அருவி கரையில் நீண்டதொரு ஜலதரங்கத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய அடுத்த நாளில் இருந்து கிட்டத்தட்ட ஒருவாரம் சென்று இருந்த நிலையில் பசும்பூண் பாண்டியன் தன்னுடைய ஆலை ஒன்றில் மட்ட மல்லாக்க படுத்து இருந்தான்.
அவனது நெஞ்சில் வந்து போன நிகழ்வுகள் எல்லாம் அவனை ஆழி பேரலையாய் சுழற்றி அடிக்க, ஒரு நொடி கூட அவனால் தூங்க கண்களை மூடி ஆழமாக தூங்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
எவ்வளவு பெரிய ஏமாற்றம்... அந்த ஏமாற்ற நிகழ்வை எண்ணியவனுக்கு நெஞ்சில் வஞ்சம் வந்து சூழ்ந்துக்கொண்டது. அதிலிருந்து அவனால் மிக எளிதாக வெளிவர முடியவில்லை.
எவ்வளவு பெரிய சமஸ்த்தானத்துக்கு அவன் அதிபதி. சுத்துப்பட்டு ஊரில் உள்ள அத்தனை பேருக்கும் அவன் முடிசூடா மன்னன். எவ்வளவு ஆலைகள்... எவ்வளவு பெரிய வம்சாவழி. பதினெட்டு பட்டிக்கும் பெரிய தலைக்கட்டு. அப்படியாப்பட்டவனது வாழ்க்கையை ஒரு சின்ன பெண் அதுவும் கொஞ்சம் கூட எழுத்து அறிவில்லாத ஒரு பெண் ஏமாற்றிவிட்டால் என்று மற்றவர் அறிந்தால் அது அவனுக்கு எவ்வளவு பெரிய தலைக் குனிவு.
நாலு பேர் கேலி கூத்தாடி சிரிக்கும் அளவுக்கு தன்னை கொண்டு வந்து நிறுத்தி இருப்பவளின் மீது அவ்வளவு வஞ்சம் எழுந்தது.
‘என்னை ஏமாற்ற அவளுக்கு எப்படி அப்படி ஒரு துணிவு வந்தது... ஒருவேளை அவளது எண்ணம் என்னை ஏமாற்றவது தானா..? இல்லை பணத்துக்காக இந்த செயலை செய்து இருப்பாளா...? என்னோடு கூட இருந்த நொடிகள் எல்லாம் அவள் தன்னை எப்படி எண்ணி இருப்பாள். இழிவாக எண்ணி இருப்பாளா..? இல்லை பொக்கிஷம் போல நெஞ்சில் பொதிந்து வைத்து இருப்பாளா...? என்று சிந்தனை கண்ட மேனிக்கு அலைந்துக்கொண்டு இருந்தது.
அவனால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்பது மட்டுமே அவனது சிந்தனையில் நிறைந்து இருந்தது.
கண்கள் ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் சிவந்து போய் இருந்தது. கண்ணாடியை பார்க்க பார்க்க தான் அவளிடம் எப்படி மயங்கி போய் உறவு கொண்டேன் என்ற சினத்திலே பல கண்ணாடிகள் அவனது குத்துகளில் சிதறி சின்னாப்பின்னமாகி போய் இருந்தது.
வீட்டிற்கு வரவே பிடித்தமில்லை. எங்கு காணினும் அவளது புன்னகை முகமே வந்து காட்சி கொடுக்க இன்னும் கோவம் வந்தது அந்த முரட்டு ஆசாமிக்கு.
‘என் கையில நீ கிடைச்ச செத்தடி...” கருவியவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.
மூடியவன் கண்களில் கிணற்றில் ஆடிய ஆட்டமும் அருவியில் நனைந்த ஆட்டமும் எழுந்து அவனை மிகவும் சித்ரவதை செய்தது.
வீட்டிற்கு செல்லவே பிடிக்காமல் நடுஇரவு வரை அங்கேயே கிடந்தான். ராக்காயும் பிச்சாயும் தான் கொற்கையனை பார்த்துக்கொண்டார்கள்.
மீனாச்சியம்மை இடம் செல்லவில்லை. ஏனோ மாதுமையாளிடமும் கூட செல்லவில்லை சின்னவன். இந்த விசயத்திலும் அவனது அப்பனை போலவே இருந்தான் கொற்கையன்.
நடு சாமத்திலும் போன் பார்த்துக்கொண்டு இருந்தாள் மாதுமையாள். அவளை தவிர அந்த அறையில் யாரும் இல்லை.
இந்த ஒரு வாரமும் இப்படியே தான் சென்றது. பாண்டியனை நெருங்க நினைக்கும் ஒவ்வொரு வேளையிலும் அவன் நாசுக்காக அவளை மறுத்துக்கொண்டே இருந்தான்.
முதலில் அவளுக்கு ஒன்று தோன்றவில்லை. சிறிது சிறிதாக அவளுள் சந்தேகம் கிளைவிட ஆரம்பித்தது. ஆனாலும் அவளால் வாய்விட்டு எதையும் கேட்டுவிட முடியாது.
ஒன்றாக இருந்த மூன்று பேரும் மூன்று திசைகளில் இருக்க, விடியாத இரவை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தார்கள்.
