மலையமானின் சீற்றத்தை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளாமல் வந்த அம்மா மேலும் பேசினார்.
“என்னப்பா உள்ளதை சொன்ன உடன் கோவம் பொங்கிக்கிட்டு வருதோ. என் மகனோட வாழ்க்கையை வீணாக்கிட்டியே அதுக்கு நான் எவ்வளவு கோவப்படணும் உன் மேலையும் உன் தங்கை மேலையும். ஆனா நாங்க அப்பவும் எவ்வளவு பொறுமையா போனோம். எவ்வளவு தன்மையா நடந்துக்கிட்டோம். அந்த பெருந்தன்மையை நீ கட்டுனியா?” என்று கேட்டவரை ஆழ்ந்துப் பார்த்தானே தவிர பதில் எதுவும் பேசவில்லை.
“ஒரு மாசம் ரெண்டு மாசமாவா பொறுத்தோம். முழுசா மூணு வருடம்.. காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போனதுக்கு பிறகு தான் குழந்தை பெத்துக்க வெளில ஏற்பாடு பண்ணோம். அதுவும் வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். ஆனா அவன் அதை மறுத்துட்டான். என் மகன் இன்னொரு கல்யாணம் பண்ண சம்மதிக்கல. ஏன்னா அவன் மசுல முழுசும் உன் தங்கச்சி தான் முழுசா இருக்கிறா.”
“என் மகனுக்கு கல்யாண கனவுகள்னு எவ்வளவோ இருக்கும். அதுல ஒன்னையாவது உன் தங்கச்சி நிறைவேற்றி இருக்காளா.. சொல்லு? தன் ஆசை அத்தனையையும் மனசுல போட்டு புதைச்சுக்கிட்டு உன் தங்கச்சியோட இருந்தான். ஆனா அவ இவனை உதறி தள்ளிட்டு இதோ உன் கூட வந்து டேரா போட்டுட்டு வந்து உட்கார்ந்து இருக்கா. என் மகனோட வாழ்க்கையை அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருமா சேர்ந்து வீணடிச்சுட்டு கோவத்துல கத்துனா எல்லாம் மறந்து போயிடும்னு நினைச்சியா?”
“பாழாய்ப்போன என் மகனோட வாழ்க்கையை உன்னால சரி செய்து தரமுடியுமா? குழந்தைக்கு வெளியே ஏற்பாடு செய்தப்ப பெரிய இவனா வந்து தடுத்துட்டியே என் பேரப்பிள்ளையை பார்க்க நெஞ்சு கிடந்து தவிக்கிறதே அந்த தவிப்பை உன்னால அடக்க முடியுமா சொல்லு... என் வம்சமே தழைக்காம பண்ணிட்டியே அதுக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? என் மகனை இப்படி ஒண்டியா நிற்க வச்சுட்டியே உன்னால இதுக்கு பதில் சொல்ல முடியுமா? சொல்லு.. ஊரு உறவுல என்னையும் என் மகனையும் நிற்க வச்சு கேள்வி கேட்குறாங்களே அதுக்கு உன்னால பதில் சொல்ல முடியுமா? சொல்லு.. இவ்வளவு ஆவேசமா கோவப்படுறியே.. உன்னாலயும் உன் தங்கச்சியாளையும் எனக்கும் என் மகனுக்கும் ஏன் எங்க குடும்பத்துக்கும் எத்தனை தலைக்குனிவுன்னு உனக்கு தெரியுமா?”
“உனக்கு எப்படி தெரியும். உங்களுக்கு தான் சொந்தம்னு சொல்லிக்க ஒரு நாதி இல்லையே.. பிறகு எப்படி இதை பத்தி எல்லாம் தெரியும்” என்று அவர் பேசிக் கொண்டே போக மலையமான் ரத்தம் கசிந்த விழிகளுடன் நின்று இருந்தான்.
மூச்சுக்கே சிரமப்படுவது போல அவன் நின்றிருந்த தோற்றம் தேனருவிக்கு பெரும் திகிலை குடுத்தது. அதை விட இளவரசி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பதை பார்த்து குழம்பிப் போனாள்.
இப்படி குற்றத்துக்கு மேல் குற்றம் சுமத்தியும் கொஞ்சமும் கலங்காமல் இவ்வளவு அழுத்தமா ஒருத்தி இருப்பா.. மலைத்து நின்றாள் தேனருவி.
