“உங்க தங்கைக்கு தான் குழந்தை வந்திடுச்சே.. இப்ப நான் கிளம்பலாம் இல்லையா?” என்று கேட்டவளை எவ்வளவு முறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முறைத்து தள்ளினான் மலையமான்.
இளவரசி கருவுற்ற செய்தி கேட்ட மலையமான் மகிழ்ச்சியின் எல்லையில் நின்றான். அவனது மகிழ்வை குலைக்க மனம் வரவில்லை. எனவே இரண்டு நாள் தள்ளியே தேனருவி பிரிவை கேட்டாள் கணவனிடம்.
“ஏன் தங்கச்சி நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?” என்று அர்த்தமில்லாமல் கேட்டவனை புரியாமல் பார்த்தாள்.
“என்ன இப்படி பேசுறீங்க?” திகைத்தும் போனாள்.
“பின்ன இப்ப தான் அவ வாழவே ஆரம்பித்து இருக்கா.. உன்கிட்ட தான் அவ நல்லா பேசி பழகுறா.. இப்ப இந்த நேரம் போய் நீ போறேன்னு சொன்னா அவ எப்படி மாறுவன்னு கொஞ்சம் கூட நீ யோசிக்கலையா?” ஆத்திரமாக கேட்டவனை பார்த்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.
அதுக்காக இளாவின் வாழ்நாள் வரையிலும் நானும் கூடவே இருக்க முடியுமா? நெஞ்சில் எழுந்த கேள்வியை தன் கணவனிடம் அவளால் கேட்க முடியவில்லை.
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள். அந்த பார்வைக்கே மலையமான் அவளை முறைத்துப் பார்த்தான்.
“என்ன பார்க்கிற? அவ நல்லபடியா குழந்தை பெத்த பிறகு தான் உன்னால இங்க இருந்து போக முடியும். அது வரை உனக்கு இங்க இருந்து போக அனுமதி இல்லை. விடுதலையும் இல்லை” என்றான் நறுக்கென்று.
“இதெல்லாம் ரொம்ப அதிகம்ங்க.. நீங்க என்ன சொன்னீங்க உங்க தங்கச்சியை நல்லபடியா மாத்தி குடுத்தா என்னை இங்க இருந்து அனுப்பி வைக்கிறேன்னு சொன்னீங்க தானே. இப்போ இப்படி சொல்றீங்க” என்றாள்.
“அதெல்லாம் அப்படி தான். நான் சொன்னா சொன்னது தான். நீ பாட்டுக்க திடிர்னு இங்க இருந்துப் போயிட்டா என் தங்கச்சிக்கு பிரசவத்துல ஏதாவது சிக்கல் ஆகிடுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன். எனக்கு என் தங்கச்சி தான் முக்கியம். அவ உயிரோட விளையாடுற வேலையெல்லாம் வச்சுக்காத என்கிட்டே. பிறகு நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்றவன் அதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவனது நேரமோ என்னவோ மேலும் வாயை விட்டான்.
“அந்த ஒட்டுப் போட்ட வீட்டுல என்ன இருக்குன்னு இங்க இருந்து போக பார்க்கிற? இந்த வீட்டை பார்த்தியா? நீ கனவுல கூட நினைச்சு பார்த்து இருக்க மாட்ட.. நீ ஏழு பிறவி எடுத்து சம்பாதிச்சாலும் இந்த மாதிரி ஒரு வீட்டை உன்னால கட்ட முடியாது. அவ்வளவு பிரம்மாண்டமா சொகுசா கட்டி வச்சு இருக்கேன் இந்த வீட்டை. இங்க இருக்க உனக்கு என்ன கசக்குதா? இந்த வீட்டுல இருக்குறது உனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? அவனவன் இந்த வீட்டை தன் வாழ்நாள்ல ஒருமுறையாவது பார்த்திட மாட்டமான்னு ஏங்கிட்டு இருக்கான். உனக்கு அவ்வளவு சலிசா போயிடுச்சா? உன் ஒட்டுப் போட்ட வீட்டை விட இது பல மடங்கு ஏன் கோடி மடங்கு உயர்ந்தது. இதுல இருக்க நீ குடுத்து வச்சு இருக்கணும். என்னவோ இந்த வீட்டுல இருக்க முடியாம போறவமாதிரி ரொம்ப தான் சீனை போடுற...”
