“ஏன்டா பேராண்டி இது தான் நீ சொன்னா ஊரா... அப்படி ஒண்ணும் பெருசா இல்லையே...? இதுல தங்க தான் இந்த தள்ளாத வயசில எங்களை அலைக்கழிச்சியா...?” என்று தங்களுக்குறிய நக்கலுடன் ராக்காயும் பிச்சாயிம் அந்த மண்ணில் காலை வைத்தார்கள் வெற்றிகரமாக...
அவர்களை அன்புடன் வரவேற்பாய் பார்த்து நின்றார் செவுனப்பன். அவரை ஒரு அலட்ச்சிய பார்வை பார்த்து வைத்தார்கள் இரு கிழவிமார்களும். அதில் பொழிலிக்கு கோவம் வர,
“ரொம்ப தான் பண்ணுதுங்க இந்த கிழவிங்க. வரட்டும் சோறு திங்க... நல்ல கசக்குற பாவக்காயில துவையல் அரைச்சி வைக்கிறேன்...” முணுமுணுத்துக்கொண்டே நிலைப்படியில் நின்றுக்கொண்டு வாயை இறுக மூடிக்கொண்டாள்.
அவள் அவர்களை வரவேற்க மாட்டாளாம்... முகவாய் கட்டையை தோளில் இடித்து பிகு செய்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை.
அதை ஓரக்கண்ணால் ராக்காயி பிச்சாயிக்கு காண்பிக்க,
“யாருடி இவ, வந்தவங்களை வாங்கன்னு அழைக்காம வாசப்படிய அளந்துக்கிட்டு இருக்கிறவ... அடியேய் குறுக்கு செத்தவளே இங்கன வாடி...” என்று பிச்சாயி அழைக்க, பல்லை கடித்துக்கொண்டு கொஞ்சமும் நகராமல் அப்படியே நின்றாள்.
“அடியேய் காது என்ன செவுடா... வெண்கல குரல்ல அழைக்கிறேன்... பிடிச்சு வச்ச சிலை கணக்கா அசையாம இருக்குறவ... ம்ஹும் வயசு புள்ளை இப்படி அசைமஞ்சமா இருந்தா குடும்பம் நல்லா தான் தலைக்கும்... ஹும்...” என்று தோளை சிலுப்பிக்கொண்டு அவளை நோக்கி வந்தார்.
அவர் நெருங்க நெருங்க அவளின் முறைப்பு இன்னும் அதிகமானது.
“என்ன கண்ணு பெரியவங்க பேசுறாங்க... நீ பாட்டுக்கு நிக்கிறவ... வா இங்கன வந்து பேசு...” என்று செவுனப்பன் அவளை அழைக்க,
“எத பேசுறாங்களா...? வாய் வலிக்க திட்டுறாங்க. இதுல இவுகளை எதிர்த்தாப்புல போய் அழைக்கணுமாக்கும்..” முணகியவள் நிலை படியில் இருந்து இறங்கி வந்தாள்.
ஓட்டுனர் மகிழுந்தின் பின்னாடியில் இருந்த மூவரது துணி பெட்டியையும் எடுத்து வந்து உள்ளே வைக்க செவுனப்பனின் விழிகள் பிதுங்கி வெளியில் வந்தது.
ஏனெனில் மூன்று பேருக்கும் ஆறு பெரிய பெரிய பேட்டிகள் வந்தது. அதோடு சின்ன சின்ன பெட்டிகள் வேறு நாலைந்து வந்து சேர, இது இத்தனையும் வைக்க குடிசைக்குள் இடம் இருக்குமா என்று மாய்ந்து போனார் அவர்.
அவரின் பார்வையின் பொருளை உணர்ந்த பாண்டியன் புன்னகையுடன் தன் மகனோடு பின் பக்கம் சென்றுவிட்டான்.
ராக்காயும் பிச்சாயும் படாடோபமாக மிடுக்காக குடிசையின் உள்ளே வந்து அமர, தவிப்புடன் தன் தந்தையை பார்த்தாள்.
அவர் இவர்கள் இருவரையும் வரவேற்று மரியாதையாக நிலை படிக்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அவரின் அந்த குணத்தையும் நிதானத்தையும் பக்குவத்தையும் கண்ட ஆத்தாமார்கள் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வையை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டார்கள்.
“அய்யா வீட்டுக்கு கொஞ்சம் சாமான் வாங்கணும். கடைக்கு போயிட்டு வர்றீங்களா...?” என்று கேட்டு ஒரு பையையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளின் வதனம் செந்தீயில் விழுந்தது போல இருந்தது.
அவளது முகத்தை பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்களும் அவளை ஒரு ஆளாய் கூட மதிக்காமல் கொண்டு வந்த பைகளில் இருந்த துணிகளை கொடியிலும் அலமாரியிலும் எடுத்து வைத்தார்கள். அதே நேரம் பாண்டியனும் தன் மகனோடு உள்ளே வர, கொற்கையன் தன் தாயை கண்டவுடன் வேகமாய் அவளிடம் தாவ,
ஒரு நிமிடம் தயங்கியவள் அடுத்த நொடி அவனை வாங்கி தன் நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டு விழிகளில் நீரை சிந்தினாள்.
கொற்கையன் வேகமாய் தன் அன்னையின் நெஞ்சுக்கு தாவியவன் அவளை தன்னோடு இறுக அனைத்து பிஞ்சு கைகளால் அவளை அடித்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினான்.
