“நிஜமா உங்க கூட வாழ்ந்த இந்த ஒரு மாசத்துல எனக்கு குற்ற உணர்வு தான் அதிகமா இருந்ததுங்க... மனசார உங்க கூட நான் வாழல... இது அடுத்தவங்க வாழ்க்கைன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்தது. இதுல எப்படி உங்க காதலை என்னால அனுபவிக்க முடியும்.. நீங்க என்னை தொடும் பொழுது எல்லாம் எனக்குள்ள ரொம்ப அசிங்கமா கூனி குறுகி போனேன்... இன்னொருத்தவங்க வாழ்க்கையை நான் பங்கு போட்டுக்கிட்ட மாதிரி எனக்குள்ள வலி.” என்றாள் வேதனையுடன்.
அதற்கு மேல் பாண்டியனால் அவளது பேச்சுக்களை கேட்க முடியவில்லை. அவ்வளவு வலித்தது அவனுக்கு இதயத்தில்.
“போதும் பூம் பொழில் மாதுமையாள்...” என்றவன்,
சட்டென்று “இது உன்னோட பெயரா இல்ல அவ...” கேட்டான்.
“இல்ல இது என்னோட பேரு தான். அவங்க பேரு சுபஸ்ரீ...” என்றாள் தயக்கமாக.
“அப்போ இதுல பொய் இல்லையா...” என்று வாய்விட்டு சொன்னவன்,
“சரி இப்போ உன்னோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கலமா...?”
“உங்களை விட்டு பிரியிறது மட்டும் தான் என்னோட முடிவு... நிஜமா இது உங்க இடம்னு எனக்கு தெரியாது.. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா இங்க வந்து இருக்கமாட்டேன்... மறுபடியும் உங்க கண்ணுல படக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா மறுபடியும் மறுபடியும்...” என்று கூறியவளின் விழிகள் மின்னியது.
“அந்த இயற்கைக்கே தெரியுது எது எதோட சேரணும்னு... ஆனா சில மனுசர்களுக்கு தான் தெரியிறதே இல்லை. பரவால்ல.. அவங்க எல்லோருக்கும் காலமே பதில் சொல்லட்டும்...” என்று நெடு மூச்சை இழுத்து விட்டவன்,
“போறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு முத்தம் மட்டும் குடுத்துக்கட்டுமா...?” கேட்டவன் அவளது பதிலை எதிர்ப்பார்க்கவில்லை.
அமர்ந்து இருந்தவளை சரித்து அவள் மீது படர்ந்து அவளின் இதழ்களை தனக்குள் வாங்கி கொண்டவன் இத்தனை நாள் குடுத்த முத்தத்தை விட அதிக வன்மையுடனும் மென்மையுடனும் முத்தம் கொடுத்தான்.
அவனது வன்மையிலும் மென்மையிலும் பெண்ணவளுக்குள் ஆயிரம் பேரலை எழுந்து சிதைத்து நிலை குலைத்து சென்றது...
அவனது கரங்கள் அங்கும் இங்கும் அலை பாய, அதிலிருந்த தேடலில் சாரத்தை உணர்ந்துக் கொண்டவளின் கண்களில் நீர் கசிந்து வழிந்தது.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனை தவிக்க விடாமல் தானே முன் வந்து அவனை தனக்குள் இழுத்து சுருட்டிக்கொள்ள, பாண்டியனின் இதழ்களில் விரக்தியின் புன்னகை எழுந்தது.
அதுவரை அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டு இருந்த அவனது கரங்கள் ஒரு கட்டத்தில் எங்கும் பயணிக்காமல் அவளது வயிற்றிலே தேங்கி விட்டது. அதை உணர்ந்தவள் சட்டென்று அவனது முகத்தை பார்த்தாள். ஆனால் பாண்டியன் அவளை பார்க்கவில்லை.
அவளிடமிருந்தும் எழுந்து அமர்ந்துக்கொண்டான்.
“என்னை வேணான்னு சொல்லிட்ட.. இதை என்ன செய்ய போற... சொல்லிட்டா இப்பவே என்னோட சேர்த்து அதற்கும் காரி.. செஞ்சிட்டு ஓரேடியா போயிடுவேன்...” என்றவன் சட்டென்று அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்ற பின்பும் அவன் வீசி சென்ற வார்த்தை புயல்கள் அவளை தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
“எப்படி...?” என்கிற கேள்வி மட்டுமே அவளுள் நிறைந்து இருந்தது. அதோடு அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நெஞ்சில் வந்து மோத துடிதுடித்து போனாள்.
“என்ன தான் நடந்து இருக்கட்டுமே அதற்காக இப்படியா பேசுவது..” வேதனையுடன் எண்ணியவள் அந்த வைக்கோலின் போர் மீது அவன் எப்படி விட்டு சென்றானோ அப்படியே இருந்தாள்.
