அத்தியாயம் 38

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

உலகமே வெறுத்துப் போனவள் போல கோயில் சுற்று தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்து எதிரே விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து நின்ற கோபுரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

எல்லாமே வெறுமையாய் அவளுக்கு தென்பட்டது. எதுவுமே பிடிக்கவில்லை. எதுக்காக வாழ்கிறோம், யாருக்காக வாழ்கிறோம் என்கிற விரகத்தி அவளை  பிடித்துக் கொண்டு விட, கழிவிரக்கத்தில் இன்னும் நிலை குலைந்துப் போனாள்.

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. எந்த தவறுமே செய்யாமல் எல்லா தண்டனையும் அவள் மட்டுமே அனுபவிப்பது போல உணர்ந்தாள்.

யாருக்கும் எந்த தீமையும் செய்யாமல் மனசாட்சியோடு வாழ்ந்து வரும் எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை மேல சோதனையா வருது? கருவறைக்குள் இருக்கும் ஏகனிடம் கேட்டவளுக்கு அழுகை விம்மிக் கொண்டு வந்தது.

எல்லாரிடமும் அன்பா ஏமாளியா இருக்குறது தான் தவறு போல.. எண்ணியவளின் நெஞ்சில் அத்தனை பாரம் குடிக் கொண்டது.

திருமணம் ஆனா அன்றைக்கே அந்த மலையமானை விட்டுட்டு வந்து இருந்து இருந்தால் இந்நேரத்துக்கு இத்தனை துயர் தான் அடைந்து இருக்க தேவையே இல்லை. அவனோடு அவன் தங்கைக்காக உடன் இருந்து எல்லா இன்னல்களையும் அனுபவித்து சகித்து எதுக்காக வாழ்ந்தேன்.

என் இரக்க குணத்தால் மட்டும் தான் நான் இப்போ இந்த நிலையில் இருக்கேன். இதற்கு யாரை நொந்து என்ன ஆகப்போகிறது. என்று முழு பழியையும் தன் மீது போட்டுக் கொண்டவளுக்கு நெஞ்சு கன்னத்துப் போனது.

யாருமே வேணாம் என்கிற நிலையில் அவள் இருக்க, அவள் தான் வேண்டும் என்று இதோ அவளின் எதிரில் வந்து நின்று விட்டான் மலையமான்.

அவனை இங்கு எதிர்பாராத தேனருவி திகைத்துப் போனாள். சட்டென்று எழுந்து நிற்க, அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான்.

“இப்படி தான் சொல்லாம கொள்ளாம வருவியாடி.. காலையில இருந்து நாய் அலையிற மாதிரி உன்னை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். மனுசனோட உணர்வு தெரியாம ஆடிட்டு இருக்கியா?” என்று கேட்டவனை ஆழ்ந்துப் பார்த்தாள்.

“உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.. நீ பெரிய இவளா? மகாராணி உன்னை தேடி நான் வரணுமா?” என்று மேலும் பேசியவனை ஆழ்ந்துப் பார்த்தாளே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

அவளுக்கா மற்றவர்களின் உணர்வு புரியவில்லை.. அவளா எல்லோரையும் அலைய வைத்துக் கொண்டு இருந்தாள். அபாண்டமாக பேசுபவனை காண பிடிக்காமல், அவனுக்கு அருகில் நின்று இருந்த தம்பியை பார்த்தாள்.

அவனின் கண்களில் இருந்த அலைப்புருதலை கண்டு தவித்துப் போனவள்,

“மனசு ஒரு மாதிரி இருந்துச்சுடா.. அது தான் பெருவுடையாரை பார்க்க வந்துட்டேன். ரொம்ப தேடிட்டியா?” என்று மாறனிடம் கேட்டவளை கொலை வெறியோடு நோக்கினான் மலையமான்.

அவனை ஒரு பொருட்டாக கூட அவள் மதிக்கவில்லை. அவனின் தேடுதலை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. இத்தனைக்கும் அவன் காலையில் இருந்து அலைந்து திரிந்து அவளை தேடிய தேடலில் அவனது உடைகள் எல்லாம் கலைந்து, தலைமுடி சீரில்லாமல், கண்களில் சிவப்பு ஏறி அவன் வந்து நின்றான்.

ஆனால் அவனை தூசியாக கூட மதிக்காமல், மாறனின் கலைந்து இருந்த தலை முடியை கையால் ஒதுக்கி சீராக்கி விட்டவள்,

“என்னடா சட்டை இப்படி கசங்கி இருக்கு?” கடிந்துக் கொண்டே அவனின் சட்டையை நீவி விட்டவள்,

“சாப்பிடவே இல்லையா? முகம் பாரு எப்படி வாடி இருக்குன்னு..” கேட்டவளை கூர்ந்துப் பார்த்தான் மலையமான். அவள் காணாமல் போனதில் இருந்து தாகத்துக்கு தண்ணீர் கூட குடிக்காமல் புயல் வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து இருந்தான்.

