“அக்காவை கூட்டிட்டு வா பாப்பா” என்று ஆதினியாயை தான் பணித்து இருந்தார் குமுதா. ஏனெனில் இவள் தான் சின்னவள், இரண்டாவது மகளை கூட கூட்டிட்டு வர சொன்னால் எங்கே முதல் பெண்ணை பார்க்க வந்து விட்டு இரண்டாவது பெண்ணை தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து சஞ்சுவை அறைக்குள்ளே இருக்க சொல்லிவிட்டு ஆதினியை கூட்டிட்டு வர சொன்னார்.
கனிகாவை கூட்டிக்கொண்டு கூடத்தில் வந்து நின்றவள் ரொம்ப இயல்பாக மாப்பிள்ளையை பார்த்தாள். கனிகாவுக்கு தான் வெட்கம் தலையை குனிந்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கவே இயலாமல் நின்று இருந்தாள். இவளுக்கு அந்த வெட்கம் எல்லாம் எதுவுமில்லை. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தன் அக்காவுக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவரை அந்த சிறிய கூடத்தில் தேடினாள்.
அவளின் தேடலை புரிந்து தன் பெரிய மகளுக்கு மாப்பிள்ளை இவர் தான் காட்டி கொடுக்கும் சாக்கில் ஆதினியிடம்
“இவர் தான் உன் அக்காவை கட்டிக் கொள்ள போகும் மாப்பிள்ளை... பெயர் பெருவளத்தான். சின்னதா கட்டுமானத்துக்கு தேவையான பொருள் எல்லாம் வச்சி நடத்திட்டு இருக்காரு. இது அவரோட அப்பா” என்று அறிமுகம் செய்து வைக்க ஆதினியின் நெஞ்சம் இரண்டாக வெடித்து விழுந்தது. ஆனால் அது பாவம் யாருக்கும் தெரியவில்லை.
அவளின் தலையில் பெரிய இடி விழுந்தால் கூட தாங்கி இருந்து இருப்பாள். ஆனால் அவளின் இதயத்தில் இடி விழுந்து விட பொங்கிக்கொண்டு வந்த கண்ணீரை அத்தனை பேரின் மத்தியிலும் இருந்து மறைக்க படாத படு பட்டுப்போனாள்.
எல்லாம் சிறிது நேரம் தான். தனக்குரிய நிமிர்வை விடாமல்,
“நான் மாப்பிள்ளைக்கிட்ட தனியா பேசணும்” என்று சொன்னாள் ஆதினி. பெருவளத்தானின் பக்கம் இருந்து வந்தவர்கள் எல்லாம் சிரித்தார்கள். பின் இந்த வார்த்தையை பெண் பார்க்க வந்த கனிகா சொன்னால் கூட பெரிதாக தோன்றி இருக்காது.
அவளின் தங்கை இவள் சொல்லவும் எல்லோருமே சிரித்து வைத்தார்கள்.
“போங்க தம்பி எங்க பொண்ணு ரொம்ப சுட்டி. நேத்துல இருந்து வரப்போற அக்கா புருசனுக்காக கேள்வி தாள் எல்லாம் ரெடி பண்ணி இருக்கா... அதுக்கு பதில் சொல்லி பாஸ் ஆகிடுங்க. எங்க பொண்ணை கட்டி கொடுக்கிறோம்” என்று தேவையில்லாமல் வைகுந்தைனின் பக்கம் இருந்து வந்த சொந்தக்கார தாத்தா சொல்ல அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
பெருவளத்தானுக்கும் சிரிப்பு வந்தது. இதென்ன சின்ன பிள்ளை தனமா என்று அவன் யோசிக்கவில்லை. சின்ன பிள்ளை ஆசை பட்டு கேட்கிறாள் என்று தலையை ஆட்டி ஒப்புதல் கொடுத்தவன்,
ஆதினி போன பக்கம் இவனும் போனான். போன உடனே “இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்று சொன்னாள். அவளை பற்றி ஏற்கனவே வைகுந்தன் அவனிடம் சொல்லி இருந்தார்.
எங்க வீட்டுல எங்க சின்ன குட்டி தான் தனி ரகம். அவளை மட்டும் நீங்க கொஞ்சமே கொஞ்சம் பொருத்து போகணும் தம்பி. எல்லா வேலையிலும் படு சுட்டி. ஆனா ரொம்ப கோவம் வரும். ரொம்ப நல்லவ தான். என்ன அதுக்கேத்த உரம் அவளுக்கு கொஞ்சம் சாஸ்த்தி. அவளை மட்டும் மடக்கி போட்டுடுங்க... என்று அவனிடம் சொல்லி இருக்க அப்போதிலிருந்து பெருவளத்தானுக்கு ஆதினி குட்டியாகவே மாறிபோனாள்.
அதனால் அவள் சொன்னதை பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவே இல்லை. சிறுபிள்ளை விளையாடுகிறாள் என்று எடுத்துக் கொண்டான். ஏனெனில் கனிகா அவனிடம் தனியாக பேசி இருந்தாள்.