என்றவனை அடிபட்ட பார்வை பார்த்த தேனருவி அதன் பிறகு அவனிடம் இதை பற்றி பேசவே இல்லை. மனிதனாக இருந்தால் பேசலாம். இவன் தான் சரியான அரக்கன் ஆயிற்றே எப்படி பேசுவது..
இங்க எல்லா சொகுசும் இருக்கு. ஆனா மகிழ்ச்சி இருக்கா? என்று எழுந்த கேள்வியை தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டவள் முன்பை விட இன்னும் இறுக்கமாகிப் போனாள். அவளின் பேச்சு இளாவுடன் மட்டும் தான் என்றாகிப் போனது.
அதில் காரணமே இல்லாமல் மலையமான் தான் அதிகமாக கோவப்பட்டு நின்றான். அவனுக்கே இந்த கோவத்துக்கான காரணம் தெரியவில்லை. தேனருவியை பார்த்தாலே எரிந்து விழுந்தான். அவள் எதிரில் வந்தாலே முறைத்துத் தள்ளினான்.
அவனது இந்த செயலில் தேனருவிக்கு நெருப்பில் நிற்பது போல ஆனது. இயல்பாகவே அவளால் இருக்க முடியவில்லை. அந்த நேரம் தான் இளாவின் மாமியார் மருமகளை தன்னோடு அழைத்துச் செல்ல வந்து இருந்தார்.
இளா பயந்துப் போக,
“ஏன் கண்ணு பயப்படுற? நான் அவ்வளவு மோசமானவ எல்லாம் இல்லை. நீ என் பிள்ளையை வாழ வைக்காம போயிட்டியா அதுக்கு தான் கோவம் வந்துச்சு. மத்தபடி உன் மேல எனக்கு தனிப்பட்ட எந்த கோவமும் இல்லை. நீயும் என் மகனும் வாழ்ற வாழ்க்கையை நான் பக்கத்துல இருந்து பார்க்கணும் கண்ணு..” ஆசையாக சொன்னவரை கண்டு இளாவுக்கு பயம் தெளிந்தது.
“அதோட வாயும் வயிறுமா இருக்குற பிள்ளை. உன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்க இங்க பெரியவங்க யாரும் இல்ல. அதுக்கு தான் சொல்றேன். நீ நம்ம வீட்டுக்கு வந்திடு. அத்தை உன்னை நல்லா பார்த்துக்குறேன்” என்று சொன்னவர் தேனருவியின் கையை பாசமாக பற்றிக் கொண்டவர்,
“எனக்கு என் மருமகளை குணமாக்கி குடுத்துட்ட.. என் மகனோட வாழ்க்கையில விளக்கேத்தி வச்சுட்ட. கூடவே நான் ஆசைப்பட்ட என் மகனோட வாரிசையும் சேர்த்து குடுத்து இருக்க. உன்னை கோயில் கட்டி கும்பிட்டாலும் தகும். உனக்கு என்ன வேண்டும்னு சொல்லு கண்ணு.. ஒரு அம்மாவா இருந்து நான் செய்யிறேன்” என்று அவர் நெகிழ்ந்துப் போய் கேட்க,
சின்ன சிரிப்புடன் “இளாவை நல்லா பார்த்துக்கோங்க ம்மா. அதை விட எனக்கு வேற எதுவும் வேணாம். அவ மனசளவுல ரொம்ப குழந்தை மாதிரி. சூது வாது எதுவும் தெரியாது..” என்றவளை பார்த்து இன்னும் நெகிழ்ந்தவர்.
