“அப்பா அவருக்கு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்காம். அதுக்கு போய் ஆகணும்னு கிளம்பிட்டாரு.. சாரிப்பா” என்று தந்தையின் கையை பிடித்துக் கொண்டாள்.
“அதனால என்னம்மா இருக்கு.. நீ வந்ததே எனக்கு சந்தோசம் தான்” என்று புன்னகை செய்தவர் அவளுக்கு ஆராத்தி எடுக்க சொல்ல,
“நீங்க எடுங்கப்பா..” என்று சொல்லி தங்கைகளை தன்னுடன் நிற்க வைத்துக் கொண்டாள்.
“அப்போ நானு” என்று வந்த தம்பியையும் தங்களுடன் நிற்க வைத்துக் கொண்டாள்.
அப்பா வீட்டுக்கு வந்தவளுக்கு அவளை ஆசையுடன் வரவேற்று உபசரித்த தந்தையும் கூடப் பிறந்தவர்களையும் கண்ட பொழுது உள்ளுக்குள் இருந்து அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
அதை அடக்கிக் கொண்டு அவர்களுடன் இருப்பது ரொம்ப பெரிய கடினமாக இருந்தது. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழுது என தேனருவியின் நிலை பரிதாபமாக இருந்தது.
அப்பா சமைத்து போட, தம்பி தங்கைகள் கதை பேசிக்கொண்டே அவளுடன் விளையாட என அந்த பொழுது அருமையாக இருந்தது. மலையமான் ஒரு மணி நேரத்தில் கிளம்பி விட சொன்னான். ஓட்டுனர் அவளுக்கு நினைவுப்படுத்த வர,
“மத்தியம் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” சொல்லி விட்டு தந்தை சமைக்க சொல்லி, அவரையே அனைவருக்கும் ஊட்டி விட வைத்து ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்து என நேரம் போனதே தெரியவில்லை. மணி மூன்றை தொட்ட நேரம்
“மேடம் சார் போன் பண்ணிட்டே இருக்காரு.. ப்ளீஸ்” என்று அவசரப் படுத்த, பெருமூச்சை இழுத்து விட்டவளுக்குள் அத்தனை ஏக்கம். அத்தனை துக்கம்.
இந்த சின்னஞ்சிறு கூட்டுக்குள் தந்தையின் கதகதப்பில் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று தோன்றியது. கலங்க துடித்த விழிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அனைவருக்கும் கையாட்டி விடைக் கொடுத்தவளுக்கு கண்களில் நீர் நிரம்பி விட்டது.
“இனி இவர்களை எப்பொழுது பார்ப்பேனோ” நெஞ்சில் பாரம் வந்து அழுத்தியது.
கசக்கிப் பிடித்த இதயத்தை நீவி வலியை குறைக்க கூட முடியாமல், வெறும் தலையாட்டலுடன் ஓடிப்போய் காருக்குள் ஏறிக் கொண்டவளுக்கு விம்மிக் கொண்டு அழுகை வந்தது.
அவளின் கார் கண்ணை விட்டு மறைந்த பிறகும் வாசலிலே நின்று இருந்தார்கள் நால்வரும். இதுநாள் வரை தங்களில் ஒருத்தியாக இருந்தவள் இன்றைக்கு தனித்து போகும் பறவையாய் போனவளை பார்த்து கண்களில் கண்ணீர் சுரந்து விட்டது.
ஆற்ற தேற்ற வழியில்லாமல் நால்வரும் கலங்கிப் போய் நின்றார்கள். இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று எண்ணி தன் அழுகையை அடக்கிக் கொண்டு, தன் அப்பாவுக்கு போனை போட்டாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படி வாசலிலே நிற்பீங்க நாலு பேரும். முதல்ல வீட்டுக்குள்ள போங்க” அதட்டினாள்.
“ஆத்தா..” என்று அவர் அழைக்க,
“ப்பா” என்றாள்.
“ம்மா” என்றார் அவர்..
அவரின் தழுதழுத்த குரலில் இங்கே இவளுக்கு கண்ணீர் அருவியாய் கொட்டியது. சத்தமில்லாமல் கண்ணீர் விட்டவள், குரலை செருமிக் கொண்டு,
“முதல் பொண்ணுக்கே இப்படி கலங்கிப் போய் நின்னா இன்னும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் என்ன பண்ண போறீங்களோ ப்பா.. கொஞ்சமாச்சும் அப்பா மாதிரி நடந்துக்குறீங்களா? சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கிக்கிட்டு இருக்கீங்க.. நான் எங்க போக போறேன்.. நினைச்சா உங்களை பார்க்க வரப்போறேன்.. அழாதீங்கப்பா” என்று அவரை தேற்றி தம்பி தங்கைகளிடம் பேசிவிட்டு நிமிர்ந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.
