“பாண்டியன் என் கழுத்துல தான் தாலி கட்டி இருக்காரு... பாருங்க..” என்று இன்னும் மீசையில் மண் ஒட்டாமலே பேசிக்கொண்டு இருப்பவளை என்ன செய்வது என்று பார்த்தார்கள் ஆத்தாமார்கள் இருவரும்.
அந்த தாலியை தூக்கி பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்தார்கள்.
“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க...” கோவமாக கேட்டாள்.
“பின்ன சிரிக்காம என்ன செய்ய சொல்ற... எங்க தாலிக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு...” என்று சொன்ன பெரியவர்கள் தங்களது தாலியை தூக்கி காண்பித்தார்கள்...
அதில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
“அது போல தானே இதுவும் இருக்கு...” என்றாள் சுபஸ்ரீ.
“அது போல தான் இருக்கு... ஆனா என் பேரன் கட்டுனது அது இல்ல...” என்ற ராக்காயி பொழிலியின் ரவிக்கையில் ஒளித்து வைத்திருந்த சங்கிலியை வெளியே எடுத்து காண்பித்தார்கள்.
அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை சுபா.
“அப்போ எனக்கு குடுத்தது...” ஆத்திரத்துடன் பொழிலியிடம் பாய்ந்தாள். இடையில் பாண்டியன் வந்து நின்றான் அதிக கோவத்துடன்.
அதில் பின்னடைந்தவள் தன் கண்களாலே பொழிலியை முறைத்தாள்.
“எந்த பொண்ணும் தன் தாலிய கலட்டி தரமாட்டா... அதை நீ நம்புன பாரு அது தான் உன்னோட முட்டாள் தனம்...” என்ற பாண்டியன்,
“நான் அவ கழுத்துல கட்டுன தாலியில எங்க ரெண்டு பேரோட பெயரும் இருக்கும்...” என்றவன் பொழிலியின் தாலியை தூக்கி காட்டினான். பொழிலி அணிந்து இருந்த தாலியின் பின் பக்கத்தில் பாண்டியன் பொழிலி என்று அச்சிடப்பட்டு இருந்தது. கூடவே திருமண நாளையும் சேர்த்து இருந்தார்கள்.
அதில் இன்னொரு விசேசம் என்ன என்றால் தாலி இரண்டு முகப்பு வைத்து இருக்கும்.. இடையில் ஒரு ஒட்டு போய் இருக்கும் அதை அழுத்தி திறந்தால் அதிலிருந்து ஒரு இதயம் பாதி பாதியாய் வெறும் தங்க தகட்டால் செய்யப்பட்டு இருக்கும்.. தாலி சேரும் பொழுது அந்த பாதி பாதி இதயம் இணைந்து ஒரு இதயமாக உள்ளே மறைந்து போகும்... அதையும் செய்து காண்பித்தான்.
“ஓ... இதுல இவ்வளவு இருக்கா...” என்று வியந்து போனாள் பொழிலி... அதே போல தான் இரு ஆத்தாமார்களின் தாலிகளிலும் இருந்தது..
“எங்க உன் தாலியில இது போல இருக்கான்னு காமி...” நக்கலுடன் கேட்டான் பாண்டியன்.
பொழிலி செய்த தாலியில் இதெல்லாம் எதவும் இல்லை. தன் தாலியின் மாடலில் உள்ள ஒரு தாலியை வாங்கி கோர்த்து இருந்தாள்.
“இதுக்கு தான் கொஞ்சமாச்சும் படிச்சு இருக்கணும்... ம்ஹும் ஒண்ணும் தெரியாம மக்கா இருக்கேன்...” என்று முணுமுணுத்தாள்.
“நீ இப்படி இருக்குறது தான்டி எனக்கு வசதி.. எதுவும் படிக்காமாலே நீ இந்த அளவு கிரிமினலா யோசிக்கிற... இதுல நீ படிச்சு பட்டம் மட்டும் வாங்கினன்னு வை நான் அம்பேல்..” என்றான் கோவத்துடன்.
அவனது கோவத்தை கண்டு உதடு சுளித்தவள் “பொறாமை... எங்க நான் படிச்சு பட்டம் வாங்கி உங்களுக்கு முன்னாடி கலெக்டரு ஆகிடுவனோன்னு...”
