“என் மகனுக்கு என்ன ஆச்சுங்க... ஏன் இப்படி... நல்லா தானே இருந்தான்..” கேட்கும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வந்தது...
“இப்பவும் நல்லா தான் இருக்காங்க... நீங்க எதா இருந்தாலும் மருத்துவரை கேட்டுக்கோங்க...” என்றார்.
வெளியே வந்தவன் வேகமாய் மருத்துவரை பார்க்க சென்றான்.
தலைமை மருத்துவரின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு தன் கண்களை திருப்ப முடியவில்லை. பொழிலி அழுது அழுது சிவப்பு எரிய விழிகளுடன் டாக்டர் சுபஸ்ரீயை கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
“எனக்கு புரியுது பொழிலி... ஒரு மருத்துவரா என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் கண்டிப்பா செய்வேன்...” என்றாள். அந்த நேரம் தான் பாண்டியன் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஒரு நிமிடம் தன்னவளை அந்த இடத்தில் பார்த்தது காட்சி பிழை என்று நம்பினான். ஆனால் அந்த காட்சி மறையாமல் போகவும் உண்மை என்று உணர்ந்தவனுக்கு இதழ்களில் விரக்தி புன்னகை உதித்தது.
பொழிலியை ஏறெடுத்தும் பாராமல், “என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்...” என்றான் சொற்களிலே அவளை தள்ளி வைத்தான். அதை உணர்ந்துக்கொண்ட சுபஸ்ரீ,
“பொழிலிய பிரிஞ்சதுனால தான் கொற்கையனுக்கு இந்த ஆபத்து வந்து இருக்கு...” என்றாள்.
“புரியல...”
“பொழிலியோட அன்பு அவனுக்குள்ள ரொம்ப ஆழமா இறங்கி இருக்கு மிஸ்டர் பாண்டியன். அவனால பொழிலி இல்லாம ஒருநாள் கூட இருக்க முடியல... அதோட அவளை விட்டு பிரிஞ்சி வந்த இந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள்ளயே அவன் ரொம்ப பாதிப்படைஞ்சிட்டான்..”
“டாக்டர்...” என்று அதிர்ந்து போனான்.
“எஸ் மிஸ்டர் பாண்டியன். இவனை நீங்க வீட்டுல விட்டதுக்கு பிறகு இவன் எதுவும் சாப்பிடல... என்கிட்டே வரவே இல்ல. என்னை பார்த்து இவன் இன்னும் ரொம்ப பயந்துட்டான். அதோனோட விளைவு அவனுக்கு வலிப்பு வந்துடுச்சு.. அது தான் என்னோட மருத்துவமனைக்கே கூட்டிட்டு வந்துட்டேன்... இங்க வந்ததுக்கு பிறகு தான் அவனோட நிலை இன்னும் மோசமாச்சு...”
பாண்டியனுக்கு வார்த்தையே வரவில்லை... இறுகி போய் நின்றான்.
“அதுக்கு பிறகு தான் பொழிலியை வரசொல்லி சொன்னேன்... பாட்டி தான் அதுக்கு ஏற்பாடு பண்ணாங்க... அவ குரலை கேட்டதுக்கு பிறகுதான் கொற்கையன் கிட்ட சின்னதா மாற்றம் தெரியுது..” என்றாள்.
பாண்டியனிடம் வேறு எந்த மொழியும் இல்லாமல் போக, சுபஸ்ரீ அவனிடம் மேற்கொண்டு பேசினாள்.
“எல்லாம் சீக்கிரம் சரியாக போயிடும் மிஸ்டர் பாண்டியன்...” ஆறுதல் சொல்ல அப்படியே திரும்பி வந்துவிட்டான்.
பொழிலியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பொழிலியும் பாண்டியனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. பாண்டியன் சென்ற பிறகு மருத்துவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ எதுக்கும் கவலை படாத பொழிலி... எப்படியும் கொற்கையன காப்பாத்தி குடுக்குறது என்னோட பொறுப்பு... நீ முதல்ல உன்னை திடமா வச்சுக்க...” என்றாள்.
அவளை கையெடுத்து கும்பிட்டவள் வெளியே வந்தாள். வந்தவள் யாரையும் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. நேராக கொற்கையன் இருந்த அறைக்குள் சென்று நுழைந்துக்கொண்டாள்.
மீனாச்சிக்கு கூட வியப்பு தான். வேறு யாரையும் உள்ளே அனுமதிக்காத மருத்துவர் அவளை மட்டும் உள்ளே அனுமதித்ததை கண்டு..
அதோடு சுபஸ்ரீ யும் பொழிலியும் ஒரே மாதிரி இருப்பதை கண்டு அந்த குடும்பத்துக்கே வியப்பாக தான் போனது.
ஆனால் இருக்கும் சூழலில் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை யாரும். நந்தினிக்கு மட்டும் உள்ளுக்குள் ஒரே நமைச்சலாக இருந்தது...
“இது இப்படி சாத்தியம்... நம்ம அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா..? அவங்க காதுலையும் இதை போட்டுவிடலாமா...?” என்று எண்ணி பாண்டியம்மாளுக்கு விஷயத்தை சொல்லி வைத்தாள்.
அடுத்த சில மணி நேரத்தில் அவள் வந்துவிட,
“எல்லாத்துக்கும் இவ வந்த நேரம் தான் சரியில்ல... முதல்ல இவளை வெளிய அனுப்புங்க... வந்த உடனே என் மருமகனை படுக்கையில படுக்க வச்சுட்டா... இந்த சின்ன குருத்துக்கே இப்படின்னா... இதுல பெரிய...” என்று பொழிலியை வசைபாட தொடங்கும் முன்பே பிச்சாயும் சரி ராக்காயும் சரி
“பாண்டியம்மா...” கர்ஜனையாக அழைத்து இருந்தார்கள்.
