வந்தவுடனே பாண்டியன், “நேத்திக்கி புடவையில இருந்த இன்னைக்கு சல்வார்ல இருக்க...” கேட்டான். அவளின் இந்த தோற்றத்தில் முகம் லேசாய் வாடியது.
“இல்ல... எப்பவும் அந்த காஸ்டியும் தான். பட் இன்னைக்கு மலை ஏறலாம்னு தான் இந்த காஸ்டியும்...” என்றாள்.
“ம்ம்ம் ஆனாலும் நீ நேத்திக்கு தான் அழகா இருந்த...” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.
அதற்கு அடுத்து வந்த சில நாட்களில் அவளது வீட்டில் பேசி திருமணம் நிச்சியம் செய்தான் தன் வீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன்.
சம்மந்தம் பேசியவுடன் பொழிலி அவனுக்கு அழைப்பு விடுத்து பேச ஆரம்பிக்க, இவனும் பேச ஆரம்பித்தான். ஆனாலும் அவனால் முழுமையாக அவளிடம் பேசமுடியவில்லை.
‘என்னன்னா என்னன்னு’ கேட்பதோடு சரி பெரிதாக பேசிக்கொள்ளவில்லை... “கல்யாணத்துக்கு பிறகு நீ முழுசா என்கிட்டே மட்டும் தான் அப்போ உன் எல்லா பேச்சையும் கேட்டுகுறேன்டி...” என்று வேலையை பார்க்க ஓடினான். அவளும் ஒன்றும் சொல்லவில்லை.
வேலை மேல் வேலை வந்துக்கொண்டே இருந்தது. ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தான். முதலில் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் போக போக அவன் பேசாமல் போகவும் சலிப்பு தட்டவே ஆரம்பித்துவிட்டது.
கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று மாதம் அவனால் எதை பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. கல்யாணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் பொழுது,
“இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க பாண்டியன்...” என்று பொழிலி சொல்ல, சுல்லேன்று கோவம் மூண்டது அவனுக்கு.
“இங்க பாரு. இப்போ நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில இருக்கேன். இப்போ போயிட்டு அதையும் இதையும் பேசாத.. கல்யாணம் குறிச்ச நேரத்துல நடக்கணும். நடக்க வைப்பேன். மணப்பெண்ணா தயாரா இரு...” என்றவன் அதற்கு பிறகு அவளிடம் பேசவில்லை.
அவள் இரண்டாவது தாரமாய் வாக்கப்படுவது அவர்களது வீட்டில் ஒருவருக்கு கூட விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் இந்த திருமணத்திற்கு மறுப்பு சொன்னார்கள்.
ஆனால் பாண்டியன் பேசி அவர்களை சரி செய்து வைத்தான். ஆனால் பொழிலி இடையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லவும் அவர்களின் வீட்டில் மறுபடியும் பிரச்சனை எழுந்தது.
இந்த திருமணம் வேண்டாம் என்று. ஆனால் பாண்டியன் விடாபிடியாய் நடத்தினான் திருமணத்தை.
திருமண நாள் அன்று தான் பொழிலை நேரடியாக பார்த்தான். இடையில் நிச்சயம் கூட எதுவும் செய்யவில்லை. பெண் கேட்டு சென்ற பொழுது கூட அவன் போகவில்லை.
அந்த அளவு கழுத்தை நெறித்தது வேலை. அதற்கு பதில் அன்று இரவு பேசியில் பேசிக்கொண்டான். அது தான் கடைசியாக பேசியது. அதன் பிறகு அவனுக்கு இன்னும் வேலை பளு அதிகமாக இருக்க பேசமுடியாமல் போனது.
கூற புடவை எடுக்கும் பொழுதும் சரி நகைகள் எடுக்கும் பொழுதும் சரி பொழிலியின் முகத்தில் சிறிதும் மலர்ச்சி இல்லை.
அதை அவர்களது வீட்டில் உள்ளவர்கள் கவனித்து பசும்பூண் பாண்டியனிடம் சொல்ல, திருமண நாளுக்கு முந்தைய நாள் அவளை தனியே வர செய்து,
“இதோ பாரு... இந்த பாண்டியன் ஒரு முறை முடிவு எடுத்தா எடுத்தது தான். நீ எனக்கு மட்டும் தான். அதை யாராலும் மாற்ற முடியாது...” என்றவன், தன் கழுத்தில் இருந்த கனத்த சங்கிலியை எடுத்து அவளது கழுத்தில் போட்டு விட்டவன்,
“அச்சாரம் போட்டுட்டேன்..” என்றவன் நொடி கூட தாமதிக்காமல் அவளது இதழ்களை வன்மையாக கொய்துக்கொண்டான்.
