இருக்கும் நான்கு பிள்ளைகளில் ஆதினியின் மீது ஒரு தனி கவனம் எப்பொழுதும் அவருக்கு இருந்தது. அதனாலே அவளிடம் மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவார். நேரடியாகவும் வர சொல்வார்.
கனிகா இங்க வந்த பிறகு பெருவளத்தானும் கடைக்கு போய் இருக்கும் சமயமாக இவள் பெருவளத்தானின் அப்பா விசாகனை போய் பார்த்து விட்டு வருவாள். இவளுக்கு கிடைக்கும் நேரமே ஞாயிறு மட்டும் தான். எனவே அந்த நாளில் அங்கு விசாகனை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
அதனால் இருவரும் மனம் விட்டு அதிக நேரம் பேசுவார்கள். எந்த இடையூறும் இருக்காது. அப்படி என்ன தான் பேசுவார்களோ அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சில நேரம் பெருவளத்தான் வந்தாலும் அவனை கண்டு கொள்ளாமல் தோட்டத்து பக்கம் போய் விடுவார்கள் இருவரும்.
யாரையும் உள்ளே நுழைக்க மாட்டார்கள். பாண்டு என்றால் பாண்டு இருவரிடமும் அப்படி ஒரு பாண்டு. எனவே அவர்கள் அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்ற க்யூரியாசிட்டி பெருவளத்தானுக்கு உண்டு.
அதனால் அவர்களது மீட்டிங்கை நாளைக்கு பிக்ஸ் பண்ண பார்த்தான். ஏனெனில் நாளைக்கு அவன் வீட்டுக்கு போக வேண்டிய வேலை இருந்தது. அதை ஒட்டி இருவரின் பாண்டை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பியே அப்பாவுக்காக இரக்கப் படுவது போல அவளிடம் பேசினான்.
பெருவளத்தான் ஆதினியிடம் பேசி தான் அவள் விசாகனை பார்ப்பாள் என்றெல்லாம் இல்லை. அவளுக்கு எப்போ தோணுதோ அப்பொழுது போவாள். அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாதது போல பார்த்துக் கொள்வாள் அவ்வளவு தான்.
ஆனால் இந்த முறை இண்டர்வியூ வினால் அவரை போய் பார்க்க முடியவில்லை. அதனால் பெருவளத்தான் இப்படி பேசவும் சரி என்று நாளைக்கு போக ஒத்துக் கொண்டாள்.
வீடு முழுக்க கறி வாசனை தான். ஆனால் பெருவளத்தானின் அப்பாக்கு கொடுக்க மனம் வரவில்லை. அதை பற்றி கவலை கொள்ளாமல் ஆதினி தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள் விசாகனை பார்க்க.
போகும் வழியிலே சில பொருட்களை வாங்கிக்கொண்டவள் அந்த அதிகாலை பொழுதிலே வீட்டு கதவை தட்டினாள்.
“வாங்க மேடம்...” என்ற முகாந்திரத்துடன் அவளை முகம் முழுவதும் புன்னகையுடன் வரவேற்றார் விசாகன்.
பெருவளத்தானுக்கு கூட பிறந்தவர்கள் யாருமில்லை. ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட உறவு முறைகள் தான். அதுவும் அவனின் தாய் வாணி படுக்கையில் படுத்த உடன் அந்த சொந்தமும் இருக்கிற இடம் தெரியாமல் போய் விடவே விசாகன் தனக்கு பிறகு தன் பிள்ளைக்கு உறவு என்று சொல்ல யாராவது வேண்டும் என்று தான் தேடி தேடி பிடித்தது இந்த சம்மந்தம்.
அதில் மாணிக்கமாய் கிடைத்தவள் தான் ஆதினி.
“இந்த கிண்டல் தானே வேணாங்குறது மாமா” என்று சிரித்தவள்,
“அத்தை என்ன பண்றாங்க. தூங்குறாங்களா? முழித்து இருக்காங்களா?” கேட்டுக்கொண்டே அவர் இருந்த இடத்துக்கு விரைந்தாள்.
“ஹாய் அத்தை... என்ன பண்றீங்க? எப்படி இருக்கீங்க” அவரின் நலத்தை கேட்டு அறிந்தவள் அவர் பதில் சொல்ல முடியாமல் கையை அசைத்து சொல்ல,
“நான் நல்ல இருக்கேன் அத்தை... எனக்கென்ன குறை. இப்போ புதிதா ஒரு பெரிய நிறுவனத்துல வேலை கிடைத்து இருக்கு.. சோ ஹேப்பி அத்தை” என்று சிரித்தவள், அவருக்கு தலையை ஒதுக்கி விட்டு கூந்தலை பின்னல் போட்டு விசாகன் கட்டி வைத்திருந்த பூவை எடுத்து சூடி விட்டாள்.
இவள் வருவதற்குள்ளே வாணியை குளிக்க வைத்து இருந்தார். அதனால் அவருக்கு அழகாக அலங்காரப் படுத்தினாள். பொட்டு வைத்து கண்ணுக்கு மை எழுதியவள் மாமனை பார்த்து,
“எப்படி எங்க அத்தை” என்று புருவம் தூக்கி கேட்டாள்.
“என் பொண்டாட்டிக்கு என்ன... அவ எப்பவும் தேவதை தான்” என்று மீசையை நீவி விட்டார்.
“அடேயப்பா ரொம்ப தான்” என்று சிரித்தவள் இருவரின் இணை பொருத்தத்தையும் பார்த்து மனம் மகிழ்ந்தாள்.
