எப்பொழுது இருக்கும் நிறைவை அன்றைக்கு மற்ற மூவரும் உணர்ந்தார்கள். இந்த மூன்று வருடத்தில் முதல் ஆறு மாதம் மட்டும் விசாகனின் வற்புறுத்தலில் தான் ஆதினி பெருவளத்தானின் வீட்டுக்கு வந்தாள். அதுவும் பெருவளத்தானும் கனிகாவும் இங்கு இவளின் வீட்டுக்கு வந்த நாட்களில் தான்.
அவர்கள் இருவரும் இங்கே வரவும் ஆதினியை அங்கே கூப்பிட்டுக் கொண்டார் விசாகன்.
அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தார் அன்று முதல் முதலாக வீட்டுக்கு ஆதினியை கூப்பிட்ட பொழுது அவள் கேட்ட கேள்வி இன்னும் பசுமையாக இருந்தது அவருள். அதை எண்ணி பார்த்துக் கொண்டே ஆதினியை இப்பொழுது பார்த்தார். ஆதினியும் அதே போல அவரை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இருவரின் பார்வையிலும் ஒரு புரிதல் இருந்ததை உணர்ந்த வாணியும் அவர்களை பார்த்து புன்னகைத்தார். பெருவளத்தானுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவனுக்கும் இந்த நிறைவு மிகவும் பிடித்து இருந்தது.
அதன் பிறகு நால்வரும் சமைத்து ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் பரிமாறியபடி சாப்பிட பெருவளத்தானுக்கு வைகுந்தனிடம் இருந்து அழைப்பு வந்தது. கனிகா அவனுக்கு ஒரு போன் கூட செய்யவில்லை உண்ண வரச்சொல்லி. அதை எண்ணி பெருமூச்சு விட்டனர் அவனின் பெற்றவர்கள்.
“மாப்பிள்ளை சாப்பிட வரலையா?”
“இல்ல மாமா நான் இரவுக்கு வந்து சாப்பிட்டுக்கிறேன். எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம்” என்று அவன் சொல்லி விட அதன் பிறகு அவனை வற்புறுத்தாமல் வைகுந்தன் போனை வைத்து விட்டார்.
மாலை நேரம் ஸ்நேக்ஸ் டைம் என்று பெருவளத்தானும் விசாகனும் அடுப்படிக்குள் நுழைந்து பாத்திரங்களை உருட்ட,
“இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா அடுப்படிக்குள்ள போய் எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா ஆதினி...? இவனுக்கு கல்யாணம் ஆகும் முன்னாடி ஒவ்வொரு ஞாயிறும் அப்பாவும் மகனும் சேர்ந்து அடுப்படியை ஒருவழியாக்கி போட்டுட்டு வந்திடுவாங்க. எனக்கு அதை சுத்தம் செய்யவே ஒரு மாமாங்கம் ஆகும்” என்று அவர் சொல்ல சிரிப்புடன் கேட்டுக் கொண்டாள்.
“இவ்வளவு நாள் கழிச்சி இப்போ ரெண்டு பேரும் அடுப்படிக்கு போய் இருக்காங்க. என்ன நிலைக்கு என் அடுப்படி மாற்றி வைக்க போறாங்களோ தெரியல” என்று சொன்னவர்,
“ஆமா பாப்பா நீ எப்போ ஜாயின் பண்ண போற” என்று கேட்டார்.
“போகணும் அத்தை” என்று மட்டும் சொன்னாள்.
“பெருவளத்தானோட கல்யாண ஆல்பத்தை எடுத்து தாமா. என்னவோ தெரியல அதை பார்க்கணும் போல இருக்கு” என்று கேட்க,
“எங்க அத்தை இருக்கு?”
“அவனோட அறையில தான் இருக்கு” என்று சொல்லவும் எழுந்து அவனது அறைக்கு சென்றாள். இத்தனை வருடம் வந்தாலும் இன்று வரை அவள் காலடி படாத ஒரு இடம் இந்த வீட்டில் இருக்கிறது என்றால் அது அவனது படுக்கை அறை தான்.
முதல்முறை அவனது அறைக்குள் காலடி எடுத்து வைத்தவளுக்கு காலெல்லாம் நடுங்கிப் போனது. இதயம் படபடவென்று துடிக்க “ம்ம்மா... முடியலையே” என்று கண்கள் எல்லாம் கலங்கிக்கொண்டு வர அடுத்த அடி அவளால் அந்த அறையில் எடுத்து வைக்கவே முடியவில்லை.
நெஞ்சமெல்லாம் அடைத்துக் கொண்டு வருவது போல இருக்க நெஞ்சை ஒற்றை கையால் பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்த முயன்ற நேரம் பின்னாடி இருந்து பெருவளத்தானின் குரல் கேட்டது.
“இங்க வாசல்ல நின்னு என்ன பண்ற ஆதினி? உள்ள போக வேண்டியது தானே.. அறைக்குள்ள வர என்ன தயக்கம்” என்று கேட்டவன் மிகவும் இயல்பாக அவளது கையை பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல அதிர்ந்துப் போனாள் ஆதினி.