பாண்டியனின் போக்கில் தென்பட்ட மாற்றம் கண்டு வெள்ளியம்பலத்தார் சிந்தனை வயப்பட்டு இருக்க, நின்ற பாண்டியர் அவரின் தோளை தொட்டு,
“பாண்டியன நம்ம தெக்கால இருக்க ஊரு பக்கம் போய் கொஞ்ச நாள் பண்ணயத்த பார்த்துக்க சொல்லு...” என்றார்.
“இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்குப்பா. இப்போ போய் எப்படி...” தயங்கினார்.
“அவங்களுக்குள்ள எதுவோ சரியில்லன்னு ரெண்டு கிழவியும் புலம்பிக்கிட்டு இருக்காளுங்க... அவளுங்க தான் இந்த யோசனைய சொல்லி வச்சாளுங்க. அதனால ரெண்டு பேத்தையும் ஒரு வாரத்துக்கு பிரிச்சி வைக்கலாம். பொறவு நடக்குறது நடக்கட்டும்..”
“அதுமட்டும் இல்லாம இப்போ அங்க அறுவடை செய்யிற நாளு. ஒரு பக்கம் நடவு வேற போய்க்கிட்டு இருக்கு. உடையவன் பார்க்கலன்னா ஒரு முழத்துக்கு கூட தேறாது. அதனால இது தான் சாக்குன்னு அவனை போக சொல்லலாம்..” தாத்தா முடிவாக சொல்லிவிட,
வேறு வழியில்லாமல் பாண்டியனை பதினெட்டு பட்டிக்கு தெற்கில் உள்ள ஊரில் பரந்து விரிந்து இருந்த வயல்வெளியை மேற்பார்வை இட அனுப்பினார்கள்.
அங்கே மிக சிறியதாய் சுத்த பத்தமாய் இப்பொழுதும் புழங்கும் அளவுக்கு குடிசை வீடு ஒன்று இருந்தது. ஒற்றை அறை கூடத்தோடு சின்ன அடுப்படியுடன் அது தூய்மையாய் இருந்தது.
பாண்டியனின் குடும்பத்தில் இருந்து இங்கு அதிகம் யாரும் வந்தது இல்லை. அதனாலே இந்த வீட்டை மாடிவீடாக கட்ட தோன்றவில்லை. முன்புறம் கொஞ்சம் அகலமான திண்ணையுடன் நான்கு தூண்களுடன் இருந்தது.
அதை சுற்றி பார்த்தவனுக்கு தன்னுடைய தனிமைக்கு ஏற்ற இடம் என்று எண்ணியவன், கொண்டுவந்த பையிலிருந்து துண்டை எடுத்துக்கொண்டு குடிசையை ஒட்டி இருந்த கிணற்றடிக்கு சென்றான்.
எட்டி பார்த்தான். தண்ணீர் சற்று உள்ளே கிடந்தது. துண்டை உடுத்திக்கொண்டு அதன் ஆழத்தை கூட கணிக்காமல் அப்படியே மேலிருந்து கீழே விழுந்தான்.
அவன் மனதின் வெப்பத்தை குறைக்க கூட முடியாமல் கிணற்றில் இருந்த நீர் முட்டி மோதி சுவற்றில் அறைந்துக்கொண்டு தளும்பிக்கொண்டு இருந்தது.
சிறிது நேரம் நீரில் கிடந்தவன் எழும்பி மேலே வந்தான். மேலே வந்தவன் சுற்றிலும் கண்களை ஓட்டினான். ஒரு பக்கம் அறுவடை இயந்திரம் கொண்டு நெற்பயிர்களை அறுத்துக்கொண்டு இருந்தார்கள். இன்னொரு புறம் கேழ்வரகு நாத்தை நட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அதை ஒட்டி மஞ்சள் கிழங்கு முளைத்து இரு இலை புடைத்து வந்துக்கொண்டு இருந்தது. ஊடு பயிராக ஊன்றி இருந்த வெங்காயமும் நன்றாக செழித்து இருக்க, கொண்டைக்கடலையும் கெண்டைகால் அளவு வளர்ந்து காய் பிடித்து இருந்தது.
பச்சை கரும்புகள் நன்றாக முற்றி போய் அறுவடைக்கு தயாராகிக்கொண்டு இருந்தது. இன்னும் என்னை அறுவடை செய்யவில்லையா...? பாரம் தாங்கவில்ல என்பது போல தலை தாழ்ந்து காற்றில் அசைந்துக்கொண்டு இருந்தது செஞ்சோள தட்டைகளும் இறுங்க சோள தட்டைகளும்.
இன்னும் சில ஏக்கர்களில் மஞ்சள் பூக்கள் அழகாக பூத்து சில காய்ந்து உதிர்ந்துக்கொண்டு இருந்தது. அதை பார்க்கையிலே நிலகடலை மண்ணுக்குள் காய்ப்பு வைக்க தொடங்கி இருக்கிறது என்று நன்கு விளங்கியது.
வாழைகள் குழை தள்ளி போய் இருந்தது. தென்னை தோப்புக்கள் சீர் எடுக்கப்பட்டு சுத்தமாய் இருக்க கண்டு “பரவாயில்லை சரியாக தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க...” எண்ணியவன் திண்ணையில் அமர, சரியாக ஓடி வந்தார் செவுனப்பன்.
Nice