“ம்கும்... ஆமான்டி அப்படியே பட்டம் படிச்சு முடுச்சவுடனே இந்தாங்க அம்மணி இந்த ஊரு கலெக்டர் போஸ்ட்ட எடுத்துக்கோங்கன்னு வரிசையில நிப்பாங்க... நீ என்ன பண்ற பதவி ஏத்துக்கிட்டு வந்துடு சரியா...?” என்று முறைத்தான்.
“அப்போ அப்படி இல்லையா...?” அப்பாவியாய் கேட்டாள்.
“அடியேய் அதுக்கு மேற்கொண்டு படிக்கணும்டி...” கடுப்படித்தான்.
“அப்போ சரி நாம சோராக்குற வேலையை மட்டும் பார்ப்போம்.. அது தான் சுலுவு எனக்கு..” ஈஈ என்று இளித்துக்கொண்டு பின் வாங்கினாள்.
“நீ பொழிலியோட அப்பாவ காப்பத்துன ஒரே நன்றி கடனுக்காக தான் அவ இவ்வளவு செஞ்சி இருக்கா... ஆனா அதுக்காக நாங்க எங்க பேரனோட வாழ்க்கையை நாசமாக்க முடியாது இல்லையா...?”
“கொற்கையனுக்கு உடம்பு சரியில்லாம போனப்ப நீ பக்கத்துல இருந்து காப்பாத்தின. அதுக்கு வேணா உனக்கு சிலை வைக்கிறோம்.. ஆனா அதுக்காக என் பேரன் வாழ்க்கையில விளையாண்டு பார்க்காத... பொறவு நீ ராக்காயி பிச்சாயி முழு விஸ்வரூபத்தை பார்க்க வேண்டியது வரும்.” என்று ஆத்தாமார்கள் இருவரும் மிரட்டினார்கள்.
“எப்படி உங்க பேரனோட படுக்க பணம் வாங்கிட்டு வந்து வாரிசு பெத்து குடுக்குறவள தான் பேத்தி பேத்தின்னு தலையில தூக்கி வச்சி கொண்டாடி அவ வயித்துல இருக்க பிள்ளையை வாரிசுன்னு கொண்டாடுவீங்களா...? இது தான் உங்க குடும்ப கெளரவமா...?” நக்கல் பண்ணினாள் சுபா.
அதில் பொழிலியின் முகம் அவமானத்தில் சிவந்து போக கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது.
“அவ பணம் கேட்டு இருக்க மாட்டா... எனக்கு தெரிஞ்சி நீயும் உன் குடும்பமும் தான் அவக்கிட்ட எதை எதையோ பேசி ‘இந்த கல்யாணத்தை செஞ்சுக்கோ... உனக்கு பணம் தரேன்னு சொல்லி இருப்பீங்க... அதுவும் உன் கிட்ட பட்ட மருத்துவ கடனுக்காக மாட்டுமா தான் இருக்குமே தவிர அவ அந்த காசை வச்சி வயிறு வளர்த்திருக்க மாட்டா... எனக்கு என் பொண்டாட்டிய பத்தி ரொம்ப நல்லாவே தெரியும்...” என்று மீசையை முறுகினான் பசும்பூண் பாண்டியன்.
அவன் அப்படி சொல்லவும் பொழிலி வியப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பார்வையிலே அது தான் உண்மை என்று அங்கிருந்த எல்லோருக்கும் நன்கு விளங்கியது...
சுபாவுக்கு அதிலும் தோல்வியாகி போக, முகம் கருத்து நின்றாள்.
“இன்னும் இங்க எதுக்கு நிக்கிற... முதல்ல கிளம்பு...” என்றார்கள் ஆத்தாமார்கள்.
“இது என்னோட மருத்துவமனை...”
“அதுக்குன்னு இங்க நிற்பியா...? இந்த அறைக்கு என் பேரன் உங்க மருத்துவமனைக்கு காசு கட்டிக்கிட்டு இருக்கான்.. கொள்ளு பேரனுக்கு சரியாகுற வரை இங்க தான் இருப்போம். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு..” என்றார்கள்.
ஏதோ அவள் பேச வர பாண்டியன், “கெட் அவுட்...” கர்ஜித்தான். அதில் சுபாவுக்கு உடம்பு வெடவெடத்து போனது.
