“உனக்கு உன் செஞ்சோற்று கடன் முக்கியம்னா எனக்கு என் வாழ்க்கை முக்கியம் பொழிலி... நீ தான் என் வாழ்க்கைன்னு நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... நீ இல்லன்னா என்னால நினைச்சி கூட பார்க்க முடியல... எனக்கு நீ வேணும் அவ்வளவு தான்.” என்றான் இறுதி முடிவாக.
அதில் தளர்ந்து போனாள்.
“மலைச்சாமி மலைச்சாமி...” என்று பிச்சாயி அழைக்க,
அவர் ஓடி வந்தார் இவர்களிடம்.
“சொல்லுங்க ஆத்தா இளநி பரிச்சி போட சொல்லட்டுங்களா...?” வேட்டியை கீழே இறக்கிவிட்டுட்டு பணிவாக கேட்டார்.
“ம்ம்ம் போடா சொல்லு.. வெயிலுக்கு நல்லா தான் இருக்கும்...” சொல்லிவிட்டு அப்படியே தோட்டத்து பக்கம் சென்றார்கள். காய்கறிகளை பறித்துக்கொண்டே,
“ஆமா மலை உங்க வீட்டுல இருக்குற எல்லாரும் சொகமா...? பிள்ளை எங்கயோ வெளியூர்ல படிக்குதுன்னு சொன்னியே படிப்பு எப்போ முடியுதாம்...?” கேட்டு விசாரித்தவர்கள்,
“ஆமா செவுனப்பன உனக்கு எப்படி தெரியும் மலை... சின்ன வயசுல இருந்தே பழக்கமா...?” இதுக்கு முன்னாடி எங்க இருந்தாங்க... பொண்ணு நல்லா குணமணமா இருக்கே...” இரு ஆத்தாமார்களும் அவருக்கு தூண்டில் போட,
அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை எல்லாம் சொன்னார்.
“என்னப்பா சொல்ற...” அதிர்ந்து தான் போனார்கள்.
“ஆமாங்க ஆத்தா... அந்த புள்ள என்கிட்டே தான் உதவி கேட்டுச்சு...” என்று நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் மலைச்சாமி...
பொழிலி இருந்த ஊர் மிகவும் குக்கிராமம். அங்கு பள்ளி கூடம் என்பதே கிடையாது. நான்கு ஐந்து கிராமங்களுக்கு சேர்த்து ஒரு தொடக்கப்பள்ளி என்று இருந்தது. மேற்கொண்டு உயர்நிலை படிப்பு படிக்க வேண்டும் என்றால் பத்து பதினைந்து கிராமத்துக்கு ஒன்று என்று இருந்தது. அதோடு ஊரை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டி இருந்தது.
அந்த காரணத்துக்காகவே யாரும் பெரும்பாலும் படிக்க செல்வது இல்லை. பொழிலியும் படிக்க போகவில்லை. செவுனப்பனுக்கு இந்த விஷயம் பெரிய விசயமாய் படாத காரணத்தினால் தன்னோடு வயலுக்கு அழைத்து சென்று நாத்து நடவு, கலை பறிப்பு, கரை போடுவது, விதை ஊணுவது, நீர் பாய்ச்சுவது, பாத்தி போடுவது, பருவம் வந்த உடன் அறுவடை செய்வது என்பது மட்டும் இல்லாமல்,
இரு ஏரை பூட்டி நிலத்தை எப்படி அகழ வேண்டும் என்பதையும், பருவம் பார்த்து பயிர் செய்ய கால கணக்கையும் சொல்லி கொடுத்து, விவசாய வழிமுறைகளை படி படியாக அவளுக்கு கற்றுக்கொடுத்தார்.
இரண்டு ஏக்கர் விலை நிலத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது என்றாலும் நிலத்தை வெறுமென போடாமல் உழவு மாட்டை பூட்டி நிலத்தை அகழ்ந்து பயிர் செய்வாள்.
செவுனப்பன் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்க மாட்டாள். ஆண் மகன் போல ஏரை பூட்டி உழவு செய்து, ஏற்றங்காலில் நீர் இறைத்து வயல் முழுவதும் பாய்ச்சி கரை திருப்பிவிடுவதை பார்க்கும் ஊர் மக்கள் வியந்து தான் போவார்கள்.
ஏனெனில் நஞ்சை என்பது வெறும் நாற்று நடுவது மட்டும் மில்லை. முதலில் வெறும் வயலை உழவ வேண்டும். அதன் பிறகு நீர் பாய்ச்சி சேடை ஓட்ட வேண்டும். அதுக்கு பிறகு சில உரம் வாய்ந்த விதைகளை இட்டு, அதோடு இலை தலைகளை போட்டு காலால் மிதித்து உரமாக்க வேண்டும்.
சேற்று நீரில் ஊறி போன காலிலே கோப்பும் குலையுமாக இருக்கும் இலை தலைகளை மிதிக்கும் பொழுது அந்த குச்சிகளும் கிளைகளும் காலை மிக எளிதாக பதம் பார்க்கும்.
