ஒரு ஆண் மகனாய் பாண்டியனுக்கு சுபஸ்ரீ சொன்னதை கேட்டு அவ்வளவு கோவமும் ஆத்திரமும் வந்தது... ஆனால் அப்படி பணம் வாங்க வேண்டி பொழிலிக்கு என்ன அவசியம் வந்தது என்று தான் பாண்டியன் சிந்தித்தான்.
பொழிலிக்கு உடலெல்லாம் கூசியது... ஏனெனில் பாண்டியனிடம் அவள் அந்த அளவு உரிமை எடுத்து தானே அத்தனை நாட்களும் வாழ்ந்து இருந்தாள். இப்பொழுது அது அத்தனையும் நடிப்பு என்றுவிட்டால் அவளால் அதை தாங்க முடியுமா...?
இல்லை பணத்துக்காக தான் என்னோட படுத்தியான்னு கேட்டா அவளால் அதை தாங்க முடியுமா...? விழிகளில் பொன்னி நதி போல வெள்ளம் பெருக்கெடுக்க, தலையை நிமிர்ந்து குற்றத்தை மறுக்க முடியவில்லை அவளால்.
அதுவும் இரு ஆத்தாமர்களின் முன்னிலையில் இந்த அசிங்கத்தை போட்டு உடைத்ததை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அதை தானே சுபஸ்ரீயும் எதிர்பார்த்தாள்.
இரண்டு ஆத்தாமார்களுக்கும் தெரிந்தால் மொத்த குடும்பத்துக்கும் தெரியும்... அதோடு அவளின் இழிவான செயலை கண்டு அவர்களே பொழிலியை வீட்டை விட்டு விரட்டிவிடுவார்கள் என்று கணக்கு போட்டாள்.
“இந்தா புள்ள... எங்க பொழிலி உன்கிட்ட காசு வாங்குனுச்சுன்னா அது எப்படியாப்பட்ட சிக்கல்ல இருந்து இருக்கும்னு எங்களுக்கு நல்லாவே புரியுது...” என்று பிச்சாயி சொல்ல,
ராக்காயியோ, “நீ படுச்ச புள்ளன்னு நிரூபிக்கிற... எங்க அடிச்சா எங்க படியும்னு நேக்கா திட்டம் போடுரடி...” என்றார் நக்கலாக..
“எது நான் திட்டம் போடுறனா..?” என்றாள் ஒன்றும் தெரியாதது போல்...
“ஆமா நீ சொல்லலன்னா எங்களுக்கு தெரியாதுன்னு நினைச்சியா...? நீ யாருன்றதும் எங்களுக்கு தெரியும்... இதோ இங்க இருக்காளே எங்க மருமக பேத்தி இவளும் யாருன்னு எங்களுக்கு தெரியும்...”
“முதல் முதல என் பேரன் பார்த்தது உன்னை இல்லை... எங்க கொள்ளு பேரனை வயிற்றுல சுமந்துக்கிட்டு இருக்காளே இவள தான்...” என்று ராக்காயி சொல்லவும் பொழிலியும் சரி சுபஸ்ரீயும் சரி ஒரே அளவில் அதிர்ந்து நின்றார்கள்...
“ஆத்தா...” என்றாள் பொழிலி...
“நீ ஏன் கண்ணு வெசனப்படுற... என் பேரன் முதல் முதலா பார்த்தது உன்னை தான்... உன் மேல தான் அவன் ஆசையும் பட்டான். நீ எந்த தவறும் செய்யல...” என்று பிச்சாயி அவளுக்கு ஆறுதல் சொல்லி தன்னோடு அனைத்துக்கொண்டார்.
இருவரது பாச பிணைப்பையும் கண்டவ சுபாவுக்கு தான் போட்ட திட்டங்கள் அத்தனையும் சரிந்து போனது போல இருந்தது.
“என்ன பார்க்கிறவ, இதெல்லாம் வீட்டு படி கூட தாண்டாத எங்களுக்கு எப்படி தெரியும்னு பார்க்குறியா...?” நக்கலுடன் கேட்ட ராக்காயி, கேலியான சிரிப்புடன்,
“வயக்காட்டு அம்மன் திருவிழா நடக்கும் பொழுது நீ என் பேத்திய தனியா சந்திச்சு பேசும் போதே நாங்க சுதாரிச்சுக்கிட்டோம்...” என்றார்.
அதில் இளம்பெண்கள் இருவருமே திகைத்து போனார்கள்.
“ஆத்தா அப்போ எல்லாமே தெரியுமா...?” பாண்டியன் திகைத்தான்.
“ஆமாய்யா அப்பவே தெரியும்.. ஆனா எங்க ரெண்டு பேரை தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது...” என்றார் பிச்சாயி.
“என்ன பார்க்கிற சுபா... அப்பவே உன்னை பத்தி எல்லா செய்தியையும் திரட்டிடோம்... கூடவே நீங்க ரெண்டு பேரும் எந்த அளவுக்கு போறீங்கன்னும் எங்களுக்கு தெரிய வேண்டி இருந்தது... அதனால தான் இவ்வளவு நாளும் நாங்க பொறுமையா இருந்தோம்... இல்ல இந்நேரத்துக்கு நீ எங்க உருக்கு ஆலையில நெருப்போட நெருப்பா வெந்து போய்கிட்டு இருப்ப...” என்றார் ராக்காயி...
