“அய்யாருங்க தரையில போர்வை எதாவது விரிச்சி போடவாங்க..” தன் மகளின் சேலையையே பார்த்துக்கொண்டு கேட்டார்.
“இல்லைங்க வேணாம்...” என்றான்.
“அது இல்லைங்க...” என்று இழுத்தவர் கொஞ்சம் தயங்கி,
“அய்யா...” பொழிலி கண்டிக்கும் குரலில் அதட்ட, அதை சட்டை செய்யாமல்,
“புள்ளைக்கு மூணு துணி தான் மாத்து துணி இருக்குங்க... அதுதான்...” என்று அவர் முடிக்கும் முன்பே விருட்டென்று அதிலிருந்து எழுந்தவன்,
“எனக்கு தெரியாதுங்க... மன்னிச்சுடுங்க...” என்று கூறி அந்த புடவையை உதறி மடித்து வைத்தான்.
“ஐயோ நீங்க போய் புடவையை மடிச்கிக்கிட்டு குடுங்க அய்யாரு நான் பார்த்துக்குறேன்..” என்று அவனின் கையிலிருந்து புடவையை வாங்க முயல,
“ஒண்ணும் பிரச்சனை இல்லை...” என்றவன்,
“நீங்க தம்பின்னு கூப்பிடுங்க...” என்றான்.
“அய்யாரு எவ்வளவு பெரிய ஆளு... உங்களை போய் தம்பின்னு எப்படிங்க... உடம்பெல்லாம் கூசி போயிடுமுங்க...” என்று குறுகினார்.
அவரது குறுகளில் தன் செல்வ வளத்தை நொந்தவன் கட்டாந்தரையில் அப்படியே படுக்க முனைந்தான்.
“ஐயோ இருங்க அய்யாரு என்ற வேட்டிய விரிச்சி போடுறேனுங்க...”
என்று பதறி அவனை தடுத்து காவி எரிய தனது வேட்டியை தரையில் விரித்து போட்டார்.
“நீங்க தம்பின்னு கூப்பிடுங்க... பொறவு நான் அதுல படுக்குறேன். இல்லன்னா எனக்கு இது வேணாம்...” என்று உறுதியாக சொன்னவனை கண்டு ஒரு கணம் வேர்த்து போனார்.
“அய்யாவுகளே இது என்ன சின்ன பிள்ளையாட்டம்... இதுல அமருங்க.” என்றார். அவன் காதிலே வாங்கிக்கொள்ளாமல் தன் பாட்டுக்கு இருக்க, வேறு வழியில்லாமல்
“தம்பி அதுல அமருங்க...” என்று கூசி குறுகி போய் சொன்னார். முதலில் அப்படி இருக்கும் பிறகு போக போக சரியாகிவிடும் என்று எண்ணி எதையோ சாதித்து விட்டது போல அவனது வதனத்தில் புன்னகை வந்தது.
அதையெல்லாம் தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தாள் பூம்பொழிலி மாதுமையாள்.
இரவு உணவு தயாராக முதலில் பாண்டியனை அமர செய்து உணவு பரிமாற சொன்னார். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் மூவரும் சேர்ந்து உண்ணுவோம் என்று சொல்லி அதன் படியே செய்யவும் வைத்தான்.
என்றைக்கும் இல்லாமல் இன்று ஏதோ ஒரு நிறைவு அவனிடம் இருந்தது. ரசித்து உண்டான். வெயில் காலம் என்பதால் செவுனப்பன் வெளியே கட்டிலை எடுத்து போட்டார். ஆனாலும் எங்கு தூங்குகிறான் என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்.
அவரின் தவிப்பை கண்டு கொண்டவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,
“அய்யா நான் இந்த கட்டில்ல படுத்துக்குறேன். நீங்க திண்ணையில படுத்துக்கோங்க... உங்க மகளை கதவை தாள் போட்டுட்டு தூங்க சொல்லுங்க...” என்றவன் அடுத்த நிமிடம் படுத்து தூங்கி போனான்.
அவனது பெருந்தன்மையை கண்டு தன் மகளிடம் சிலாகித்தவர் திண்ணையில் படுத்து நிம்மதியாக தூங்கினர்.
குடிசையின் உள்ளே படுத்து இருந்த பொழிலிக்கு தான் சிறிதும் தூக்கம் வரவில்லை. இன்று என்று இல்லை. எப்பொழுது அவனை விட்டு பிரிந்து வந்தாலோ அப்பொழுது இருந்து உறக்கம் என்பதே அவளுக்கு இல்லை.
உறக்கம் மட்டுமா மறந்து போனாள். உணவு உண்ண, வேலை செய்ய, காலம் நேரம் என அனைத்தையும் மறந்து போனாள்.
