“இன்னும் என்ன வேணும் மலைச்சாமி...”
“அது இல்லைங்க அய்யாரு...”
“அது இல்ல அது இல்லன்னு சொல்லிட்டே தான் இருக்கீங்க. என்னனு சொல்ல மாட்டிகிறீங்க... எதா இருந்தாலும் உடைச்சி பேசுங்க...” என்றான் சற்றே குரல் உயர்த்தி. அதில் செவுனப்பனின் உடல் லேசாக உதற, சட்டென்று தன் சத்தத்தை விடுத்தான்.
அவன் போட்ட சத்தத்தில் கை பொருளை அப்படியே விட்டுவிட்டு நிலை படியிலிருந்து எட்டி பார்த்தாள் பொழிலி.
மலைச்சாமி ஏதோ சொல்ல வர, அவரை கை நீட்டி தடுத்தவன், நேரடியாக செவுனப்பனிடமே கேட்டான்.
“என்ன தயக்கம் எதா இருந்தாலும் சொல்லுங்க...” என்றான் சற்றே இதமாக. அதை கண்டவளுக்கு கண்களில் நீர் நிறைந்தது.
தன் தந்தை என்பதால் மட்டுமே இந்த இதம் என்று அறிந்தவளுக்கு உள்ளுக்குள் நெகிழ்வாக இருந்தது.
“அது அய்யாருங்க வீட்டுல வயசு புள்ளை இருக்குங்க... நீங்க இங்க தங்குனா நாளைக்கு கூலிக்கு வரவுக நாக்கு மேல பல்லை போட்டு எதாவது பேசிப்புட்டா தாங்காதுங்க. புள்ளை நாளைக்கு வேற வீட்டுக்கு போவும் பொழுது அது மனசு நோக பேசிப்புட்டா உடம்பு உசுருல தாங்காதுங்க...” என்றார் வேதனையாக.
“அதனால...” என்றான் உடம்பு இறுக... அவனது இறுக்கம் எதற்கு அறிந்தவளுக்கு புன்னகை வந்தது. அடக்கிக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளின் புன்னகையை கண்டு அனல் பறக்க ஏற்ப்பது போல பார்த்தான் அவளை. சட்டென்று அவனை பார்த்து அளவம் காட்டினாள்.
அதில் உதடு துடிக்க அவளது இதழ்களை கொய்ய வேண்டும் என்று வெறி வர அடக்கிக்கொண்டு,
“அதனால என்னை இங்க தங்க வேணான்னு சொல்றீங்க அப்படி தானே...” என்றான்.
“உங்களை போய் அப்படி சொல்லுவனுங்களா...?” தடுமாற்றமாய் பேசினார்.
“அப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க...” கடுப்படித்தான்.
“அதுங்க அய்யாரு...” என்று அவர் மேலும் பேச,
“ப்ச் முதல்ல இந்த அய்யாருவை விடுங்க. கேட்டு கேட்டு காது புளிக்குது...” சத்தமாக சொன்னவன்,
“என் பொண்டாட்டி கூட நான் தங்கக்கூடாதா...? இருய்யா மாமனாரே உனக்கு வைக்கிறேன் ஆப்பு...” வாய்க்குள் முணகியவன்,
“பாருங்க என்னால இங்க இருந்து எங்கயும் போக முடியாது. நீங்களும் உங்க மகளும் ஒரு ஓரத்துல இருந்துக்குங்க. நான் பாட்டுக்கு ஒரு ஓரமா இருக்கேன் அவ்வளவு தான். இதுல மத்தவங்க அதை பேசுவாங்க, இதை பேசுவாங்கன்னு எதையும் என் காதுக்கு கொண்டு வராதீங்க...” ஆளுமையுடன் சொன்னவன்,
“இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்குங்க... நாளைக்கு வேற ஏற்பாடு பண்றேன்...” என்று துண்டை தோளில் போட்டுக்கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தான்.
அவன் வரவும் வேகமாய் அடுப்படி பக்கம் ஓடினாள் பொழிலி.
“என்ன மலை அய்யாரு இப்படி சொல்லிட்டு போறாரு...” கைகளை பிசைந்துக்கொண்டு தவிப்புடன் அவர் கேட்க,
“அதான் இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்க சொன்னாருல்ல. விடு. நாளைக்கு என்ன செய்யிறாருன்னு பார்க்கலாம்...” என்று சொன்னவர் தன் வீட்டுக்கு கிளம்பிவிட, செவுனப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவரும் உள்ளே வந்தார்.
கீழே தன் மகளின் சேலையின் மீது மிக உரிமைப்பட்டவராய் அமர்ந்து இருந்த பாண்டியனை கண்டு இன்னும் கலவரமானார் அந்த எளியவர்.
