“கையை எடுத்து தோள் மேல போடுங்க. என்னால உங்க புல் வெயிட்டை தாங்க முடியல...” என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருந்தாள். இந்த அக்கறையும் கடுகடுப்பும் ஒரு நாளும் கனிகாவிடம் அவன் பார்த்ததே இல்லை.
“சொன்னா சொல் பேச்சு கேட்கணும். அதை விட்டுட்டு எதையாவது பத்தி யோசித்துக் கிட்டே இருக்குறது தான் வேலை” என்றவள் அவனது கரத்தை எடுத்து தன் தோளின் மீது போட்டுவிட்டு அவனை நடக்க வைக்க, அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளின் வேற்று தோளை அழுத்தி பிடித்தான்.
அதுவரை எதையும் நினைக்காத ஆதினி அப்பொழுது தான் தான் வேற்று உடம்போடு ஒரே ஒரு துண்டோடு அவனோடு நிற்பதையே உணர்ந்தாள்.
சட்டென்று அவனை விட்டு விலகவும் இயலாது...! இதென்ன அவஸ்த்தை... என்று முகம் சிவந்துப் போனாள். அவளின் முகச்சிவப்பை பார்த்தவன்,
“நான் ஏன்டி உன்னை முன்னாடியே பார்க்காம போனேன்” என்று அவன் வாய்விட்டு முணக, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் அதிர்வுடன். பின் இயல்பாகி கண்களால் அவனை எரித்தவள்,
“இதோட நிறுத்திக்கிறது தான் உங்களுக்கு பெட்டர் மிஸ்டர் பெருவளத்தான்.” என்றவள் அவனை நகர்த்திக் கொண்டு கூடத்தில் அமரவைக்க பார்க்க, அவளின் கையை பிடித்துக் கொண்டு எதையோ பேச வர,
“ப்ளீஸ் விடுங்க... நான் போகணும்” இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி இந்த ஒற்றை துண்டுடன் அவன் முன்னாடி இருப்பது என்ற கூச்சம் அவளை நெட்டி தள்ளியது.
அதோடு அவனது கரம் அவளின் தோளை அழுத்தமாக பற்றியது. அதில் விதிர்விதிர்த்துப் போனவள் அச்சம் படர்ந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
“நீ தான் பணம் கட்டுனதா சொன்னாங்க அப்பா” என்றான். அவள் எதுவும் பேசவில்லை.
“திருப்பி பணம் கொடுத்தாலும் நீ வாங்கலன்னு சொன்னாங்க. நகையை அடமானம் வச்சி தான் கட்டுனதா சொன்னாங்க” என்று அவன் மேலும் பேச, வலியில் முகம் மேலும் சுறுங்கியது.
“ப்ச் இப்போ அதெல்லாம் முக்கியமா? முதல்ல நீங்க இங்க உட்காருங்க. இல்லன்னா நான் எப்படியோ போங்கன்னு விட்டுட்டு போயிடுவேன்” என்று சொன்னவளின் மிரட்டல் எல்லாம் அவனை கொஞ்சம் கூட அசைக்கவில்லை.
“பணமா தான் வாங்கல அட்லீஸ்ட் மீட்டிய நகையையாவது வாங்கிக்கலாம் இல்லையா...? நீ நகைகளை வாங்கமா இருந்தா என்ன பொருள்(அர்த்தம்)” என்றவனின் கேள்வியில் அவனை முறைத்துப் பார்த்தாள். அவளிடம் தன் பார்வையை அத்துமீற விடவே இல்லை. ஆனால் அவளது தோளில் மட்டும் இருக்க இருக்க அவனது கரம் மிக அழுத்தமாக பதிந்தது.
அதை உணர்ந்தவள் அவனை இதற்கு மேலும் சோதனை செய்ய கூடாது என்று அவனை வலுக்கட்டாயமாக இருக்கையில் அமரவைத்து விட்டு அவள் அறைக்குள் ஓடிப்போக,
“நான் கேட்டதுக்கு நீ எந்த பதிலும் சொல்லலையே...” என்று கத்தி கேட்டான். அதில் கன்னத்தில் போட்டு இருந்த தையலே பிரிந்து போகும் அளவுக்கு போனது. ஆனால் அதையெல்லாம் அவன் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவே இல்லை.