“உன் குணத்துக்கு இந்த உலகத்தையே குடுத்தாலும் ஈடாகாது கண்ணு.. நீ புள்ளையும் குட்டியுமா நூறாண்டு சுமங்கலியா வாழுவடா” உள்ளம் மகிழ்ந்து அவளை வாழ்த்தி விட்டு மலையமானிடமும் சொல்லி விட்டு தன் மகன் மருமகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு போய் விட்டார்.
இளாவும் மாதவனும் கிளம்பிய பிறகு வீடே வெறிச்சோடி போய் விட்டது. மலையமானும் கிளம்பி அலுவலகம் போய்விட இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அப்பொழுது தான் அவளின் தம்பி போன் பண்ணினான். “அக்கா நான் மாமா கம்பெனிக்கு இண்டெர்வியூக்கு வந்து இருக்கேன்” என்று சொல்ல, நெஞ்சை பிடித்துக் கொண்டாள் தேனருவி.
“அங்க ஏன்டா?” திணறிப் போனாள்.
“தெரியாது க்கா. இங்க வந்த பிறகு தான் தெரியும்” என்றவனின் பேச்சை கேட்டவளுக்கு காலுக்கு கீழ் நிலம் நழுவியது போல ஆனது.
மலையமானுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தால் “என்ன மொத்த குடும்பமும் சேர்ந்து எல்லாத்தையும் வளைச்சு போட திட்டம் போட்டு இருக்கீங்களா?” என்று கேட்பானே. கடவுளே இப்ப என்ன செய்வேன். பயத்தில் உறைந்துப் போனாள்.
“தம்பி அந்த கம்பெனி வேணாம்டா. வெளில வந்திடுறியா?” தன்மையாக கேட்டாள்.
“எனக்கு புரியுது க்கா.. நான் கேட்டேன். ஆனா இப்ப வெளில விட மாட்டாங்களாம். இண்டெர்வியூ ஸ்டார்ட் ஆகிடுச்சாம்” அவனுக்கும் தர்ம சங்கடமாக போய் விட்டது.
தலைக்கு மேல் வெள்ளம் வந்து விட்டது என்பதை உணர்ந்துக் கொண்டவள் வருவதை எதிர்க் கொள்ள முடிவெடுத்து விட்டாள். இன்று மாலை எப்படியும் மலையமான் அவளிடம் வந்து ஆடு ஆடு என்று ஆடுவான்.. இப்பொழுதே தன்னை தயார் படுத்தி வைத்துக் கொள்ள எண்ணினாள்.
அவள் எதிர்பார்த்தது மாலை நேரம். ஆனால் மலையமானோ மத்தியமே வந்து ஆட ஆரம்பித்து விட்டான்.
அவனின் கார் சத்தம் கேட்டு தனக்குள் நடுங்கிப் போனவள் அவனின் எதிரில் வரவே பயந்துப் போய் எப்பொழுதும் தஞ்சம் ஆகும் அந்த மரத்தடிக்கு போய் விட்டாள். ஏனெனில் பெரிதாக மலையமான் அவ்விடத்துக்கு வரவே மாட்டான். அதனால் அவள் அங்கு தஞ்சமடைய, மலையமானோ வந்த வேகத்தில் நேராக அங்கு தான் வந்தான்.
அவனுக்கும் தெரிந்து இருந்ததோ தன் மனைவி அங்கு தான் அதிக நேரம் இருப்பாள் என்று. அதனால் நேராக அவ்விடம் வந்து விட்டான்.
வந்தவன் கீழே அமர்ந்து இருந்தவளை கொத்தாக தூக்கி மேலே நிறுத்தியவன், “என்னடி ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து என் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு இருக்கீங்களா?” எடுத்த உடனே நஞ்சு தடவிய வார்த்தையை தான் எய்தான்.
