இரத்த வெள்ளத்தில் பெருவளத்தானை பார்த்தவளுக்கு உலகமே இருண்டுப் போனது. இனி அவன் கண் விழித்தால் மட்டுமே இனி அவளின் உலகு மெல்ல மெல்ல பூபாளத்தை காணும்.
இல்லை என்றால் அது என்றுமே சூனியம் நிறைந்த பூலோகம் தான். சுவற்றில் சாய்ந்து முகத்தை மடியில் புதைந்து இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. பற்றுகோலாய் இருந்த கழுத்து சங்கிலியை தடவி பார்க்க அங்கு இருந்த வெறுமை அவளை இன்னும் கலவரப் படுத்த வேகமாய் எழுந்தாள்.
என்ன நடந்தது என்று என எல்லாவற்றையும் ஒரு கணம் ரீகேப் ஓட்டிப் பார்த்தவளுக்கு எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்தது நினைவுக்கு வர வேகமாய் ரிஷப்ஷனுக்கு ஓடினாள்.
“சி... சிஸ்....டர் சிஸ்டர்” என்று அடித்து பிடித்து வந்தவள் சங்கிலி என்று சைகை செய்ய, அந்த பெண் புரிந்துக் கொண்டவளாய்,
“எல்லாவற்றையும் வச்சு தான்ங்க பணத்தை புரட்டினேன். இந்தாங்க இரசீது. குடுக்க மறந்துட்டேன்” என்று சொன்னவள் அதை எடுத்து நீட்ட,
அவளின் ஒட்டு மொத்த உலகமும் மீண்டும் இருண்டுப் போனது. இதழ்களில் மீண்டும் விரக்திப் புன்னகை. எல்லாமே ஒற்றை நொடியில் இழந்துப் போனது போல ஒரு உணர்வு. ஒன்றுமே இல்லாததை அந்த நொடியில் உணர்ந்தவள் இருந்த ஆர்பாட்டம் எல்லாம் வடிந்துப் போய் மீண்டும் பெருவளத்தான் அனுமதித்து இருந்த அறையின் முன்னாடி வந்து அமர்ந்தாள்.
அப்பொழுது சிகிச்சைக்காக தடையாய் இருந்த அவனது உடைகளை எல்லாம் கிழித்து கொண்டு வந்து அவளின் கையில் கொடுக்க அதை பார்த்து இன்னும் உடைப்பெடுத்துக் கொண்டு வந்தது அவளுக்கு அழுகை.
ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் அவள் அழுத அழுகையை பார்த்த அங்கு வேலையில் இருந்த நர்ஸ்களுக்கு எல்லாம் பாவமாய் இருந்தது அவளை பார்த்து.
“யாருமில்லையா...? ரெண்டு பேரும் லவ் மேரேஜா?” என்று ஒரு பாட்டி வந்து கேட்க ஆதினிக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க அவள் விழிக்க,
“வீட்டை விட்டு ஓடி வந்துட்டாலும் இந்த மாதிரி நேரத்துல பெரியவங்க துணை வேணும். நீ போய் உங்க ரெண்டு பேரோட பெத்தவங்களையும் வர சொல்லி போன்ல கூப்பிடு மா. அவனாக வந்தா உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்று அவர் சொன்ன பிறகு தான் தங்களை காதல் கல்யாணம் செய்துக் கொண்ட இணையரராக புரிந்து வைத்து இருக்கிறார் இவர் என்கிறதே புரிந்தது.
இல்லை என்று மறுக்க வந்தவளுக்கு இன்னும் இரண்டு வீட்டிலும் சொல்லவில்லையே என்று புத்தியில் உரைக்க வேகமாய் ரிஷப்ஷனுக்கு ஓடினாள். விசாகனுக்கு போன் போட்டு சொன்னவள், கனிகாவுக்கு போன் போட கைக்காலெல்லாம் நடுங்கிப் போனது.
அவள் கேட்கும் கேள்விக்கு என்னால் எப்படி பதில் சொல்ல முடியும். அவளது கணவனை நான் தானே விபத்தில் மாட்டி விட்டேன் என்று பலி சுமத்தினால் எங்கனம் தாங்குவேன் என்று தடுமாறியவள் அது தானே உண்மை. அதனால் எவ்வளவு பலி சொல் வந்தாலும் அதை முழு மனதுடன் வாங்கி தான் ஆகவேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுத்தவள் கனிகாவுக்கு போன் போட்டாள்.
