அவள் விலகியவுடன் படிக்கட்டில் போய் அமர்ந்தவன் அவள் நீந்தும் அழகை கண்டான். அவ்வளவு லாவகமாக பாண்டியர்களின் கொடியில் இருக்கும் மீன்களை போல கிணற்று நீரில் அவள் நீந்தும் அழகை இந்த பாண்டியன் வியப்புடன் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
அதன் பின்பு அவனும் அவளுடன் நீந்த இருவரும் சேர்ந்து நீந்தி குளித்து வெளியே வரும் பொழுது ஈர உடைகள் அனைத்தும் உலர்ந்து போய் இருந்தது. அதை எடுத்து உடுத்திக்கொண்டு மேலே ஏறினார்கள்.
இரு சக்கர வாகனத்தில் அவளை அழைத்து சென்றான். வீடு வந்து சேர்ந்த இருவரது தோற்றத்தையும் கண்ட இரு கிழவிகளுக்கும் எல்லாம் புரிந்து போனது. அப்பொழுது தான் சின்ன பாண்டி தூங்கி எழுந்து வர, பொழிலியை கண்டவன் வேகமாய் அவளது காலை வந்து கட்டிக்கொண்டான்.
“என்னடா கண்ணா இப்போ தான் எழுந்தியா...?” கேட்டவள் அவனை தூக்கி வைத்துக்கொண்டாள்.
“ம்ம்” என்றவன் அவளது கழுத்தில் முகத்தை பதித்துக்கொண்டான். விட்ட தூக்கத்தை அவளிடம் தொடங்க, பாண்டியனுக்கு சிறிது முன்பு அவ்விடத்தில் தான் செய்த சேட்டைகள் நினைவுக்கு வர, தாத்தாவை பார்க்க விரைந்து விட்டான்.
‘ஏனோ அவளை விட்டு எங்கும் போக பிடிக்கவில்லை அவனுக்கு... அவளது மடியிலே இருக்க அவனுக்கு ஆசையாக இருந்தது. கடமை அழைக்கும் பொழுது எப்படி அவளிடம் இன்பமாக விளையாடுவது.’
‘இரவு இது எல்லாத்திற்கும் சேர்த்து கவனித்துக் கொள்ளுகிறேன்...’ முணகியபடி தன் தாத்தாவிடம் பேச தொடங்கினான்.
“ஏதாவது சாப்பிட்டானா ஆத்தா...”
“ரெண்டு வாய் வாங்கினான். அதுக்கு மேல அழுதுக்கிட்டே தூங்கிட்டான். நீ என்னன்னு பாருத்தா...” ராக்காயி சொல்லியபடி வெற்றிலையை இடிக்க, அதை பிடுங்கி இடித்த வெற்றிலையை எடுத்து தன் வாயில் அதக்கி கொண்டார் பிச்சாயி.
“அடியேய் இடுப்பு நோக ஒருத்தி நெல்லு குத்துவா... நீ வந்து பகுமானமா சோறு வடிக்கிறியாக்கும்...” என்று ராக்காயி பிச்சாயி இடம் சண்டைக்கு போக,
“அதே தான்டி நானும் சொல்லுறேன்... தொங்க தொங்க நான் தாலி கட்டிக்குவனாம்.. நீ நோகாமா பிள்ள பெத்துக்குவியாம்... எனக்கு எம்புட்டு வயிறு எரியும்.”
“வயிறு எரிஞ்சா கிரிஷ்ணாயில எடுத்து ஊத்திக்க முழுசா தீஞ்சி போயிடட்டும்...” நக்கல் பண்ண,
“நீ ஏண்டி பேச மாட்ட... உருத்தா நான் இருக்கிறப்பவே உன்னை பிடிச்சிட்டு வந்தா நாயி தான் மதிக்குமா இல்ல நாய் வாலுதான் மதிக்குமா...?”
“தெரியிதுல்ல மூடிக்கிட்டு போடி...”
“போகதாண்டி போறேன்... ஆனா என்ற மவனையும் கூட்டிக்கிட்டு போக போறேன்...”
“அது யாருடி உன்ற மவன்... கோயில் கோயிலா நான் ஏறி இறங்கி, சுத்தாத மரத்த எல்லாம் சுத்தி நான் புள்ள வரம் வாங்குனா நீ என்ற மவன கூட்டிக்கிட்டு போவியாமுள்ள... இதுக்கு தானே நான் விரதம் இருந்து, வயிறு வலி எழுத்து புள்ள பெத்து போட்டு இருக்கேன்...” என்று எகிற,
இருவரும் குடுமி பிடிக்காதது ஒன்று தான் குறை... அந்த அளவுக்கு தங்களது மகனுக்காக சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
இதில் யார் வெள்ளியம்பலத்தாரின் அம்மா என்று வெள்ளியம்பலத்தாருக்கே தெரியாது. ராக்காயிம் சரி பிச்சாயிம் சரி நான் தான் உன்ற அம்மா என்று சொன்னார்களே தவிர, ‘அவ உன்ற பெத்த அம்மா இல்ல’ என்று ஒரு நாள் ஒரு பொழுது கூட மற்றவர்களை காட்டிக்கொடுத்ததே இல்லை.