அவனது அத்தனை செயலையும் பொருத்தவளுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அந்த அளவு தன்னை அவன் தேடி இருக்கிறான் என்று உணர்ந்தவளுக்கு தான் மன்னிக்கும்படியான செயலை செய்யவில்லையே என்று நொந்தாள்.
ராக்காயி, “சில பேருக்கு எப்படி தான் இப்படி கல்லு மனசா இருக்கோ முடியுதோடி. பெத்த மனசு பித்து. புள்ள மனசு கல்லுன்னு சொல்லி வச்சாங்க. ம்ஹும் ஆனா இங்க அதுக்கு எதிரால்ல இருக்கு...” சொல்ல,
பிச்சாயியோ “நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படியாப்பட்டவள இப்படி அழுத்தம் உள்ளவளை நான் பார்த்ததே இல்ல சாமி... கட்டுனவனை விட்டுட்டு புள்ளைய விட்டுட்டு மவராசி ஒரு வாரம் இருந்து இருக்கா பாரேன்...” சொல்ல,
“அது எல்லாம் விடுடி, இவ பெத்த அப்பனுக்கே கூட தெரியாம கல்யாணம் பண்ணி இருக்கண்ணா இவ அழுத்தத்தை பத்தி தனியா சொல்லவும் வேணுமா என்ன...?” இருவரும் மாற்றி மாற்றி பொழிலியை திட்டி தீர்க்க, அவள் கண்களில் கண்ணீர் வடிந்தபடியே இருந்ததே தவிர வேறு எந்த வித பாவனையும் அவளிடம் இல்லை.
அதுவும் கடைசி சொன்ன வரிகளில் உடைந்தே விட்டாள். தன் தகப்பனுக்கு தெரியாமல் செய்த செயலை எண்ணி இப்பொழுது வரையிலும் தனிமையில் அழுதுக்கொண்டு இருப்பது அவள் ஒருத்திக்கு மட்டும் தானே தெரியும்.
“இவ்வளவு பேசுறமே கொஞ்சமாச்சும் பதில் பேசுறாளா பாரு.. அழுத்தம் அழுத்தம் அம்புட்டும் அழுத்தம்..” சாடை பேசினார்கள். அப்பொழுதும் அவள் எதுவும் பேசவில்லை. தன் மகனை கட்டிக்கொண்டு இன்னும் வசதியாக சுவரில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டாள்.
தன் மடியில் அவனை அப்படியே போட்டுக்கொண்டு அவனது மலர் முகத்தை தொட்டு வருடி தன்னுள் நிறைத்துக்கொண்டவளைக் கண்டவர்களுக்கு நெஞ்சில் இருந்த பாரம் அப்படியே பனியாய் மறைந்து போனது.
அந்த நேரம் ராக்காயி பிச்சாயியை பார்த்து கண் காட்ட,
“வந்தவங்களுக்கு ஒரு தே தண்ணி கூட குடுக்க தெரியல... என்னத்த பொண்ணு வளர்த்து வச்சு இருக்காங்களோ... நல்ல வளங்கெட்ட குடும்பத்துல பொண்ணு பார்த்து கட்டி இருக்கான் பாரு... எல்லாம் இவனை சொல்லணும்...” என்று பாண்டியனை திட்ட,
‘நீங்க என்ன வேணா பேசிக்கோங்க.. எனக்கு கவலை இல்லை’ என்பது போல தன் மகனுடன் ஒன்றிவிட்டாள். அதை பார்த்துக்கொண்டு இருந்த பாண்டியனுக்கு தான் பத்திக்கொண்டு வந்தது.
“நான் வேணாமாம் என் பிள்ளை மட்டும் வேண்டுமாம்...” முணகியவன் வேகமாய் அவளின் மீது சரிந்து அமர்ந்தான். அவனது வேகத்தில் ஒரு நொடி தடுமாறி போனாள்.
“என்ன இது ஆத்தாங்களுக்கு முன்னாடி நகர்ந்து அமருங்க...” முறைத்தாள்.
“ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கிறடி நீ... இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்..”
“அதான் நேத்திக்கு வகை தொகையா கவனிச்சேன்ல இன்னும் என்ன...” கடுப்படித்தாள்.
“நீ இப்படியே கடுப்பா பேசீட்டு இரு. உங்கப்பன் கிட்ட நீ தான் என் பொண்டாட்டின்னு சொல்றேன்...” முறைத்தான்.
“எத...” அழுகையை முற்றிலும் நிறுத்திவிட்டு ஜெர்க்கானாள்.
“இப்படி தான்டி எனக்கும் இருக்கும்.. மரியாதையா என்னையும் உன் நெஞ்சுல போட்டு கவனி. உன் அப்பன் கிட்ட உண்மையெல்லாம் சொல்லிடுவேன்... நீ என்னை கல்யாணம் பண்ணி ஏமாத்தி பாதியில விட்டுட்டு வந்துட்டன்னு சொல்லுவேன்.” என்று மிரட்டினான்.
“அப்படி சொல்லுடா எங்க சிங்கக்குட்டி... என்ன ஏத்தம் இருந்தா எங்களை இன்னும் வான்னு ஒரு வார்த்தை கேக்கல...” பிச்சாயி இன்னும் அவனை ஏத்தி விட, பாண்டியன் மிக பாசமாய் தன் மனைவியை பார்த்தான்.
Nice