அடைத்த மிடரை சரி செய்துக் கொண்டு பேச ஆதினியால் கொஞ்சமும் முடியவில்லை. ஆனால் பேசி தானே ஆகவேண்டும். முழு மூச்சுடன் தன்னை தேற்றிக் கொண்டவள் அக்கா போனை எடுத்த உடன்,
“கனிகா உன் வீட்டுக்காரருக்கு இங்க விபத்தாகிடுச்சு. பயப்படும் படி எதுவும் இல்லை. நீயும் எல்லோரும் கிளம்பி வாங்க. நான் இங்க மருத்துவமனையில தான் இருக்கேன்” என்று மருத்துவமனை முகவரியை சொன்னவள் கனிகா பேசும் முன்பு வைத்து விட்டாள்.
அவளின் பேச்சை இப்பொழுது ஆதினியால் எதிர்கொள்ள முடியாது. அந்த நிலையில் ஆதினி இல்லை. எனவே பட்டென்று வைத்து விட்டாள்.
அடித்து பிடித்துக் கொண்டு இரு குடும்பமும் வந்து சேர்ந்தது. இரண்டு ஊருக்கும் நடு தொலைவில் விபத்து என்பதால் இரு குடும்பமுமே ஒன்று போல வந்து சேர்ந்தது.
வந்த உடனே அவளிடம் ஆயிரத்தெட்டு விசாரணை. “உனக்கு எப்படி தெரியும். நீ எப்படி சரியா அங்க வந்த.. மாமாவை எப்படி சேர்த்த...?” என எல்லோரும் அவளை சுற்றி வளைக்க ஆதினிக்கு மூச்சு கூட விட முடியவில்லை. அந்த அளவுக்கு முட்டிப் போனது.
ஒரு கணம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொன்னாள்.
“என்னை காப்பாத்த போய் தான் மா...” என்று சொல்ல வந்தவள் சட்டேன்று மாற்றி “இவருக்கு இப்படி ஆனது” சொல்லி முடித்த அடுத்த நொடி அவளின் கன்னத்திலே ஓங்கி ஒரு அரை விட்டாள் கனிகா..
“உனக்கு கண்ணு தெரியுமா தெரியாதா? நீ கொன்னு புதைக்க என் புருசன் தான் கிடைச்சாரா? உன்னை காப்பாத்த போய் தான்டி என் புருசன் இப்படி குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்குறாரு. என் வாழ்க்கையை அழிக்க வந்த மூதேவி நீ... ச்சீ போடி என் முகத்துலையே முழிக்காத... போ முதல்ல இங்க இருந்து. உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு.. ம்மா முதல்ல அவளை இங்க இருந்து போகச்சொல்லுங்க” என்று கனிகா ஆதினியை அங்கிருந்து விரட்டி அடிக்க அவளை பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் என யாரும் அவளை தடுக்கவில்லை. மௌனமாக அங்கு நடந்வைகளுக்கு சாட்சியாக நிற்க உயிர் அப்படியே சுருண்டுப் போனது.
மீண்டும் அவளது இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை. விசாகன் மட்டும் ஆதினிக்கு ஆதரவாக வர, ஆதினியோ வேண்டாம் என்று கண்களாலே சைகை செய்து விட பொங்கி வந்த வேதனையை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை பாவமாக பார்த்தார்.
உயிரே இல்லாமல் அங்கிருந்து சென்றவளை பார்த்தவருக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. ஆதினி கட்டி இருந்த புடவை முழுவதும் பெருவளத்தானின் உதிரம் மட்டுமே நிறைந்து இருந்தது. அதை பார்க்கையில் உள்ளே மகன் எந்த நிலையில் இருப்பான் என்று அறிந்தவருக்கு மேலும் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்து.
மருத்துவமனையை விட்டு விலக மாட்டேன் என்று அடம் பிடித்த காலை இழுத்துக் கொண்டு போவதற்குள் ஆதினி பெரும் அளவு ஓய்ந்துப் போய் இருந்தாள்.
பெருவளத்தானின் அனைத்து சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து விட்ட பிறகு தனக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது... வேதனையுடன் எண்ணியவள் கையில் இருந்த பெருவளத்தானின் கிழிந்த உடைகளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
அது மட்டுமே ஆறுதல் போல அவளின் மனம் விம்மிப் போனது. எதற்கும் கண்கள் கலங்காதவள் இன்று உரியவனுக்காக இடம் பொருள் எதுவும் பாராமல் நடுவீதியில் கண்ணீருடன் நடந்துச் சென்றாள்.