அவளிடம் இருந்து அவனுக்கான ஒரு விசாரிப்பு கூட  வரவில்லை. ஏன் கண் பார்வை கூட அவளிடமிருந்து அவனுக்கு கிடைக்கவில்லை.

“வீட்டுக்கு வராம எங்க போகப்போறேன்.. எதுக்காகடா இப்படி என்னை தேடி அலைஞ்ச” கடிந்துக் கொண்ட அக்காவை கட்டிக் கொண்ட மாறன்,

“பயந்து போயிட்டேன் க்கா” என்று அவளின் தோளில் சாய்ந்துக் கொண்டான். வேலையே யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை மாறன். ஆனால் உள்ளுக்குள் அவ்வளவு பயந்து போய் இருந்தான்.

யாருக்கும் தெரியாமல் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வந்தது அவனுக்கு மட்டும் தானே தெரியும். அக்காவை பார்த்த பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“சரி வா, சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போகலாம்” என்று அவனின் கையை பிடித்து கருவறைக்கு அழைத்துச் செல்ல,

“ஏய் ஹலோ... இங்க ஒருத்தன் நான் இருக்கேன். என்ன என்னை கண்டுக்காம நீங்க பாட்டுக்க போறீங்க?” என்ற மலையமான், கோவமாக தேனருவியை முறைத்துப் பார்த்து,

“என்னடி நக்கலா?” அடித்தொண்டையில் உறுமினான்.

“என்னவோ நான் இங்க இல்லாத மாதிரியே பிகேவ் பண்ற, உன்னை முதல்ல தேடி கண்டு பிடிச்சு வந்தவன் நான் தான். என்னவோ உன் தொம்பி தான் உன்னை அயராமல் தேடி கண்டு பிடிச்சவன் மாதிரி பண்ணிட்டு இருக்க. நான் உன்னை கண்டு பிடிக்கலன்னா இன்னைக்கு இல்ல இன்னும் ஒரு வாரம் ஆனாலும் உன்னை கண்டு பிடிச்சே இருக்க முடியாது” என்றான்.

“அந்த அளவுக்கு சீன் இல்ல. உங்களை யாரு முதல்ல என்னை தேட சொன்னது. உங்களுக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு.. எதுவுமே இல்லை. என்னை தேடி வரச்சொல்லி நான் சொன்னனா? நீங்களா தேடி வந்து மூக்கறுத்து நின்னா நான் ஒன்னும் பண்ண முடியாது. நீங்க என்னை தேடி வரலன்னாலும் இன்னைக்கு இரவே நான் வீட்டுக்கு போய் இருப்பேன்.. தேவை இல்லாமல் இடையில சீன் காட்டியது நீங்க தான்...” என்று அவனை உறுத்துப் பார்த்து சொன்னவள்,

“வா மாறா” என்று தம்பியின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு ஏகன் இருக்கும் கருவறையை நோக்கி சென்றாள் தேனருவி. அவளின் செயலில் பெரிதாக அடி வாங்கிபோனான் மலையமான்.

ஏற்கனவே அவன் விழிகள் சிவந்து இருந்தது. இப்பொழுது அவளின் அவமானத்தில் இன்னும் சிவந்துப் போனது.

நெருப்பு பிழம்பாய் அவன் நின்று இருக்க, சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் கிளம்பி மலையமான் போனாவர்களை உருத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

எப்படியும் தன் காரில் தானே வருவார்கள் என்று அவன் இருக்க, தேனருவி அதற்கு கூட அவனை சட்டை செய்யாமல் தன் காரில் ஏறிக் கொள்ள அவர்களை வெறித்துப் பார்த்தான். மாறன் தயக்கத்துடன் மலையமானை பார்த்தான்.

“மாறன் வண்டியில ஏறு” தேனருவி அதட்டினாள்.

“இல்லக்கா அது வரும் பொழுது அவருடன் தான் வந்தேன்” என்று அவன் தயங்க,

“அப்போ அவரோடையே போ” என்று கதவை அடித்து சாத்தி விட்டு வண்டியை கிளப்ப,

“இல்லக்கா ஒரு வார்த்தை சொல்லலாம்னு தான்” என்று சொன்னவன் மலையமானை நன்றியாக ஒரு பார்வை பார்த்து விட்டு தேனருவியின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

அவளின் கார் கண்ணை விட்டு மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு தலைக்கு ஏறியது சூடு. அவனை இன்னும் சூடு ஏற்றப்போகிறாள் என்று தெரியாது கடுப்புடன் காரை எடுத்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான் மலையமான்.