தன் மனைவி எப்பொழுது இறந்து போனாரோ அப்பொழுது இருந்து அவர் வீட்டின் உள்ளே படுப்பதை தவிர்த்துவிட்டார்.
எப்பொழுதும் கட்டிலை வெளியே போட்டு அதில் தான் தூங்குவார். மழை பொழியும் பொழுது மட்டும் திண்ணையில் தூங்குவார். ஏன் சாப்பாடு கூட திண்ணையில் அமர்ந்து தான் சாப்பிடுவார்.
அப்படியாப்பட்டவரை வந்த அன்னைக்கே வீட்டிற்குள் வர செய்துவிட்டான் பாண்டியன்.
அதை கண்ட பொழிலிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இதழ்களை கடித்து அடக்கிக்கொண்டு சமையல் செய்துக்கொண்டு இருந்தாள்.
பாண்டியனிடம் அந்த சேலையை பற்றி கேள்வி கேட்க முடியாமல் தடுமாறி போனார். அதை கண்டும் காணாமல்,
“ஆமா உங்க சொந்த ஊரு எதுங்க...” விசாரணையை ஆரம்பித்தான்.
அதில் ஜெர்க்கானவள் பதறிப்போய் வெளியே வந்தாள். அதை கூர்ந்த பார்வையால் அளந்தவன், தன் கவனத்தை முழுவதும் செவுனப்பனிடமே வைத்து இருந்தான்.
“நம்ம ஊரு கிழக்கால பக்கம் இருக்குற மலைக்கு பின்னாடிங்க. அங்க தான் பிறந்து வளர்ந்தேன்... குத்தகைக்கு அங்க நிலம் எடுத்து பார்த்துக்கிட்டு இருந்தோம் நானும் என்ற மவளும். பெருசா சொந்தம் எதுவும் இல்லைங்க... மலைச்சாமிய மட்டும் தான் தெரியும். அவனும் ரொம்ப காலமா இந்த பக்கம் வர சொல்லிக்கிட்டு இருந்தான்.”
“சரி நானும் வந்துடலாமுன்னு நினைச்சி நாலு மாசத்துக்கு முன்னாடி நான் மட்டும் இங்க வந்தேணுங்க.” என்றார்.
“ஏன் நீங்க மட்டும் வந்தீங்க...”
“இல்லைங்க போற ஊரு எப்படி என்னன்னு தெரியாம நாம் எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியாதுல்ல. அதான் நான் மட்டும் வந்தேன். பொறவு இங்க எல்லாம் நல்லா இருக்கவும் இந்த வாரம் அம்மணிய கூட்டிட்டு வந்தேணுங்க..”
“அங்க சொந்த வீடு எதுவும் இல்லையா...?” தூண்டில் போட்டான்.
“இருந்ததுங்க... பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி தான் என்ற மவ அந்த வீட்டை விக்க சொன்னுச்சு. சரின்னு நானும் வித்துட்டேன்...”
“அப்போ அந்த பணம்...” என்று அவன் எதையும் யோசிக்காமல் கேட்டுவிட்டான். அதை கேட்ட பெரியவர் வெள்ளந்தியாக சிரித்து விட்டு,
“என்ற மவளுக்கு இது வரை எந்த நகையும் செய்யலைங்க. அது ரொம்ப ஆசை பட்டுக் கேட்டுச்சு நகை எடுத்துக்கவான்னு. அது தான் நானும் சரின்னு சொல்லிட்டேன்...” என்று சொன்னவரை கண்டவனுக்கு நெஞ்சில் ஏதோ பாரம் ஏறி அமர்ந்தது.
விழிகள் கூட கலங்கி போனது. அடுத்து ஒன்றும் பேசமுடியாமல் சில நொடிகள் தவித்து போனான். பொழிலி அவனது வேதனையை கண்டு தவித்து போனாள்.
“அய்யாருங்க தரையில போர்வை எதாவது விரிச்சி போடவாங்க..” தன் மகளின் சேலையையே பார்த்துக்கொண்டு கேட்டார்.
“இல்லைங்க வேணாம்...” என்றான்.
“அது இல்லைங்க...” என்று இழுத்தவர் கொஞ்சம் தயங்கி,
“அய்யா...” பொழிலி கண்டிக்கும் குரலில் அதட்ட, அதை சட்டை செய்யாமல்,
“புள்ளைக்கு மூணு துணி தான் மாத்து துணி இருக்குங்க... அதுதான்...” என்று அவர் முடிக்கும் முன்பே விருட்டென்று அதிலிருந்து எழுந்தவன்,
“எனக்கு தெரியாதுங்க... மன்னிச்சுடுங்க...” என்று கூறி அந்த புடவையை உதறி மடித்து வைத்தான்.
Nice