அவளுக்கு இந்த திருமணத்தில் முழு விருப்பம் என்று சொல்லி இருக்க ஆதினியின் இந்த கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டான். அவளிடம் சரி என்று சொன்னவன்,
சபையில் வைத்து அவனிடம் சம்மதம் கேட்கும் பொழுது முகம் முழுவதும் சிரிப்புடன் சம்மதம் என்று சொன்னான்.
அது வரை அவனது முகத்தை ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த ஆதினிக்கு அவன் திருமணதுக்கு ஒப்புதல் கொடுத்து விட பட்டென்று அவளின் இதயம் வெடித்து சிதறியது... நீக்க முடியாத ஏக்கத்துடன் அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் இதயம் அழுதுக் கொண்டு இருப்பதை அங்கு கூடி இருந்த யாருக்கும் தெரியாமல் போனது.
அன்றிலிருந்து இன்றுவரை அவளின் உள்ளம் அழுவதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். இனிமேலும் அப்படி தான். தன் வேதனையை காட்டிக் கொள்ள மாட்டாள்.
பள்ளி பருவத்தில் இருந்தே அவனை மனதில் சுமந்துக் கொண்டு இருந்தவளுக்கு இந்த திருமணம் அதிக வேதனையை தர தனக்குள் நொறுங்கிப் போனாள். ஆனாலும் தன் நிமிர்வையும் கம்பீரத்தையும் அவள் விட்டுக் கொடுக்கவே இல்லை.
திருமணம் முடித்த பிறகு எத்தனையோ நாள் அவளிடம் கேட்டு இருக்கிறான். ஏன் கல்யாணத்தை நிறுத்த சொன்ன என்று.. ஆனால் அவள் அவனை ஒரு பார்வை பார்ப்பாளே தவிர வேற எதுவும் சொல்ல மாட்டாள். மௌனமாக கடந்துப் போய் விடுவாள்.
இவன் கடை வைத்து இருக்கும் இடமும் ஆதினியின் குடும்பமும் ஒரு ஊர் தான். அதனால் சனிக்கிழமை பெரும்பாலும் கடையில் வேலை இருந்தால் இடையில் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வருவான்.
கல்யாணம் ஆன பொழுதில் ஆதினி வீட்டுக்கு வந்தாலும் தனி அறைக்கு போக மாட்டான். இரவு கூடத்திலே படுத்துக் கொள்வான்.
கனிகா கூட கேட்பாள் ஏன் இப்படி இருக்கீங்க என்று...
“இல்லம்மா அங்க நம்ம வீட்டுல நம்மக்கு வேண்டிய தனிமை கிடைக்கும் பொழுது இங்க வயசு பிள்ளைங்களை வைத்துக் கொண்டு நாம கணவன் மனைவியா இருக்குறது அவ்வளவு நல்லா இருக்கது. அதனால நான் கூடத்திலே படுத்துக்குறேன்” என்று இங்கேயே படுத்துக் கொள்வான்.
அவனது பாயின்ட்டும் சரியாக இருக்க கனிகாவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சனிக்கிழமை காலையில் மார்கெட் போய் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து விட்டு வீடு வந்து விடுவான். இடையில் எதாவது கடையில் வேலை வந்தால் அங்கு போய் விடுவான்.
அதனால் மத்திய சாப்பாடு அவனுக்கு வைகுந்தன் எடுத்துக்கொண்டு போவார். அவர் இல்லை என்றால் ஆதினி தான் போவாள்.
ஏனெனில் அவளிடம் தானே ஸ்கூட்டி இருந்தது. அதோடு அவள் ஸ்கூட்டியை யாருக்கும் கொடுக்க மாட்டாள். அதனால் அவளையே கொண்டு போய் கொடுக்க சொல்வார் குமுதா...
“ஆமா எனக்கு இது தான் வேலை பாரு... எனக்கு வேலை இருக்கு...” என்று போக மறுப்பாள். ஆனால் அவளது மறுப்பை எல்லாம் அங்கு யார் காது கொடுத்து கேட்பது.
பல்லை கடித்துக் கொண்டு அவனுக்கு சாப்பாட்டை கொண்டு போய் கொடுப்பாள். அவளது முகம் கடுகடுவென்று இருப்பதை பார்த்து என்ன நடந்து இருக்கும் என்று அறிந்த பெருவளத்தானுக்கு சிரிப்பு தான் வரும்.
அதென்னவோ ஆதினியின் கோவம் ஒரு நாள் கூட அவனை பாதித்ததே இல்லை. சிறுபிள்ளை கோவம் என்று அவளை பார்ப்பான்.
அப்படி அவனது கடைக்கு அடிக்கடி வர நேர்ந்ததில் தான் அவனது தொழில் பற்றி நன்றாக தெரிந்துக் கொண்டாள். அதோடு சில ஆலோசனைகளும் சொல்வாள். அவனும் அதையெல்லாம் கேட்டு செயல் படுத்தி இருக்கிறான்.





