தேனருவியை படுக்கையில் விட்டுட்டு அவளின் கண்களை ஒரு கணம் பார்த்தவன் சட்டென்று அலுவலகம் கிளம்பி விட்டான். ஒரு நொடி கூட வீட்டில் இருக்கவில்லை. அவளின் விழிப் பார்வை இருக்க விடவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
அலுவலகம் வந்த பிறகும் அவளின் கண்களில் இருந்த கண்ணீர் அவனை துரத்திக் கொண்டே இருந்தது.
“ம்ச்..” என்று தலையை உதறி அந்த பார்வையில் இருந்து வெளியே வர முயன்ற பொழுதும் அவனால் முடியவில்லை.
பைல்களை விரித்து வேலையை பார்க்க, அங்கோ எழுத்துக்களுக்கு பதிலாக பெண்ணவளின் நீர் சுமந்த வலி சுமந்த கண்கள் தான் பெரிதாக வந்து நின்றது.
“காட்..” தலையை பிடித்துக் கொண்டவன் முதன் முறையாக தடுமாறிப் போனான். முதல் முறையாக அவளின் மார்பில் முகம் புதைத்த உணர்வு கூட அவனை இந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கவில்லை. அவளின் வலி மிகுந்த கண்கள் தான் அவனை நிம்மதியாக இருக்க விடாமல் துரத்தி அடித்தது.
பாதி நாள் முழுவதும் அவனால் ஒரு வேலையை கூட உருப்படியாக செய்யமுடியவில்லை. “நானா இது.. இரும்பு மனம் கொண்ட மலையமானா இது.. இல்ல.. இல்லவே இல்லை.. எதற்கும் கலங்காத பாரியா இது.. இல்லவே இல்லை..” என்று அவனின் மனம் உறுமியது. அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். ஆனாலும் அவனால் சமநிலைக்கு வரமுடியவில்லை.
தன்னை துரத்தி எடுக்கும் அவளின் விழிகளை மறக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதை அவனால் கொஞ்சமும் செயல் படுத்த முடியாமல் போக தன் கழுத்தில் இருந்த டையை அத்தனை ஆவேசாமக தளர்த்திக் கொண்டவன்,
“இது வேலைக்காகாது வீட்டுல போய் அவளை உண்டு இல்லன்னு பண்றேன். இந்த மலையமானையே அலைய விடுறா..” பல்லைக் கடித்துக் கொண்டவன் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
வீட்டுக்கு வந்தவன் நேராக அவளை தான் தேடினான். பெரும்பாலும் பகல் நேரத்தில் ஒன்று தோட்டத்தில் இருப்பாள். இல்லை என்றால் சமையல் அறையில் இருப்பாள். அதுவே மாலை நேரம் என்றால் வீட்டுக்குள் இருக்கும் மரத்தின் அடியில் போய் அமர்ந்து வாய்க்காலில் காலை விட்டுக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருப்பாள்.
அது தான் அவளின் ரோட்டின் ஒர்க். எனவே மலையமான் வீட்டுக்குள் நுழைந்த உடன் தோட்டத்தைப் பார்த்தான்.
அங்கு அவள் இல்லாமல் போக, சமையல் அறையில் இருப்பாள் என்று அங்கு வந்தான். அங்கேயும் அவள் இல்லாமல் போக புருவம் சுறுக்கியவன் தன் அறைக்கு விரைந்தான்.
என்னவோ சரியில்லை என்று அவனின் உள் மனம் எச்சரிக்க வேகமாக ஓடினான். அவன் எண்ணியது போலவே அங்கே அதீத காய்ச்சலில் உடம்பு தூக்கி வாரிப்போட்டுக் கொண்டு இருந்தது தேனருவிக்கு. சுயநினைவு முற்றிலும் இழந்துப் போய் இருந்தாள்.
அதை பார்த்த உடனே தன் நெற்றியில் அறைந்துக் கொண்டவன், தான் பேசிய முட்டாள் தனமான பேச்சை எண்ணி நொந்துப் போனவன் அவளை அப்படியே கையில் தூக்கிக் கொண்டவன் மருத்துவமனைக்கு ஓடினான்.
