“நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்களேன்” என்றவளை முறைத்துப் பார்த்தான் மலையமான்.
“ப்ளீஸ்..” என்றவளின் கெஞ்சலில் என்னத்தை கண்டானோ அமைதியாக படுக்கையில் போய் அமர்ந்தான். அவனுக்கு எதிரில் சுவரில் சாய்ந்து நின்றவள்,
“யார் யாரோ என்னென்னவோ இளாவை பற்றி சொல்றாங்க.. எனக்கு எதுவும் புரியல.. ப்ளீஸ்.. நீங்க கோவிச்சுக்காம அவங்களுக்கு என்னன்னு சொல்றீங்களா?” சற்று பயத்துடனே கேட்டாள்.
ஏனெனில் அவன் எப்போ வேணுமானாலும் மலை ஏறுவானே.. அதனால் தயவு செய்தே கேட்டாள்.
நிதானமாக அவளை நிமிர்ந்துப் பார்த்த மலையமான் “என் தங்கச்சிக்கு எந்த குறையும் இல்லை” என்றான்.
“உங்க தங்கச்சி பாசம் எனக்கு புரியுது. அவங்க மேல நீங்க வச்சு இருக்குற தூயமான அன்பு புரியுது. ஆனா எதுவும் உடைச்சி பேசலன்னா நீங்க நினைக்கிற எதுவும் நடக்காது உங்க தங்கச்சி வாழ்க்கையில.. என்னை எதுக்காக நீங்க கல்யாணம் செய்து கூட்டிட்டு வந்தீங்களோ அது கடைசி வரை நடக்காம போயிடும்.. சோ ப்ளீஸ்..” என்றவள்,
“உங்க தங்கச்சியை பத்தி நான் தவறா நினைப்பேன்னு நினைச்சு தயங்குனீங்கன்னா அந்த தயக்கத்துக்கு இன்கா வேலையே இல்லை. நான் இளாவை பற்றி தவறாகவே நினைக்க மாட்டேன்” என்று உறுதிக் குடுத்தாள்.
மலையமான் மௌனமாக இருந்தான். “எங்க அப்பா கிட்ட சொல்ல முடியுது.. என் கிட்ட சொல்ல முடியலையா?” கேட்டவளை நிமிர்ந்துப் பார்த்து முறைத்தவன்,
“என்னடி துப்பு துலக்குறியா?” கடுப்புடன் கேட்டவனை பார்த்தவள்,
“நான் இங்க வந்த வேலையை முடிச்சுக் குடுத்துட்டு போகலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” அழுத்தமாக கேட்டாள்.
மலையமான் அவளை இன்னும் முறைத்துப் பார்த்தான்.
“நீங்க உங்க தங்கச்சியை பத்தி சொன்னா சீக்கிரம் அவளை அவ வாழ்க்கையில கொண்டு போய் சேர்த்துட்டு நான் என் வீட்டுக்கு கிளம்பிடுவேன். நீங்களும் ப்ரீயா விருப்பம் போல இருக்கலாம்.. இல்லன்னா கடைசி வரை நான் இந்த வீட்டுல தான் இருந்தாகணும். தினம் தினம் நீங்க என்னை சகிச்சுக்கிட்டு இருக்கணும். இதெல்லாம் நடக்கணும்னு நீங்க விரும்புனா எதுவும் சொல்ல வேண்டாம்” என்றவளின் பேச்சில் மலை இறங்கியவன்,
ஆதி முதல் அந்தம் வரை சொல்ல ஆரம்பித்தான் தன் தங்கையை பற்றி.
“இளாவோட சின்ன வயசுலையே எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க. நான் கொஞ்சம் வளர்ந்த பையன். அதனால மேனேஜ் பண்ணிக்கிட்டோம். சொந்தக்காரங்க ன்னு பெருசா யாரும் இல்ல. எல்லோரும் எங்க சொத்தை அபகரிக்க தான் பார்த்தாங்க. அதுல இருந்து நாங்க தப்பிக்கவே ரொம்ப சவாலா போச்சு. அதுல கொஞ்சம் ஹெல்ப் பண்ணது உன் சீனு மாமா தான்” என்றவன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
அவள் கவனமாக அவனின் முகத்தையும் பேச்சையும் பார்த்துக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.
“நாங்க ரெண்டு பேரும் தனிமையில தான் இருந்தோம். வாழ்ந்தோம். அக்கம் பக்கத்து வீட்டுக்கு கூட போக மாட்டோம். யாரும் எங்களை சேர்த்துக்கவும் இல்ல. ஸ்கூல்ல கூட அப்படி தான். பிரென்ஸ்ன்னு யாரும் இல்ல எங்களுக்கு. இளா கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சா.. யார் கிட்டயும் அதிகம் பேச மாட்டா.. நானும் அவக்கிட்ட அதிகம் பேச மாட்டேன். சாப்பிட்டியா படிச்சியா அவ்வளவு தான் எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை. ரெண்டு பேரும் தனி தனியா தான் படுத்துக்குவோம். அவ எப்ப வயசுக்கு வந்தான்னு கூட எனக்கு தெரியாது..” என்று சொல்லும் பொழுதே அவனின் குரல் ஏகத்துக்கும் இறுகிப் போய் கிடந்தது.
