ஏனோ காரணமே இல்லாமல் அவள் மீது அவ்வளவு அன்பை வைத்து இருந்தான். நொடி விலகினாலும் அவ்வளவு தவித்து போனான் பாண்டியன்.
பாண்டியனின் வரவுக்கு பின் விருந்து இன்னும் அமர்க்களமாக மகனோடு பொழிலி தன் பாட்டி மார்களோடு அமர்ந்துக்கொண்டாள்.
பாண்டியன் ஊரின் முக்கியஸ்த்தர்களோடு பேசுவதும் தன் எடுபிடி ஆட்களை வர செய்து என்னென்ன வேண்டும் என்று எல்லாவற்றையும் கவனித்து சரி செய்து மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான்.
பாண்டியம்மாளும் அவளது குடும்பத்தோடு வந்து விருந்தை சிறப்பித்து தாய் வழி சொந்தம் பாட்டி வழி சொந்தத்தோடு ஐக்கியமாகி விட்டாள்.
மாறன் பூபதி பாண்டியும் விருந்து ஏற்பாட்டை கவனிப்பதுடன் அங்குவந்த வயது பெண்களை தன் நண்பர்களோடு பார்வையிட்டுக்கொண்டு இருந்தான் கண்ணியமாக.
மீனாச்சியம்மை அவரின் பிறந்த வீட்டை கவனிக்க செல்ல, அதே போல ராக்காயியும் பிச்சாயியும் அவர்களின் பிறந்த வீட்டில் இருந்து வந்தவர்களிடம் பேச சென்றுவிட, அவ்வளவு பெரிய கும்பலில் பூம்பொழிலி தனித்து போனாள் கையில் மகனுடன்.
அவளது இடுப்பில் பாண்டியனின் மகன் இருக்கவும் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவனுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டு அதை பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது மீனாச்சியின் அண்ணன் மகள் கொற்கை பாண்டியனை “எங்க அத்தை என் மகனை வாங்கிட்டு வர சொன்னாங்க...” என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு போக, கண்களெல்லாம் கலங்கி போனது பொழிலிக்கு.
சுற்றிலும் விழிகளை ஒட்டி தேடினாள். அவளுக்கு தெரிந்த முகம் அந்த கூட்டத்தில் ஒன்றுமே இல்லை. நொடியில் தனிமை பட்டது போல உணர்ந்தாள்.
அந்த நொடி அவளுக்கு தன்னுடைய இருப்பிடம் நினைவுக்கு வர, அங்கு இருந்தாள் தனக்கு இந்த மாதிரி எதுவும் நிகழ்ந்து இருக்காதே...! என்று தோன்றியது.
யாருடைய கவனத்தையும் கலைக்காமல் கோயிலின் உள்ளே சென்று அமர்ந்துக்கொண்டாள்.
கோயிலின் உள்ளே பெரிதாக கூட்டம் எதுவும் இல்லை. எல்லோருமே கோயிலுக்கு வெளியே தான் இருந்தார்கள்.
ஆர்பாட்டம் இல்லாமல் சிவப்பு புடவை ஒன்றை அணிந்து மலர் மாலைகளுக்கு இடையில் பரிவுடன் மடி தாங்கும் அன்னையாய் வீற்றிருந்து வீரனாயகி தாயை கண்ணார பார்த்தாள்.
நெஞ்சில் அவ்வளவு கேள்வி முட்டி மோதிக்கொண்டு இருந்தது. ஆனால் எதையும் வாய்விட்டு கேட்கவில்லை. வீரம் சொரிந்த தாயையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“ஏன்...?” என்ற கேள்வி மட்டும் அவளது விழிகள் இருந்தது.
இமை சிமிட்டிய பொழுது கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் கன்னத்தில் சடாரென்று விழுந்து ஓடியது.
அதை யாரும் கவனிக்கும் முன் துடைத்துகொண்டவள், சுவற்றில் சாய்ந்துக்கொண்டு மிக நிதானமாக அந்த தாயை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது அவளின் மடி மீது ஏதோ கனமாக விழ, அனிச்சை செயலாக அந்த பொருளை பிடித்துக்கொண்டாள். அதன் பின்பே தெரிந்தது அது கொற்கை பாண்டியன் என்று.
நெஞ்சோடு அவனை அணைத்துக்கொண்டவள், நிமிர்ந்து பார்த்தாள்.
ஏனெனில் பிள்ளையை இவ்வளவு உரிமையாக அவளிடம் விடுவது வேறு யாராக இருக்கும் பாண்டியனை தவிர. எனவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
உக்கிர பண்டியனாய் நின்றிருந்தான் பசும்பூண் பாண்டியன். விழிகளில் அவ்வளவு கோவல் இருந்தது.
“என்னடி உன் மனசுல நினைச்சுக்கிட்ட இருக்க.. யாரு வந்து புள்ளைய கேட்டாலும் உடனே தூக்கி குடுத்துடுவியா...? அவன் உன் புள்ளை. அதை நினைவுல வச்சுக்க...” கர்ஜித்தான்.
அதுவரை இருந்த தனிமை நொடியில் விலகிவிட, நெஞ்சில் மழைச்சாரலின் குளுமை வந்தது.