அவளின் நெஞ்சில் புதைந்துப் போன துக்கங்களுக்கு எல்லாம் சேர்த்து கண்கள் கண்ணீர் வடித்தது. இதுவரை யாரும் காணாத அவளின் கண்ணீரை இனிமேலும் யாரும் காணக் கூடாது என்று வருணன் நினைத்தானோ என்னவோ கனமழையை கொட்டி தீர்த்தான்.
அடர்ந்து பெய்த மழையில் அவளது கண்ணீர் தடம் தெரியாமல் போனது. எங்கு போகிறோம் என்று தெரியாமல் அவள் பாட்டுக்கு போனாள். பெரும் குழி முன்னாடி இருப்பது கூட தெரியாமல் அவள் பாட்டுக்கு போக,
“அக்கா” என்று விதுல் அழைத்துக் கொண்டே அவளின் பின்னாடி விரைந்து வந்து அவளின் கையை பற்றி நிறுத்தினான்.
இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவள் அந்த படுகுழியில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். அதற்குள் விதுல் வந்து காப்பாத்தி இருந்தான்.
“அக்கா ஏனக்கா இப்படி, முன்னாடி என்ன இருக்குன்னு பார்த்தியா?” என்று அவன் பதற,
அவனை ஒரு பார்வை பார்த்தவள்,
“என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ விதுல்.” என்றவளை அப்பொழுது தான் முழுமையாக பார்த்தான். மழைநீரில் பெருவளத்தானின் உதிரம் சற்றே கரைந்துப் போய் இருக்க அப்பொழுது தான் அவளின் காயங்கள் எல்லாம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது.
நெற்றியின் ஓரத்தில் சதை கிழிந்து, கைக்காலெல்லாம் சிராய்ந்து இருந்தது. ஒரு சில இடங்களில் முட்கள் குத்தி, கற்கள் குத்தி என அவளுக்கும் பல இட்னகளில் காயமாகி இருந்து.
ஆனால் அவளுக்கு யாரும் மருத்துவம் பார்க்கவில்லை. பார்க்க மனம் வரவில்லை போலும்.
“அக்கா இந்த நிலையில் வீட்டுக்கு போகவேண்டாம்... வா முதல்ல மருத்துவமனைக்கு போயிட்டு பிறகு வீட்டுக்கு போகலாம்” என்று சொன்னவனின் பேச்சை காதிலே வாங்கிக்கொள்ளாமல்,
“என்னோட ஸ்கூட்டி, மாமாவோட வண்டி எல்லாமே அந்த இடத்துலையே இருக்கு. நீ பொய் எல்லாவற்றையும் கலெக்ட் பண்ணி மெக்கானிக் ஷாப்ல விட்டுடு..” வழியில் போன ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு போய் விட்டாள்.
காயங்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்காமல் அதித காய்ச்சலில் படுத்துவிட்டாள். அங்கு மருத்துவமனையில் தேவைக்கு அதிகமாகவே ஆதினி பணம் கட்டி இருந்ததால் பணத்துக்கு யாரும் அலைய நேரிடவில்லை. விசாகனுக்கு தான் பெரும் மனவருத்தமாய் போனது.
“எல்லாம் எங்களால் தானே... நாங்க மட்டும் அந்த கல்யாண ஆல்பத்தை கேட்காமல் இருந்து இருந்தால் இப்படி ஒரு அவச்சொல் ஆதினிக்கு கிடைத்து இருக்காது. பெருவளத்தானும் இப்படி அடிபட்டு வந்து படுக்கையில் கிடக்க வேண்டி இருந்து இருக்காதே...” என்று நொந்துப் போனார்.
பெருவளத்தானுக்கு அங்கும் இங்கும் அடிபட்டு இருந்த இடத்துக்கு எல்லாம் மருத்துவம் பார்த்து கட்டுப் போட்டு, பேண்டேஜ் போட்டு, எலும்பு முறிந்துப் போனதில் கைக்கு உரிய சிகிச்சை கொடுத்து கட்டுப் போட்டு அவனது கழுத்தோடு கட்டிப் போட்டு இருந்தார்கள்.
காலில் சில இடங்களில் தசை சிதைந்துப் போய் இருக்க அதற்கும் மருத்துவம் பார்த்து என அவனின் உடம்பு முழுக்க முக்கால்வாசி வெள்ளை பேண்டேஜாகத் தான் இருந்தது. முகத்தின் ஒரு பக்கம் நன்றாக அடி வாங்கி இருக்க வாய் திறந்து பேச நாள் ஆகும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்க அனைவருக்கும் வேதனையாய் போனது.





