“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை...” வாய்க்குள் முணகியவள் அதன் பிறகு பாதுகாப்பாக படம் பார்க்க ஆரம்பித்தாள்.
படம் பார்த்துக் கொண்டே அப்படியே அவளுக்கு கண்களை சுழட்டிக் கொண்டு வர சாமியாடினாள். அவள் தலை ஆடுவதை பார்த்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் பெருவளத்தான். அவனின் அணைப்பு கிடைத்த உடன் இன்னும் ஆழ்நிலை தூக்கத்துக்கு சென்றாள் ஆதினி.
படம் முடிந்த பிறகு “ஏய் எரும எழுந்திரு...” என்று சஞ்சு அவளை உசுப்பி விட அதன் பிறகே எழுந்தாள். அப்பொழுது தான் பெருவளத்தனின் மீது சாய்ந்து இருந்ததே உணர்ந்தாள்.
“தள்ளி விட்டு இருக்க வேண்டியது தானே...” முறைத்துக் கொண்டு எழுந்தவள் அதன் பிறகு தன் தம்பியோடு ஒட்டிக் கொண்டாள்.
“நீங்க முன்னாடி போயிட்டே இருங்க.. நான் இதோ வதிடுறேன்” என்ற பெருவளத்தான் ஒரு கடைக்குள் புகுந்துக் கொண்டான்.
“சரி நாம கேப் புக் பண்ணுவோம். மாமா அதுக்குள்ள வந்திடுவாங்க” என்று அவனுடைய போனை வாங்கி கேப் புக் பண்ண ஆரம்பித்தான் விதுல்.
இந்த மனிதன் இப்போ எங்க போறாரு” என்று புருவம் சுறுக்கி பார்த்தாள் ஆதினி.
அவன் ஒரு புடவை கடைக்குள் நுழைந்ததை பார்த்து,
“ஓ...! பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸா...” என்று சிரித்தவள் கனியை பார்த்தாள். கனிக்கு வாய்த்த கணவன் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு மாற்று குறையாத தங்கம். அது இவர்கள் குடும்பத்திற்கு தெரியும் முன்பே ஆதினிக்கு தெரியும்.
அவளின் பள்ளி வகுப்பில் இவன் சீனியர் மாணவன். ஸ்போட்சில் அதிக ஈடுபாடு பெருவளத்தானுக்கு. அப்பவே ஸ்கூல் பீபில் லீடரா இருந்தான் அதுவும் பத்தாவதில் இருந்தே. கிட்டத்தட்ட மூன்று வருடம் அவன் தான் லீடர். ஆள் அப்பவே ஹைட்டும் வெயிட்டுமாக ஒழுக்கமாக இருந்தான்.
அதனால் அவனையே அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தேடுத்து இருந்தார்கள். அவனுக்கு யாரையும் தெரியாது தனிப்பட்ட முறையில். தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பவன். எதாவது ப்ரோக்ராம் என்றால் எல்லோரையும் ஆர்கனைஸ் பண்ணி என ஒரே பிசியாக இருப்பான். எனவே அவனை அறியாத ஆட்கள அந்த பள்ளிக்கூடத்தில் யாரும் இருக்க முடியாது. அது போல தான் ஆதினியை அவனுக்கு தெரியாது. ஆனால் அவனை ஆதினிக்கு நன்கு தெரியும்.
பெருவளத்தானுக்கு கட்டுமான படிப்பு படிக்க மிகவும் ஆசை. சிவில் இஞ்சினியரிங்கில் சேர்ந்தான். ஆனால் அவனது வீட்டு சூழல் அவனை முதல் வருடத்தோடு நிறுத்திக்கொள்ளும் படி ஆனது.
அவனுக்கு அந்த படிப்பில் இருந்த ஆர்வமே ஆதினியை சிவில் இஞ்சினியருக்கு படிக்க தூண்டியது. அவளும் சிறப்பாக படித்து முடித்தாள். மேற்கொண்டு அனுபவத்துக்காக சின்னதாக செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்தாள்.
இப்பொழுது முழுமையாக படிப்பை முடித்த பிறகு பெரிய நிறுவனத்துக்கு எழுதி போட்டாள். வேலை கிடைத்து விட்டது அவளுது திறமைக்கு. அதோடு சிவில் மெட்டிரியல் பத்தி அனைத்தும் தெரிந்துக் கொண்டது பெருவளத்தானின் ஷோரூமில் தான்.
ஒரு நாள் அவனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொன்ன தாயை முறைத்துக் கொண்டே கொண்டுப் போனவள் அவன் கடையில் வேலை செய்வதை பார்த்து புருவம் உயர்த்தினாள்.
அதுவும் அவளின்படிப்பு பற்றிய கருப்பொருள் என்பதால் அவனின் வேலையை நுக்கமாக பார்த்து கவனித்துக் கொண்டாள்.