ஒரு அண்ணனாக அவனின் வலி தேனருவிக்கு நன்கு புரிந்தது. மலையமானின் முகம் கறுத்து விழிகள் சிவந்துப் போய் இருப்பதை பார்த்து இவளின் நெஞ்சில் சின்ன வலி எழுந்தது. ஏன் இந்த வலி என்று அவளுக்கு தெரியவில்லை. விழிகள் சிமிட்டாது அவனையே பார்த்து இருந்தாள் அவனின் மனைவி.
“எனக்கும் அது பத்தி எந்த சிந்தனையும் இருக்கவில்லை. அதனால நாங்க அதை பற்றி பேசிக்கவே இல்லை. ஒரு நாள் இளா பன்னிரண்டாவது படிக்கும் போது அவங்க ஸ்கூல் மிஸ் என்னை கூப்பிட்டு விட்டாங்க. அவங்க சொல்லி தான் என் தங்கச்சி எப்பவோ பெரிய பொண்ணாகி இருக்குறான்றதே புருஞ்சுது..” என்றான் தொண்டை அடைக்க.
“அவளுக்கு சுழற்சி சரியா இருக்கல போல.. அதனால தான் அவளுக்கு தெரியவே இல்லை. அவளும் சின்ன பிள்ளையா அவளுக்கும் எதுவும் புரியல.. அவங்க மிஸ் தான் எல்லாத்தையும் சொல்லிக் குடுத்து இருக்காங்க..” என்றான் பெருமூச்சு விட்டு.
“அதுக்கு பிறகு அப்படி இப்படின்னு நாட்கள் போச்சு. அவ ரொம்ப இயல்பா இருக்குற மாதிரி தான் எனக்கு தோணுச்சு.. எனக்கு கல்லூரியில அறிமுகம் ஆனவன் தான் மாதவன். அவன் என்னோட தங்கச்சியை காதலிச்சான். ஆனா அவளுக்கு அதுல விருப்பம் இல்ல போல.. என் கிட்ட சொன்னா.. நான் அவனை கண்டிச்சேன். பிறகு அவனோட காதல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறதை பார்த்து சரி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன். அவனோட பெத்தவங்க கிட்டயும் பேசி கிராண்டா கல்யாணம் பண்ணி வச்சேன்..” என்றவன், அவளை வேதனையுடன் பார்த்து,
“அதுக்கு பிறகு தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது” என்றான்.
என்ன பிரச்சனை என்று அவளுக்கு புரிந்துப்போக, மலையமானை இறக்கத்துடன் பார்த்தாள். “ஒரு அண்ணனா நான் இதை சொல்லக் கூடாது.. ஆனாலும்..” என்றவனின் வார்த்தை திக்கியது.
“அவங்க முதலிரவு முடிஞ்சு வெளியே வந்த மாதவன் என்கிட்டே சொன்ன ஒரு விசயம் படுக்கையில மரக்கட்டை மாதிரி எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்குறாடா உன் தங்கச்சின்னு சொன்னது தான்” என்றவனின் குரலில் அடக்கப்பட்ட குமுறலும் வேதனையும் வலியும் அடங்கி இருந்தது.
சக மனுசியாய் அவளுக்குள்ளும் அந்த வேதனை படிந்தது.. அவனது தொண்டை ஏறி இறங்குவதிலே அவன் கொண்ட வேதனையின் அளவு புரிந்தது.
“அவளை மாற்ற அவனும் எவ்வளவோ முயற்சி செய்து விட்டான். ஆனால் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை. கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறாள். என்னாலும் ஊரு கட்டத்துக்கு மேல் அவக்கிட்ட பேச முடியல.. கிளம்பி இங்க வந்துட்டா. பெருசா அவக்கிட்ட உணர்வுகள் எதுவும் இருக்காது.. ஏன் அவன அழுது கூட நான் பார்த்தது இல்ல.. அப்ப எல்லாம் எனக்குள்ள ஒரு கர்வம் இருக்கும். என் தங்கச்சியை நான் அழக்கூட இல்லாம நான் அப்படி பார்துக்கிட்டேன்னு. ஆனா அது அவளோட உணர்வுகளின் கு...” என்று நிறுத்தி விட்டான்.
தன் தங்கையை பற்றி அவனால் குறையாக கூட பேச முடியவில்லை. குறை அவளிடம் தான் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள கூட முடியவில்லை என்பதை பார்த்தாள் தேனருவி.
இதுபோலொரு ஒரு அண்ணன் இருந்தால் போதுமே.. மலையை கூட புரட்டி போட்டுவிடலாம் எண்ணிக் கொண்டாள்.