அவர் அப்படி சொல்லவும் நிஜமாகவே சுபாவுக்கு பயமாக வந்தது...
“உன்னோட ஒட்டு மொத்த சுயநலத்துக்காகவும் நீ பொழிலியை பயன்படுத்திக்கிட்ட... இப்போ அவளோட குற்ற உணர்வை தூண்டிவிட்டு பாண்டியன்கிட்ட சேரவிடாம பண்ணி உன் வலையில விழ வைக்க பார்க்கிற...”
ஆத்தாமார்கள் சொல்வது அத்தனையும் உண்மை... திருமணம் நடக்க இருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்கூட்டியில் போகும் பொழுது சுபஸ்ரீக்கு சின்னதாய் ஒரு ஆக்சிடன் ஆனது. ஒரு கீறல் கூட உடம்பில் இல்லை. ஆனால் தலையில் அருகில் இருந்த கல் மோதி கொஞ்சம் கொஞ்சமாய் சுய சிந்தனை பிரள ஆரம்பித்தாள்.
அப்படி இருக்கும் பொழுது பாண்டியன் ஒரு முறை அவளுக்கு போன் பண்ணினான். அப்பொழுது “எனக்கு இந்த கல்யாணம் வேணாம்...” என்று கத்தினாள்.
அவளின் நிலை அறிந்து அவளின் பெற்றவர்களும் இந்த கல்யாணம் வேண்டாம் என்று மறைமுகமாக சொல்ல பாண்டியனுக்கு கண்கள் சிவந்தது கோவத்தில்.
ஊர் முழுவதும் பத்திரிக்கை கொடுத்தாச்சு இனிமே ஒண்ணும் பண்ண முடியாது என்று சொல்லி அவர்கள் சொன்ன காரணத்தை ஒரு பொருட்டாக எடுக்காத பாண்டியன் திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணினான்.
மனநிலை பிரழ்ந்தவள் என்று தன் பெண்ணை யாரும் சொல்லிவிட கூடாது என்றும், அதை விட இந்த சம்மந்தம் தங்களின் கவுரவம் என்று எண்ணிய மாதுமையாளின் பெற்றவர்கள் அவளை போலவே இருக்கும் தங்களின் ஊரில் இருக்கும் விளைநிலத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் பொழிலை கூட்டிக்கொண்டு வந்து கல்யாணம் செய்து வைத்துவிட்டு,
“உங்க பிடிவாதத்துக்கு பொண்ணை தரோம்.. மத்தபடி எங்களை வேற எதுவும் கேட்க கூடாது..” என்று சொல்லிவிட்டு பொழிலை அம்போன்னு மண்டபத்தில் விட்டுட்டு அப்படியே கிளம்பி விட்டார்கள்.
அதற்கு முன் ஒரே ஒரு முறை பாண்டியன் மாதுமையாளிடம் பேசும் பொழுது,
“எனக்கு நீண்ட தலை முடி, இரண்டுபக்கமும் மூக்குத்தி குத்தி, காலில் கொலுசு அணிந்து, காதில் பெரிய தோடு போட்டு, நெற்றியில் பெரிய போட்டு வச்சு இருந்தா ரொம்ப பிடிக்கும்..” என்று சொல்லி இருந்தான்.
சுபஸ்ரீக்கு அது பிடிக்காது. அவள் மருத்துவருக்கு படித்து இருப்பவள், இவனது திறமைக்காகவும் சொத்துக்ககவும் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்ய இருந்தாள்.
ஆனால் விதி பொழிலை கொண்டு வந்து நிறுத்தியது. அதோடு, பாண்டியனின் ஆசையை அச்சு பிசகமால் பொழில் செய்து இருந்தாள். இது இவளின் இயல்பு, அது தெரியாமல் தனக்காக தான் இவள் மாறி இருக்கிறாள் என்று எண்ணி அவள் மீது காதல் ரசம் பொழிந்தான்.
கல்யாணத்திற்கு முன்னாடி சுபஸ்ரீ வேண்டாம் என்று சொல்லி நிராகரித்ததினால் கொஞ்சம் கோவம் வரும் பாண்டியனுக்கு. உண்மையான பொழில் திருமணம் முடிந்து வந்த பொழுது இது வேற ஒரு வருடைய வாழ்க்கை என்று எண்ணி விலகி விலகி போனாள். ஆனால் பாண்டியன் தன்னிடமிருந்து அவளை காத்துக்கொள்ள நினைக்கிறாள் என்று வலுக்கட்டாயமாக முதலிரவு அன்றே அவளுடன் சேர்ந்தான்.
“பாண்டியன் என் கழுத்துல தான் தாலி கட்டி இருக்காரு... பாருங்க..” என்று இன்னும் மீசையில் மண் ஒட்டாமலே பேசிக்கொண்டு இருப்பவளை என்ன செய்வது என்று பார்த்தார்கள் ஆத்தாமார்கள் இருவரும்.
Nice