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? நாங்க அப்படி பட்ட ஆளுங்க கிடையாது..” தேனருவி மறுத்துப் பேச ஆரம்பிக்க,
“ஆகா.. நீங்க எப்படியாப்பட்ட ஆளுன்னு என்னை விட வேற யாருக்கும் தெரியாதுடி.. பொண்ணை கல்யாணம் பண்ணிக்க காசு கேட்டவன் தானே உன் அப்பன்” என்றவனை பார்த்து வெகுண்டவள்,
“என் அப்பாவை பத்தி தப்பா பேசாதீங்க.. எங்க உங்க குடும்ப லட்சனம் தெரிஞ்சு என் அப்பா பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்காம போயிடுவாங்களோன்னு பயந்து போய் காசை வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. என் அப்பாவை பத்தி பேச கொஞ்சம் கூட அருகதை இல்லாத மனுசன் நீங்க. அவரோட கால் தூசிக்கு வர மாட்டீங்க” என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டவன்,
“என்னடி சொன்ன.. அருகதை இல்லாதவனா? காசு வாங்கி பொண்ணை கல்யாணம் கட்டிக் குடுத்த அந்த ஆளு யோக்கியன், காசு குடுத்து கல்யாணம் கட்டிக்கிட்ட நான் அயோக்கியனா? நல்ல இருக்குடி உன் நியாயம். மலையை முழுங்குற மாதிரி அவ்வளவு பணத்தையும் முழுங்கிட்டு கால் தூசிக்கு ஆவேணான்னு பேசுறியா?” அவளின் பிடரி முடியை கொத்தாக பிடித்து உலுக்கியவனுக்கு அத்தனை ஆத்திரம்.
“எங்கோ குப்பையில கிடந்தவளை கூட்டிட்டு வந்து கோபுரத்து உச்சியில வச்சேன் பத்தியா என்னை சொல்லணும்டி. உனக்கு வாழ்க்கை குடுத்த என்னை தான் நீ பெருசா பேசணுமே தவிர உன் அப்பனை இல்லை” என்று போசசிவில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் வாயை விட, இருவருக்கும் பிரச்சனை ஆரம்பம் ஆனது.
அந்த நேரம் சரியாக தேனருவியின் அப்பா வந்தார் மலையமானின் வீட்டுக்குள். மகளை கல்யாணம் கட்டி குடுத்து இத்தனை நாள் பார்க்காமல் விட்டதில் உள்ளம் என்னவோ அடித்துக் கொள்ள மகளிடம் கூட சொல்லாமல் கிளம்பி வந்து விட்டார்.
வருகிறேன் என்று அவர் சொல்லும் பொழுது எல்லாம் இல்லப்பா வேணாம் என்று தடுத்து நிறுத்தி விடுவாள். அவரும் சரி அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டு விட்டே இத்தனை நாட்கள் ஓடி இருக்க, அதற்கு மேல் மகளின் பேச்சை கேட்க முடியாது, மகள் எப்படி இருக்கிறாள் என்று அவளின் நலனை மட்டும் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று எண்ணியே வந்து இருந்தார்.
ஆனால் வந்தவரின் கண்களில் மகளை போட்டு அடிக்கும் மருமகனை கண்ட உடன் நெஞ்செல்லாம் பதறிப் போனது. அதுவும் அவன் சுமத்தும் குற்றங்களை எல்லாம் கேட்டு ஆடிப் போய் விட்டார் அந்த தன்மானம் மிக்க மனிதர்.
“இந்த வீட்டில் இவ்வளவு வேதனை பட்டுக் கொண்டு இருக்கிறாளா என் மகள்” என்று எண்ணியவர்,
“இனி ஒரு நிமிடம் கூட நீ இந்த வீட்டுல இருக்கக் கூடாது பாப்பா..” என்று மகளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
தொடரும்