“இல்ல அது...” என்று அவள் ஏதோ சொல்ல வரும் முன்பே,
“ஏன்டி நீ அடிச்சி வீழ்த்த அவரு என்ன புல்லா இல்ல புல்லாங்குழலா... பாண்டியன் டி... இந்த பதினெட்டு பட்டிக்கே சிங்க ராஜா... எங்க பேரனோட வாழ்க்கையை அம்புட்டு சுலபமா உனக்கு தூக்கி குடுத்துடுவமா என்ன...?” ராக்காயும் பிச்சாயும் மாறி மாறி அவளை கேள்வியாக கேட்டு தினறடித்தார்கள்.
“ஊர்ல ஒரு பஞ்சாயத்துனாளே இறங்கி செய்வோம்... நீ எங்க வீட்டுலையே பஞ்சாயத்த கூட்ட பார்க்குறியே சும்மா விடுவமா உன்னை...?”
“இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை... இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கிட்டு ஒழுங்கா மருத்துவம் பண்ற வேலைய பாரு... இல்லன்னு வை...” என்ற போதே வெளியில இருந்து பவளத்தின் மாமன் உள்ளே நுழைந்தான்.
“அம்மணி இப்போ நீங்களா போகலன்னா உங்களை கட்டி தூக்கிட்டு போக ஆளுக தயாரா இருக்காக... எப்படி வசதி...” என்று அந்த முரட்டு கிராமத்தானை பார்த்து பாண்டியன் நக்கலாக அவளிடம் கேட்க, நடுநடுங்கி போனாள் சுபஸ்ரீ.
அதன் பிறகு ஒரு வார்த்தை பேசாமல் வெளியே சென்றுவிட்டாள். அவள் சென்ற அடுத்த நிமிடம் கொற்கையனை அழைத்துக்கொண்டு வேறு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு சென்று கொற்கையனுக்கு எல்லா பரிசோதனையும் செய்து அவன் இயல்பாக இருக்கிறான் என்று தெரிந்துக்கொண்ட பின்பு அனைவரும் வீட்டற்கு திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்தவர்களிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே பாண்டியம்மாவிற்கு ஆத்தாக்கள் குடுத்த பதிலடி தெரிந்து இருந்ததால் யாருக்கும் கேட்க துணிவு இல்லை. அதோடு நந்தினியையும் பாண்டியம்மா வந்த அன்னைக்கே ஊருக்கு அனுப்ப சொல்லி இருந்தார்கள். அவர்களின் பேச்சுக்கு மறுப்பேச்சு ஏது அந்த வீட்டில்.
அதனால் உடனடியாக நந்தினியை ஊருக்கு அனுப்பி இருந்தார் வெள்ளியம்பலத்தார்.
வீட்டிற்கு வந்த உடன் பொழிலி கருவுற்று இருப்பதை சொல்ல, அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் சாரல் தெரிந்தது. நின்ற பாண்டியரும் வெள்ளியம்பலத்தாரும் தன்னை போல மீசையை முறுக்கிக்கொள்ள பாண்டியனும் கம்பீரமாக மீசையை முறுக்கிக்கொண்டு கோவத்துடன் தன் மனைவியை பார்த்தான்.
அதில் உடல் தூக்கிவாரிப்போட வேகமாய் தன் மகனை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அறை பக்கம் ஒதுங்கி கொண்டாள்.
ஆத்தாக்கள் இருவரும் மற்றவர்களுக்கு லேசு பாசாக விஷயத்தை சொல்லி,
“இதுக்கு மேல யாரும் இந்த விஷயத்தை கிண்டி கிளற கூடாது... முக்கியமா மருமகளே உனக்கு தான்..” பிச்சாயி எச்சரிக்க,
“எனக்கு என்ற மகனோட மகிழ்ச்சி தான் முக்கியம் அத்தை... அதுக்கு பிறகு தான் மத்ததெல்லாம்...” என்றார் மீனாச்சியம்மை.
“அதோட நம்ம வீட்டுக்கு வந்த பிள்ளைக்கும் ஒரு மனசு இருக்குன்னு மனசுல வச்சுக்கிட்டு அவக்கிட்ட நடந்துக்க... இல்ல இப்பவும் என் மகனுக்கு இன்னொரு பொண்ணை பார்க்கவேண்டியது வரும்..” அசால்ட்டாக சொன்னார் ராக்காயி.
“ஆத்தாடி அடி மடியிலேயே கை வைக்கிறீக...” என்று தனக்குள் புலம்பியவர் சம்மதமாக தலையசைத்தார்.
Nice