ஏனெனில் முன்னாடி ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அவளின் கணவன் அமர்ந்து இருந்தான். அதுவும் குத்தும் பார்வையால் அவளை துளைத்துக் கொண்டு இருந்தான் முன் கண்ணாடி வழியாக.
அடிவயிற்றில் பயம் பிடித்துக் கொண்டது. ஒரு மணி நேரம் குடுத்த பெர்மிஷனை இவள் அட்வான்சாக கூட நாலு மணி நேரம் சேர்த்து அல்லவா எடுத்து இருக்கிறாள். என்ன சொல்வானோ என்று உள்ளுக்குள் அத்தனை பயம் சூழ்ந்தது.
எதுவாக இருந்தாலும் எதிர்க்கொண்டு தான் ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் கொஞ்சம் திடமாகவே இருந்துக் கொண்டாள். விடாமல் அவளை துளைக்கும் பார்வை அசவுகாரியத்தை குடுத்தாலும் வெளிப்புறம் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாள்.
புலி வருகிறது என்று ஒரு முறை பயப்படலாம்.. ஒயாமல் வந்தால் எப்படி..? அதோடு இனி புலி குகையில் தான் வாசம் செய்யணும்னா துணிச்சல் தான் வேணுமே தவிர பயந்து சாவது எந்த விதத்திலும் பயன் தராதே.. அதனால் தேனருவி துணிந்து விட்டாள்.
அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்த ஆசுவாசம் கொஞ்சமும் அவளிடத்தில் இல்லை. எப்பொழுது பூகம்பம் வெடிக்கும் என்கிற நிலையில் தான் அவள் இருந்தாள். அவளை அப்படி நினைக்க வைத்து விட்டான் மலையமான்.
ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு செய்கை இல்லை.. ஆனால் பெண்ணவளுக்குள் பெரும் பூகம்பத்தை கிளப்பி விட்டுவிட்டான்.
கார் நின்ற அடுத்த நிமிடமே கதவை திறந்துக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள் கொஞ்சமும் தாமதிக்காமல். அவன் கண் பார்க்காமல் எங்காவது ஒளிந்துக் கொண்டால் போதும் என்று தோன்றியது. அவன் அடங்கும் ஒரே இடம் அவனின் தங்கை தானே.. எனவே வந்த உடனே அவன் தங்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
கதவை தட்டினாள்..
“ம்ம் யாரு..” இளவரசி உள்ளிருந்து குரல் கொடுக்க,
“நான் தேனருவி” என்றாள் இவள்.
“என்ன வேண்டும்?” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வாசலை பார்த்து நின்றாள். மலையமான் வேக நடையோடு வந்துக் கொண்டு இருந்தான்.
“அய்யோ..” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டவள் பட்டென்று இளவரசியின் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டாள்.
“என்ன?” என்பது போல இளவரசி பார்க்க,
“அது.. அது” என்று தடுமாறிப் போனாள்.
“ப்ச் வாட்?” அவள் பொறுமை இழந்து கத்த,
“ஷப்பா.. எரியிற கொள்ளிக்கு பயந்து எண்ணையில குதிச்ச கதையா இருக்கு என் நிலைமை” முணுமுணுத்துக் கொண்டவள்,
“இல்ல மத்தியம் சாப்பிட்டீங்களா? இல்லையான்னு கேட்கலாம்னு வந்தேன்” என்றாள். அப்படி கேட்டவளை விசித்திரமாக பார்த்த இளவரசி தலையை ஆட்டினாள் சாப்பிட்டதாக.
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவள்,
“இல்ல அப்பா நாட்டுக்கோழி அடிச்சு சூப் வச்சாங்க.. அது தான் கொண்டு வந்தேன்” என்று கையில் இருந்த பையை காண்பித்தவளுக்கு வெளியே போக மனமில்லை. ஆனால் இந்த சிடுமூஞ்சியும் பேசி தொலைய மாட்டேங்குதே மனதுக்குள் கறுவிக் கொண்டு இருந்த நேரம் அந்த அறைக்குள் நுழைந்தான் மலையமான்.
அவன் அறைக்குள் நுழையவுமே அருவிக்கு வேர்த்துக் கொட்டியது.
“விட மாட்டாரு போலையே” முணுமுணுத்துக் கொண்டவள்,
“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.. நான் வந்திடுறேன்” என்று வெளியே ஓடி விட்டாள்.
அதில் பல்லைக் கடித்த மலையமான்,
“சாப்பிட்டியா?” என்று கேட்டான் தங்கையிடம்.