“இங்க வந்த பிறகு இன்னும் இருக்கமா போயிட்டா.. குடும்ப வாழ்க்கையில விருப்பம் இல்ல.. டைவேர்ஸ் வேணும்னு நின்னா. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்பவும் இருக்கு. எப்படியும் நான் அவளை வாழ வச்சிடுவேன்னு” என்று சொன்னவனை பார்க்க கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது.
“நல்ல மனுசன் தான் போல” எண்ணிக்கொண்டாள்.
“அப்ப தான் அவளுக்கு குடும்பத்தின் அடிப்படை புரியல, தாம்பத்தியம்ன்னா என்னனு தெரிலன்னு சொன்னாங்க அவங்க மாமியார். ஒரு குடும்பத்துல எப்படி நடந்துக்குறதுன்னு தெரியாதது னால தான் இப்படி இருக்கா.. முதல்ல நீ கல்யாணம் பண்ணி அவளுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு காட்டு. ஆட்டோமேட்டிக்கா உங்க தங்கை வாழ ஆரம்பிச்கிடுவான்னு சொன்னாங்க ஒரு சிலர்”
“ஆனா அதுக்காக கல்யாணம் கட்ட முடியாதே.. எனக்கு கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. அதனால ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து அவளோட கொஞ்சம் இன்டிமேட்டா இருந்தா அதை பார்த்து இளா புருஞ்சுக்குவான்னு நினைச்சேன். ஆனா அது வேற மாதிரி போயிடுச்சு. சோ சீனு கை காட்டுன உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுவும் பணத்தை குடுத்து. அப்ப தான் நீ எப்ப வெளியே போக சொன்னாலும் போவன்னு..” என்றான்.
ஆக மலையமான் முற்றிலும் மோசமானவன் கிடையாது. தன் தங்கைக்காக தான் எல்லாவற்றையும் செய்து இருக்கிறான் என்ற புரிதல் வந்து இருந்தது அவளுக்கு. ஆனா அதுக்காக தன் வாழ்க்கையை இப்படி சூனியம் ஆக்கியவனை அவளால் கொஞ்சமும் மன்னிக்க முடியவில்லை.
அதுவும் வேற ஒரு பெண்ணை அழைத்து வந்து அந்த பெண்ணுடன் இன்டிமேட்டாக இருந்ததை அவன் வாயாலே சொல்ல அவன் மீது கணவன் என்கிற பிடிப்பு முற்றிலும் குறைந்துப் போனது.
தீர்க்கமாக அவனை பார்த்த தேனருவி, “உங்க தங்கை குணமாகிட்டா நிச்சயமா என்னை விட்டுடுவீங்களா?” அவனிடம் உறுதி கேட்டாள்.
“யா அப்கோர்ஸ்.. அதுக்கு பிறகு உன் மூஞ்சியில கூட முழிக்க மாட்டேன். அதே போல நீயும் என் மூஞ்சில முழிக்கக் கூடாது. கட்டிய கணவன், தாலி அது இதுன்னு செண்டிமெட் சீன காட்டக் கூடாது” என்றான் தெளிவாக. தேனருவியின் தலை தானாக ஆடியது சம்மதம் என்று.
“உங்க தங்கையை குணமாக்க நான் உதவி செய்யிறேன்” என்றாள்.
“நீ செஞ்சு தான் ஆகனும்.. அது உன்னோட வேலை.. என்னவோ பெரிய மனசு பண்ற மாதிரி பேசுற..” அவனின் நார்மல் பேச்சு வெளியே வர,
“இவர் கிட்ட பேசுறதே வீண்” தலையில் அடிக்காத குறையாக எண்ணியவள்,
“நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்” என்று தன்னுடைய யோசனைகளை சொன்னாள்.
“நீங்க கொஞ்சம் உரிமையும் எனக்கு குடுக்கணும்” என்றாள். ஒரு கணம் யோசித்தவன்,
“பட் லிமிட் தாண்டக் கூடாது..” என்றான்.
“ஆதர்சன கணவன் மனைவிக்குள்ள எந்த லிமிட்டும் இருக்காது. சோ லிமிட் தாண்டுனா தான் இளாவுக்கு புரிய வைக்க முடியும். இல்லன்னா உங்க விருப்பம்” என்றாள்.
“ஓகே” என்று பல்லைக் கடித்து அவளுக்கு அனுமதி குடுத்தான் மலையமான். அடுத்த நாளில் இருந்து மலையமான் மற்றும் தேனருவியின் வாழ்க்கை முறை மாறிப்போனது.
அந்த மாற்றத்தால் இருவரின் மனதும் நெகிழ்ந்துப் போவதை சாமர்த்தியமாக மற்றவர் அறியாமல் பார்த்துக் கொண்டார்கள் இணை இருவரும்.
நடிப்பு என்று சொல்லி சொல்லியே இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக நெருங்கி இருந்தார்கள் இருவரும் அறியாமலே.