இதுநாள் வரை எல்லோருக்கும் வளைந்துக் கொடுத்த தேனருவி இவள் கிடையாது என்று அனைவருக்கும் உணர்த்தப் போகிறாள்.

அதன் முதல் படியாக தன் தந்தையின் முன்பு வந்து நின்றாள்.

ஆதூரமாக மகளை பார்த்த மணிவாணனிடம்,

“அவருடன் வாழ போகிறேன் ப்பா. நான் வாழறதை பார்க்க தானே நீங்க ஆசை பட்டீங்க.. என்னால இன்னொரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது. அதுக்கு நான் அவரோடையே மறுபடியும் வாழ ஆரம்பிக்கிறேன்.. பிசினேசை நான் அங்க இருந்தே பார்த்துக்குறேன். நீங்க எப்பொழுதும் போல ஆபிஸ்க்கு வந்திடுங்க” சொன்னவள் கையில் பெட்டியோடு கிளம்பி மலையமான் வீட்டுக்கு வந்து விட்டாள்.

பெட்டியுடன் வந்து நின்ற தேனருவியை புருவம் சுருக்கிப் பார்த்தான் மலையமான். ஏற்கனவே அவளது செயலில் கொதித்துப் போய் இருந்தவன் இப்பொழுது அவளே வர அவனது காட்டில் மழையாகிப் போனது.

ஆனால் வந்தவள் முன்பு மாதிரி ஏமாளியாக வரவில்லை என்று பாவம் அவனுக்கு தெரியாவில்லை.

தீர்க்கமாக அவனை பார்த்தவள், மிக உரிமையாக அவனின் அறையில் தன் பெட்டியில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து அலமாரியில் அடுக்கியவள்,

“இனி இங்க தான் இருக்க போறேன். என்னவோ உள்ளுக்குள்ள குறுகுறுன்னு இருக்குறதா சொன்னீங்களே.. அந்த குறுகுறுப்பை எல்லாம் நீங்களே அடக்கிறீங்க.. அப்படி இல்லமா என் கிட்ட வாலாட்டுனீங்க நீங்க வேற தேனருவியை பார்க்க வேண்டியது வரும்” உறுதியாக சொல்லி விட்டு, அலுவலகம் கிளம்பி போய் விட்டாள்.

தேனருவியின் இந்த அதிரடியில் யோசனையானவன் தானும் கிளம்பி அலுவலகம் சென்றான்.

அலுவலக நேரம் எல்லாம் எந்த ராசாபாசமும் இல்லாமல் மிதமாகவே போனது. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு தான் மலையமானின் சோதனை காலம் ஆரம்பம் ஆனது.

உடம்பு முழுக்க மலையமானின் தொடுகை தான் நிறைந்து இருக்கு. அதை மறக்கவோ மறைக்கவோ முடியாத அளவுக்கு ஆழமாக அவளுள் ஊடுருவி இருக்க அவளால் எப்படி வேறு ஒரு ஆடவனை கல்யாணம் செய்துக் கொள்ள இயலும்.

அது தெரியாமல் மணிவாணன் வேறு அவளிடம் இருந்து தாலியை பறிக்க பார்க்க, அவளால் இயலுமா என்ன? அதை சாக்காக வைத்துக் கொண்டு மலையமானும் அவளிடம் ஆட்டம் காட்டுகிறான். முடிந்து போன ஒரு உறவை மீண்டும் தொடங்க வைக்க பத்து வருட அக்ரிமென்ட் வேற, அவன் பேசிய பேச்சுகளை எல்லாம் மறந்து முழுமையாக அவனுடன் வாழ்ந்து விட முடியுமா என்ன? அவள் என்ன ஈச்ட்டம் போல மெமரியை அழித்து அழித்து நிரப்பும் ரமா, இல்ல ரோமா.. உயிரும் உணர்வும் உள்ள மனுசியாயிற்றே.. அவள் கொண்ட காயங்களுக்கு பழிக்கு பழி வாங்காமல், தீர்வு காணாமல் அவனுடன் இழைந்து குலைந்து அவ்வளவு எளிதாக குடும்பம் நடத்திவிட முடியுமா?

தான் கொண்ட காயங்களுக்கு மருந்து மலையமான் தான் பூச வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இதோ பெட்டி படுக்கையுடன் அவனது வீட்டுக்கு வந்து விட்டாள். இதிலாவது பெண்ணவள் வெற்றி பெறுவாளா பார்ப்போம்..

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top