“எனக்கு என்ன கேடு.. நல்லா சாப்பிட்டேன்” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,
“முதல்ல இப்படி பேசுறதை நிறுத்து. எது பேசுறதா இருந்தாலும் கவனமா பேசணும்” கண்டித்தான்.
“ப்ச்”
“எதுக்கு இப்படி சலிச்சுக்குற.. என்னோட ஆபிஸ் வான்னா அதுவும் வர மாட்டிக்கிற? இப்படி வீட்டுலயே இருந்து என்ன தான் பண்ண போற.. உனக்கும் கொஞ்சம் மாற்றம் வரணுமா இல்லையா? நாலு பேரை பார்த்தா உன் மனசுக்கு நல்லா இருக்கும் தானே..”
“எதுக்கு அவங்க எல்லாம் என்னை கேலி கிண்டல் பண்ணி சிரிக்கவா?” ஆவேசத்துடன் கேட்டவளை வலி நிறைந்த மனதுடன் பார்த்த மலையமான்,
“இளா” என்றான் ஆதங்கமாய்.
“என்னை விடு நான் இப்படியே இருந்துக்குறேன். நீ உன் பொண்டாடியை நல்லா பார்த்துக்க” என்றாள்.
“ப்ச்..” என்று சலித்தான்.
“இப்படி இருக்காத.. அவளும் உயிருள்ள ஒரு மனுசி தான்”
“அதனால தான் இந்த வீட்டுல நடமாட விட்டு இருக்கேன்” என்றான் அத்தனை திமிராக.
“ரொம்ப கஷ்ட்டம்” என்றவள், “ஹனிமூன் போகலையா?” விசாரித்தாள்.
“எப்பவுமே இல்ல” என்றான்.
“ப்ச் எனக்காக ஒன்னும் பார்க்க வேண்டாம்..”
“அத விடு.. சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
“புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் ஒரே கேள்வி தானா?” சலித்துக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் சலித்துக் கொள்ளும் தங்கையை பெருமூச்சு விட்டுப் பார்த்தவனுக்கு தேனருவியின் மீது கட்டுக் கடங்காத கோவம் வந்தது.
“சரி பார்த்துக்க” என்றவன் மனைவியை தேடி போனான். அவள் எங்கும் இருக்கும் அரவமே தென்படவில்லை.
கண்களை சுறுக்கி நோட்டம் விட்டவன் எங்கு இருப்பாள் என்று கண்டு பிடிக்க ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. போனில் கனெக்ட் பண்ணி இருந்த கேமராக்களை அக்சஸ் பண்ணினான். பின்னாடி தோட்டத்துக்கு சென்றது போல இருந்தது.
“அவளை தேடி வரவைக்கிறா..” பல்லைக் கடித்துக் கொண்டவனின் கால்கள் தேனருவி இருந்த இடத்துக்கு விரைந்தது.
தன் முதுகுக்கு பின் அழுத்தமான காலடி சத்தம் கேட்கவும் உள்ளுக்குள் பய பந்து உருண்டது. ஆனாலும் தான் ஸ்டெடியாக இருக்க வில்லை என்றால் எப்பொழுதும் போல மிளகாய் அரைத்து விடுவார் என்று புரிந்துக் கொண்டு அவன் ஆரம்பிக்கும் முன்பே இவள் ஆரம்பித்து விட்டாள்.
“இங்க பாருங்க நான் எந்த தப்பும் பண்ணல.. எனக்கு எங்க வீட்டுல இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும்னு தோணுச்சு. அதனால தான் இருந்துட்டு வந்தேன். இனி நீங்க எப்போ எங்க வீட்டுக்கு விடுவீங்களோ எனக்கு தெரியல. அதனால கூடுதலா கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தேன்..” படபடவென்று அவள் சொல்ல, மலையமான் எதுவும் பேசவில்லை. கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றான்.
ஆனால் அவனின் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் இருந்தது. அதை பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனாள். ஆனாலும் தைரியமாக பேசி விட்டாள்.
அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கக் கண்டு தலையை குனிந்துக் கொண்டாள்.
“பேசணும் உள்ள வா” என்று விட்டு அவன் முன்னாடி போக, பயந்துக் கொண்டே இவளும் பின்னாடி போனாள்.
இப்படியே அவளை பயம் காட்டி வெச்சா எப்படி தான் அவளும் நார்மல் ஆவா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
இப்படியே அவளை பயம் காட்டி வெச்சா எப்படி தான் அவளும் நார்மல் ஆவா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
அது தானே டா அவனுக்கு வேணும்..