வலியை தாண்டி அவளிடம் பேச வேண்டும் போல ஒரு உணர்வு. அவளை தன்னருகில் வைத்துக் கொள்ள மனம் உந்தி தள்ளியது.
சென்றவள் நின்று நிதானமாக அவனை பார்த்தாள்.
“எனக்கு அந்த நகைகள் தேவையில்லைன்னு பொருள்(அர்த்தம்)” என்று பட்டென்று சொன்னவள், “காயம் ஆறுகிறவரை இப்படி கத்தி பேசாம இருக்குறது நல்லது” என்று விட்டு உள்ளே போய் விட்டாள்.
போனவளை ஒரு இரசனையான புன்னகையுடன் பார்த்தன். இவள் மிகவும் முரண்பட்டு தெரிகிறாள் என்று சிந்தித்துக் கொண்டான்.
“பேசியது இரு வாக்கியம். அதில் முதல் வாக்கியத்தில் கோவம் வந்தது நகை வாங்க மறுத்ததில். அதே இரண்டாவது வாக்கியத்தில் அவளது பேச்சில் தென்பட்ட அக்கறை உயிரோடு சேர்த்து மனதையும் அல்லவா உரசி செல்கிறது” என்று எண்ணியவன் அப்படியே பின்னாடி சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
மூடிய கண்களிலும் நாசியிலும் அவள் குளித்து விட்டு வந்திருந்த சோப்பின் நறுமணமும் தோற்றமும் வர தலையை உலுக்கிக் கொண்டான் பெருவளத்தான்.
‘நான் என் கண்ணியத்தை தொலைத்துக் கொண்டு இருக்கிறேன்...’ என்று எண்ணியவன் வெகு நேரம் அப்படியே இருந்தான்.
“கண்ணை திறந்து இதை குடிங்க” என்று பதமான சூட்டோடு காஞ்சி காய்ச்சி எடுத்து வந்திருந்தாள் ஆதினி.
நிமிர்ந்து அவளை பார்த்தான். வீட்டில் இருக்கும் உடையோடு துண்டை தலையில் சுற்றிய கொண்டையோடு நெற்றியில் ஒரு சின்ன பொட்டு, அதோடு சாமி கும்பிட்டதின் அடையாளமாக திருநீறும் குங்குமமும் வைத்து இருந்தாள் கீற்றாக.
அதன் வாசம் அவனது நாசியில் ஏற மை வைத்திருந்த அவளின் கண்களில் மூழ்கிப் போவது போல அவன் அவளின் கண்களையே பார்த்தான். என்னவோ தன்னை அந்த கண்கள் விழுங்குவது போல ஒரு தோற்றம். சட்டென்று தலையை உதறிக் கொண்டு அவளை பார்த்தான். அவனின் தடுமாற்றம் எதுவும் அவளிடம் தென்படவில்லை.
வாங்கிக்கொண்டான். குடித்தவன் “எங்க வீட்டுல யாரும் இல்லையா...? கஞ்சி நல்லா இருக்கு” என்றான். அவள் முறைத்துப் பார்த்தாள்.
“பேசக் கூடாதுன்னு சொன்னா நீங்க கேட்கவே மாட்டீங்களா?”
“எவ்வளவு நேரம் தான் வாயை மூடியே வைத்து இருக்கிறது குட்டி... கொஞ்சமே கொஞ்சம் பேசிக்கிறேனே” என்றவனை கடுப்புடன் பார்த்தவள்,
“உங்க வாய் உங்க பேச்சு... இதுல நான் சொல்ல என்ன இருக்கு” கேட்டவள் கூடத்திலே அமர்ந்துக் கொண்டாள்.
“கடை கணக்கு பார்த்து தரியா?”
“ஏன் எனக்கு வேற வேலை இல்லையா..? விதுலை பார்க்க சொல்லுங்க”
“ப்ளீஸ்... அவனுக்கு இதெல்லாம் தெரியாது குட்டி” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அறியாமல் அவளது தலை சம்மதமாய் ஆடியது.
“கடைக்கு போன் போட்டு மேனேஜரை டீடையில் மொத்தமும் உனக்கு அனுப்ப சொல்லு..” என்றான். கணக்கு வழக்கு காப்பி எல்லாம் இவளிடம் ஒரு செட் இருக்கும் சாப்ட் காபியில். எனவே இந்த ஒரு வார கணக்கை மட்டும் பார்க்க சொல்லி சொன்னான்.
