“பொழிலி அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்... அந்த அய்யாக்கிட்ட ஒரு சம்மந்தியா கெளரதையா நடந்துக்கணும்... இல்லாதவகன்னு ஏதாவது குசும்பு பண்ண நினைச்சா பொறவு ராக்காயும் சரி பிச்சாயும் சரி சாமி ஆடிபுடுவாளுக...” எச்சரித்தார்கள் ஆத்தாக்கள்.
அதன் படி நாளை வரும் சம்மந்திக்காக அந்த வீடு இப்பொழுதே குதுகலத்துடன் இருந்தது... இரவு உணவை உண்டுவிட்டு அனைவரும் அவரவர் அறையில் பதுங்க, பூம்பொழிலி மாதுமையாள் மட்டும் கலவரத்துடன் தங்களது அறையில் கண்களை இறுக மூடிக்கொண்டு பெரிய போர்வையில் பதுங்கிக்கொண்டு இருந்தாள்.
கொற்கையன் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, உள்ளே நுழைந்த பாண்டியன் அவளை சிறிதும் கூட கண்டுக்கொள்ளாமல் தன் போக்கில் தன் வேலைகளை முடித்தவன் அவளின் அருகில் வந்து படுத்துக்கொண்டான்.
அவளும் இதோ இப்பொழுது தொடுவான் இந்த நொடி தொடுவான் என்று பார்த்துக்கொண்டு இருக்க, அவனோ படுத்தது படுத்தவாக்கிலே இருந்தான்.
“என்னாச்சு இவருக்கு...” லேசாக தலையை தூக்கி பார்த்தாள். அவன் விடிவிளக்கு வெளிச்சத்தையே வெறித்துக்கொண்டு இருந்தான்.
அவனது பார்வையில் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் “என்ன ஆச்சுங்க...” என்றாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் பதில் எதுவும் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்டான்.
“என்ன இது முதுகை காண்பிக்கிறீங்க... இந்த பக்கம் திரும்பி படுங்க...” என்று அவள் அவனை தொட்டு உசுப்பி விட,
“இங்க பாரு பொழிலி இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... இனி நீ யாரோ நான் யாரோ.. வெளி உலகத்துக்கு தான் நாம கணவன் மனைவி..”
“அது என்ன தேவைக்கு...” என்றாள் வெடுக்கென்று.
“உனக்கும் எனக்கும் கொஞ்சம் கூட ஒத்தே வராது. அதனால நீ என்கிட்டே இருந்து தள்ளியே இரு...” என்றான் உறுதியாக.
“நீங்க என்ன லூசா... இப்போ தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சி அக்கடான்னு இருக்கலாம்னு பார்த்தா நீங்க புதுசா ஆரம்பிக்கிறீங்க...”
“ஏதோ நீ முயற்சி பண்ணி முடிச்ச மாதிரி பேசுற... ஆத்தாக்கள் முயற்ச்சியில தான் இன்னைக்கு நீ என் கூட இருக்க... இல்லன்னா நீ ஒரு எடத்துலையும் நான் ஒரு எடத்துலயும் தான் இருக்கணும்...”
“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்றீங்க...” கடுப்படித்தாள்.
“உன் மனசுல நான் இல்லவே இல்லடி... அதனால தான் ரொம்ப சுலபமா நீ என்னை இன்னொருத்திக்கிட்ட தாரை வார்த்து குடுத்துட்டு வந்த... உனக்கு உன் மகன் வேணும்.. ஆனா நான் வேணாம்ல...”
“உனக்கு சுட்டு போட்டாலும் என்மேல காதல் வராது. அந்த காதலை உன்கிட்ட எதிர்பார்த்து எதிர்பார்த்து நான் தோத்து போறத விட தனியா இருக்குறதே சிறப்பு... அதனால நீ என்னை விட்டு விலகியே இரு... அது தான் நமக்குள்ள இருக்க ஒரே உறவு...” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டான்.
“இங்க பாருங்க மாமா இதெல்லாம் ரொம்ப அதிகம் மாமா... ஏதோ தெரியாத பிள்ளை அறியாம செஞ்சுட்டேன் மாமா. அதுக்காக இப்படி தள்ளி வைக்கிறதெல்லாம் சரி இல்லை மாமா சொல்லிட்டேன்... பொறவு நீங்க என் கோவத்துக்கு ஆளாகிப்புடுவீங்க மாமா...” என்று வார்த்தைக்கு வார்த்தை மாமா மாமா என்று போட்டு பாண்டியனை எச்சரித்தாள்.
“ஏய்.. என்னடி இப்போ தான் ரொம்ப ஓவரா போற.. நான் மாமான்னு கூப்பிட சொல்லும் போதெல்லாம் கூப்பிடாம ஓவரா சீன போடுவ... இப்போ என்னவோ மாமான்னு உறுகுற....” என்று கடுப்படித்தவன்.
“நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் என் உறுதியில இருந்து நான் விகல மாட்டேன்... அதனால் என் பின்னாடி சுத்தமா ஒழுங்கா தூங்குற வேலையை பாரு...” என்று அதட்டினான்.
“ம்கும் உங்க பலவீனம் என்னன்னு எனக்கு தெரியும். தேவையில்லாம சபதம் எல்லாம் போட்டு தள்ளி இருக்காதீங்க. பொறவு நான் முறுக்கிக்கிடுவேன்.” என்றாள்.
“ஏய் சும்மா இருக்கவன சும்மா சும்மா சொருஞ்சி விடாதடி... சேதாரம் ஆகாம தள்ளி போ...” என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
“ம்ஹும் நான் தான் கொவிச்கிக்கணும் ஆனா இங்க எல்லாமே தலைகீழாக இருக்கு...” கலங்கி நின்றவள் சில கணங்கள் மட்டுமே அவ்விடம் இருந்தாள். அவனோடு பின் சென்றாள் விரைந்து. ஆனால் அதற்குள் அவன் வீட்டை விட்டே சென்றிருக்க தேங்கிய கண்ணீர் துளிகள் கன்னத்தை நிறைத்து அவளின் நெஞ்சில் இறங்கியது.
வாசற்படியில் பிடித்துக்கொண்டு அப்படியே தோய்ந்து சாய்ந்து நின்றாள்.
அவளுக்கு அவனை எவ்வாறு சமாதனம் செய்வது என்று நிஜமாகவே தெரியவில்லை. அதனால் தான் அவள் படுக்கையை கை காட்டினாள். ஆனால் படித்து பட்டம் வாங்கிய பாண்டியனுக்கோ அது தவறாய் பட்டது.
“நான் படுக்கைக்கு அலைகிறவனா...? அப்போ அவ மேல எனக்கு வெறும் இந்த சதை பித்து தான் இருக்கிறதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காளா..?” வேதனையுடன் தன் புல்லட்டில் பறந்தவன் ஒரு இடத்தில் நிலைக்கொண்டு கண்டபடி தன்னையும் திட்டிக்கொண்டு அவளையும் திட்டி தீர்த்தான்.
“என்னோட கோவம் எதுக்குன்னு கூட இவளுக்கு தெரியாதா...? என்னை எப்படி சமாதனம் பண்ணனும்னு கூடவா தெரியாது... இவளை எல்லாம்...” என்று இன்னும் அதிகமாக திட்டி தீர்த்தான்.
வாசற்படியில் சாய்ந்து இருந்தவளின் தோளில் ஒரு கரம் பதிய திரும்பி பார்த்தாள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு.
ராக்காயி நின்று இருந்தார்.
“ஆத்தா...” என்று கதறி அவர் மீது சாய்ந்துக்கொண்டு தேம்பினாள்.
“ஏன் வெசனபடுறவ... போனவன் திரும்பி வருவான்... நீ எதுக்கு கண்ணீரும் கம்பலையுமா நிக்கிற கண்ணு... கண்ணை துடை.” என்று அவரே அவளின் விழிகளை அழுத்தி துடைத்துவிட்டார்.
“இந்தா ஆத்தா இத குடி...” என்று சுக்கு ஏலக்காய் வெள்ளம் தட்டி போட்டு சூடாக கடுங்காப்பியை நீட்டினார் பிச்சாயி.
“எனக்கு எதுவும் வேணாம் ஆத்தா...” என்று கண்ணீருடன் சொன்னவளை தன் தோளில் தாங்கி,
“அப்படி சொல்லாத தாயி... ரெட்ட புள்ளய தாங்கி நிக்கிறவ இப்படி ராவு பொழுதுல கண்ண கசக்கிக்கிட்டு இருந்தா சளி பிடுச்சுக்காது... இத குடி த்தா...” பிச்சாயி அவளுக்கு ஊட்டியே விட, அந்த கரிசனையில் மனம் நெகிழ்ந்தது.
“ஆத்தா அவரு...” தேம்பினாள்.
“பொசகெட்ட பய எங்க போயிட போறான்... இன்னும் கொஞ்ச நேரத்துல பொழிலின்னு வந்து நிப்பான் பாரு... நீ இத குடி... அவன சமாளிக்க உனக்கு தெம்பு வேணாமா தாயி... குடி த்தா...” பிச்சாயியும் ராக்காயியும் சொல்லி சொல்லியே அவளை பருக வைத்து அவளை மேற்கொண்டு அழ விடாமல் பார்த்துக்கொண்டார்கள்.
அந்த நேரம் வெள்ளியம்பலத்தார் ஏதோ சத்தம் கேட்க வெளியே எட்டி பார்த்தார். மூவரும் கீழே அமர்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார்கள்.
பின் உள்ளே சென்று ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு வந்து தன் மருமகளிடம் நீட்டி,
“போத்திக்க த்தா குளிரும்...” என்று பனிவாடையை சுட்டி காட்டி குடுக்க சின்ன சிரிப்புடன் வாங்கி கொண்டாள்.
Nice





