லி இருக்கேன். அவனும் ஒத்துக்கிட்டான். ஆனா அது உன் டெலிவரி முடிஞ்ச பிறகு வச்சுக்கலாம்னு இருந்தேன். பட் நீ செய்யிறதை எல்லாம் பார்த்தா நாளைக்கே வச்சிடலாம் போல இருக்கு..” என்று தீர்க்கமாக பேசியவளை நிமிர்ந்துப் பார்த்த கனிகா,

“உங்க ரெண்டு பேரு மேலையும் ஒரு உறுத்தல் இருக்கு தான். ஆனா அதுக்காக என் புருசனை எல்லாம் விட்டுக்குடுத்துட்டு போயிட மாட்டேன். நீ யாரை வேணா எப்போ வேணா கல்யாணம் பண்ணு ஐடோன்ட் கேர்” என்றவளை கூர்ந்து பார்த்து,

“அப்போ ஏன் அந்த மனுசனை ஒவ்வொரு நேரமும் விட்டுக்குடுத்துட்டே இருக்க கனிகா... அவரு மனது என்ன பாடு படும்னு உனக்கு புரியலையா...?” ஆதங்கத்துடன் கேட்டவளை ஏளனமாக பார்த்து,

“அது தான் நீ இருக்கியேம்மா அவரை அன்பா அனுசரணையா பார்த்துக்க..” என்று நக்கலுடன் சொன்ன கனிகாவை “ச்சீ...” என்று அருவெறுத்துப் போய் பார்த்தாள்.

“இனி உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்..” என்று ஆதினி போய் விட்டாள். போனவளின் முதுகையே வெறித்துப் பார்த்த கனிகா கண்களை மூடிக் கொண்டாள்.

நாள் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள் பயமாக இருந்து. முதல் பிரசவம் வேற.. குழந்தையின் மூவ் ரொம்ப அதிகமாக இருந்து. இரவெல்லாம் முண்டிக்கொண்டே இருக்கவும் சுத்தமாக அவளால் தூங்கவே முடியவில்லை. பகல் பொழுதில் தான் தூங்கவே தொடங்குவாள்.

பெருவளத்தான் வந்து அவளை பார்த்துவிட்டு போவன். இன்னொரு பக்கம் செல்வமும் அடிக்கடி வீட்டுக்கு வந்து விட்டு போகவும் குமுதாவுக்கு தலையை பிய்த்துக் கொண்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றும். அதுவும் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை அவருக்கு பாவம்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top