எக்கேடோ கேட்டுப் போ என்று அவனால் விடமுடியவில்லை. பயங்கர கேர்லஸ் பார்ட்டி தான் மலையமான். ஆனால் இந்த காய்ச்சல் இந்த மயக்கம் எல்லாமே அவன் வீசிய சொல்லம்பால் விளைந்த வினை தானே. அதை இவன் தானே அறுத்து ஆகவேண்டும்.
காரில் அவளை தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடினான் மருத்துவமனைக்கு. அங்கே அவசர சிகிச்சை பிரிவில் அவளை சேர்த்து விட்ட பிறகே அவனுக்கு மூச்சு வந்தது.
“என்ன மிஸ்டர் இது.. இந்த அளவுக்கு சிவியரா இருக்கு.. என்ன ஆச்சு? என்ன பண்ணீங்க.. இவ்வளவு சிவியரா ஆகுற வரைக்கும் என்ன தான் பண்ணீங்க.. ஆரம்பத்துலையே கொண்டு வந்து சேர்க்க மாட்டீங்களா? கடைசி கட்டத்துல வந்து சேர்ப்பீங்களா? இப்படியே இன்னும் ஒரு அரை மணி நேரம் விட்டு இருந்தா ஜன்னியே வந்து இருக்கும்” மருத்துவர் வேறு கேள்வி கேட்டே அவனின் உயிரை எடுத்து இருந்தார். தெரிந்த மருத்துவமனை தான். அதனால் இந்த சாதாரண கேள்வியே அவனுக்கு பெரும் தலை இடியாய் இருந்தது.
அவர் கேட்ட ஒரு கேள்விக்கு கூட அவன் வாயை திறக்கவில்லை. பிச்சு வச்ச பிள்ளையார் கணக்கா அப்படியே அமர்ந்து இருந்தான்.
அவன் அப்படி அமர்ந்து இருப்பதை பார்த்த மருத்துவருக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது.
“இட்ஸ் ஓகே.. ட்ரீட்மென்ட் குடுத்தா சரியாகிடும்” என்று அவரே பாவம் பார்த்து அவனுக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்.
‘ஒரு சின்ன சொல்லைக் கூட அவளால் தங்க முடியலையே..’ அவனின் எண்ணம் எல்லாம் அதிலே தான் சுற்றி வந்தது.
“இப்படி இருந்தா எப்படி இவ வாழ்க்கையை இனிமே தானே இருக்கு. இவ்வளவு பூஞ்சையா இருக்காளே..” இதுநாள் வரை அவளை பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் இருந்தவன் இன்றைக்கு முழுவதும் அவளை தவிர வேறு எதையும் நினைக்கவே இல்லை. மற்றதை நினைக்க நினைவே வரவில்லை.
தலையை பிடித்துக் கொண்டு அந்த நீண்ட காத்திருப்பு பகுதியில் அமர்ந்து விட்டான். அவனை சுற்றி அத்தனை பெரும் வரவும் போகவுமாக இருக்க இவன் மட்டும் அசையாத சிலை போல அப்படியே அமர்ந்து விட்டான்.
அவனது பியேவை வர சொல்லி சொன்னதால் மருத்துவர் வணகி வர சொன்ன ட்ரிப்ஸ் மருந்து மாத்திரை எல்லாம் அவனே போய் வாங்கி வந்து இருந்தான்.
“எங்க சாரா இது.. யாருக்கும் கலங்காத மனுசன் பொண்டாட்டினோன்னையும் எப்படி கலங்கிப் போயிட்டாரு பாரேன்.. பொண்டாட்டி மேல அம்புட்டு பாசமா? சுற்றிலும் என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இப்படி இருக்குறாரே.. கடவுளே இவருக்காக அவங்க மனைவி சீக்கிரமா குணம் ஆகி வரணும்” என்று பியே வேண்டிக் கொண்டான். ஆனால் உரியவனோ கடவுளே இல்லை என்று இருப்பவன். அவனுக்காக மலை இறங்குவாரா கடவுள்.
முதல்கட்ட சிகிச்சை முடித்த உடன் மருத்துவர் வெளியே வந்தார். அவரிடம் போய் எப்படி இருக்குறா என்று கேட்க கூட இல்லை. அவனின் நிலையை பார்த்த மருத்துவரே “உங்க மனைவி இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்காங்க.. கவலை பட வேண்டாம். இன்னைக்கு ஒரு நாள் அப்ஜெர்வேஷன்ல வச்சுட்டு நாளைக்கு கூட்டிட்டு போங்க” என்றார்.