“குடும்பம்னு ஒன்னு இருந்தா இதுக்கு முன்னாடி ஒருத்தியை கூட்டிட்டு வந்து வீட்டுல நீ கூத்தடிச்சு இருப்பியா?” அவர் மேலும் கொட்ட,
“என்ன..?” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள் தேனருவி.
அரண்டுப்போய் அவரை பார்த்தாள். அவளின் விழிகளில் சட்டென்று தேங்கி நின்ற கண்ணீரை பார்த்த அவர்,
“உனக்கு இந்த உண்மை தெரியாது இல்லையா?” என்றவர் மலையமானை வெறுப்புடன் பார்த்து விட்டு தேனருவி பக்கம் திரும்பி,
“பல உண்மைகளை மறைச்சு தான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்காங்க.. ஏழை பொண்ணுன்னு உன்னை ரொம்ப சுலபமா விலைக்கு வாங்கி இருப்பாங்க இல்லையா?” என்று சொன்னவரின் கூற்றை கேட்டு தேனருவியின் தலை தானாக ஆடியது.
“இவங்களுக்கு ஏழைன்னா ரொம்ப இளக்காரம்.. பணத்தை வச்சு எதை வேணுமானாலும் சாதிச்சுக்கலாம்னு நினைச்சு முதல்ல என் மகன் வாழ்க்கையில விளையாடுனாங்க, இப்போ உன் வாழ்க்கையில விளையாடி இருக்காங்க.. இவங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு..” அவர் வெறுப்புடன் மேலும் சொல்ல, தேனருவிக்கு நெஞ்சில் இன்னும் சுமை கூடியது.
“அவன் தங்கச்சி ஒரு ஜடம்..” என்று அவர் ஆரம்பிக்க,
மலையமான் மறுபடியும் “ஷட்டப்” என்று கர்ஜிக்க,
“நான் எதுக்கு ஷட்டப் ஆகணும். நான் பேசுவேன். உன் லட்ச்சனமும் உன் தங்கையின் லட்ச்சனமும் என்னன்னு இந்த பொண்ணு தெரிஞ்சுக்கிட்டும்” என்றவர்,
ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்ல, தேனருவிக்கு காலுக்கடியில் நிலம் நழுவியது. தலைக்கு மேல வானம் இடிந்து விழுந்தது..! எதையும் அவளால் மிக எளிதாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கடந்து வரவே முடியவில்லை. அவர் சொல்ல சொல்ல மொத்தமாக உடைந்து சிதறிப் போனாள் தேனருவி.
மூச்சுக்கு ஏங்கி தவித்துப் போனவளாய் அவள் தடுமாறி நிற்க, அந்த அம்மாவே அவளுக்கு குடிக்க நீரை குடுத்து ஆசுவாசப் படுத்தியவர்,
“உன் வாழ்க்கை உன் கையில.. ஆரம்பத்துலையே முழிச்சுக்கோ.. இல்லன்னா பெரிய சிக்கல் குள்ள மாட்டிக்க வேண்டியது வரும்.. முதல்ல உங்க அப்பாவை கூப்பிட்டு இந்த விசயத்தை எல்லாம் சொல்லிட்டு கிளம்பிடு. அது தான் உனக்கும் நல்லது உன் எதிர் காலத்துக்கும் நல்லது” என்று அவர் அறிவுரை வழங்கி விட்டு கிளம்பி விட்டார்.
அவர் போன பிறகு சிலை என நின்றவள் மலையமான் வந்து அவளை அசைக்க, சட்டென்று அவனின் கைப்பிடியில் இருந்து தன்னை உருவி விட்டுக் கொண்டவள், அறுவெறுத்துப் போனாள்.
“ச்சீ என்னை தொடாதீங்க” ஓங்கி கத்தியவள், வேகமாய் தான் இந்த வீட்டுக்குள் வந்த பொழுது முதல் முறையாக தங்கிய அறைக்குள் நுழைந்து கதவை அழுந்த தாழிட்டுக் கொண்டாள்.
கதவின் மீது சாய்ந்து அப்படி ஒரு அழுகை அவள். அவளின் அழுகை சத்தம் கூடத்தில் நின்று இருந்த அண்ணன் தங்கை இருவரின் காதிலும் விழுந்தது. மலையமானுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. தேனருவிக்கு எதுவும் தெரியக்கூடாது என்று எண்ணி மறைத்து வைத்து இருந்த விசயம் எல்லாம் தெரிந்துப் போனதில் ஆற்றாமையும் கோவமும் ஒருங்கே எழுந்தது. ஆனால் தங்கையின் மாமியாரை கொஞ்சமும் தடுக்க முடியாமல் போனதில் அவனது சீற்றம் இன்னும் பொங்கிப் பெருகியது.