படுக்கையில் இருந்தாலும் ஓரளவு எழுந்து உட்கார வாணியால் இயலும். அதோடு ஓரடி ஈரடி எடுத்து வைக்க இயலும். எனவே அவர் இன்னும் உரு குழையாமல் அப்படியே தான் இருந்தார். வாய் மட்டும் தான் பேச வராது.
மற்ற படி ஒரு குறையும் கூற இயலாது. கனிகா அவரை அவ்வப்பொழுது கவனித்துக் கொண்டாலும் அவளுக்கு அதிக பாரம் வைக்காமல் விசாகனே வாணியை பார்த்துக் கொள்வார்.
அதனால் வீட்டில் அதிக பூசல் இல்லை. சமைக்கும் வேலை மட்டும் தான் கனிகாவுக்கு. அதுவும் வெள்ளிக் கிழமை என்றாலே இரவு சமைக்க மாட்டாள்.
அது தான் வீட்டுக்கு போறமே என்று விட்டு விடுவாள். பெரியவர்கள் இருவர் இருக்கிறார்கள் என்று எண்ணி சமைத்து எதுவும் வைக்க மாட்டாள். பெருவளத்தான் முன்பு சொல்லி பார்த்தான். ஆனால் அவள் சொம்பிகொண்டு இருக்க விசாகன் கண்ணை காட்டி விட அதன் பிறகு அவளை எதுவும் சொல்வது இல்லை. ஆனால் அவனுக்கு கொஞ்சம் அது மனக்குறையை கொடுத்தது.
“இன்னைக்கு என்ன சமையல் மாமா” என்றவள் அடுப்படிக்கு சென்றாள்.
“நீ வரேன்னு சொன்னியா அது தான் உனக்கு பிடித்த சாம்பார் ரைஸ்” என்றார்.
“இவ்வளவு காலையிலேயே செஞ்சுட்டீங்களா...? நான் வந்து செய்து இருப்பேன்ல மாமா” என்றவள் சுட சுட எடுத்து போட்டுக் கொண்டவள் வாணிக்கு போட்டு வந்து கொடுக்க,
விசாகன் இன்னும் இரண்டு தட்டில் உணவை போட்டுக்கொண்டு பின்னாடியே வந்தார். பிறகு மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அதில் ஆதினியின் சத்தம் தான் அதிகம் வந்தது...
வீட்டின் உள்ளே நுழையும் பொழுதே ஆதினியின் பேச்சு சத்தமும் அதை தொடர்ந்து அப்பாவின் சிரிப்பு சத்தமும் கேட்க, அதை விட சாம்பார் சாதத்தின் வாசமும் வர அவனுக்கு வாய் ஊறியது.
சத்தம் வரும் இடம் நோக்கி போனவன் வாணியின் அருகே இருக்கையில் எதிரும் புதிருமாய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.
வாணியும் ஸ்பூன் மூலம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார் அவரின் கவனம் மொத்தமும் இந்த இவர்களிடம் மட்டும் தான் இருந்தது.
அந்த சின்ன கூட்டில் தானும் இணைந்துக்கொள்ள ஆசை வந்தது. எனவே அவனும் உள்ளே வர,
“தம்பி உனக்கு சாப்பாடு மேசை மேல எடுத்து வச்சு இருக்கேன். போட்டு சாப்பிடு” என்றார் விசாகன்.
“ஏன் நான் இங்க உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா...” என்று கேட்டவன் தானும் ஒரு தட்டில் உணவை எடுத்து போட்டுக்கொண்டு தாயின் கட்டிலில் கால்மாட்டில் அமர்ந்துக் கொண்டான்.
விசாகனும் வாணியும் ஒரு கணம் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
“என்னப்பா ரெண்டு பேரும் கண்ணாலையே பேசிக்கிறீங்க... என்ன விசயம்?” என்று வெளிப்படையாகவே கேட்க சட்டென்று சுதாரித்த விசாகன்,
“அது சாப்பாடு எப்படி இருக்குன்னு கண்ணாலையே கேட்டேன் தம்பி வேற ஒண்ணும் இல்லை” என்று சொன்னவர் தன் மனைவிக்கு கண்ணை காட்டினார்.
சாம்பார் சாதத்துக்கு அப்பளம் வறுத்து இருக்க ஆதினியின் தட்டில் இருந்த அப்பளம் காலியாகி இருக்க இவனே அவளுக்கு எடுத்து பரிமாற மீண்டும் பெரியவர்களின் கண்கள் சந்தித்து மீண்டது.
அதையெல்லாம் கவனிக்காமல் ஆதினி தலைக்குனிந்து உணவை உண்டுக்கொண்டு இருந்தாள். அவளின் அமைதி பெருவளத்தானை புருவம் உயர்த்த வைத்தது. இவ்வளவு நேரம் அவன் வருவதற்கு முன்பு வரை அவளின் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.
அவன் வந்த உடனே அவளது இதழ்கள் மௌனத்தை கடைபிடிக்க என்னவோ ஒரு மாதிரி ஆனது அவனுக்கு.
“ஏன் என்கிட்டே இந்த ஒதுக்கம்?” என்று கடுப்பானவன் விரைவில் சாப்பிட்டு விட்டு வெளியே போய் விட்டான். அவன போகும் வரை அமைதியாக உண்டவள் அவன் அந்த பக்கம் போனவுடன் சரளமாக பேசினாள்.