“எங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருக்கவ... நீ போன இடம் வேணா தராதரம் இல்லாம இருக்கலாம்... ஆனா நீ பொறந்த வீட்டோட தராதரம் தெரியாம எதுவும் பேசிக்கிட்டு இருக்காத. பொறவு நீ வந்து போறதுக்கு உன் பொறந்த வீடு இருக்காது...” என்று எச்சரித்தார்கள். கூடவே நந்தினியின் வீட்டை தரம் இறக்கிவிட்டார்கள் நொடியில்.
இதற்கு தான் பெரியவர்கள் வேண்டும் என்பது.. யார் யாரை எங்கே வைப்பது என்பதோடு, குறி பார்த்து அடிக்கவும் செய்வார்கள்.
ஒரு நூலகத்துக்கு சமமானது ஒரு பெரியவரின் இருப்பு.. அது இப்பொழுது பல வீடுகளில் குறைந்துக்கொண்டு வருகிறது... ஒரு வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவ்வீட்டில் உள்ள சிறுவர்களின் பழக்க வழக்கங்கள் நேசமுடன் ஒருவித ஒட்டுதலுடன் இருக்கும்...
அதோடு பண்பாடும் சரி நாகரீகமும் சரி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படும்... அவர்கள் தான் வீட்டின் ஆணிவேர். சமுதாயத்தின் கண்ணாடி... பெற்றவர்களுக்கு பணத்தின் மீது மட்டுமே நாட்டம். ஆனால் பெரியவர்கள் அந்த சிறுவர்களோடு அமர்ந்து கதை பேசி, விளையாடி, அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு மனதோடு உறவு பூணுவார்கள்.
அப்படி தான் இங்கு ராக்காயும் பிச்சாயும்... அந்த வீட்டின் ஆணிவேர்கள்... அவர்களை வைத்து தான் மொத்த குடும்பமும் இயங்குகிறது.
அவர்கள் ஒன்று சொன்னால் அது மிக சரியாக இருக்கும். நின்ற பாண்டியரும் சரி, வெள்ளியம்பலத்தாரம் சரி பசும்பூண் பாண்டியனும் சரி ஆத்தாமார்கள் எது சொன்னாலும் சரி என்று தலையாட்டுவார்கள்.
மீனாச்சியம்மைக்கு முதலில் அவர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் அவர்களின் வெள்ளை உள்ளத்தை கண்டு தானாக பணிய ஆரம்பித்தார்.
இன்று வரை அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியது கிடையாது. இப்பொழுது தன் மகளை பேசியதற்கு கூட அவர் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.
“ம்மா பாரும்மா எப்படி பேசுறாங்கன்னு...” பாண்டியம்மா மூக்கை சிந்த,
“ஏன்னா நீ பேசுனது தப்பு பாண்டியம்மா.. ஒழுங்கா உன் அண்ணிக்கிட்ட மன்னிப்பு கேளு...”
“ம்மா அவ என்னை விட சின்னவ...”
“அதனால தான் மன்னிப்பு கேக்க சொன்னேன்...”
“இல்லன்னா...”
“ஓங்கி அறைஞ்சி இருப்பேன்..” என்றவர் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றுவிட்டார்.
பாண்டியம்மாள் திகைத்து போனாள். தன் வீட்டு ஆட்களா என்று.. பாண்டியனை திரும்பி பார்த்தாள். அவன் இலக்கு இன்றி எங்கேயோ பார்த்துக்கொண்டு இருந்தான்.
பொழிலி அனைத்தையும் காதில் வாங்கி கொண்டு முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு, தன் மகனின் அருகில் அமர்ந்து அவனை தொட்டு தடவி விட்டுக்கொண்டு சின்ன குரலில் மகிழ்ச்சியாக அவனுடன் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தாள்.
துக்கத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு இருந்தவளை கண்டு பாண்டியனுக்கு கண்களில் கண்ணீர் மின்னியது...
அந்த காட்சியை காண முடியாமல் அருகில் இருந்த சுவரில் தன் பலம் கொண்ட மட்டும் குத்தி குத்தி தன் இயலாமையை குறைக்க நினைத்தான். ஆனால் முடியவில்லை.
மாறனை கிளம்பி ஆலை வேலைகளை பார்க்க சொன்னவன், எல்லோரையும் கிளம்பி வீட்டிற்கு செல்ல சொன்னான்.
“ஏன் ய்யா... நாங்களும் இருக்கோமே...”
“கொற்கையனுக்கு சரியா போயிடும் அவன் இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துடுவான்... நீங்க போங்க..” என்றான்.
“டேய் அவன எப்படி டா இந்த நிலையில விட்டுட்டு போறது...”
“அவனோட அம்மா பார்த்துக்குவா... நீங்க கிளம்புங்க... தாத்தாவுக்கு மருந்து மாத்திரை குடுக்கணும்... ஊர்ல ஏதாவது பிரச்சனைன்னா நம்மளை தேடி தான் வருவாங்க... அதனால வீட்டுக்கு போங்க... இங்க நானும் அவளும் பார்த்துக்குறோம்...” என்று சொல்லி எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு அறையின் உள்ளே வந்தான்.
Nice