தென்றல் வந்து குளிர் காற்றை வீசி செல்ல அது கூட உறைக்காமல் தன்னையே எண்ணி நொந்துக்கொண்டு இருந்தாள்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நாற்பத்தி ஐந்து நாட்களாக அவள் வாழ்ந்த வாழ்க்கை தான் அவளுக்கு பொக்கிசப் புதையல்.. அந்த புதையலை காலால் எட்டி உதைக்க வேண்டும் என்றால் அவளில் உள் எவ்வளவு வலி இருந்து இருக்கும் என்று யாரும் அறியாமல் போனது தான் விதியோ...
பாண்டியன் தன் மனைவியோடு ஒத்து போய் அவளது உணர்வுகளை மதித்து அவளது கருத்தை ஏற்றுக்கொண்டு அந்த ஊரை விட்டு சென்றான்.
கூடவே தன் மகனையும் ஆத்தாமார்களையும் அழைத்துக்கொண்டு சென்றேவிட்டான். செவுனப்பனுக்கு தான் வீடே வெறிச்சோடி போனது போல இருந்தது.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி வரையிலும் இந்த இடத்துல தான் எவ்வளவு சத்தம் எவ்வளவு கலகலப்பு இல்ல கண்ணு... இப்போ பாரு நீயும் நானும் மட்டும் தான். விருந்தாளியா இதோ இங்க கீச்சு கீச்சுன்னு கத்திக்கிட்டு இருக்க குருவியும் அணிலும் தான்.. நமக்கு எப்பவும் உறவுகளே ஒட்டாது போலத்தா. ஆனா உன்னை கல்யாணம் பண்ணி குடுக்குற வீட்டுல எல்லா சொந்தமும் நிரைஞ்சி இருக்குற மாதிரி தான் பார்த்து குடுக்கணும்...” பெருமூச்சு விட்டார்.
“உங்களுக்கு அவங்களை பிடுச்சு இருக்காய்யா...”
“என்ன கண்ணு இப்படி கேக்குற... இங்க இருக்குற சொத்து முழுசும் அவங்களோடது தான். ஆனா அந்த பகுமானம் எதுவும் இல்லாம எம்புட்டு தயவா பழகுனாங்க பார்த்தியா...? இந்த பழக்கம் இப்போ வந்தது இல்ல கண்ணு... வம்சம் வம்சமா வர்றது. இத தான் பெரும் புத்தின்னு சொல்லுவோம்...”
‘உங்களுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான் ய்யா... இவங்க எவ்வளவு பெரிய குடும்பம் தெரியுமா...? இவங்க தான் பதினெட்டு பட்டிக்கும் ராசா மாதிரி. ஆனா அந்த ஆடம்பரம் எதுவும் இல்லாமல், சாதாரணமா வயல்ல வேலை செஞ்ச ஒரு பெண்ணை மணக்க கேட்டு கல்யாணமும் பண்ணி இருக்காக... இந்த மனசு யாருக்கும் வராதுய்யா... ஆனா என்ற புருஷருக்கு மட்டும் அது விதிவிலக்கு...’ பெருமையுடன் எண்ணியவளின் கண்கள் சட்டென்று கலங்கி போனது.
அதை தன் தந்தைக்கு காட்டாமல், “அவகளை பத்தி பேசி என்ன ஆகப்போகுது ய்யா... வாங்க வந்து கஞ்சி குடிச்சுட்டு கிழக்கால பக்கம் உள்ள வயல்ல மடை மாத்தி விடனும்...” சொல்லிக்கொண்டே அவருக்கு ஊற்றி கொடுத்தவள், தானும் புளித்த மோரில் பழைய சோற்றை அள்ளி உண்டவள் வேலை பார்க்க சென்றுவிட்டாள்.
சாப்பிட்டது நெஞ்சில் வந்து நிற்க தன் வயிற்றை தடவிக்கொண்டுத்தவள்,
“உன்ற அம்மாவால இந்த பழைய சோத்தை தான் கண்ணு தர முடியும்... சாப்பிட்டுக்கடா...” குழைந்தையோடு பேசியவள்,
வயலில் இறங்கி கலை பறிக்க ஆரம்பித்தாள் எல்லோருடனும் சேர்ந்து. வெயில் சற்று அதிகமாக வியர்த்து வழிந்தது. அதை துடைத்துக்கொண்டு வேலை செய்த நேரம் மழை மேகம் திரண்டு வந்தது.
அதை பார்த்த உடன் தன்னவனின் நினைவு வர, விழிகளில் நீர் படலம். லேசாக தூரவும் ஆரம்பிக்க, முந்தானையை எடுத்து தலையில் போட்டுக்கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.
அப்படி முந்தானையை எடுத்து தலையில் போடும் பொழுது அப்பன் மகன் இருவரது நினைவும் அவளை வந்து தீண்டி சென்றது.
இந்த முந்தானைக்கு தான் இருவரிடமும் எவ்வளவு போராட்டம் நடக்கும்... இரவு பொழுது தூங்க போகும் நேரம் பொழிலி இயல்பாக தன் முந்தானையை எடுத்து கொற்கையனுக்கு போத்தி விட்டு தட்டி கொடுத்து தூங்க வைப்பாள்.
Nice





