மேற்படி மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து சஞ்சுவை பெண் பார்க்க வர அனைவருக்கும் பார்த்த உடனே பிடித்துப் போனது. குறிப்பாக மாப்பிள்ளை வீட்டினர் கனிகாவுக்கு மருத்துவம் பார்க்கும் குடும்பத்தினர் என்பதால் சொல்லவே வேண்டாம். மருத்துவருக்கு இரண்டு அண்ணன்கள். அதில் இரண்டாவது அண்ணனுக்கு தான் சஞ்சுவை கேட்டு வந்திருந்தார்கள்.
“டாக்டர் நீங்க தான் என் தங்கைக்கு நாத்தனானாரா?” கனிகா ஆர்பாட்டமாய் சொல்லி மருத்துவரான வேதாவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள். கனிகாவின் இந்த ஆர்பாட்டம் அனைவரையும் தொற்றிக் கொள்ள, அதன் பிறகு அந்த குடும்பத்தை பற்றி வெளியே விசாரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் போனது. அனைவருக்கும் முழுமனதாக பிடித்துப் போனது. மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வெகுவாக பிடித்து விட, அடுத்து வர்ற முகூர்த்தத்திலையே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
பெருவளத்தானை ஒப்புக்கு கூட ஒரு வார்த்தை அங்கு யாரும் கேட்கவில்லை. ஆனால் திருமண செலவு மொத்தமும் அவன் தலையில் தான் விடிந்தது.
மாப்பிள்ளை வீடு பார்க்கவும், பாத்திரம் பண்டம் எடுக்கவும், பத்திரிக்கை அடிக்கவும், துணிமணி எடுக்கவும், திருமண காண்ட்ராக்டர்களை பார்க்கவும் என எல்லாமே காரில் தான் பயணம். அதற்கு எல்லாம் காசு கொடுத்தது பெருவளத்தான் தான்.
“இப்போ இதுக்கு எல்லாம் கார் ரொம்ப அவசியமா...? அவங்க சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டீங்கல்ல” என்று கடுப்படித்த ஆதினியை வாஞ்சையாக பார்த்தவன்,
“இவங்களுக்கு செய்யாம நான் வேற யாருக்கு செய்ய போறேன் குட்டி. விடு இதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு” என்றவனை ஏளனத்துடன் பார்த்தாவள்,
“இவங்களோட சுயநலம் உங்களுக்கு இன்னும் புரியல. புரிய வேண்டிய காலம் வராமல் போகாது. அப்போ உடைஞ்சி போகாம இருக்க இப்பவே உங்க மனதை திடப்படுத்திக் கோங்க. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்றாள்.
“ப்ச் அதை விடு. நீ இன்னும் வேலையில சேரலையா?. தினமும் அப்பா தான் கடைக்கு போறாங்களே. நீயும் ஏன் அலையிற...? இந்த ஒரு வாரத்துலையே நீ ரொம்ப கருத்துப் போயிட்ட குட்டி” என்றான். இப்பொழுது கொஞ்சம் வலியில்லாமல் அவனால் பேச முடிந்தது.
“ப்ச் கருத்து போறதுல என்ன இருக்கு... வேலை செஞ்சி கருத்தா பெருமை தான். சும்மா உட்கார்ந்து கலரா இருக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை” என்றவளின் உழைப்பு அவன் அறியாததா..
“ஹேய் நான் அப்படி சொல்லல குட்டி... அடுத்து உனக்கும் மாப்பிள்ளை பார்க்கணும் இல்லையா? உன்னை கல்யாணம் செய்து குடுக்குறவரை கண்ணும் கருத்துமா பார்த்துக்க வேண்டியது என்னோட கடமை இல்லையா?” என்று கேட்டவனை ஒரு கணம் நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவளது கண்ணில் என்ன இருந்ததோ அவனால் படிக்க முடியவில்லை.
“என்ன குட்டி அப்படி பார்க்கிற?”
“ஒன்னும் இல்ல” என்றவள் அன்றைய நாளுக்கு உரிய கணக்கு வழக்குகளை சொல்ல ஆரம்பித்தாள்.
“நீ கடையை கையில எடுத்ததுனால தான் தெரியுமா நான் நிம்மதியா வீட்டுல இப்படி ஹாயா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன். இல்லன்னா என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு படபடத்துக்கிட்டே இருந்து இருப்பேன்” என்றான் நிம்மதியாக.
அவனுக்கு இந்த நிம்மதியை கொடுக்க வேண்டும் என்பதினால் தானே தான் செலக்ட் ஆன கம்பெனிக்கு கூட போகாமல் இவனது கடையில் போய் அமர்ந்து இருக்கிறாள். பெருமூச்சு விட்டவள் அவன் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை எல்லாம் கொடுத்து விட்டு வெளியே போக,
“குட்டி...” என்று அவளை நிறுத்தினான்.
என்ன என்பது போல அவள் நின்ற இடத்திலே திரும்பி இவனை பார்த்தாள். “தேங்க்ஸ்டி” என்றான் உரிமையாக. அதை பெருவளத்தான் உணரவே இல்லை. அவன் சொன்னதற்கு வெறுமென தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவள் போய் விட அதன் பிறகு தான் தான் என்ன சொன்னோம் என்றே சிந்தித்தான்.
எப்படி வெகு இயல்பா அவளை ‘டி’ போடுறேன். என்ன இது என்ன உணர்வு இது.. இது ரொம்ப தப்பு... கடவுளே நான் என்ன செய்துட்டு இருக்கேன். என்று தன்னை தானே நிந்தித்துக் கொண்டவன் இனி ஆதினியிடம் அதிகம் நெருங்கிப் பழகக்கூடாது என்று முடிவெடுத்தான்.