என்ற பிள்ளை என்ற பிள்ளை என்று தான் பேசுவார்கள் இப்பொழுது வரையும். அதில் நின்ற பாண்டியருக்கு அவ்வளவு பெருமை.
எவ்வளவு தான் சண்டை போட்டுக்கொண்டாலும் இருவரில் ஒருவர் தான் வெள்ளியம்பலத்தாரை ஈன்ற தாய். ஆனால் பெற்ற தாய் தன்னுடைய மகன் என்று ஒரு பொழுதும் சொன்னது கிடையாது. குழந்தை பெற்ற உடனே குழந்தையை எடுத்து தன் சக கிழத்தியிடம்,
“இந்த உன்ற மகன உன்கிட்ட குடுத்துட்டேன்..” என்று தான் கொடுத்தார். கண்ணீருடன் வாங்கி உச்சி முகர்ந்தவர் இன்று வரையிலும் மகனை விட்டுக்கொடுக்கவே இல்லை.
ஈன்ற தாயும் அப்படி தான். அவர்களுக்குள் சண்டை வரும். கண்ணா பின்னாவென்று பேசிக்கொள்ளுவார்கள். ஆனால் அதில் நின்ற பாண்டியரே உள்ளே வந்து நியாயம் சொன்னாலும் இருவரும் சேர்ந்து அவரை தான் ஓட ஓட விரட்டுவார்கள் இவர்கள்.
இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. வம்சம் காக்க வந்த ராக்காயி பிச்சாயியை தெய்வங்களாக நாம் சிறப்பிக்கிறோம் என்றால் இவர்களும் இந்த குடும்பத்து காவல் தெய்வங்கள் தான்.
அதை வந்த அன்றைக்கே உணர்ந்துக்கொண்டார் மீனாச்சியம்மை. அவர்களின் போக்குக்கே மீனாச்சி வளைவார்.
அவர்களை விட வேறு யாரும் தனக்கு நல்லது சொல்லிவிட முடியாது என்று அவரின் எண்ணம்.
மீனாச்சியம்மையின் பிறந்த வீடு பெரிய தனம் கொண்ட வீடு தான். இரு அண்ணன்மார்கள் ஒரு தங்கை என்று பெரிய பட்டாளமே இருக்கும்.
பாண்டியனுக்கு தன் அண்ணன் மகளை கட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் ராக்காயி மறுத்துவிட்டார். பிச்சாயி இடம் சென்று மீனா கேட்க,
“ராக்காயி சொன்னா ஏதாவது அர்த்தம் இருக்கும் புள்ள... அவ சொல்றத கேளு...” என்றுவிட்டார். அதனால் அந்த பேச்சை அப்படியே நிறுத்திவிட்டார் மீனாச்சியம்மை.
பாண்டியனுக்கு வெளியே இருந்து பெண் பார்க்க தொடங்கிய பொழுது, ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு பெண் தர முன் வந்தார்கள். அதில் வடிகட்டி தேர்ந்தேடுத்து மணப்பெண்ணை முடித்தார்கள்.
பாண்டியனுக்கு பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கல்யாணம் செய்துக்கொண்டான்.
படித்த பெண் என்பதாலோ என்னவோ அவனிடம் அதிகமாக அவளால் ஒட்ட முடியாமல் போனது. அவனும் வெளிநாட்டுக்கு சென்று படித்தவன் தான்.
ஆனால் அவனது ரசனை வேறுவிதமாக இருந்தது. பாண்டியன் மண்ணின் மைந்தன். அவனது ரசனையும் அப்படியே அதை ஒட்டியே இருக்க, அந்த பெண்ணால் இயல்பாக இருக்க முடியாமல் போனது.
ஒரு சில நாட்கள் மட்டும் கடமையே என்று சேர்ந்து இருந்தவர்கள் அதன் பின்பு பிரிந்து சென்றுவிட்டார்கள்.
அதிலே அந்த பெண் கருவுற, அதை கலைக்க முனைந்தார்கள். ஆனால் ராக்காயியும் பிச்சாயியும் படாத பாடு பட்டு தங்களது குலவாரிசை காப்பாற்றினார்கள். அப்படி வந்தவன் தான் இந்த பொற்கைப் பாண்டியன்.
தாயில்லாமல் அவன் வளந்ததினாலோ என்னவோ ஆத்தா மார்கள் மூவரின் அணைப்பிலும் வளர்ந்தான்.