“யார் யாருக்கு பணம் குடுக்கணுமோ நீயே ட்ரான்ஸ்பர் பண்ணிடு.. நான் அக்கவுண்ட்ல அமாவுன்ட் போட்டு வச்சுட்டேன்” என்றான். எல்லாவற்றிற்கும் தலையை மட்டும் ஆட்டினாள்.
அதன் பிறகு முழுமையாக இரண்டு மணி நேரம் எடுத்தது. பெருவளத்தானிடம் இரு பிரிவாக வேலைக்கு இருந்தார்கள் ஆட்கள். அதில் மாத சம்பளம் வாங்கும் நபர்களும், வார நாட்களுக்கு சம்பளம் வாங்கும் நபர்களும் இருந்தார்கள். அதனால் இது வார இறுதி நாள் என்பதால் அவர்களுக்கு சம்பளம் போட வேண்டும். அதையும் இவளையே செய்ய வைத்தான்.
“ஆடிட்க்கு பைல் குடுத்துட்டீங்களா?”
“இன்னும் இல்ல” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஓரளவு எல்லாமே ரெடி பண்ணிட்டேன். இடையில இப்படி ஆனதுனால...” என்று அவன் நிறுத்த ஆதினி அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அவளின் மௌனத்தை உணர்ந்தவன்,
“பேச மாட்டியா குட்டி...?”
“பேச முடியாத நிலையில இருக்கேன். உங்க மேல கழுத்தளவு கோவம் இருக்கு. ப்ளீஸ் என் வாயை கிளறாதீங்க” என்று பட்டென்று அவள் அந்த இடத்தை விட்டு போய் விட்டாள்.
பெருவளத்தான் நினைத்துக் கொண்டது முத்தம் குடுத்ததை பற்றி, ஆனால் ஆதினியோ என்னால் தான் இவருக்கு இப்படி ஆனது என்கிற குற்ற உணர்வு ப்ளஸ் எனக்கு வந்ததை இவர் வலிக்க போய் வாங்கிக் கொண்டாரே என்ற கோவம். அதனால் அதை பற்றி பேச முடியாமல் எழுந்து வந்து விட்டாள்.
அப்படியே இரண்டு நாள் கடந்துப் போனது. மருத்துவமனைக்கு போனவர்கள் வந்து விட்டனர். வயிற்றில் இன்னும் கரு உருவாகவே இல்லை. அதற்குள் அவள் செய்த அளப்பரையை தாங்க முடியவில்லை அனைவராலும். இருந்தாலும் அவளின் தாய்மை ஏக்கத்தை புரிந்துக் கொண்டு யாரும் எதுவும் பேசவில்லை. ஆனாலும் வெளியே சொல்லாமல் ஒரு சலிப்பு ஏற்பட்டது அனைவருக்கும்.
இதற்கு இடையில் சஞ்சுவிற்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் இருந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி சொல்லி விட, அவர்களை பற்றி விசாரிக்க கூட அவகாசம் இல்லாமல் போனது ஆதினியின் வீட்டு ஆட்களுக்கு.
பெருவளத்தானும் படுத்த படுக்கை ஆகிவிட எங்கிருந்து விசாரிப்பது. முன்பே நன்கு விசாரித்து இருந்து இருந்தால் பின்னாடி வரும் விளைவுகளை எல்லாம் நிறுத்தி இருக்கலாமோ என்னவோ...! ஆனால் விதி என்பது நம்மளையும் விட வலுவானதாயிற்றே. யாரால் அதை மீற இயலும். இன்னார் இதை அனுபவிக்க வேண்டும் என்பது இயல்பு. எனவே வேண்டியவற்றை அனுபவித்தே ஆகவேண்டும் அது முனிவர் என்றாலும் சரி, உலகை ஆளும் மன்னன் என்றலும் விதி என்பது அனைவருக்கும் பொதுவானது.
அந்த விதி இப்பொழுது ஆதினியின் குடும்பத்தை ஆட்டிப் படைக்க போகிறது. பார்க்கலாம் யார் யார் எங்கு கரை ஒதுங்குகிறார்கள் என்று. அதற்குள் எத்தனை பேரின் மனது புண்பட்டு புரையோடிப் போகிறதோ தெரியவில்லை.