இளவரசியோ எந்த உணர்வையும் காட்டாமல் தேனருவியின் அழுகையை காதில் வாங்கியவள் நிதானித்து தன் அண்ணனை பார்த்தாள்.
“பெட்டர் எனக்கு டைவேர்ஸ் வாங்கி குடு. அதே போல நீயும் உன் மனைவியை டைவேர்ஸ் பண்ணிடு.. நம்ம ரெண்டு பேருக்கும் குடும்ப வாழ்க்கை ஒத்து வராது..” என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.
இளவரசி என்னவோ ஈசியாக சொல்லி விட்டு போய் விட்டாள். ஆனால் மலையமானால் அப்படி செய்துவிட முடியாதே.. அவனுக்கு ப்ரிச்டீஷ் என்று ஒன்று இருக்கிறதே..
நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்று இருந்தவனுக்கு ஆத்திரம் மட்டும் மட்டுப் படவேயில்லை. அதுவும் தன் கையை உதறி தள்ளிவிட்டு தேனருவி ஓடியதை எண்ணி அவனது சீற்றம் இன்னும் அதிகரித்து தான் போனது.
“எவ்வளவு தைரியம் இருந்தா நான் மறைக்க நினைச்சதை எல்லாம் தெரிந்துக் கொண்டதோடு என்னையவே உதறி தள்ளிட்டு போய் இருப்பா. எங்க இருந்து இவ்வளவு திமிர் வந்தது.. யாரை கேட்டு இவ இந்த ஆட்டம் ஆடுறா?” சினத்தில் கொந்தளித்துக் கொண்டு இருந்தான்.
மறைக்கப்பட்ட உண்மைகளை எல்லாம் பதமாக தெரிந்து கொண்டு இருந்தால் ஒரு வேலை தேனருவி நிதானமாக இருந்து இருப்பாளோ என்னவோ.. ஆனால் ஓங்கி உச்சந்தலையில் மூளையே கலங்கும் அளவுக்கு அடித்து சொன்னதில் அவளால் இயல்பாக எதையும் யோசிக்க முடியவில்லை.
தான் மிகவும் மோசமாக ஏமாற்றுப் பட்டு விட்டோம் என்று மட்டுமே அவளுக்கு புரிந்தது. அதை தாண்டி அவளால் வேறு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. ஒரு நிம்மதியான அழகான நீரோடை போன்றொரு வாழ்க்கையை தான் அவள் எதிர் பார்த்து இருந்தாள். ஆனால் அவளுக்கு காட்டாற்று வெள்ளம் போல வாழ்க்கை அமைந்துப் போனதில் சுழலுக்குள் மாட்டிக் கொண்ட சிறு மீனாய் கதி கலங்கிப் போய் விட்டாள்.
தங்கச்சிக்காக தங்கச்சிக்காக என்று மலையமான் சொன்ன பொழுது எல்லாம் மேம்போக்காக எடுத்துக் கொண்டவளுக்கு அதன் முழு சாராம்சத்தையும் கிரகித்து யோசிக்க முடியமல் அழுகையில் கரைந்துப் போனாள்.
மிகத் தெளிவான பெண் தான் தேனருவி. ஆனால் அவளின் வாழ்க்கையை மிக சிக்கலாக்கி விட்டுவிட்டான் மலையாமன். யோசிக்கக் கூட அவகாசம் அவன் குடுக்காமல் எதையும் மனம் விட்டு பேசாமல் அவளை சுழற்றி எடுத்து இருந்ததில் அந்த அம்மா உண்மையை போட்டு உடைத்து இருந்ததில் பெரிதாக உடைந்துப் போய் விட்டாள்.
அதுவும் மலையமான் வேறு ஒரு பெண்ணுடன் இந்த வீட்டிலே கூத்தடித்தது என்று சொல்ல அதை விட தளி கட்டிய ஒரு பெண்ணுக்கு அதிர்ச்சி வேறு என்ன வேண்டும். இது ஒன்றுப் போதாதா ஒரு மனைவியை சுழற்றி அடிக்க.. அவளின் மன திடத்தை மேலும் குலைக்கும் வகையில் அவர் ஒன்றும் ஒன்றும் சொல்ல சொல்ல முற்றும் முழுதாக நிலைகுலைந்துப் போய் விட்டாள் தேனருவி.