தலையை கூட ஆட்டவில்லை மலையமான்.
லேசாக கண் விழித்துப் பார்த்தாள் தேனருவி. எங்க இருக்கிறோம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. விழிகளை சுழற்றி சுழற்றி நிதானமாக அவதானித்துப் பார்த்தாள்.
அதன் பிறகே மருத்துவமனை என்று புரிந்தது.. “ஹாஸ்பிட்டலா” அதிர்ந்து கையை ஊன்றி எழப் பார்த்தாள்.
மேல் கையில் சுருக்கென்று வலி ஏற்பட கீழே குனிந்து கையை பார்த்தாள். ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது.
“ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு என்னக்கு என்ன ஆச்சு?” யோசித்துப் பார்த்தாள். எதுவும் நினைவுக்கு வரவில்லை. மலையமான் பேசியது, அதை தொடர்ந்து தான் கீழே விழுந்தது. தன்னை தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் விட்டுட்டுப் போனது, அதை தொடர்ந்து உடல் மெல்ல சுட ஆரம்பித்தது. இது தான் நினைவில் இருந்தது, அதன் பிறகு எதுவும் நினைவில் இல்லை.
அந்த மெல்லிய சூடு குளிர் காய்ச்சலை வர வைத்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டாள். இவள் கண் விளிக்கும் பொழுது நள்ளிரவு நேரம். மணியை பார்த்து விட்டு விழிகளை சுழற்றி தன்னோடு யார் இருக்கிறார்கள் என்று பார்த்தாள். ஒருவரும் இல்லை.
மேசை மேல் ஒரு நர்ஸ் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார்.
தேனருவியின் இதழ்களில் மெல்லிய விரக்தி புன்னகை.
“அட்லீஸ்ட் சாகட்டும்னு விடாம என்னை கொண்டு வந்து மருத்துவமனையில சேர்க்கனும்னாச்சும் தோணி இருக்கே.. அதுவே பெரிய விசயம் தான்” எண்ணிக் கொண்டவளுக்கு மருந்து வீரியத்தில் மறுபடியும் தூக்கம் வந்தது.
தூங்கிப்போனாள். அடுத்த நாள் காலையில் தூக்கம் கலைந்துப் பார்க்க நர்ஸ் அவளுக்கு பாத்ரூம் போக உதவி செய்து படுக்கையில் அமரவைத்த நேரம் மருத்துவர் வந்தார்.
தேனருவியை செக் செய்து விட்டு,
“மிஸ்ஸஸ் மலையமான் இப்ப எப்படி இருக்கீங்க?” என்று கேட்டவர்,
“எதுக்காக இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக்குறீங்க.. மன உளைச்சலுக்கு ஆளான மாதிரி இருக்கீங்க.. பெட்டர் எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வச்சு பழகப் பாருங்க. அது தான் நம்ம ஆரோக்கியத்துக்கு நல்லது” அறிவுரை கூறினார்.
தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
“ஓகே உங்களை டிஸ்சார்ஜ் பண்றோம். ஹெல்த் புட்டா சாப்பிடுங்க. ரொம்ப வீக்கா இருக்கீங்க. இப்படி இருந்தா எப்படி ஒரு குழந்தையை சுமக்க முடியும். புதுசா கல்யாணம் ஆனவங்க எப்படி இருக்கணும் தெரியுமா? நீங்க ஆரோக்கியமா இருந்தா தான் உங்களால வளமான வருங்கால சந்ததியினரை உருவாக்க முடியும். நீங்களே வழு இல்லாம இருந்தா எப்படி.. உடம்பை கவனிச்சுக்கோங்க. ” மேலும் அறிவுரை வழங்கியவர் கிளம்பி விட்டார்.
அதன் பிறகே அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
“இப்ப எப்படி போறது? ஹாஸ்பிட்டல் பில் வேற பே பண்ணனுமே... கையில ஒத்த பைசா இல்லை” பெரிதும் கலங்கிப் போனாள். யாரும் இல்லாத அனாதையை போல அந்த கணம் தன்னை உணர்ந்தாள். நெஞ்சுக்குள் அத்தனை வலி எடுத்தது.
தொடரும்..
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே நன்றி