“என் பிள்ளை தான் யாரு இல்லன்னு சொன்னா... எங்க இல்லன்னு சொல்லி பாருங்க...” என்றவள் அவனது கையை பிடித்து இழுத்தாள்.
அவள் மீது விழுந்து உரசிக்கொண்டே அருகில் அமர்ந்தான் கடுப்புடன்.
“உங்க மாமன் மக வந்து கேக்கும் பொழுது எப்படிங்க குடுக்காம இருக்க முடியும்... அதான்...” என்று தயங்கினாள்.
“அதுக்கு நீயும் கூடவே போய் இருக்கணும்...” கடுப்படித்தான்.
“இனி இப்படி பண்ண மாட்டேன்...” என்றவள், அவனது முகத்தை பிடித்து தன் கழுத்தில் பதித்துக்கொண்டாள்.
“இந்த தாஜா பண்ற வேலையெல்லாம் வேணாம் போடி...” என்றவன் விலகவே இல்லை அவளிடமிருந்து.
இருவரையும் சுமந்தவள் தன் எதிரில் இருந்த அன்னையை பார்த்தாள். அப்பொழுது அடக்கிய கண்ணீர் இப்பொழுது நொடியில் இறங்கியது கன்னத்தில். துடைக்க கூட மனமில்லை. என்னவோ நெஞ்சே நிரம்பி தளும்பியது போல இருந்தது.
தன்னோடு இருவரையும் சற்று அலுத்தமாக நெருக்கிக்கொண்டவள், இருவரின் நெற்றியிலும் முத்தமிட்டாள் கொஞ்சம் வன்மையுடன்.
அவளின் இடையில் கைப்போட்டு சாய்ந்துக்கொண்டவன் கோயில் என்பதை மறந்து முத்தம் வைக்க போக,
“ப்ச் கோயில்ங்க...”
“நீ மட்டும் குடுத்தடி..”
“அது பிள்ளை முத்தம்...” என்று சிரித்தாள். அவளின் சிரிப்பை நிமிர்ந்து பார்த்தவன், தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
அவளிடமிருந்து பிள்ளையை பறித்து தூக்கிக்கொண்டு போகும் பொழுது அவனும் பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால் சற்று தொலைவில் இருந்தான். அதனால் தான் பிள்ளையை போய் வாங்கிக்கொண்டு வந்து இவளிடம் தர கொஞ்சம் தாமதமானது.
அவளது உணர்வுகளை புரிந்துக்கொண்டவன் போல அவனது செயலை கண்டவளுக்கு தன் பாண்டியனின் மீது கொள்ளை கொள்ளையாய் ஆசையும் காதலும் மோகமும் வந்தது.
யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கணவன்... நெஞ்சில் வீரனாயகி அம்மனுக்கு நன்றி சொன்னவள் அதன் பிறகு விருந்தில் கவனத்தை திருப்பினாள்.
விருந்து தடாபுடாளாக நடந்துக்கொண்டு இருக்க, வீட்டு ஆட்கள் மட்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அப்பொழுதும் ஆண்கள் அங்கிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள இருந்துவிட்டார்கள்.
அடுத்து வந்த நாட்களில் எல்லாம் பசும்பூண் பாண்டியனின் கைப்பாவை ஆனாள் பொழிலி. அவன் என்ன செய்தாலும் சரி என்கிற மாதிரியே அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் சீண்டலுக்கும், கூடலுக்கும், ஊடலுக்கும் இசைந்துக்கொண்டு இருந்தாள்.
அவனை கடந்து போகும் பொழுது அவளின் முந்தானையை பற்றி இழுப்பான். நீண்ட சடையை பற்றி இழுப்பான்.
மகனுக்கு சோறு ஊட்டும் பொழுது இடையை கிள்ளிவிட்டு மகனது கண்ணை மறைத்துவிட்டு அவளது இதழ்களை கடித்து வைப்பான்.
குளிக்கும் பொழுது முதுகு தேய்க்க சொல்லி அவளை நனைத்து ஈர உடையில் ரசிப்பான். அவனுக்கு உணவு பரிமாறும் பொழுதும் சில்மிஷம் ஏதாவது செய்து சிவக்க விடுவான்.
வெளியே கிளம்பும் பொழுது அவள் வந்து வழியனுப்ப வேண்டும். அதே போல வீடு திரும்பும் பொழுது அவள் வெளி வாசலிலே இருக்க வேண்டும். தப்பி தவறி உள்ளே இருந்துவிட்டால் அவ்வளவு தான் சாமி ஆடிவிடுவான்.
அப்படி ஒருநாள் அவன் வரும் பொழுது அவள் வெளி வாசலில் நிற்கவில்லை. வண்டியை நிறுத்தும் முன்பே பொழிலி வெளியே வந்துவிட்டாள். ஆனாலும் இவன் வேக எட்டு வைத்து உள் வாசலுக்கு வந்துவிட்டு,
“எத்தனை முறைடி சொல்றது.. வெளில இருன்னு... அதை விட வேற என்ன முக்கியமான வேலை வந்துச்சு..” என்று கத்தினான்.