உதிரம் வழிந்தாலும் அந்த வேதனையை கடந்து அடுத்த ஒரு பெரிய பலகையை மாடு பூட்டிய ஏர் போன்ற நீண்ட கொழுவில் ஒரு பெரிய பரம்பு(பரண்) பலகையை கட்டி வயல் முழுவதும் ஓட்டி சீர் செய்து அதன் பிறகு தான் நாற்று பயிரை ஊன்றுவார்கள்.
வசதியானவர்கள் என்றால் எல்லாவற்றிற்கும் இயந்திரம் வைத்து இருப்பார்கள். ஆனால் பொழிலிக்கு அந்த வசதி இல்லையே. அதனால் தானே ஆண் மகன் போல அவ்வளவு வேலையையும் ஒற்றை ஆளாக பார்ப்பாள்.
ஒவ்வொரு முறையும் கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் பொழுது அவ்வளவு கடினமாக இருக்கும். ஆண் மகன்களே ஏற்றங்காலில் நீர் இறைக்க சோம்புவார்கள். ஆனால் இவள் எதற்கும் சோம்பல் பட்டதே கிடையாது.
பரிக் கட்டை கொண்டு சில நாட்கள் இழுப்பாள். சில நேரம் தானே நடந்து நடந்து வயலுக்கு ஏற்றம் இறைப்பாள்.
தன் வயலோடு மட்டும் வேலை பார்க்காமல் அக்கம் பக்கத்து வயலுக்கு சென்றும் மாங்கு மாங்குன்னு வேலை செய்வாள் கூலிக்கு.
“எங்கண்ணு இப்படி உழைக்கிற... நிறத்த பாரு கருத்து போச்சு... நீ கல்யாணம் கட்டி வேற ஒரு வீட்டுக்கு போற புள்ள... அங்க போயி உனக்கு எம்புட்டு வேலை இருக்கோ. கொஞ்சம் இங்கனவே ஓய்வா இருதத்தா...” வாஞ்சையுடன் அவளின் தலையை தவிவிட்டுக்கொண்டே சொன்னார்.
அவரின் கையை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து,
“உன்னை கல்லு வீட்டுல உக்கார வைக்கணும் ய்யா அது தான் எம்மட ஆசை... அதுக்கு தானே இம்புட்டு ஓடுறேன்... உன்னை ஒண்ணும் இல்லாத அனாதைன்னு விரட்டி விட்ட சொந்ததுக்கு முன்னாடி நீ கவுரதையா நிக்கணும்ய்யா...”
தன் மகள் சொன்னதை கேட்டு “கண்ணு...” நெகிழ்ந்தார்.
“நீர் அடிக்கடி சொல்லுவியே காசு பணம் இருந்தா தான் சாதி சனம் மதிக்கும்னு. உன்னை அப்படி மதிப்பா பார்க்க நினைக்கிறேன் ய்யா... நம்ம சொந்தத்துல நடக்குற எத்தனையோ கல்யாணத்துக்கு உன்னால மொய் எழுத முடியாதுன்னு ஒதுக்கி வச்சு இருப்பாக... அவுகளுக்கு முன்னாடி உன்னை உசத்தி காமிக்கணும்...” என்று சொன்னவளை கண்ட செவுனப்பனுக்கு விசனமாய் போனது.
“கண்ணு அது ஏதோ மனசு ஆறாம உங்கிட்ட சொன்னது...”
“இருக்கட்டும் ய்யா... நானும் கல்யாணம் ஆகி போனா உனக்கு அந்த சொந்தம் தானே துணை. அந்த சொந்தத்தை உனக்கு சொந்தமாக்கி குடுத்துட்டு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். அப்போ தான் எனக்கு மனசு நிறையும்...” என்று சொன்னாள்.
தன் மகள் இப்படி சொன்னதை கேட்டு உள்ளுக்குள் மருகியவர், அடுத்த வாரம் சென்று தன் சிநேகிதனை சந்தித்தார்.
“என்னடா சொல்ற... பாப்பா அப்படியா சொன்னுச்சு...”
“ஆமான்டா மலை எனக்கே என்ன செய்யிறதுன்னு தெரியல... கண்ணு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு எனக்கே இப்போ தான் தெருஞ்சது..” வேதனையுடன் சொன்னவரை கண்டு,
“நீ அடிக்கடி சொல்லுவியே டா என் புள்ளைய ஆம்பள புள்ளை மாதிரி வளர்த்து இருக்கேன்னு... அவ ஆம்பள புள்ளை இல்லடா.. உன் குலதெய்வம்... உன்னை காக்க நினைக்கிற சாமிடா..” என்று சொன்னார்.
“அது தான்டா எனக்கு பயமா இருக்கு.”
“நீ எதையாவது சொல்லி அந்த புள்ளை மனச உடைச்சி போடாத... நடக்குறது நடக்கட்டும்...” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார் மலைச்சாமி.
தன் மகள் சொன்ன செய்தியிலேயே மனதை நிலைக்க விட்டவர் ஊருக்கு வரும் வழியில் வந்துக்கொண்டு இருந்த பெரிய கனரக வாகனத்தை கவனிக்க தவறினார்.
கண்விழித்து பார்க்கும் பொழுது உயர் ரக மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்த செல்வா செழிப்பில் அவருக்கு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.
Nice