சஞ்சுவின் திருமணம் அமோகமாக நடைபெற்றது. அதோடு கனிகாவின் வயிற்றில் கருவும் சூழ் கொள்ள தொடங்கியது. அதன் விளைவாக ஐம்பதாவது நாளில் இருந்து அவளுக்கு வாந்தி மயக்கம் என எல்லாம் ஆரம்பம் ஆனது.
இடையில் சஞ்சுவின் திருமணம் நடை பெற்றதால் கனிகாவின் கருவை கவனிக்க நேரமின்றி அனைவரும் ஏதோ ஒரு வேலையில் பிசியாக சுற்றிக் கொண்டு இருந்தார்கள். சஞ்சு அவளது புகுந்த வீட்டுக்கு சென்ற அடுத்த நாள் காலையில் திடிரென்று கனிகாவுக்கு மயக்கம் வர கண்களை சுழட்டிக்கொண்டு கீழே விழப் பார்த்தாள்.
அருகில் இருந்த ஆதினி அவளை பிடித்து தாங்கிக் கொண்டவள் அவளின் மயக்கம் போக முகத்தில் நீரை தெளித்தவள் அவள் கண் விழிக்கவும்,
“அக்கா என்ன ஆச்சு? ஏன் இப்படி மயங்கி விழற” கேட்டாள்.
“ஆதினி உன் கை ராசியான கை. நீயே போய் அந்த கிட்டை வாங்கிட்டு வாடி” என்று மகிழ்ச்சியுடன் சொன்னவளை பெருமூச்சு விட்டு பார்த்தவள், அந்த அதிகாலை நேரத்தில் அங்கும் இங்கும் தேடி இருபத்தி நாலு மணி நேரம் செயல்படும் மருந்தகத்தில் கனிகா கேட்ட பிரக்னன்சி செக் பண்ற கிட்டை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள்.
அதை வாங்கி செக் பண்ணி பார்க்க இரண்டு கோடு வந்து இருக்க வானமே அவளது கையில் வசப்பட்டது போல ஒரு உணர்வு. இது இதுக்காக தான் இவ்வளவு போராட்டம்.. எவ்வளவு ஊசி எவ்வளவு மாத்திரைகள், எவ்வளவு மருந்து எல்லாம் இதோ இந்த நிமிடத்துக்காக தானே... மகிழ்ச்சியின் உச்சம் என்றால் என்னவென்று அந்த நிமிடம் உணர்ந்தாள் கனிகா. விழியோரம் சிறு நீர் துளி தெரிந்தது.
“நீ ஆசை பட்டது உனக்கு கிடைச்சிடுச்சு. ஹேப்பி தானே...?” என்று கேட்ட ஆதினியை கட்டிக் கொண்டாள்.
“இந்த உணர்வை வார்த்தையால் சொல்லவே முடியாதுடி அந்த அளவுக்கு மனம் முழுவதும் நிரம்பி இருக்கு..” என்றவளின் தலையை தடவிக் கொண்டுத்தவளிடம் தாய்மை அடைந்தவளை காட்டிலும் அதிக தாய்மை உணர்வு எப்பொழுதும் போல இருந்தது. அவளின் அந்த தாய்மை உணர்வை தான் அதிகம் பயன்படுத்திக் கொண்டார்கள் அனைவரும். அது அறிந்தும் ஆதினி புன்னகையுடன் கடந்து போய் விட்டாள். இனியும் கடந்துப் போவாள்.
“செக்கப்புக்கு எப்போ போகணும்”
“போகணும்” என்றவளுக்கு செக்கப்புக்கு போக விருப்பமே இல்லை. மயக்கம் வாந்தி என கனிகாவை பெரிதும் படுத்தி எடுத்தது. அதை சுகமாகவே தாங்கி நின்றாள். சஞ்சுவுக்கு இந்த விசயத்தை சொல்லி இருக்க,
அவள் தன் நாத்தனாரான வேதாவிடம் கனிகா கருவுற்று இருப்பதை சொல்லிவிட கனிகாவுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு வர சொல்லி சொல்லிவிட்டாள். கனிகாவுக்கு மனதை பிசைந்துக் கொண்டு வந்தது. ஏனெனில் வேதா எதற்கு வர சொல்லி இருக்கிறாள் என்று இவளுக்கு தான் நன்கு தெரியுமே. அதனால் கனிகா மருத்துவமைக்கு போகவில்லை.
இங்கே மருத்துவமனையில் அவளுக்காக காத்திருந்த வேதா கனிகா வராமல் போனதில் எரிச்சல் வர சஞ்சுவிடம் போன் போட்டு பேசினாள்.
“இருங்க அண்ணி நான் அக்காக்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கூப்பிடுறேன்” என்றவள் கனிகாவிடம் பேசினாள்.
கனிகா முரண்டு பிடித்து வீட்டிலே இருந்து விட்டாள். மருத்துவமனைக்கு போனால் வயிற்றில் இருக்கும் பிள்ளையை எடுத்து விடுவார்களே என்று அச்சம் கொண்டவள் அறைக்கதவை கூட திறக்கமால் முரண்டு பண்ண என்ன செய்வது என்று தெரியாமல் குமுதா கையை பிசைந்தார். ஆதினி இப்பொழுது தான் ஒரு வாரமாக வேலைக்கு சென்றுக் கொண்டு இருக்கிறாள். அதனால் காலையிலேயே கனிகாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கிளம்பி போய் விட்டாள்.
என்ன நினைப்பில் இருக்கா கனி அப்படினு தெரியல......
டேய் அவ பாவம் டா....விட்டுட்டு....