“இனி இந்த வாய் கல்யாணம் வேணான்னு சொல்ல கூடாது. சொன்னா...” என்றவன், தனது கோவத்தையும் முரட்டு தனத்தையும் அவளது உடம்பில் காட்டிவிட்டு,
“இது போல தான் நடந்துக்கொள்ளுவேன். உன்னோட உடம்பு என்னோட ஒரு பிடிக்கு தாங்காது... சும்மா சும்மா சீண்டி பார்க்காத அப்புறம் முதலிரவ இன்னைக்கே முடிச்சுடுவேன். எனக்கு நீ தான். இந்த பூம் பொழிலி மாதுமையாள் இந்த பசும் பூண் பாண்டியனுக்கு தான்.” கர்ஜித்தவன்,
மயக்கம் கொடுக்கும் அவளது இதழ்களை மீண்டும் ஒரு முறை சிறை செய்துவிட்டு அகன்று விட்டான். அவன் அகன்ற பின்பே சுயம் அடைந்தவள், அப்படியே முட்டியில் கால் பதித்து முகத்தை புதைத்துக்கொண்டாள்.
சென்றவன் மீண்டும் வந்து அவள் இருந்த நிலையை கண்டு தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு,
“அழறியா...?” என்றான்.
இல்லை என்று தலையசைக்க,
“உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணு தண்ணி வந்தது பொறவு இந்த பாண்டியன் பாண்டியனா இருக்க மாட்டேன்... ஒழுங்கா கல்யாணத்துக்கு தயாரா இரு...” மிரட்டியவன் போய்விட, அடைத்த மூச்சை இழுத்துவிட்டான்.
அதனாலே திருமண பந்தலில் பொழிலியின் முகம் சோர்ந்து போய் இருந்தது. அவனிடம் அவளால் ஒட்ட முடியாமல் தாமரை இலை தண்ணீரை போல விலகிக்கொண்டு இருக்கிறாள்.
அதுவும் அவனது முரட்டு தனமும் கோவமும் நினைக்கும் பொழுதே உடல் உதறல் எடுத்தது. இரண்டு நாள் ஆகியும் அந்த பயம் போக வில்லை அவளுக்கு.
சின்ன பாண்டியனை தூக்கிக்கொண்டு அடுப்படிக்கு சென்றவள் அவனுக்கு சாப்பிட என்ன இருக்கு என்று ஆராய்ந்தாள்.
குழம்பு கூட்டு போரியல் எல்லாமுமே காரமாக இருக்க, வடித்த சாதத்தை நெய்யில் வதக்கி அதில் காய்ச்சிய பாலை சேர்த்து ஏலக்காய் தட்டிப்போட்டு, முந்திரி, பாதம் இவற்றை சிறிதாக நறுக்கி, திராட்சையையும் நெய்யில் வறுத்து ஒரே ஒரு சின்ன கரண்டி பனைவெல்லத்தை கலந்து நன்கு கொதிக்க வைத்தவள், அதை இளம் சூட்டோடு எடுத்து மகனுக்கு ஊட்ட,
முழு கிண்ணமும் சாப்பிட்டு விட்டான். கூடவே
“ம்மா இன்னும் வேணும்...” கேட்க, ஆத்தாமார்கள் மூவருக்கும் வியப்பு. ஒரு நாள் ஒரு பொழுது கூட அவனது கண்களில் கண்ணீர் இல்லாமல் உணவு உள்ளே இறங்கியது கிடையாது. இன்றோ வேடிக்கை பார்த்துக்கொண்டே எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு,
‘இன்னும் வேணும்..’ என்று கேட்டவனை எட்டாவது அதிசயம் போல பார்த்தார்கள்.
“இன்னும் வச்சு இருக்கேன்... நீ இங்க குருவியும் அணிலும் பார்த்துக்கிட்டு இரு... நான் எடுத்துக்கிட்டு வந்தர்றேன்...” என்று உள்ளே சென்றவள் இன்னும் ஒரு கிண்ணம் எடுத்துக்கொண்டு வந்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.
ராக்காயி வேகமாய் எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்து அவள் செய்து வைத்திருந்ததை ருசி பார்க்க, கூடவே பிச்சாயியும் சென்று அவரிடம் அடித்து பிடித்து சாப்பிட்டு பார்த்தார்.
“சும்மா சொல்லக்கூடாது புள்ள நல்லா தான் செஞ்சு இருக்கா...” பாராட்டியவர்கள் மீனாச்சி வாயிலும் வந்து துணித்தார்கள்.
அதே நேரம் வெளியே வந்த பாண்டியன் அங்கு நடக்கும் செயல்களை பார்த்தவன், விரைந்து யாருக்கும் தெரியாமல் தோட்டத்துக்கு சென்றான்.
அங்கு அணில் குருவி காக்கா என்று எல்லாவற்றையும் காட்டி சோறு ஊட்டிக்கொண்டு இருந்தவளை காண காண மனம் நேச அலையில் அடித்து சென்றது.