அவளின் ஆர்வத்தை கண்ட பெருவளத்தான்,
“இங்க வா குட்டி” என்று கூப்பிட்டு தனக்கு தெரிந்த பொருளின் தரத்தை எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். தரம் வாய்ந்த பொருள்களை எப்படி கண்டறிவது என நுணுக்கங்களை எல்லாம் சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டாள்.
அதன் படி அவளுக்கு விடுமுறை நாட்கள் எல்லாம் அவனது கடையில் தான் கழியும். அவள் புத்ததகத்தையும் சேர்த்தே எடுத்துக் கொண்டு வந்து விடுவாள். அப்படி அவள் புத்தகத்தை எடுத்து வரும் பொழுது இவனும் அவற்றை எல்லாம் பிரித்து பார்ப்பான்.
படிக்க முடியாத சூழலை எண்ணி கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது இன்னும் அவனுக்குள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத வகையில் அல்லவா அவனது சூழல் இருந்தது.
முதலில் அவனது அப்பா தரகு வேலை செய்துக் கொண்டு இருந்தார். இரண்டு ஆட்களுக்கு இடையில் மணல் ஜல்லி என கை மாற்றி விட்டுக் கொண்டு இருந்தார். அதையே இவன் இன்னும் கொஞ்சம் முதல் போட்டு ஒரு இடத்தை பிடித்து கடையாக ஆரம்பித்தான்.
அவனது பொருட்களில் உள்ள தரத்துக்ககவே அவனை தேடி வந்தார்கள். அதனால் ஓரளவு வியாபாரம் நன்றாகவே சென்றது... இருந்த கடையை விட்டுவிட்டு வெறும் தரையை வாடகைக்கு எடுத்து அதில் செட் போட்டு கடையை ஆரம்பித்தான்.
அவனது நேரமோ என்னமோ தொட்டது எல்லாம் பொன்னாகிப் போனது. அதனால் தரைவாடகைக்கு இருந்த இடத்தை சொந்தமாக வாங்கிப் போட்டான். கிட்டத்தட்ட சிட்டிக்கு நடுவே ஐந்து ஏக்கர் நிலம்...
எல்லோருமே வியந்து தான் போனார்கள். அவனது அப்பா அவனது தோளை கட்டிக் கொடுத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அதன் பிறகு அந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் முழுமையாக தன் வியாபாரத்தை பெருக்கினான்.
அதன் பிறகு திருமணத்துக்கு பெருவளத்தானின் அப்பா விசாகன் ஏற்பாடு செய்ய இவன் ஒற்றை பிள்ளையாய் இருக்க இவனுக்கு என்று சொந்தம் வேண்டுமே என்று யோசித்து மூன்று நான்கு பிள்ளைகள் இருக்கும் வீடாக பார்த்து செய்யலாம் என்று யோசித்தார்கள். அதற்கு தோதாய் வைகுந்தன் குடும்பம் அமைய வைகுந்தனின் முதல் மகள் கனிகாவை பெருவளத்தானுக்கு பேசினார்கள்.
பெருவளத்தானின் கடையை பார்க்க சொல்லி வைகுந்தன் குடும்பத்தை வர சொல்லி சொல்ல, அந்த பறந்து விரிந்த இடத்தை பாரத்த உடனே வைகுந்தனும் குமுதாவும் பிடித்துப் போனது.
அதன் பிறகே பெண் பார்க்க வரச்சொல்லி சொன்னார்கள். கனிகாவை குறை சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. வேணும் என்கிற அளவுக்கு வருமானம் வருகிறது என்பதால் அவள் வேலைக்கு போகும் கட்டாயம் எதுவுமில்லை என சொல்லி விட வேறு என்ன வேண்டும்.
மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதால் “நீங்க உங்க பெண்ணுக்கு போடுவதை போடுங்க... எந்த கெடுபிடியும் இல்லை. என் மகனுக்கு நல்ல குடும்பத்தை கொடுக்கிறேன்ற நிம்மதி போதும்” என்று சொன்ன விசாகனை அனைவருக்கும் பிடித்துப் போனது.
பெண் பார்க்கும் வைபோகம் சிறப்பாக நடக்க ஆரம்பித்த பொழுது தான் ஆதினிக்கு இவர் தான் உன் அக்காவின் மாப்பிள்ளை என்று அறிமுகமே செய்து வைத்தார்கள் பெருவளத்தானை.
“அக்காவை கூட்டிட்டு வா பாப்பா” என்று ஆதினியாயை தான் பணித்து இருந்தார் குமுதா. ஏனெனில் இவள் தான் சின்னவள், இரண்டாவது மகளை கூட கூட்டிட்டு வர சொன்னால் எங்கே முதல் பெண்ணை பார்க்க வந்து விட்டு இரண்டாவது பெண்ணை தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி விடுவார்களோ என்று பயந்து சஞ்சுவை அறைக்குள்ளே இருக்க சொல்லிவிட்டு ஆதினியை கூட்டிட்டு வர சொன்னார்.