அவளின் கண்களில் இருந்த அதிர்வை பார்த்து,
“நீ ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியாவே இருக்க...?” உடம்பு எதுவும் சரியில்லையா...?” என்று கேட்டவன் அவளின் கழுத்தில் கை வைத்துப் பார்க்க, பட்டென்று அவனது கரம் தன் மேல் படாமல் ஓரடி பின்னோக்கி எடுத்து வைத்தாள்.
“ஹேய்... என்ன ஆச்சு உனக்கு..?” என்று கேட்டவன் அவளை நோக்கி இன்னும் ஒரு அடி எடுத்து வைக்க அவள் இரண்டடி எடுத்து வைக்க பெருவளத்தானின் புருவம் சுறுங்கியது.
“என்ன தான் குட்டி ஆச்சு உனக்கு...? ரொம்ப வித்தியாசமா நடந்துகுற? எதுவும் பிரச்சனையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, அத்தை உங்க கல்யாண ஆல்பம் கேட்டாங்க. அதை எடுக்க தான் வந்தேன். நீங்களே அத்தை கிட்ட குடுத்துடுங்க” என்றவள் வெளியே போக பார்க்க,
“அம்மா உன்கிட்ட தானே கேட்டாங்க. நீயே எடுத்துக்குடு எனக்கு வேற வேலை இருக்கு” என்று அவன் அலமாரிப் பக்கம் போக இவள் பல்லைக் கடித்தாள்.
“எனக்கு எங்க இருக்குன்னு தெரியல. அதனால நீங்களே எடுத்து குடுங்க நான் போறேன்” என்று அவள் வெளியே போகப் பார்க்க,
“அப்படியெல்லாம் போக முடியாது. அந்த அலமாரியில இருக்கு. போய் எடு” என்றவன் இன்னொரு அலமாரியில் எதையோ தேடினான்.
அவனை முறைத்தவள் தேவையில்லாமல் இவனிடம் வாயாடக் கூடாது முடிவெடுத்தவள், ‘வேகமாய் அதை எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும்’ என்று அவன் சுட்டிக் காட்டிய அலமாரியில் தலையை நுழைத்து தேடினாள்.
“எங்க காணோம். இங்க தானே வச்சேன்..” என்ற சத்தம் அவனிடம் இருந்து வந்தது. “ம்கும் எதையாவது எங்காவது வச்சிட்டு இவருக்கு தேட வேண்டியதே வேலையா போச்சு...” முணகியவள் தன் வேலையை மட்டும் பார்த்தாள்.
“ஒரு ஆல்பத்தை கூட பத்திரமா வைக்கிறது இல்லை. எங்க தான் வைப்பாங்களோ புருசனும் பொண்டாடியும். இந்த இடத்துல காணோம்..” என்று அவள் இன்னும் தலையை உள்ளே விட்டு தேட அவளின் முதுகுக்கு பின் சூடான மூச்சுக் காற்று பட திகைத்துப் போனாள்.
அவள் தலையை வெளியே இழுத்து பின்னாடி திரும்பி பார்க்கும் முன்பே,
“உள்ள கருப்பு பை எதுவும் இருக்கான்னு பாரேன் குட்டி. அதுல லோடுக்கு பணம் குடுக்க வச்சி இருந்தேன். பையையும் காணோம் எங்க வச்சேன்னு ஞாபகமும் வர மாட்டேங்குது” என்று அவளின் இரு பக்க தோளிலும் இரு கையையும் பதித்து அவனும் அவளின் தலையோடு உள்ளே விட்டு தேட ஆதினிக்கு மூச்சு முட்டிப் போனது.
“என்ன பண்றீங்க...?” இதழ்கள் இவளுக்கு தந்தி அடிக்க, அதை அவன் உணராமல் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்.
“என்ன பண்றேன்? பையை தானே தேடுறேன்” என்று இயல்பாக சொன்னவன் இன்னும் தலையை அவளின் தலையோடு உரசிக்கொண்டு உள்ளே தேட, அவனின் இரண்டு நாள் தாடி அடர்ந்த கன்னம் அவளின் கன்னத்தோடு உரசி அவளுள் தீயை மூட்ட திகைத்துப் போனாள்.
‘இவரு தெரிந்து தான் இதையெல்லாம் பண்றாரா... இல்ல தெரியாம பண்றாரா...’ என்று அவள் தடுமாறி நிற்கும் நேரம்,
“ஹேய் இங்க பாரு நீ தேடுன ஆல்பம்” என்று அவளிடம் காட்டியவன்,
“நீ தேடுனதை நான் எடுத்து குடுத்துட்டேன்ல. அதே மாதிரி நான் தேடுனதை நீ எடுத்து குடு குட்டி” என்று அவளுக்கு வேலையை பணிக்க அவனை திரும்பி முறைத்தாள்.