அவளின் நினைவில் நின்றது எல்லாம் பெரிய பாண்டியனும் சின்ன பாண்டியனும் தான். அவளை அந்த குடும்பத்தில் அதிகம் தேடுவதும் நாடுவதும் இவர்கள் இருவரும் தானே... அதே போல தான் இவளும் இவர்கள் இருவரையும் அதிகம் தேடினாள்.
அதோடு அவளிடம் தாயன்பு காட்டிய இரு கிழவிமார்களையும் தேடினாள். இந்த ஒரு மாத காலத்தில் இவர்கள் நால்வரும் தானே அந்த வீட்டை உரிமைப்பட்ட சொந்தவீடாக, உறவாக எண்ணவைத்தது.
எண்ணியவளுக்கு கண்ணினோரம் கண்ணீர் சரம் தொடுத்தது. சில நாட்களுக்கு முன்பு வரை அவளும் சாதாரண எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பெண்.
ஆனால் எப்பொழுது பாண்டியனின் விழிகளில் விழுந்தாளோ அப்பொழுதே பூம்பொழிலி மாதுமையாளுக்கு இன்பமும் துன்பமும் சேர்ந்து எதிர்பாரா பல சம்பவங்களை காண நேர்ந்தது.
முதல் முதலாக பாண்டியன் அந்த சேற்றுவயலில் கண்டது பூம்பொழிலியை தான். அவளது அந்த எளிய தோற்றமும் சேலை கட்டும் அவளின் பேச்சில் மிளிர்ந்த பெண்மையும் அவனை அடியோடு அடித்து வீழ்த்தியது.
அதனால் தான் முதல் நாளே அவளை வளைத்து முத்தமிட்டான். உரிமையாக பேசவும் செய்தான். சற்று அத்து மீறவும் செய்தான் பேச்சில்.
ஆனால் அடுத்த நாள் வரும் பொழுது அவளிடம் ஒன்ற முடியாமல் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு தான் தெரியும்.
ஏனெனில் முதல் நாள் பார்த்த பெண்ணவளுக்கும் அடுத்த நாள் பார்த்த பெண்ணவளுக்கும் ஆயிரம் வித்யாசம் இருந்து. அதை இந்த ஒரு வாரத்தில் நன்கு உணர்ந்தான் பாண்டியன்.
ஏன் தன்னால் அந்த பெண்ணோடு ஒன்ற முடியவில்லை என்று அறிந்தவனுக்கு கோவம் கோவமாய் வந்தது.. தன்னை மிக எளிதாக தன் மனம் கவர்ந்தவள் ஏமாற்றி இருக்கிறாள் என்று அறிந்து.
அந்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் ஒரு வாரம் சுற்றி திரிந்தவன் தன் ஆத்தாமார்கள் சொல்லை கேட்டு இங்கு வந்தான். வந்தவனின் கண்களில் தன் பெண்ணவளே வந்து விழ, இனி இந்த பாண்டியனின் ஆட்டத்தை வாய் வார்த்தைகளால் விவரிக்கவும் வேண்டுமா என்ன...?
இனிமேல் தான் இருக்கு நம் பூம்பொழிலி மாதுமையாளுக்கு... பசும்பூண் பாண்டியன் சும்மாவே ஆடுவான். இப்பொழுது மிக தோதாக பொழிலி சலங்கையை கட்டி விட்டு இருக்கிறாள். என்னென்ன செய்ய காத்து இருக்கானோ...
பொழிலி பாடு கொஞ்சம் கஷ்டம் தான் போலவே...!
எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவளுக்கு கொற்கையனின் நினைவு வர, தன் நெஞ்சில் சாய்ந்து தினமும் துயில் கொண்டு, மடியில் அமர்ந்து கதை பேசுபவனின் தொடுகை இல்லாமல் போனதை எண்ணி கலங்கியவள் வெளியே எட்டி பார்த்தாள்.
குளிரூட்டப்பட்ட சொகுசு அறையில் ஒண்ணரையடி உயரத்தில் படுத்தால் ஆளை விழுங்கும் பஞ்சு மெத்தையில் படுத்து இருப்பவன் இன்று தனக்காக இப்படி வெட்ட வெளியில் குளிரில் படுத்து இருப்பதை கண்டு நெஞ்சம் வலித்தது.
எதுக்கு இப்படி எல்லாம் நிகழ்கிறது. எதுக்கு நான் அவர் கண்ணில பட்டேன். என்னால தானே அவருக்கு இந்த வேதனை.. கண்ணீரோடு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
Nice





