அந்த மிகப்பெரிய ஆடம்பர மருத்துவமனையின் தனி அலுவலக அறையின் உள்ளே அமர்ந்து இருந்தாள் அதிரல். உடலை துளைக்கும் குளிர் அந்த அறையில் வீசியது என்றாலும் அவளுக்கோ பொடி வைரங்களை அள்ளி தெளித்தது போல முகமெங்கும் வியர்வை துளிகள் பூத்து இருந்தது..
கைகள் நடுங்கியது. தேகம் கனமாகிப் போனது. பயந்து அஞ்சிக் கொண்டு இருந்த இதயமோ அதிவேகமாக அடித்துக் கொண்டது.
இத்தனை இருந்த பொழுதும் அதை மறைத்துக் கொண்டு அவளுக்கு எதிரில் அமர்ந்து இருந்த வெற்றியை பார்த்தாள்.
“சொல்லுங்க உங்களுக்கு ஓகேன்னா நாம மேற்கொண்டு பேசலாம். இல்லன்னா இப்பவே நீங்க வெளில போகலாம்” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசியவனின் பேச்சில் எந்த ஒரு குலைவும் இல்லை. நேர்க்கொண்ட பார்வை தான். அந்த நேர்கொண்ட பார்வை எல்லாம் அவனின் அண்ணனிடம் இருந்து கற்றுக் கொண்டது தான். ஆனால் அவனின் அண்ணன் இப்பொழுது இதே மருத்துவ மனையில் தன் சுய நினைவை இழந்து கோமா ஸ்டேஜில் இருக்கிறான்.
அவனுக்காக தான் அதிரலை அழைத்து பேசிக் கொண்டு இருக்கிறான் வெற்றி.
--
தீத்திரள் தீரன்.. பெயருக்கு ஏற்ப தீ போல இருப்பவன் வெற்றியின் அண்ணன். அத்தனை கோவம் வரும். ஆனால் அதையும் மீறி அவனிடம் இருக்கும் நல்ல குணம் அவனின் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும்.
பார்ப்பவரின் கண்ணுக்கு நிறைவாக, கம்பீரமாக, பேச்சிலே ஆளுமையை காட்டி அனைவரையும் பணிய வைத்து, நேர்க்கொண்ட பார்வையில் எல்லோரையும் வசியம் செய்து விடும் அண்ணன் இன்று அத்தனையையும் தொலைத்து விட்டு வெறும் உடலாக படுத்து இருக்கிறான்.
அவன் ஒருவன் சபையில் நின்றாலே சபையே நிறைந்து விடும். அந்த அளவுக்கு கம்பீரமாக இருப்பான். ஆளுமை என்றால் ஆளுமை அப்படி ஒரு ஆளுமை.
அவன் தலை எடுத்த பிறகு அவர்களின் தொழில் அத்தனையிலும் ஏறுமுகம் தான். விரல் விட்டு எண்ணினாலும் முடியாத அளவுக்கு பிசினெஸில் கொடி கட்டி பறந்தான்.
எவ்வளவு தான் தொழிலில் முனைப்பாக இருந்தாலும் வீட்டிலும் அவனது கவனம் குறையாது. எல்லாவற்றையும் எல்லோரையும் அவனின் கையில் வைத்து இருந்தான்.
காலை ஒரு நேரம் கண்டிப்பாக அவனின் அம்மா கையில் சாப்பிட்டு தான் வெளியவே போவான். அதில் அவனின் அம்மா தேவகிக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும். பெருமையை தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும்.
“உன் பெரிய மகன் ஒரு வார்த்தை சொன்னா போதுமே.. அப்படியே பெட்டி பம்பா அடங்கிடுவியே..” என்று ஆளவந்தான் கூட அவ்வளவு கிண்டல் பண்ணுவார்.
“அதெல்லாம் உங்களுக்கு தெரியாது.. பெத்தவளுக்கு பெரிய மகன் மீது எப்பவுமே தனி பிரியம் இருக்கும்” என்று சிலாகித்துக் கொள்வார்.
“இரு உன் மத்த மூணு பிள்ளைங்க கிட்டையும் சொல்றேன்” என்று சொன்னாலும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ள மாட்டார் தேவகி.
“யாரு கிட்ட வேணாலும் சொல்லுங்க.. எனக்கு என் மூத்த பிள்ளை தான் எல்லாமே. அவன் அரட்டினாலும் எனக்கு கோவமே வராது..” சிலுப்பிக் கொண்ட தாயை இப்பொழுது தேற்ற முடியாமல் மொத்த குடும்பமே கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கிறது.
தொடரும்..





